Friday, January 9, 2009

ஈரம்

  
   இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும் ஒரு பூனையின் மென்மயிரென  அவிந்து கொண்டிருந்த நெல்லின் மணம் பரவிவிட்டிருந்தது. செல்லாயி அந்தப் பானையின் மூடியைத் தூக்கி நீர்மட்டம் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் முற்றாக அவிந்துவிடும். பின்னர் முற்றத்தில் பரத்திவிட்டு உடுப்புக் கழுவப் போகலாம்.

        குடிசையின் ஒரு மூலையில் கயிற்று ஊஞ்சலில் தொங்கவிட்டிருந்த ஓலைப்பாயொன்றை எடுத்தாள். முற்றத்தில் வெயிலின் அடர்த்தி அதிகமாக இருந்த ஒரு இடத்தைப் பார்த்து பாயினை விரித்தாள். வெயில் தரையை விட்டு அவள் விரித்த பாயில் படுத்துக் கொண்ட சமயம் உள்ளே போய் நெற்பானையைத் துணியால் பிடித்துத் தூக்கமுடியாமல் தூக்கி வந்து பாயருகில் வைத்தாள். பெரும் அகப்பை கொண்டு நெல்லை அள்ளி அள்ளி பாயில் பரப்பத் தொடங்கினாள்.

        வயல் வேலைக்கு ஒரு கூலியாகச் செல்லும் அவளுக்குக் கிடைத்த கூலிதான் இந்த ஒரு கூடை நெல். அவித்து,  குத்திப் புடைத்து வைத்துக் கொண்டால் அவளுக்கும் விறகு வெட்டியான அவள் கணவனுக்கும் ஒரு மாத வயிற்றுப்பாட்டுக்குப் போதும். நாற்று நட, கதிரறுக்க எனச் சுற்றுவட்டாரத்தில் எங்கு வயல்வேலை நடந்தாலும் செல்லாயிக்கு அழைப்பிருந்தது. அவளது கைநேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்திருந்தது. வாங்கும் கூலிக்கு வஞ்சனை செய்யாமல் அவளும் உடல்பாடுபட்டு உழைத்தபடி இருந்தாள். குழந்தை பிறந்த பிறகு கூட இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாள். பிறகு வயல்வெளி நிழல் மரங்களில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு அவள் தன்பாட்டுக்கு வேலை செய்தாள்.

        வெயில் தன் ஆதிக்கத்தை இப்பொழுது நெல்லின் மேல் பரப்பத் தொடங்கியது. சூடாகப் பரத்தப்பட்டிருந்த நெல்லின் மேலிருந்து இலேசாகப் புகை கிளம்பியது. முழுவதுமாகப் பரத்தி முடித்தபின் எழுந்து நின்று ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தாள். ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்ற குடிசையருகில் வந்து எட்டி நின்று ஓலைக் கூரையின் பாக்குமரக் கம்புகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை எடுத்துவந்து நெற்பாயின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் வைத்தாள். இனிக் காக்கை,குருவிகள் அண்டாது எனத் திருப்தியாக உள்ளே சென்றாள். அவளது ஆறுமாதக் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆறுதலாக நேற்று இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த எஞ்சிய பழஞ்சோற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஊறுகாய் என எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

        முருகையன் கீழ்த் தோட்டத்தில் இப்பொழுது விறகுவெட்டிக் கொண்டிருப்பான் என எண்ணிக் கொண்டாள். அவளது குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எப்பாடு பட்டாவது பணம் கொஞ்சம் சேர்த்தெடுத்து , பக்கத்துப் பெரிய கோயிலுக்குத் தூக்கிப் போய் மொட்டையடித்துக் காதுகுத்தி ஒரு நல்லபெயராக வைக்கவேண்டுமென நேற்றிரவும் அவள் முருகையனிடம் சொல்லியிருந்தாள். அவனும் அதனை உத்தேசித்தே பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

