Sunday, June 15, 2008

அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !


அவள் :

அரசு மருத்துவமனைகள் எப்பொழுதுமே ஒரு விதமான,பிரத்தியேகமான நெடியினைக் கொண்டிருக்கின்றன.நோயாளிகளாக வருபவர்களும் சரி,அவர்களைப் பார்வையிட வருபவர்களும் சரி நுழைவாயிலால் உள்நுழைந்த முதல்கணம் முகம் சுழிப்பதைக் காணலாம்.

அப்படியானதொரு மருத்துவமனையில்தான் அவளொரு தாதியாகப் பணி புரிந்தாள்.தினம் தினம் பலவிதமான நோயாளிகள்,விதவிதமான பார்வையாளர்கள்,தடுமாறும் பதற்றங்கள்,அவசரங்கள் அனைத்தையும் தனதொரு புன்னகையால் துடைத்துச் சீராக்கும் மாயவித்தையை அவள் கற்றிருந்தாள்.

பக்கத்து ஊர் மருத்துவமனைதான்.அதிகாலையிலேயே எழுந்துவிடுபவள் சமைத்ததில் அப்பாவுக்கும் வைத்துவிட்டு,அவளுக்கும் எடுத்துக்கொண்டு முதல் பஸ்ஸில் மருத்துவமனை வருவாள்.

பழகிய நோயாளிகள் இவள் வருகையிலேயே சிறிது சுகம் கண்டார்கள்.புன்னகையுடனான ஆதூர விசாரிப்பு எப்பொழுதுமே ஆரோக்கியத்தைக் கொடுக்குமென உறுதியாக நம்பியவள் அதனைச் செயல்படுத்தவும் முனைந்ததில் பல நோயாளிகள் சினேகமாயினர்.மருந்துகள் இவள் கரங்களினால் தரப்படுமிடத்து ஒரு தோழமையுடன் வாங்கிக் கொண்டனர்.தண்ணீர் தருவதாயினும் இவள் அதைத் தாய்மையோடு தரும்பொழுது வாழ்வின் மீதான நம்பிக்கையின் பாடலொன்றை அவர்கள் பூரிப்புடன் உச்சரித்துக் கொண்டனர்.

தனக்கு நிகழ்ந்த அத்தனை துயரங்களையும் புனிதத் தலங்களில் செருப்பினைக் கழற்றிவிட்டு உள்நுழைவதைப் போலக் கழற்றிவிட்டே அவள் இம்மருத்துவமனையின் உள்நுழைந்தாள்.இவள் துயரங்களையொரு பாடலாய்ப் பாடினாலுமங்கு செவிமடுக்க யாருமில்லை.

நல்லவளாகிய அவளுக்கும்,பார்வை மங்கிய நிலையில் நோயாளியாகவுமிருந்த அவளது அப்பாவுக்கும் அவளது சம்பளம் மட்டுமே போதுமானதாக இருந்தது.அம்மா உயிருடனிருந்த வரையில் அவளது மருத்துவத்திற்காகவே இவள் சம்பாதிக்கும் பணம் செலவழிந்து கொண்டிருந்தது.வீட்டின் மற்றச் செலவுகள் இராணுவ வீரனாக இருந்த அவளது அண்ணனின் மணியோர்டர் பணத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

கோடையின் உக்கிரம் தணிந்த ஒரு நாளில் அவளது அண்ணன் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு மூடிச் சீல் வைக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைத்துத் தூக்கி வரப்பட்டான்.வீட்டுக்கென்றிருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் குண்டுகள் தாக்கித் துளைத்து உதிர்ந்து போயிற்று.அன்றைய தினத்தில் அவளதும்,அம்மா,அப்பாவினதும் ஒப்பாரிகளெதுவும் அவனை ஏகவுமில்லை,எழுப்பவுமில்லை.

இரண்டு,மூன்று மாதங்களில் அண்ணனின் இறப்பிற்காகக் கிடைத்த இழப்பீட்டுத் தொகையில் அவள் அம்மாவுக்கு ஒரு நல்ல வைத்தியரிடம் ஆங்கில மருத்துவம் செய்தாள்.மழை நாட்களில் ஒழுகிய கூரையைச் சீர் செய்தாள்.அப்பாவுக்குப் புதுச் சட்டையும் பிஜாமா சாறனும் வாங்கிக் கொடுத்து,உடைந்திருந்த அவரது மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொடுத்தாள்.

