Saturday, March 1, 2008
பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்
'இந்த முகம்,இந்த விழிகள்,இந்த அடர்த்தியான புருவங்கள் இவனுக்கு எப்படி வந்தது? உலகத்தில் ஒருவரைப் போலவே ஆறு பேர் இருப்பார்கள் என்பது உண்மைதானோ? இல்லையே.இவனது சுருட்டை முடி அவனுக்கு இருக்கவில்லையே.அவன் இவனை விடவும் உயரமும்,சிவப்பும் மிகுந்தவனல்லவா?எனினும் இதே அடர்ந்த இமைகளோடு கூடிய கருவிழிகளும்,இதழோரச் சிறுநகையும்,ஒரு பக்கப் புருவ உயர்வுடன் நிறுத்தும் பேச்சும் அவனுக்கும் இருந்ததுவே...?'
ஒரு அழகிய இளம்பெண், "எக்ஸ்கியூஸ் மி.பேனா இருக்கிறதா?"வெனக் கேட்ட ஒரு சராசரி இளைஞனை ஒருநிமிடம் தொடர்ந்து உற்று நோக்கியதில் அவன் கலவரப்பட்டிருக்க வேண்டும்.திரும்பவும் ஒரு 'எக்ஸ்கியூஸ் மி'யை உதிர்த்து விட்டு இன்னொருவரிடம் மெல்ல நகர்ந்தான்.
இன்றைய இரவில் தனது நண்பர்களுடனான அரட்டையில் இவன் இந்நிகழ்வைப் பற்றி ஆச்சரியம் கலந்த அலட்சியத்தைத் தனது குரலில் கலந்து விவரிக்கக் கூடும்.
"ஒரு சூப்பர் பிகர் இன்னிக்கு என்னை ஹாஸ்பிடலில வச்சு சைட் அடிச்சுக்கிட்டே இருந்தாடா.மொபைல் நம்பர் கூடக் கேட்டா.நாந்தான் குடுக்காம வந்திட்டேன்.பொண்ணுங்ககிட்டிருந்து ஒரே தொந்தரவுடா" எனப் புளுகி நண்பர்களின் பொறாமைப் பார்வையில் தன்னை ஒரு நாயகனாய்ச் சித்தரிக்க முயற்சிக்கவும் கூடும்.இல்லையெனில், அவனைப் போல இவனுக்கும் டயறி எழுதும் பழக்கமிருப்பின் இன்றைய திகதியின் கீழ் எழுதியும் வைப்பான்.
எவ்வாறாயினும்,அவன் ஜாடையிலொருவனைச் சந்திக்க நேரிடுமென முன்பே அறிந்திருப்பின் தனது வருகையைத் தவிர்த்திருக்கலாமென எண்ணினாள்.இல்லை.தவிர்க்க முடியாது.கணவனது குருதிப்பரிசோதனை அறிக்கை இன்று வைத்தியரிடம் சமர்ப்பிக்கப் படவேண்டும்.அதன்மூலம் தான் அவரைத் தாக்கியிருப்பது புற்றுநோயா? என அறியமுடியும்.
அவருக்கு ஏதேனும் ஆகிவிடும் பட்சத்தில் இவளுக்கென்று யாருமிலர்.அதுவும் கல்லூரிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரம் அவசரமாக சொந்தத்திலேயே திருமணம் முடித்து அவனுடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் தனது தோழிகளுடனான சம்பந்தங்களும் தொடர்பற்றுப் போயிற்று.
கொஞ்சம் தாமதித்தாவது வந்திருக்கலாம்.உறங்கிக்கிடந்த அவன் சம்பந்தப்பட்ட நினைவுகளை,இவன் எழுப்பிவிட்டு ஏதுமறியாதவனாய் அப்பால் நகர இவளிங்கே அவன் நினைவுகளோடு அல்லாட வேண்டியிருக்கிறது.
கல்லூரியில்தான் அவன் அறிமுகம்.முதலாம் வருட மாணவியாய் இவள் நுழைய,இரண்டாம் வருட மாண்வனாய் அவன் இருந்து இவளை ராகிங் தொந்தரவிலிருந்து காப்பாற்றினான்.முதல் வகுப்பு மாணவர்களனைவரும் ராகிங்கில் மாட்டிக்கொண்ட போதிலும் சீனியர்கள் இவளை மட்டும் அணுகவேயில்லை.தன்னை மட்டும் காப்பாற்றிய காரணம் குறித்து அவனிடமே கேட்டுவிடலாமெனினும் ஏதோ ஒரு கூச்சம் தடுத்தது.
