Friday, February 1, 2008

சந்ததி !



வாகனத்திலேறி உட்கார்ந்ததுமே சீட் பெல்டை மாட்டிக் கொண்டேன்.கேமராவின் கண்களில் சிக்கிவிட்டால் சட்டத்தின் முன் நிற்கவேண்டி வரும்.இந்த நாடு இலங்கையைப் போன்றதல்ல.சட்டத்திலும் சரி,ஒழுங்கு விதிமுறைகளிலும் சரி,இந்நாட்டு மக்களின் நடை,உடை,பாவனை மற்றும் நடத்தைகளிலும் சரி அனைத்திலும் வித்தியாசமிருப்பதைப் பார்க்க முடியும்.

எனது நாட்டில் வாகனத்தின் வலது முன்புற இருக்கை ஓட்டுனர் இருக்கையாக அமைந்திருக்கும்.இங்கு அதுவே இடம் மாறி இருக்கும்.அங்கு மிகச் சிறப்பாக வாகனமோட்டி அனுபவப்பட்ட நண்பர்கள் கூட இங்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கான செயன்முறைப் பரீட்சையில் திணறுவதைப் பார்த்திருக்கிறேன்.

கடலோரமாக நான் பயணிக்கும் கார் சென்றுகொண்டிருந்தது. ஒன்றையொன்று துரத்தி விளையாடும் அலைகளில்லாக் கடல் நிரப்பப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.மாலை வேளைகளையும், விடுமுறை நாட்களையும் தவிர்த்து, இப்பாதையின் ஓரங்களில் நடந்துசெல்லும் எவரையும் எளிதாகக் காணமுடியாது.

அதுபோலவே இங்கு வீதிகளின் நடுவில் போக்குவரத்துப் போலீசாரையும் பார்ப்பது கடினம். அனைத்தும் கேமரா மயம். ஒவ்வொரு சிக்னல்களிலும் விளக்குகளுடன் கேமரா பொருத்தப்பட்டு அதனூடாகவே வீதி,வாகன நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன. ஏதேனுமொரு விபத்து நடந்துவிட்டால் அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் சமீபத்திலுள்ள காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினர் வந்துவிடுவார்கள்.

ஏதோ ஒரு எப்.எம் மின் பழைய ஹிந்திப்பாடலோடு சேர்ந்து முணுமுணுத்தவாறே பகதூர் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான். முன் சட்டைப்பையிலிருந்து நிஜாம் பாக்குத் தூள் பக்கெட்டை பற்களாலேயே கடித்துப் பிரித்து பாக்குத் தூளை வாய்க்குள் கொட்டிக் கொண்டான்.இவனிடம் சிகரெட் , பீடி ,சுருட்டு புகைக்கும் பழக்கம் இல்லாதது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இங்கிருக்கும் நேபாளிகள் அனைவரிடம் போல அந்தப்பழக்கங்கள் இருந்தன. வருடம் முழுக்கக் குளிர் சுமக்கும் நாடு நேபாளம். எனவே அங்கிருக்கும் அனைவரும் போல பெண்கள் உட்பட புகைபிடிப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தோள்வரை தலைமுடி வளர்த்த நேபாளியொருவன் காரைக் கை நீட்டி நிறுத்தினான். ஏதோ ஒரு முகவரி சொல்லிப் போகும் பாதையை பகதூரிடம் விசாரித்தான்.அவர்களது பாஷையும்,எழுத்தும் ஹிந்தி மொழியின் சாயலிலிருந்தாலும் இவர்களதனை அழகாய்ப் பேசி நான் கேட்டதில்லை. நேபாளிகளும் , பாகிஸ்தானிகளும், மலையாளிகளும் இந்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் காணப்படுகின்றனர். நேபாளிகளை சாரதிகளாகவும் , ஹோட்டல் ஊழியர்களாகவும், துப்புரவுத் தொழிலாளர்களாகவும், அலுவலக உதவியாளர்களாகவும் இங்கு காணலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிடைக்கும் விடுமுறையில் இந்நாட்டில் இருக்கும் அனைத்து நேபாளிகளும் ஒரு வெளியில் ஒன்று கூடுவார்கள். புரியாத மொழியில், பெருஞ்சத்தத்தோடு அனைவரும் உரையாடுவதைக் கேட்க வெளிநாட்டு நாரைப் பறவைகள் ஒருசேரக் கூச்சலிடுவதைப் போலிருக்கும்.

நேபாளிகளுக்கு இலங்கையர் , இந்தியர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒருமுறை காரணம் கேட்டதற்கு இரு நாட்டவரும் சிறந்த அறிவாளிகளெனவும், கல்வியை முழுதாகப் பூர்த்தி செய்து பின்னிங்கு வருகிறார்களெனவும் சொன்னான். அதே போல பாகிஸ்தானிகளிடம் பயங்கரக் கோபமுண்டு. அவர்கள் நேபாளிகளை இழிவாகப் பேசுவதும் , நேபாளிகளது உடல் வீச்சத்தைக் கிண்டல் செய்து கதைப்பதுமதற்குக் காரணமாக இருக்கலாம்.

நானிங்கு கடமைக்காக வந்த முதல் நாள் என்னை விமானநிலையத்திலிருந்து அழைத்து வந்தவனும் இதே பகதூர் தான். விமானநிலையத்திலிருந்து காரில் ஏறியதுமே தன்னைப் பற்றியோ , என்னைப் பற்றியோ எதுவும் கூறாமலும் கேட்காமலும் வாகனவிதிமுறைகளையும் , சீட் பெல்ட் அணியாவிடின் கட்டவேண்டிய அபராதத் தொகை பற்றியுமே சொல்லிக்கொண்டு வந்தான்.

இங்கு வாகனமோட்டும் போது சாரதி புகைபிடிப்பதுவும், கைத் தொலைபேசியைக் காதருகில் வைத்துப் பேசியபடி வாகனத்தைச் செலுத்துவதும், முன்னிருக்கைகளில் அமர்ந்திருக்கும் இருவரும் அல்லது ஒருவரேனும் சீட்பெல்ட் அணியாமலிருப்பதுவும் சட்டப்படி குற்றம். யாரேனும் இத்தப்பைச் செய்தபடி செல்வார்களாயின், அடுத்த சிக்னலில் பிடித்து விடுவார்கள். அப்படியும் தவற விட்டுவிட்டார்களானால் கேமராவில் பதியப் பட்டிருக்கும் வாகன இலக்கத்தை வைத்து ஓர் நாளுக்குள் பிடித்து விடுவார்கள். தண்டனை அபராதம்தான். தவறைப் பொறுத்து அபராதத் தொகை ஐந்நூறு ரியாலிலிருந்து அதன் மடங்குகளாக இருக்கும். ஐந்நூறு ரியாலென்பது எனது நாட்டுப் பணத்தில் பதினைந்தாயிரம் ரூபாயளவில் வரும்.

ஒருமுறை பக்கத்திலமர்ந்து பயணம் செய்த மேஸ்திரி சீட்பெல்ட் அணிந்துகொள்ள மறந்ததற்கு அபராதத் தொகை ஐந்நூறு ரியால் கட்ட நேர்ந்ததாகவும் முதலாளி அவனது சம்பளத்திலிருந்து அத்தொகையைப் பிடித்துக்கொண்டதாகவும் சொன்னான். அவனது ஆங்கில இலக்கணத்தில் பிழைகளிருப்பினும் , இன்னொருவருக்கு ஒரு விடயத்தை விளங்கப்படுத்தும் அளவிற்குப் புலமை இருந்தது.

முதலாளியின் பிள்ளைகளுக்குக் கூட ஆங்கிலத்தில் மிகச் சொற்பமான அறிவே இருந்தது. தனது பெயரைக்கூட ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதவராது. பிள்ளைகளை ஒருபுறம் வைத்துப் பார்த்தால் முதலாளிக்குக் கூட அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது . சொல்லவரும் விடயத்தை ஆங்கிலத்திலும் , அறபியிலும் கலந்து சொல்லமுயன்று தானும் குழம்பி , மற்றவரையும் குழப்பி விடுவார்.

ஒரு விடயத்தை விளங்கப்படுத்த முடியா எரிச்சலும் ,கோபமும் ஒருசேரக் கலந்து சாரதியான பகதூரிடமே திரும்பும். பலரும் பார்த்திருக்க அவன்மேல் எரிந்துவிழுந்து சத்தம் போடுவார். இத்தனைக்கும் பகதூர் அவரை விடவும் மூத்தவன்.

முதலாளி பரவாயில்லை. அவரது ஏழு பிள்ளைகளில் இருபது வயதைத் தாண்டிய முதல் மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் வரும்கோபத்திற்கெல்லாம் பகதூர்தான் பலிகடா ஆவான். முதலாளியின் எந்தப் பிள்ளைக்கும் ஒழுங்காகப் படிப்பு வரவில்லை. தந்தையின் பணத்தில் ஊதாரியாகத் திரிகிறார்கள். அவர்களுக்கெனத் தனி வாகனம்,கை நிறையப் பணம், இரவு முழுக்க ஊர்சுற்றல். கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்க தந்தையும் தயங்குவதில்லை.