நாட்டுக்காகச் சேவை செய்யும் சூரிய,சந்திரர்களை இரு பிள்ளைகளாகப் பெற்றிருக்கிறேனென அவள் அம்மா சொல்லிச் சந்தோஷித்த நாளொன்றில் அவளது வானம் இருண்டது.விடியலில் அம்மா இறந்து போயிருந்தாள்.


அவன் :

தபால்நிலையங்கள் முதல்பார்வைக்கு மந்தமான கதியைக் கொண்டு இயங்குவதாகப் பட்டாலும் உள்ளே பரபரப்பான வேலைகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.வாழ்வின் துயரங்களையும்,நியதிகளையும்,பிரச்சினைகளையும்,மகிழ்ச்சிகளையும் சொல்லும் எழுத்துக்களைச் சுமந்து இடம் மாறிக்கொண்டேயிருக்கின்றன கடிதங்கள்.

உனது துயரங்கள் இத்தோடு ஒழிந்து போகட்டும்,உனது மகிழ்ச்சிகள் இது போன்றே நிலைத்திருக்கட்டும் என்ற எண்ணங்களைப் போர்த்திக்கொண்டே முத்திரைகள் மீது அச்சுக்கள் ஓங்கிக் குத்தப்படுகின்றனவோ?

ஊரில் நிலை பெற்றிருந்த அப்படியானவொரு தபால்நிலையத்தில் தான் தபால்களுக்குச் சரியான முத்திரைகள் ஒட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பார்த்து அச்சுக்குத்தும் பணியை அவன் செய்துவந்தான்.அரசாங்கப் பணி தரும் கௌரவமும்,வீட்டிலிருந்து சைக்கிளிலேயே போய் வரலாமென்ற தூரமும் அந்த வேலையை அவனுக்குப் பிடிக்கச் செய்திருந்தன.

அவனது நண்பனான இராணுவ வீரன் பிணமாக வந்த நாளில்தான் இந்த வருடத்தின் முதல் விடுமுறையை அவன் எடுத்தான்.இறப்பின் வலி சுமந்த அந்த வீட்டில் எல்லாமாகவுமிருந்து பார்த்துக் கொண்டான்.அவன் அந்த வீட்டிலொரு பிள்ளையாகப் பழகியிருக்கிறான் பாடசாலைக் காலங்களிலும்,பள்ளித் தோழன் விடுமுறையில் வந்த நாட்களிலும்.

அந்த நாட்களில் இதே முற்றத்து வேப்பமரத்தடியில்தான் சிலு சிலுவெனக் காற்று வீச,நண்பர்கள் சேர்ந்து டாம் மற்றும் கேரம் போர்ட் விளையாடுவார்கள்.அவள் திண்ணைத் தூணில் சாய்ந்து பார்த்திருப்பாள்.

அன்றைய தினம் அவளது அண்ணனின் இறப்பு அந்தக் குடும்பத்தின் ஆணிவேரை அசைத்தது என்பதை அவன் அறிவான்.சோகம் தாக்கி வாடியிருந்த அவளுக்கு ஆறுதல் சொன்னான்.


அவள் :

அம்மாவும் இறந்த அன்றைய தினம் அழுகையை ஒத்திவைத்து,மரணச் செலவை ஈடு செய்ய வழிகள் தேடியதில் அண்ணன் சிறிது,சிறிதாகச் சேமித்து வாங்கித் தந்திருந்த ஒரு பவுணிலான தங்கச் சங்கிலி அடகுக் கடையில் தஞ்சம் பெறலாயிற்று.அண்ணனின் நண்பர்களும்,அக்கம் பக்கத்தவர்களும் உதவியதையும் மறக்கக்கூடாது.

அண்ணாவையும்,அம்மாவையும் இழந்த சோகம் தாக்கிச் சில மாதங்களிலேயே காதலெனும் இனிப்பு தடவப்பட்டதொரு கசப்பு மாத்திரையை அவள் நம்பி விழுங்கிடலானாள்.அவளது சிவப்பு நிறமும்,முழங்கால் வரை நீண்ட கூந்தலும் ஊர் இளைஞர்களிடத்து காதலின் மெல்லிசையொன்றை மீட்டியபடியே இருந்ததிலோர் நாள் அண்ணனின் நண்பனாக இருந்தவனொருவனின் காதல் வலையில் வீழ்ந்து தொலைந்தாள்.