அம்மாவுடன் வாழ்ந்த இவளது முதல் பத்து வருட காலத்திலும் பள்ளிக்கூடத்திலோ,வெளியிலோ எந்த ஆண் நண்பர்களும் இவளுக்கென்று இருக்கவில்லை.அம்மா இறந்ததற்குப் பிற்பாடும் தனிமை மட்டும்தான் இவளுக்கு நெருங்கிய தோழியாக இருந்தது.அப்பாவும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.இவளை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமெதுவும் அதற்குக் காரணமல்ல.இவருக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லையென்ற காரணம்தான் பிரதானம்.இவரது குடிப்பழக்கமும்,சந்தேக புத்தியும் அம்மாவை இவர்தான் தூக்கத்தில் தலையணையை முகத்தில் அழுத்திக்கொன்றார் என்ற ஊராரின் பேச்சும் இவரது இன்னொரு திருமண முயற்சிக்குப் பெருந்தடையாக அமைந்தது.
அம்மாவின் அழகு,நிறம்,அமைதி அப்படியே இவளுக்கும் வாய்த்திருக்கிறது.வகுப்புத் தோழிகள் கூட அடிக்கடி சொல்வார்கள்.
"ராஜி,உன் அழகுக்கும் நிறத்துக்கும் சீக்கிரம் நீ லவ்வுல விழுந்திடுவே"
லவ்வாவது,மண்ணாவது...!அம்மாவினதும் அப்பாவினதும் காதல் அம்மாவின் உயிரோடும்,அப்பாவின் போதையோடும் கலந்து கரைந்துபோனதைப் பார்த்து வளர்ந்தவளுக்குக் காதல் மேல் விருப்பம் வருமா என்ன?
அப்பா,அம்மாவை அடிப்பதையும் அம்மா தனிமையிலிருந்து விசும்பி அழுவதையும் கூடச் சிறுவயதில் இவள் பார்த்திருக்கிறாள்.இதில் எங்கிருந்து காதல் மேல் இவளுக்கொரு நேசம் வரும்?
பள்ளிப்படிப்பின் இறுதியில் மிகச்சிறந்த புள்ளியைப்பெற்ற மாணவியென்ற காரணத்தினால் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் முதல் அப்பாவின் நண்பர்கள் வரை அநேகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவள் கல்லூரி சென்று படிக்க அனுமதித்திருந்தார் அப்பா.அதுவே பெரிய விஷயம்.
வெளியே மழை லேசாய்த் தூறிக்கொண்டிருந்தது.இப்படியான ஒரு காலநிலையில்தான் அவனுடனான முதல் பேச்சும் இவளுக்கு நிகழ்ந்தது நினைவிருக்கிறது.கல்லூரி கேண்டீனில் சிற்றுண்டிக்கான வரிசையில் இவளும் தோழியும் நின்றிருக்கையில் இவர்களுக்கான உணவை அவனே வாங்கிவந்து அருகினில் ஒரு புன்னகையோடு நீட்டினான்.தோழி வாங்கி விட்டாள்.இவளும் வாங்காவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் வாங்கிக்கொண்டாள்.மூவரும் கேண்டீனில் போடப்பட்டிருந்த பச்சைநிற ப்ளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்திருந்தனர்.
"உங்கட சிநேகிதியைப்போல நீங்களும் சிரிச்சீங்களெண்டால் இன்னும் வடிவாயிருப்பியள்"
என்றவன் சொன்னதன் பிறகுதான் தயக்கம் நழுவித் "தேங்க்ஸ்" சொன்னாளிவள்.
"சரி.உங்கட பேரென்ன?எனக்கு ரெண்டு பேரிருக்கு.பதிஞ்ச பேரு சத்தீஷ்.அதச் சொல்லித்தான் இஞ்ச எல்லோரும் கூப்பிடுகினம்.ஊருல,வீட்டுல,அம்மா எல்லோரும் பாலா எண்டுதான் கூப்பிடுவினம்.நீங்கள் என்னெண்டு கூப்பிடுவியள்?"
'நான் எதற்கு உங்களைக் கூப்பிடப் போகிறேன்?' என்று எண்ணியவள் பின்வந்த நாட்களில் பாலா என்றுதான் கூப்பிட்டாள்.இவள் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவதைக்கண்டு தோழிதான் இவள் பெயர் சொல்லி ,இவளை மட்டும் ராகிங்கிலிருந்து காப்பாற்றியதற்கான காரணம் கேட்டாள்.
"எனக்கொரு தங்கச்சி இருந்தவ.சுவாதியெண்டு பேர்.இவங்களப் பார்க்கையில அவளிண்ட நினைவுதான் அப்படியே வருது.நல்லாப் படிப்பா.இவங்களப்போலவே நல்ல வடிவு.எண்ட மேல அண்ணா,அண்ணாவெண்டு ரொம்பப் பாசமாயிருந்தவ.ஏலெவல் முடிச்சிட்டு ரிசல்ட்ஸ் வரும்வரையில கொழும்பு போய் மாமாவின் வீட்டுல இருந்தனான்.அவர் ரொம்ப வசதிப்பட்ட மனுஷன்.அங்க இருந்துதான் கம்ப்யூட்டர் கிளாஸ் போன நான்.அப்போ வந்த சுனாமியில ஊருல இருந்த தங்கச்சியும்,அம்மாவும்,அப்பாவும் இன்னும் நிறைய சிநேகிதங்களும் தவறிட்டினம்,ஊருல நிறையப் பேர் செத்துப் போயிட்டினம்.எங்கட வீட்டுவளவுல இருந்த முப்பது வருஷப் பனமரம் கூடச் சாஞ்சிருந்தது.அவ்வளவு உசரத்துக்கு கடல் வந்திச்சுதெண்டால் ஊருல நிறையப் பேர் மரிப்பது சாத்தியம் தானே ?!"
பதிலின் தேவையற்ற கேள்வியோடு அவன் நிறுத்துகையில் இவள் விழிநீர் கசியத் தலைகுனிய வேண்டியிருந்தது.
"பிறகு கொழும்பு மாமாதான் என்னை இஞ்ச சென்னைக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார்.நல்லாப் படிக்கிற நானல்லோ.அவரிண்ட மகள எனக்குக் கட்டிவைக்க அவருக்கொரு எண்ணமிருக்கு.இந்த ராஜி கூடக் கதைக்கையில் சுவாதி கூடக்கதைக்கிற உணர்வும்,களிப்பும் தான் ஏற்படுது.நிசமாத்தான்..!"
பின் வந்த நாட்களில் அவனது காதலென்ற எண்ணமற்ற பாசத்துடனான உரையாடல்களில் இவள் மனதும் பூரித்துப் போயிற்று.இவளது தயக்கங்கள் விலகி நட்பு வேர் இறுகிச் செழித்து வளரலாயிற்று.கிடைத்த நேரங்களிலெல்லாம் கல்விச்சந்தேகங்கள்,அவனது அம்மா செய்யும் தேங்காய்ப் பிட்டின் சுவை,ஊர் நிலவரங்கள்,இவள் வீட்டுப் புது வரவான நாய்க்குட்டி,முன்னைய நாள் பார்த்த திரைப்படம்,வீட்டுத் தோட்டத்தில் நேற்றுப் பூத்திருந்த பெயரறியாப் பூ என இருவருக்கும் உரையாடப் பலவிஷயங்கள் இருந்தன.
அவனது அநேக உரையாடல்களின் முடிவில் 'நிசமாத்தான்' என ஒரு புருவமுயர்த்திச் சொல்வது மிக அழகாக இருக்கிறதெனத் தோழி பலமுறை வியந்து அவளுக்காக அவனிடம் காதல் விண்ணப்பம் விடுக்கச் சொல்லிக் கெஞ்சியதில் இவளும் அவனிடம் கேட்டாள்.
"நாந்தான் உங்ககிட்டயும் அவங்ககிட்டயும் முன்னமே சொல்லிட்டனல்லோ.எனக்கு அந்தமாதிரி எந்தவொரு எண்ணமுமில்ல கண்டியளே.எண்ட மாமா எனக்கு இண்டைக்கு இவ்வளவு செலவழிச்சுச் செய்யுறதெல்லாம் சும்மாவெண்டே நெனச்சியள்?அவருக்கு அவரிண்ட மகள எனக்குக் கட்டி வைக்கவேணுமெண்ட எண்ணம்.அந்தப் பெட்டை அவ்வளவு வடிவில்லை.அம்மா இருந்திருந்தாக் கூட மறுப்பேதும் சொல்லியிருக்க மாட்டா.நிசமாத்தான் !நானும் இஞ்ச நல்லபடியாப் படிச்சு முடிச்சுட்டு அங்க போய்க் கல்யாணம் முடிச்சு அவங்களையும் கூட்டிக்கொண்டு லண்டன், கனடா,சுவிஸ் எங்கேயெண்டாலும் போய்ச் சீவிக்கணும் என்ற எண்ணத்திலிருக்கிறன்.இலங்கையில் சீவிக்கிறது வலுகடினம்.உங்கட சிநேகிதிக்கிட்ட சொல்லுங்கோ.அவங்களும் எனக்குத் தங்கச்சி மாதிரித்தான். நிசமாத்தான் !"
தோழியிடம் விடயத்தைச் சொன்னதில் கலங்கிய விழிகளுடன் அன்று விடைபெற்றுப் போனாள்.இவனது தனிமைத் துயரங்கள்,தேசத்தைப்பிரிந்த சோகம்,யுத்தக் கதைகள் கேட்கும் போது இவளது கவலைகள் அற்பமானதெனத் தோன்றும்.இவனைச் சந்திக்கும் முன் பல இரவுகளில் தலையணை நனைய தனிமையில் விசித்து விசித்தழுதிருக்கிறாள்.
தொடர்ந்த இவர்களது நட்பில் கல்லூரியில் இருவரையும் இணைத்துப் பலகதைகள் உலாவந்தன.ஒரு அழகனும்,ஒரு அழகியும் கல்லூரியில் தினமும் ஒன்றாய்ப் பலர் பார்க்க உலாவந்தால் இதுபோலக் கதைகள் கிளம்புவது இயல்பு தானே.அவளது அப்பாவின் காதுகளுக்கும் எட்டி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வாதிட்டுத் தோற்றுத் தலை குனிந்தாள்.
"இன்னிக்கு ப்ரண்ட்ஸ்னு சொல்லிட்டுத் திரியுறீங்க.கண்டிப்பா ஒருநாள் ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கத் தான் போறீங்க !" என்ற இருவரதும் நண்பர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி ஒரு அடர்மழை நாள் இரவில் தெருவோரமுனையில் காத்திருந்த இவளது அப்பாவின் கத்திக்குத்துக்கு இலக்காகி பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ் பரிதாபமாகச் செத்துப் போனான்.
எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இந்தக் கதையைப் படிக்கும் பொழுது திரைப்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.
சிறுகதைகளிலும் உங்கள் தடத்தைப் பதித்துச் செல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் ரிஷான்.
அன்பின் பஹீமா ஜஹான்,
//இந்தக் கதையைப் படிக்கும் பொழுது திரைப்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.//
:)
//சிறுகதைகளிலும் உங்கள் தடத்தைப் பதித்துச் செல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் ரிஷான்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
கொஞ்சும் கொழும்புத் தமிழில் அருமையான கதை,
கடைசி வரிகள் நெஞ்சை உலுக்கியது!
ரொம்ப டக்கென்று கதை முடித்தது போன்ற ஒரு உணர்வு,
ரொம்ப ஆழகாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்,
[சில எழுத்துப்பிழைகள் தென்பட்டன......like Austrailia..ஆஸ்த்ரேலியா, டயறி-டயரி, சுட்டிக்காட்டியது தவறென்றால் மன்னிக்கவும்]
அன்பின் திவ்யா,
இலங்கையில் Australiaவை அவுஸ்திரேலியா என்றே அழைக்கின்றனர். அதனால்தான்.
மன்னிப்பெல்லாம் வேண்டாம்.
நான் தவறு விடும்போது சுட்டிக்காட்டுங்கள்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
நல்ல கதை ரிஷான்.. ஆனா அநியாயமா என்னைக் கொன்னுட்டீங்களே.ஆமாங்க. "எனக்கும் அதே ரெண்டு பேரிருக்கு. பதிஞ்ச பேரு பாலா.அதச் சொல்லித்தான் இஞ்ச எல்லோரும் கூப்பிடுகினம்.ஊருல,வீட்டுல,அம்மா எல்லோரும் சத்தீஷ் எண்டுதான் கூப்பிடுவினம்."
சில சமயங்களில் இது போன்ற சின்னச் சின்ன ஆச்சரிய நிகழ்வுகளால்(co-incidence)தான் வாழ்வே அர்த்தம் பெறுகிறது.