இன்றும் முதலாளியும் , புதல்வர்களும் செய்யாத தப்புக்காக பகதூரை சத்தமிட்டுத் திட்டுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. எதுவும் பேசாமல் மௌனமாய்த் தலைகுனிந்து நிற்கும் இவனைப் பார்த்து எனக்குக் கோபம் கூட வந்தது.
'இவனுக்கு ரோஷம் என்பதே இல்லையா? எதற்குத் தொடர்ந்து இவரிடமே வேலை செய்ய வேண்டும் ? கையில் மத்திய கிழக்கு நாடுகளனைத்திற்கும் செல்லுபடியாகும் வாகன அனுமதிப் பத்திரமிருக்கிறது. இக்கணமே இவ்வேலையை உதறித் தள்ளினாலும் உடனே வேறொரு நல்ல இடத்தில் வேலையைத் தேடிக்கொள்ள முடியுமே ! '

அடுத்த சிக்னலில் கார் நின்றபொழுது சிந்தித்ததை அவனிடமே கேட்டுவிட்டேன்.
"இப்போ நெனச்சாக்கூடப் போகலாம் போஸ். ஆனா இங்க இவர்கிட்ட பத்து வருஷத்துக்கும் மேலான அனுபவமிருக்கு. சம்பளமும் போதுமான அளவு. புதுசா ஒரு நாட்டுக்கோ , இடத்துக்கோ போனா அங்க நான் புதுசு. திரும்பவும் ஆரம்பச் சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கணும். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. செலவுக்கு மாசாமாசம் நானனுப்புற பணத்தை வச்சுத்தான் மூத்தவ டாக்டருக்குப் படிக்கிறா. மத்தவ கம்ப்யூட்டர் படிக்கிறா. பொண்ணு இன்னும் ஒரு வருஷத்துல டாக்டராகிடுவா. அதுக்குப் பிறகு நான் நாட்டுக்குப் போய்ட்டா திரும்ப வரமாட்டேன்.
என்னோட கவலையெல்லாம் முதலாளிய நெனச்சுத்தான். பிற்காலத்துல பிள்ளைகளால என்ன பாடு படப்போறாரோ ?"

சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர கார் எந்தத் தடங்களுமின்றி நேராகச் செல்ல ஆரம்பித்தது.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

11 comments:

Anonymous said...

சீரான மொழியோட்டத்துடன் கதை சொல்லப் பட்டுள்ள விதம் வாசகரைத் தம் வசம் ஈர்த்துக் கொள்கிறது.
நேரடியாக நாம் அனுவித்த சம்பவம் ஒன்றைப் போல உணர முடிகிறது.கதை சொல்வதிலும் வெற்றிபெறுவீர்கள் ரிஷான்.

M.Rishan Shareef said...

சிறுகதை உலகிற்கு நான் புதிது.
வாசிப்பனுபவங்களே என்னை சிறுகதைகளையும் எழுதத் தூண்டுகிறது.
உங்கள் வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோதரி பஹீமா ஜஹான்.. :)

Anonymous said...

நல்ல கதை
உங்கள் கதை சொல்லும் பாங்கு நன்றாயுள்ளது
இலங்கைக்கு இன்னுமொரு நல்ல எழுத்தாளரின் வரவு
நன்றாய் இன்னும் நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
தபோதரன்,
உப்சாலா, ஸ்வீடன்

M.Rishan Shareef said...

//நல்ல கதை
உங்கள் கதை சொல்லும் பாங்கு நன்றாயுள்ளது
இலங்கைக்கு இன்னுமொரு நல்ல எழுத்தாளரின் வரவு
நன்றாய் இன்னும் நிறைய எழுதுங்கள்
வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி தாமோதரன்... :)
அடிக்கடி இங்கு வருகை தரவேண்டும் நண்பரே.

Anonymous said...

OOPS .......
என்னுடைய பெயர் தபோதரன்
தாமோதரன் அல்ல
:-)))

மீண்கும் சந்திப்போம்.
அன்புடன்,
தபோதரன்

உண்மைத்தமிழன் said...

ரிஷான்.. தங்களது முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

அதே சமயம் எவ்வளவு பெரிய கதையாக வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் அவற்றை பத்திகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.

அப்போதுதான் பதிவர்கள் படிப்பதற்கு ஏதுவாகவும், அனுசரணையாகவும் இருக்கும்.

இது எனது அனுபவம்.

M.Rishan Shareef said...

அன்பின் தபோதரன்,
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே.
தவறுக்கு வருந்துகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.. :)

M.Rishan Shareef said...

அன்பின் உண்மைத் தமிழன்,

//தங்களது முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.

கதையை எழுதும் போது பத்தி பிரித்துத்தான் எழுதுகிறேன்.புளொக்கில் போட்ட பின் அவை சேர்ந்துவிடுகிறது.ஏனென்று தெரியவில்லை.

இப்பொழுது திருத்திவிட்டேன் பாருங்கள்.
ஆலோசனைக்கு நன்றிகள் நண்பரே.. :)

Divya said...
This comment has been removed by the author.
Divya said...

Excellent narration:)

வேற்று நாட்டிற்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

பாராட்டுக்கள்!

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)