அவளது அம்மாவும்,அண்ணாவும் இறந்த தினங்களில் வீட்டின் அனைத்துக்காரியங்களிலும் உதவியாக இருந்தவனின் காதல் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாதளவுக்கு அவள் மனதில் அவன் சிம்மாசனமிட்டு உட்காந்திருந்தான்.இழப்புகள் அவளில் மூட்டியிருந்த தொடர்ச்சியான துயரங்களை காதலின் குளிர்ச்சி கொண்டு, வசந்த காலங்களின் பாடல்கள் பாடி அணைத்திட முயன்றான் அவன்.

அவளது வீட்டு வேலியொன்றில்,எப்பொழுதோ கூடிப்பறந்த பறவையொன்று உருவாக்கிப் போன பொந்தொன்றில் அவன் தனது காதல் வார்த்தைகள்,விடுமுறை நாளில் சந்திக்க வேண்டிய இடம் மற்றும் நேரம் பற்றிய குறிப்புகளைத் தாங்கிய மடலை வைத்துவிடுவான்.பின்னேரங்களில் கிணற்றுக்குத் தண்ணீர் கொண்டுவருவதாக வீட்டில் சொல்லிப் போகும் அவள் மரத்தடிக்கு வந்து வீதியின் இருமருங்கையும் எட்டிப் பார்த்துப் பின் கடிதத்தையெடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்துக் கொள்வாள்.தன்னை ஏதுமறியாதவளாகக் காட்டிக் கொண்டு குடத்தின் தண்ணீர் சிந்தச்சிந்த வீடு வந்து அறையின் குப்பிவிளக்கு வெளிச்சத்தில் கடிதத்தைப் பலமுறை படிப்பாள்.


அவன் :

பெரும்பாலும் அவர்களது காதல் சந்திப்பானது விகாரையிலும்,எப்பொழுதாவது ஆற்றங்கரையிலுமே நிகழ்ந்தன.கை தொட்டுப் பேசுவதைத் தவிர்ந்த மற்ற எல்லைகளை இருவரும் தவிர்த்துவந்தனர்.தமது தூய காதலை இருவரும் போற்றிவந்தனர்.அம்மாவின் மரணச் செலவுக்கு அடகு வைத்த நகைகளை அவன் மீட்டுக்கொடுத்தான்.அவளது அம்மாவின் பெயரிலும்,அண்ணாவின் பெயரிலும் அவளின் செலவில் விகாரையில் கொடுக்கப்பட்ட அன்னதானத்துக்கு முன்னின்று உதவினான்.

எல்லாம் நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தன எனலாம்.காலம் இருவரது காதலையும் காற்றோடு அள்ளிப் போய் ஊர்வாயில் போட்டது.இருவரதும் காதல் ஊர்வாயில் மெல்லப்படும் அவலானது.கற்பனையில் இருவரும் வரைந்து வைத்திருந்த காதல் ஓவியங்கள் இராட்சத நாக்குகளில் சிக்கிச் சப்பித் துப்பப்பட்டது.


அவள் :

அவளது தந்தை நள்ளிரவிலொரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சிரமப்பட்டதில் அவள் உதவிக்கு ஆள்தேடி இரைந்தாள்.அயலவர்கள் உதவியதில் இவள் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுச் சில மணி நேரங்களில் அவர் இறந்து போனார்.

அன்றுதான் தனித்துப் போனது அவள் உலகம்.அப்பாவின் உடல் புதைக்கப்பட்ட நாளின் இரவில் தன் வாழ்வு சூனியத்தில் தொலைந்திட்டதாய் எண்ணியெண்ணிச் சிதைந்தாள்.அன்றுதான் அவள் விழிநீர் வற்றும் வரை துளித்துளியாய் அழுதாள்.


அவன் :

ஊர் வாயில் மெல்லப் பட்ட காதல் அவல்,அவன் வீட்டிலும் புகைய ஆரம்பித்த நேரமது.அனாதரவாக நிற்கும் அவளை முறைப்படித் தன் வீட்டுக்குக் கூட்டி வர எண்ணினான் அவன்.விடயத்தைச் சொன்ன கணம் புகைந்து கொண்டிருந்த தணல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திற்று.

ஊர் விதானையாராக இருந்த அவனது தந்தைக்கு தன்னை விடக் குறைந்த சாதியில் ஒரு அநாதையாய்,சொத்துக்களேதுமற்று நிற்கும் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனம் இடங்கொடுக்கவில்லை.அவரது அந்தஸ்தும்,அவனது அரச சம்பாத்தியமும் அவனது எதிர்காலத்தின் தீர்ப்பை அவர் மனதுக்குள் எப்பொழுதோ எழுதியிருந்தது.

காதலின் மென்கரங்கள் சிறிது சிறிதாக முறிக்கப்பட்டது.அவனுக்குள் ஒட்டியிருந்த அவள் மெல்ல மெல்ல உரித்தெடுக்கப்பட்டாள்.காதலின் நூலிழை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது அவனுள்.

இருவரதும் காதல் மூங்கில் புல்லாங்குழலாகி,வசந்தங்களைப் பாடும் முன்பே தீயிட்டுச் சிதைக்கப்பட்டதாகச் செய்தியறிந்த நாளொன்றின் விடியலில் அவள் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தாள்.


அந்த மாலைப்பொழுது :

அவனது பார்வையிலிருந்து தப்பி,திறந்திருந்த நுழைவாயிலினூடு வீதிக்கு வந்து மண்ணை அள்ளி விளையாடிக்கொண்டிருந்த அவனது நான்கு வயது மகனின் கரங்களை வசமாகப் பிடித்துக் கொண்டாள் முழங்கால் வரை நீண்ட கூந்தலை முழுவதுமாக மழித்து,காவியுடை தரித்துப் பிக்குனியாயிருந்த அவள்.அவனைஅழைத்து,பிள்ளையை வீதிக்குப் போகாமல் பார்த்துக்கொள்ளும் படியும் வீதியில் வேகமாக வாகனம் வருவதாயும் கூறி ஒப்படைத்த பின்னர் நிலம் பார்த்து நடந்து சென்றாள்.

படபடக்கும் எண்ணத்தோடும்,குறுகுறுக்கும் மனதோடும் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் அவன்.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Sunday, June 1, 2008

திண்ணை


மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா,கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன்.இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று.மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று.மழையின் எந்தப் பிரஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக,நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது.ஊருக்கே பழம் வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு,கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும்.அந்தக் குளிர்மை,மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும்.வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும்.அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை,கதையாகச் சொல்லியிருக்கிறார்.முன்னர் பாய் பின்னுவதற்கும்,அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும்,மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது.முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது.திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த,எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும்.நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும்,அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்து போகவேண்டும்.ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த,வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு.வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி.அழகழகான ரோஜாக்களும்,ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும்.தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும்,அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக்,பிஸ்கட்,இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன்.டீச்சருக்கு நேர்மாறு அவர்.டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை.எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும்.அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

"ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா?
மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?"
பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

"பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர."
மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.மழையும்,திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும்.அவரது பொக்கை வாய் வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும்,திணணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப் பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார்.பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக் கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது.புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள்.மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது.சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று,சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும்,என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம்.பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார்.மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர்.நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும்.மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

"மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல"
"அப்படியில்ல மாமி.சரியான வேலை.சனி,ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா,பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு".

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை.இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி,இறக்கி விட்டிருந்தார்.பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை.காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது.ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ?யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி,இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும்,சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார்.மடக்கக் கூடியதான சிறுகுடையும்,கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும்.காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான்.மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார்.ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார்.அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க,அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி,வாயெல்லாம் வெந்துவிட்டது.டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம்.நாங்களெல்லோரும் பதறிவிட்டோம்.அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் 'எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே' எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

"மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?"
"என்ன மகன்?"
"இல்ல ! டீச்சர்...?"
"ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது.எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது?அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே...?"
"இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே?சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு..."
"அப்டியில்ல மகன்.நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு,இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க.இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க.இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல.பென்ஷன் காசு வருது.புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது.பின்னக் காலத்துக்கு அது போதும்தானே "
மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது.டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது.மாமா,மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன்.திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார்.மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.