எழுத்து நடை மிக அழகாக இருக்கிறது, நேரில் கதை சொல்வதைப் போல்.. வாழ்த்துகள்..
அருமையான கதை. கடைசியில் எதிர்பாரா திருப்பம். நல்ல வடிவமைப்பில் எழுதியிருக்கிறீர்கள். அருமை!
வாங்க நிஜ 'பாலா என்றழைக்கப்படுகிற சத்தீஷ்' :)
எனது வலைப்பக்கங்களுக்கான உங்கள் முதல்வருகை இதுவென நினைக்கிறேன்.
மிக ஆச்சரியத்தையும் அழைத்துவந்திருக்கிறீர்கள்.உங்கள் பெயர் இக்கதையின் தலைப்பாக அமைந்தது மிகவும் அதிசயத்திற்குரிய விடயம்தான்.
தலைப்பைப் பார்த்து அதிர்ந்திருப்பீர்கள். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... :)
அன்பின் ஸ்ரீதர் நாராயணன்,
எனது வலைப்பக்கங்களுக்கு முதன்முதல் வந்திருக்கிறீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... :)
அன்பின் ரிஷான்..
மிகவும் ரசித்தேன் உங்கள் கதையை..
கதை எழுதும் திறமை உங்களுக்கு நன்றாக வாய்த்திருக்கிறது..
கதை வாசிக்கவும் ஆர்வம் தூண்டுகிறது. மேலும் regional language கதைக்கு மிகவும் அழகு சேர்க்கிறது..
மிகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது..
தொடர்ந்து வளர வாழ்த்துக்களுடன்,
நட்புடன்,
கோகுலன்.
அன்பின் கோகுலன்,
//கதை வாசிக்கவும் ஆர்வம் தூண்டுகிறது. மேலும் regional language கதைக்கு மிகவும் அழகு சேர்க்கிறது..
மிகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது..
தொடர்ந்து வளர வாழ்த்துக்களுடன்,//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பா :)
ஒரு மாலை நேரத்தில் மழைச் சாரலில் நனைந்தது போல இருக்கிறது இந்தக் கதையைப் படித்து முடித்ததும்..முதல் காரணம்
அந்த இலங்கைத் தமிழின் அழகு!
இரண்டாவது நீரோடை போன்ற நடை. கடைசியாக கதையின் முடிவு. நல்ல கற்பனத்திறன், காட்சிகளை கண்முன் வடிக்கும் உத்தி, சொல்வளம், எதார்த்த நிகழ்வுகளை ஆடம்பரமின்றி எடுத்துக்கூறும் பாங்கு--இவைகள் உங்களை நல்ல கதாசிரியராய் அடையாளம் காட்டுகின்றன.
இன்னும் நிறைய எழுதிப் பழகிவிட்டால் அந்த எழுத்துக்கள் உங்களுக்கு வசப்பட்டு புகழினை அள்ளித்தந்துவிடும். தரப்போகிறது நிச்சயம்!
அன்பின் சகோதரி ஷைலஜா,
//ஒரு மாலை நேரத்தில் மழைச் சாரலில் நனைந்தது போல இருக்கிறது இந்தக் கதையைப் படித்து முடித்ததும்..முதல் காரணம்
அந்த இலங்கைத் தமிழின் அழகு!
இரண்டாவது நீரோடை போன்ற நடை. கடைசியாக கதையின் முடிவு. நல்ல கற்பனத்திறன், காட்சிகளை கண்முன் வடிக்கும் உத்தி, சொல்வளம், எதார்த்த நிகழ்வுகளை ஆடம்பரமின்றி எடுத்துக்கூறும் பாங்கு--இவைகள் உங்களை நல்ல கதாசிரியராய் அடையாளம் காட்டுகின்றன.
இன்னும் நிறைய எழுதிப் பழகிவிட்டால் அந்த எழுத்துக்கள் உங்களுக்கு வசப்பட்டு புகழினை அள்ளித்தந்துவிடும். தரப்போகிறது நிச்சயம்! //
எனது கதையில் உங்களுக்குப் பிடித்தவற்றை ஒரு தேர்ந்த எழுத்தாளரின் லாவண்யத்தோடு அழகாக வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்.
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
ஒரு நல்ல கதாசிரியர் ஆகுவதற்காக நீங்கள் தரும் ஊக்கமும் தொடர்ந்துவருமென உறுதியாக நம்புகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Post a Comment