        சாப்பிட்டு முடித்து, கழுவவேண்டிய அழுக்குத் துணிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை காலை உதைத்துச் சிணுங்க ஆரம்பித்தது. துணிகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையருகில் வந்து சத்தமாக செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். பழகிய குரலைக் கேட்டதும் குழந்தை புன்னகைத்தது. எடுத்து முத்தமிட்டுப் பால்கொடுத்தாள். ஒரு பழந்துணியை நிலத்தில் விரித்து குழந்தையைப் படுக்கவைத்தாள். வயிறு நிறைந்த திருப்தியில் அக்குடிசையின் ஓலைக் கூரை பார்த்துத் தனியாகக் கதைத்துக் கொண்டிருந்த அதன் வெற்றுக் கால்களுக்குக் கொலுசு வாங்கிப் போடவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

        குழந்தையின் அழுக்குத் துணிகளும், அவளதும் அவனதும் அழுக்குத் துணிகளுமாகச் சேகரித்ததற்கு மத்தியில் சவர்க்காரத்தையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். ஒற்றையடிப் பாதையில் இறங்கி மேட்டில் ஏறி மீண்டும் இரண்டு பள்ளங்கள் இறங்கி நடந்தால் சிற்றோடை வரும். அவளுக்கு வேலைக்கு அழைப்பில்லாத நாட்களில் துணிகளையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு துவைத்து வரப் போவது அவளது வழமை. ஓடைக் கரை மருதமரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டி, குழந்தையின் வயிற்றை நிரப்பித் தூங்கவிட்டாளானால் ஈரக் காற்றுக்கும், பெருமரத்தின் நிழலுக்குமான சுகம் கண்டு குழந்தை எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் நிம்மதியாக உறங்கும். எல்லாத் துணிகளையும் கழுவிவிட்டு, அவளும் குளித்து, குழந்தையையும் குளிப்பாட்டியெடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவாள்.

        முற்றத்துக்கு வந்துபார்த்தாள்.  வெயில் நெல்லைப் பரிகசித்தபடி ஆவியாக்கிக் கொண்டிருந்தது. மேகக் கருமூட்டம் சூரியனைச் சில நேரங்களில் ஒளித்துவைத்தபடி அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மழை வருமோ? போனமுறை அப்படித்தான். அடித்த வெயிலை நம்பி நெல் அவித்து முற்றத்தில் பரத்திவிட்டு, பக்கத்துக் கிராமத்து சின்னாச்சிக் கிழவியின் சாவுவீட்டுக்குப் போயிருந்த போது பேய்மழை பிடித்துக் கொண்டது. அவசரமாக ஓடிவரவும் முடியாது. மழை நின்ற பின்னால் வந்து பார்த்தால் முற்றத்தில் ஓடிய வெள்ள நீருக்குப் பாயில் நெல் இருந்த சான்றுக்காகச் சில நெல்மணிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. எல்லாம் ஒரு பொழுது மழையில் வீணாகிப் போனதில் பெருஞ்சோகம் அப்பியது அவளில். முருகையன்தான் 'விடு புள்ள, நமக்குக் கொடுப்பினை இல்ல..அவ்ளோதான்' என்று ஆறுதல் சொன்னான்.

        கடும் சூட்டோடு அடித்த வெயில் இப்போதைக்கு மழை வராது என்ற எண்ணத்தை அவளில் ஊன்றியது. உள்ளே போய் குழந்தைக்கு ஓடைக் கரையில் தொட்டில் கட்டவென வைத்திருந்த பழஞ்சேலையால் மூட்டையைச் சுற்றியெடுத்து குடிசைக்கு வெளியே கொண்டுவந்து வைத்தாள். குடிசையின் கொல்லைக் கதவை மூடிவிட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். வெளிக்கதவுக்கான பூட்டினையெடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். துணிமூட்டையை எடுத்துத் தலையில் வைத்தவள் திரும்பவும் பரத்தியிருந்த நெல்லை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

        மேடு ஏறிப் பள்ளங்கள் இறங்கிவந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடைக்கரை சலவைக் கல்லில் துணிகளை வைத்தவள் சலசலத்து ஓடும் ஓடையை ஒரு முறை கண்களால் மேய்ந்தாள். ஓடையில் இவளைத் தவிர யாரையும் காணவில்லை.தெளிந்த நீர். மழை பெய்தால் மட்டும் கலங்கிய நீராகி வெள்ளக் காடாகிவிடும். போன வருஷம் அடை மழை வந்தபோது இந்த மருத மரம் கூடப் பாதிவரை மூழ்கியதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

        துணிமூட்டையைச் சுற்றியிருந்த தொட்டில் சேலையைத் தனியாக எடுத்தாள். மருத மரத்தின் அண்டிய ஒரு கிளைக்குச் சேலையின் ஒரு முனையை எறிந்தவள் வாகாகத் தொட்டிலைக் கட்டிவிட்டாள். ஒரு கல்லில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் சொருக ஆரம்பித்தது குழந்தைக்கு. அப்படியே அள்ளியெடுத்தவள் அதன் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டாள். பின்னர் கட்டிய தொட்டிலில் படுக்கவைத்து கொஞ்சநேரம் ஆட்டிவிட்டாள்.

        உடுத்திருந்த சேலையோடு ஓடையில் இறங்கினாள். முழங்கால் வரை நனைத்து ஓடிய தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு துணியாக அலச ஆரம்பித்தாள். ஓடை மணலும், நழுவிய நீரும் காலடியில் குறுகுறுத்தது. சிறு மீன் குஞ்சுகள் காலுக்குக் கூச்சம் தந்தபடி கவ்வத் தொடங்கின. குளித்து முடித்துப் போய் மீன் வாங்கிவந்து முருகையன் வரும் போது சுடுசோற்றோடு மணக்க மணக்க மீன் கறி சமைத்து வைக்கவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

        வானம் கருக்கத் தொடங்கியது. அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில் மழையின் முதல் துளி விழுந்தது. ஐயோ இன்றைக்கும் மழையா ? ஓடைக் கரைக்கு ஏறியவள் தூறல் வலுக்க முன்னர் குடிசைக்கு ஓடத் தொடங்கினாள். அவளது பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. மூச்சு வாங்க ஓடி வந்தவள் சிறு தூறலில் நனைந்திருந்த நெற்பாயின் நான்கு மூலைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து குடிசைத் திண்ணை வரை இழுத்துவந்தாள். இடுப்பில் கட்டியிருந்த சாவியை எடுத்து பூட்டினை விடுவித்துக் குடிசையைத் திறந்து நெற்பாயினை உள்ளே வைத்த பொழுது மழை வலுத்தது.

        இப்பொழுது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரும்பாடு பட்டுச் சேர்த்து, அவித்துக் காயவைத்த நெல்லை பெரும் மழையிலிருந்து காப்பாற்றியாகிவிட்டது .நிம்மதிப் பெருமூச்சு விட்டவளின் கண்களுக்கு குடிசைக்குள்ளிருந்த வெற்றுத் தொட்டில் கண்ணில் பட்டது. 'ஐயோ என் குழந்தை' எனப்பதறியவாறு குடிசையையும் பூட்டாமல் பெரும் மழையில் நனைந்தவாறு திரும்பவும் ஓடைக்கரைக்கு ஓடத் தொடங்கினாள்.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

20 comments:

Unknown said...

ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லியமாய் எழுதிவிட்டீர்கள் ரிஷான். மனம் கனத்துவிட்டது. வயிற்றுப் பாடு பெற்ற பிள்ளையை மறக்கச் செய்யும் அளவிற்கு பசியின் கொடுமை..சீக்கிரம் அவள் குழந்தையிடம் போகவேண்டும். மழையும் நிற்கவேண்டும்...நல்ல கதை ரிஷான். சரளமான மொழி..வாழ்த்துக்கள்

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்

மிகவும் அருமையாக உள்ளது. கதை அழகாகப் பின்னப் பட்டுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரையுமான எல்லாவரிகளும் ஈர்ப்புடன் அமைந்து வாசகரை இழுத்துச் செல்கின்றன.
வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் உமாஷக்தி,

//ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லியமாய் எழுதிவிட்டீர்கள் ரிஷான். மனம் கனத்துவிட்டது. வயிற்றுப் பாடு பெற்ற பிள்ளையை மறக்கச் செய்யும் அளவிற்கு பசியின் கொடுமை..சீக்கிரம் அவள் குழந்தையிடம் போகவேண்டும். மழையும் நிற்கவேண்டும்...நல்ல கதை ரிஷான். சரளமான மொழி..வாழ்த்துக்கள் //

உங்கள் முதல் வருகை எனக்கு மகிழ்வினைத்தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//ரிஷான்

மிகவும் அருமையாக உள்ளது. கதை அழகாகப் பின்னப் பட்டுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரையுமான எல்லாவரிகளும் ஈர்ப்புடன் அமைந்து வாசகரை இழுத்துச் செல்கின்றன.
வாழ்த்துக்கள்.//

உங்கள் அன்பான, ஆழமான பின்னூட்டங்கள் எனது எழுத்தினை மேலும் மேம்படச் செய்கிறது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Kavinaya said...

ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க் கவனிக்கும் உங்கள் தன்மை கதைகளில் தெரிகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எப்போதும் போல் இறுதியில் மனம் கனத்து விட்டது.

ராமலக்ஷ்மி said...

ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்டத்தைக் கூட இருந்தே பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தரும் விவரிப்பு. முடிவில் தந்திருக்கும் திருப்பமோ பதைபதைப்பு. மொத்தததில்
ஈரம் மனதைப் பிழிந்து விட்டது.

Divya said...

கண்முன் காட்சிகள் விரிகின்றன ரிஷான் உங்கள் எழுத்தினை படிக்கையில்!

மிக அற்புதமான படைப்பு:)

Divya said...

கதையை படித்து முடிக்கும்போது......குழந்தை பத்திரமாக இருக்கவேண்டுமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, கதையின் நடை தாக்கத்தை மனதில் பதிக்கிறது:))


தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!

வாழ்த்துக்கள் ரிஷான்!

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க் கவனிக்கும் உங்கள் தன்மை கதைகளில் தெரிகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எப்போதும் போல் இறுதியில் மனம் கனத்து விட்டது.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்டத்தைக் கூட இருந்தே பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தரும் விவரிப்பு. முடிவில் தந்திருக்கும் திருப்பமோ பதைபதைப்பு. மொத்தததில்
ஈரம் மனதைப் பிழிந்து விட்டது.//

இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் தினந்தோறும் நடந்தவண்ணமே உள்ளன. நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//கதையை படித்து முடிக்கும்போது......குழந்தை பத்திரமாக இருக்கவேண்டுமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, கதையின் நடை தாக்கத்தை மனதில் பதிக்கிறது:))


தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!

வாழ்த்துக்கள் ரிஷான்! //

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

Divya said...

ரிஷான்......

உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/blog-post.html

Sakthy said...

ரிஷான்
மிகவும் அருமையாக உள்ளது.
அந்த தாயின் பின்னால் படிப்பவர் மனமும் ஓடச் செய்து விட்டீர்கள் ..
வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//ரிஷான்......

உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....//

எனது எழுத்துக்களுக்கான அன்பான அங்கீகாரத்தை உங்கள் விருதினில் காண்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி கலந்த நன்றிகள் தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//ரிஷான்
மிகவும் அருமையாக உள்ளது.
அந்த தாயின் பின்னால் படிப்பவர் மனமும் ஓடச் செய்து விட்டீர்கள் ..
வாழ்த்துக்கள் //

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

தமிழ்நதி said...

குழந்தை கதையில் வரும்போதே அதற்கு ஏதோ நடக்கப்போகிறது என்று மனதுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது நடந்தே போயிற்று. கதை காட்சியாக விரிந்தது ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

//குழந்தை கதையில் வரும்போதே அதற்கு ஏதோ நடக்கப்போகிறது என்று மனதுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது நடந்தே போயிற்று. கதை காட்சியாக விரிந்தது ரிஷான்.//

குழந்தைக்கு ஏதோவொன்றெனப் பதறும் உள்ளம் பெண்களுக்கே அதிகளவில் வாய்த்திருக்கிறது என்ற செய்தியை உண்மைப் படுத்துவதாக உள்ளது உங்கள் கருத்து. இந்தக் கதைக்கு இதுவரையில் வந்த பின்னூட்டங்களெல்லாம் கூட பெண்களிடமிருந்து மட்டுமே வந்திருப்பது கூட இதையே தான் சொல்கிறதோ... :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

பாச மலர் / Paasa Malar said...

ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ரிஷான்..மொழி ஆளுகை சிறப்பு.

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,

//ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ரிஷான்..மொழி ஆளுகை சிறப்பு. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

எஸ் சக்திவேல் said...

பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். உண்மையில் கதையின் ஆரம்ப வரிகளை வாசிக்கும்போது நெல் அவியும் வாசம் என் மூக்கைத் துளைத்தது.