Tuesday, April 15, 2008
வீடு
கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது.இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு.இதில் அப்பாவுக்கு ஒரு அறை.அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும் ஒரு அறை.இவர்களது அறை கொஞ்சம் பெரியது.அதில்தான் ஆடைகளையும்,சில பாத்திரங்களையும் இவளுக்கு மிகவும் பிடித்த வானொலிப் பெட்டியையும் வைத்திருந்தார்கள்.
இவளுக்குத் தூக்கம் வரவில்லை.என்ன முடிவெடுப்பது என்றும் தெரியவில்லை.நாளை தண்ணீர் எடுத்துவரப் போகும்போது இது சம்பந்தமாகப் பேசலாமா சரவணனிடம்? அவரென்ன? என்னை விரும்புகிறாரா இல்லை இந்த வீட்டை விரும்புகிறாரா எனக்கேட்டு விடலாமா?
மூத்த மகளின் 31 வயதுக்குப் பின்னர் ஒரு வழியாக அமைந்த வரன் சீதனமாகப் பணமும் நகையும் பெருந்தொகையாகக் கேட்பதில் தனியார் கம்பனியொன்றில் சாதாரண பியூனாக வேலை செய்யும் அப்பாவுக்கு வீட்டை விற்றுத் திருமணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அவரும்,அம்மாவும் பலநாட்கள் தூக்கமின்றித் தவித்து சேர்ந்து இம்முடிவுக்கு வந்திருந்தனர்.வீடு அப்பா வழி வந்தது.ஒரு மகளின் திருமணத்தை வீட்டை விற்றாவது ஒப்பேற்றிவிட்டால் வரும் மருமகன் இளையவளின் திருமணத்துக்கு எப்பாடு பட்டாவது உதவுவார் என்ற நம்பிக்கையை மலையாய்ச் சுமந்தனர் இருவரும்.
அவளும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள்.ஒருத்தி திருமணத்திற்காக இன்னொருத்தியும்,பெற்றவர்களும் நடுத்தெருவில் நிற்பதனை அவள் சிறிதேனும் விரும்பவில்லை.வேறொரு வரன் பார்க்கலாமென வாதாடித் தோற்றாள்.கெஞ்சிப் பார்த்தாள்.பெற்றவர்களின் முடிவில் எந்தச் சலனமும் இல்லை.எதுவும் செய்ய இயலாதவளாக சுதாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
காலம்,காலமாக பரம்பரைகள் பலகடந்து வந்து அப்பாவுக்குச் சொந்தமான புராண வீடதனை விற்பதொன்றும் இலகுவாக அமையவில்லை.பல ஓட்டைகள் கொண்ட கூரையும்,இப்பொழுதோ,அப்பொழுதோ என இடிந்துவிழப் பார்த்துக்கொண்டிருந்த சுவர்களும்,வீட்டிற்கான பெறுமதியை தங்களால் இயன்றவரை குறைத்துக் கொண்டிருந்தன.
இறுதியில் ஊர்ப் பெரியவரே விலையைக் குறைக்கப் பல காரணங்கள் சொல்லி வீட்டை வாங்கினார்.தெரு முச்சந்தியில் அமைந்திருந்த அந்த வீட்டை உடைத்து கடை அமைக்கலாமென்பது அவரது எண்ணமாக இருந்தது.அவரது எண்ணத்திற்கேற்ப அதிஷ்டமும் சேர்ந்ததில் அப்பாவின் இயலாமையால் போட்டி போட முடியவில்லை.இருப்பினும் ஊர்ப்பெரியவருக்கும் நெஞ்சின் ஒரு மூலையில் இரக்கமிருப்பதை திருமணத்திற்கும்,அதன் பின்னர் ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து அதில் தங்குவதற்கான அனுமதியும் அளித்தமை காட்டியது.வீட்டை விற்ற பணத்தில் திருமணச் செலவுக்கும் ஒதுக்கி,மணமகளுக்கான உடைகள்,நகைகளோடு,ஒரு சோடித் தங்கக் காதணி,அரைப்பவுனில் ஒரு சங்கிலி,ஒரு நல்ல சேலை தங்கைக்கும் கிடைத்தது.
நிலவு,கண்ணாடித்துண்டில் முகம் பார்த்துத் தாண்டிப் போயிருக்க வேண்டும்.அவ்விடத்தை மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது.அவளுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.அருகிலிருந்த சுவரை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள்.சிறுவயது முதல் அவளைத் தாலாட்டிய வீடு.முதன்முதலாகத் தவழ்ந்து,நடந்து விழுந்த தரையிது.அவளை முழுவதுமாகத் தாங்கிச் சுமந்த நிலமிது.
சிறுவயது முழங்கை,கால் சிராய்ப்புகளுக்கு இதே சுவற்றின் சுண்ணாம்பைத் தொட்டுத் தடவியிருக்கிறாள்.சமையலறையில் படிந்திருக்கும் கருப்புக் கரியை விஷேட நாட்களில் விழிகளில் பூசியிருக்கிறாள்.அவளைப் பொறுத்தவரையில் இது அவளது விருப்பத்துக்குரிய ஒரு உயிர்.இது அவளோடு பேசும்.இவள் சொல்லும் கதைகள் எல்லாவற்றையும் கேட்கும்.சிரிக்கும்.அழும்.
சரவணன் அன்று முதன்முதலாகத் தந்த காதல் கடிதத்தை இந்த வீடு மட்டும் குறுகுறுப்பாய்ப் பார்க்க,இரகசியமாக இரவில் எழுந்து படித்து மகிழ்ந்திருக்கிறாள்.இனி எதுவும் அவளுக்குச் சொந்தமில்லை.
அக்கம்பக்கத்து வீட்டுத் தோழிகள் மணமகளின் இரு கரங்களுக்கும் மருதாணியிட்டுக் கொண்டிருந்தனர்.மருதாணியின்றிச் சிவந்திருந்தன அவளது விழிகள்.சிந்தனையோட்டம் சகோதரியைப் பற்றித் திரும்பியது.
பாடசாலைக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவள்,அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்தபடி இருக்கிறாள்.முன் துருத்திய பற்கள் குறையாக இருந்தது.இந்த லட்சணத்தில் வீடுமில்லையென்றால் எந்த ராஜகுமாரன்,எந்தக் குதிரையில் வருவான் இவளைப் பொக்கிஷமாக அள்ளிக் கொண்டு போக?அப்பாவைச் சொல்லிக் குற்றமில்லை.அம்மாவைச் சொல்லியும்தான்.
வீடு முழுக்க உறவினர் மற்றும் அயலவரின் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்திருக்க பெற்றவர்களின்,சகோதரியின் விழிகளில் துயரத்தின் சாயல் மிகக் கடுமையாகப் படிந்திருப்பதை சுதாவும் உணர்ந்தே இருந்தாள்.
திருமணம் நல்லபடியாக நடந்துமுடிந்தது.கழுத்தில் தாலி கட்டப்படும் சந்தர்ப்பத்திலும் வீடு பற்றிய எண்ணங்களே மிதந்திருந்தன அவளுக்கு.பலரிடமிருந்தும் மகிழ்ச்சியாக வாழ்கவென்ற ஆசிர்வாதங்கள் பல கிடைத்தபோதும் அத்தனையும், இழந்த அவளது வீட்டை மீட்டுத் தருமா என்ன?
மணமகளின் உடல் சுமந்திருந்த ஆபரணங்கள் மாமியாரின் முகத்தில் பெரும் புன்னகையைத் தீட்டின.தம்பதியினை வழியனுப்பி வைக்கையில் அப்பா,அம்மா,சுதாவின் விசும்பல்கள் மகளைப் பிரிவதற்கு மட்டுமேயானதல்ல எனவும் புரிந்தது அவளுக்கு.
சரவணனிடம் இன்று பகலே இதுபற்றிப் பேசப்போகிறாள்.திருமணத்திற்காக, ஆண்டாண்டு காலம் தன்னைச் சுமந்த வீட்டை விற்க நேர்ந்ததனைச் சொல்லப் போகிறாள்.நிர்க்கதியாகி நிற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவவேண்டுமெனக் கோரப் போகிறாள்.
சரவணன் என்ன சொல்வான்?ஒருமுறை ஏதோ தேவைக்காக இவளது ஊருக்கு வந்த சமயம் தண்ணீர் எடுத்துவர வெளியே வந்த இவளைப் பார்த்ததில்,அவனுக்கு இவளைப் பிடித்துப் போனது. பேசிய சிலநாட்களிலே அவ்வளவு முரடன் இல்லை என்பது தெரிந்து விட்டது.லொறி ட்ரைவராக வேலை செய்வதில் எப்படியும் மாதாந்தத் தேவைகளுக்கான பணத்தைச் சம்பாதித்துவிடுவான்.அதில் தான் மிச்சம்பிடித்து தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கி பெற்றோரை,அவர்களது இறுதிக் காலங்களில் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கனவாகச் சுமந்தலைந்தாள்.
பகல் அவனுடன் பேசியதில்,பிற்காலத்தில் நல்லதொரு நிலைமைக்கு வந்ததன் பிற்பாடு சொந்த வீடு வாங்கி அப்பா,அம்மாவைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் என்று அவன் அளித்த காதல் வாக்குறுதியை நம்பி, இரவானதும் புதுச் சேலையையும்,நகைகளையும் அணிந்துகொண்டாள்.தனக்கு மிகவும் பிடித்தமான வானொலிப்பெட்டியையும் தனது உடைகள் சுமந்த பையில் போட்டுக் கொண்டு,வீட்டின்,தெருவின் அனைத்து சந்தடிகளும் ஓய்ந்ததன் பிற்பாடு தெருமுனையில் காத்திருந்த சரவணனின் லொறியில் ஏறிக்கொண்டாள்.அது வீட்டைத் தாண்டிப்போகையில் ஏக்கமாக ஒருமுறை வீட்டைத்திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
தங்கை லொறி ட்ரைவருடன் ஓடிப்போன விடயம் மாப்பிள்ளை வீடுவரை போய்ச் சேர்ந்ததில்,மணமுடித்து இரண்டு நாட்களிலேயே வாழாவெட்டியாக வீடு வந்து சேர்ந்தாள் மூத்தவளான சுதா.
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment