Sunday, June 15, 2008
அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
அவள் :
அரசு மருத்துவமனைகள் எப்பொழுதுமே ஒரு விதமான,பிரத்தியேகமான நெடியினைக் கொண்டிருக்கின்றன.நோயாளிகளாக வருபவர்களும் சரி,அவர்களைப் பார்வையிட வருபவர்களும் சரி நுழைவாயிலால் உள்நுழைந்த முதல்கணம் முகம் சுழிப்பதைக் காணலாம்.
அப்படியானதொரு மருத்துவமனையில்தான் அவளொரு தாதியாகப் பணி புரிந்தாள்.தினம் தினம் பலவிதமான நோயாளிகள்,விதவிதமான பார்வையாளர்கள்,தடுமாறும் பதற்றங்கள்,அவசரங்கள் அனைத்தையும் தனதொரு புன்னகையால் துடைத்துச் சீராக்கும் மாயவித்தையை அவள் கற்றிருந்தாள்.
பக்கத்து ஊர் மருத்துவமனைதான்.அதிகாலையிலேயே எழுந்துவிடுபவள் சமைத்ததில் அப்பாவுக்கும் வைத்துவிட்டு,அவளுக்கும் எடுத்துக்கொண்டு முதல் பஸ்ஸில் மருத்துவமனை வருவாள்.
பழகிய நோயாளிகள் இவள் வருகையிலேயே சிறிது சுகம் கண்டார்கள்.புன்னகையுடனான ஆதூர விசாரிப்பு எப்பொழுதுமே ஆரோக்கியத்தைக் கொடுக்குமென உறுதியாக நம்பியவள் அதனைச் செயல்படுத்தவும் முனைந்ததில் பல நோயாளிகள் சினேகமாயினர்.மருந்துகள் இவள் கரங்களினால் தரப்படுமிடத்து ஒரு தோழமையுடன் வாங்கிக் கொண்டனர்.தண்ணீர் தருவதாயினும் இவள் அதைத் தாய்மையோடு தரும்பொழுது வாழ்வின் மீதான நம்பிக்கையின் பாடலொன்றை அவர்கள் பூரிப்புடன் உச்சரித்துக் கொண்டனர்.
தனக்கு நிகழ்ந்த அத்தனை துயரங்களையும் புனிதத் தலங்களில் செருப்பினைக் கழற்றிவிட்டு உள்நுழைவதைப் போலக் கழற்றிவிட்டே அவள் இம்மருத்துவமனையின் உள்நுழைந்தாள்.இவள் துயரங்களையொரு பாடலாய்ப் பாடினாலுமங்கு செவிமடுக்க யாருமில்லை.
நல்லவளாகிய அவளுக்கும்,பார்வை மங்கிய நிலையில் நோயாளியாகவுமிருந்த அவளது அப்பாவுக்கும் அவளது சம்பளம் மட்டுமே போதுமானதாக இருந்தது.அம்மா உயிருடனிருந்த வரையில் அவளது மருத்துவத்திற்காகவே இவள் சம்பாதிக்கும் பணம் செலவழிந்து கொண்டிருந்தது.வீட்டின் மற்றச் செலவுகள் இராணுவ வீரனாக இருந்த அவளது அண்ணனின் மணியோர்டர் பணத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.
கோடையின் உக்கிரம் தணிந்த ஒரு நாளில் அவளது அண்ணன் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு மூடிச் சீல் வைக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைத்துத் தூக்கி வரப்பட்டான்.வீட்டுக்கென்றிருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் குண்டுகள் தாக்கித் துளைத்து உதிர்ந்து போயிற்று.அன்றைய தினத்தில் அவளதும்,அம்மா,அப்பாவினதும் ஒப்பாரிகளெதுவும் அவனை ஏகவுமில்லை,எழுப்பவுமில்லை.
இரண்டு,மூன்று மாதங்களில் அண்ணனின் இறப்பிற்காகக் கிடைத்த இழப்பீட்டுத் தொகையில் அவள் அம்மாவுக்கு ஒரு நல்ல வைத்தியரிடம் ஆங்கில மருத்துவம் செய்தாள்.மழை நாட்களில் ஒழுகிய கூரையைச் சீர் செய்தாள்.அப்பாவுக்குப் புதுச் சட்டையும் பிஜாமா சாறனும் வாங்கிக் கொடுத்து,உடைந்திருந்த அவரது மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொடுத்தாள்.
நாட்டுக்காகச் சேவை செய்யும் சூரிய,சந்திரர்களை இரு பிள்ளைகளாகப் பெற்றிருக்கிறேனென அவள் அம்மா சொல்லிச் சந்தோஷித்த நாளொன்றில் அவளது வானம் இருண்டது.விடியலில் அம்மா இறந்து போயிருந்தாள்.
அவன் :
தபால்நிலையங்கள் முதல்பார்வைக்கு மந்தமான கதியைக் கொண்டு இயங்குவதாகப் பட்டாலும் உள்ளே பரபரப்பான வேலைகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.வாழ்வின் துயரங்களையும்,நியதிகளையும்,பிரச்சினைகளையும்,மகிழ்ச்சிகளையும் சொல்லும் எழுத்துக்களைச் சுமந்து இடம் மாறிக்கொண்டேயிருக்கின்றன கடிதங்கள்.
உனது துயரங்கள் இத்தோடு ஒழிந்து போகட்டும்,உனது மகிழ்ச்சிகள் இது போன்றே நிலைத்திருக்கட்டும் என்ற எண்ணங்களைப் போர்த்திக்கொண்டே முத்திரைகள் மீது அச்சுக்கள் ஓங்கிக் குத்தப்படுகின்றனவோ?
ஊரில் நிலை பெற்றிருந்த அப்படியானவொரு தபால்நிலையத்தில் தான் தபால்களுக்குச் சரியான முத்திரைகள் ஒட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பார்த்து அச்சுக்குத்தும் பணியை அவன் செய்துவந்தான்.அரசாங்கப் பணி தரும் கௌரவமும்,வீட்டிலிருந்து சைக்கிளிலேயே போய் வரலாமென்ற தூரமும் அந்த வேலையை அவனுக்குப் பிடிக்கச் செய்திருந்தன.
அவனது நண்பனான இராணுவ வீரன் பிணமாக வந்த நாளில்தான் இந்த வருடத்தின் முதல் விடுமுறையை அவன் எடுத்தான்.இறப்பின் வலி சுமந்த அந்த வீட்டில் எல்லாமாகவுமிருந்து பார்த்துக் கொண்டான்.அவன் அந்த வீட்டிலொரு பிள்ளையாகப் பழகியிருக்கிறான் பாடசாலைக் காலங்களிலும்,பள்ளித் தோழன் விடுமுறையில் வந்த நாட்களிலும்.
அந்த நாட்களில் இதே முற்றத்து வேப்பமரத்தடியில்தான் சிலு சிலுவெனக் காற்று வீச,நண்பர்கள் சேர்ந்து டாம் மற்றும் கேரம் போர்ட் விளையாடுவார்கள்.அவள் திண்ணைத் தூணில் சாய்ந்து பார்த்திருப்பாள்.
அன்றைய தினம் அவளது அண்ணனின் இறப்பு அந்தக் குடும்பத்தின் ஆணிவேரை அசைத்தது என்பதை அவன் அறிவான்.சோகம் தாக்கி வாடியிருந்த அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
அவள் :
அம்மாவும் இறந்த அன்றைய தினம் அழுகையை ஒத்திவைத்து,மரணச் செலவை ஈடு செய்ய வழிகள் தேடியதில் அண்ணன் சிறிது,சிறிதாகச் சேமித்து வாங்கித் தந்திருந்த ஒரு பவுணிலான தங்கச் சங்கிலி அடகுக் கடையில் தஞ்சம் பெறலாயிற்று.அண்ணனின் நண்பர்களும்,அக்கம் பக்கத்தவர்களும் உதவியதையும் மறக்கக்கூடாது.
அண்ணாவையும்,அம்மாவையும் இழந்த சோகம் தாக்கிச் சில மாதங்களிலேயே காதலெனும் இனிப்பு தடவப்பட்டதொரு கசப்பு மாத்திரையை அவள் நம்பி விழுங்கிடலானாள்.அவளது சிவப்பு நிறமும்,முழங்கால் வரை நீண்ட கூந்தலும் ஊர் இளைஞர்களிடத்து காதலின் மெல்லிசையொன்றை மீட்டியபடியே இருந்ததிலோர் நாள் அண்ணனின் நண்பனாக இருந்தவனொருவனின் காதல் வலையில் வீழ்ந்து தொலைந்தாள்.
அவளது அம்மாவும்,அண்ணாவும் இறந்த தினங்களில் வீட்டின் அனைத்துக்காரியங்களிலும் உதவியாக இருந்தவனின் காதல் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாதளவுக்கு அவள் மனதில் அவன் சிம்மாசனமிட்டு உட்காந்திருந்தான்.இழப்புகள் அவளில் மூட்டியிருந்த தொடர்ச்சியான துயரங்களை காதலின் குளிர்ச்சி கொண்டு, வசந்த காலங்களின் பாடல்கள் பாடி அணைத்திட முயன்றான் அவன்.
அவளது வீட்டு வேலியொன்றில்,எப்பொழுதோ கூடிப்பறந்த பறவையொன்று உருவாக்கிப் போன பொந்தொன்றில் அவன் தனது காதல் வார்த்தைகள்,விடுமுறை நாளில் சந்திக்க வேண்டிய இடம் மற்றும் நேரம் பற்றிய குறிப்புகளைத் தாங்கிய மடலை வைத்துவிடுவான்.பின்னேரங்களில் கிணற்றுக்குத் தண்ணீர் கொண்டுவருவதாக வீட்டில் சொல்லிப் போகும் அவள் மரத்தடிக்கு வந்து வீதியின் இருமருங்கையும் எட்டிப் பார்த்துப் பின் கடிதத்தையெடுத்துத் தன் சட்டைக்குள் மறைத்துக் கொள்வாள்.தன்னை ஏதுமறியாதவளாகக் காட்டிக் கொண்டு குடத்தின் தண்ணீர் சிந்தச்சிந்த வீடு வந்து அறையின் குப்பிவிளக்கு வெளிச்சத்தில் கடிதத்தைப் பலமுறை படிப்பாள்.
அவன் :
பெரும்பாலும் அவர்களது காதல் சந்திப்பானது விகாரையிலும்,எப்பொழுதாவது ஆற்றங்கரையிலுமே நிகழ்ந்தன.கை தொட்டுப் பேசுவதைத் தவிர்ந்த மற்ற எல்லைகளை இருவரும் தவிர்த்துவந்தனர்.தமது தூய காதலை இருவரும் போற்றிவந்தனர்.அம்மாவின் மரணச் செலவுக்கு அடகு வைத்த நகைகளை அவன் மீட்டுக்கொடுத்தான்.அவளது அம்மாவின் பெயரிலும்,அண்ணாவின் பெயரிலும் அவளின் செலவில் விகாரையில் கொடுக்கப்பட்ட அன்னதானத்துக்கு முன்னின்று உதவினான்.
எல்லாம் நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தன எனலாம்.காலம் இருவரது காதலையும் காற்றோடு அள்ளிப் போய் ஊர்வாயில் போட்டது.இருவரதும் காதல் ஊர்வாயில் மெல்லப்படும் அவலானது.கற்பனையில் இருவரும் வரைந்து வைத்திருந்த காதல் ஓவியங்கள் இராட்சத நாக்குகளில் சிக்கிச் சப்பித் துப்பப்பட்டது.
அவள் :
அவளது தந்தை நள்ளிரவிலொரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சிரமப்பட்டதில் அவள் உதவிக்கு ஆள்தேடி இரைந்தாள்.அயலவர்கள் உதவியதில் இவள் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுச் சில மணி நேரங்களில் அவர் இறந்து போனார்.
அன்றுதான் தனித்துப் போனது அவள் உலகம்.அப்பாவின் உடல் புதைக்கப்பட்ட நாளின் இரவில் தன் வாழ்வு சூனியத்தில் தொலைந்திட்டதாய் எண்ணியெண்ணிச் சிதைந்தாள்.அன்றுதான் அவள் விழிநீர் வற்றும் வரை துளித்துளியாய் அழுதாள்.
அவன் :
ஊர் வாயில் மெல்லப் பட்ட காதல் அவல்,அவன் வீட்டிலும் புகைய ஆரம்பித்த நேரமது.அனாதரவாக நிற்கும் அவளை முறைப்படித் தன் வீட்டுக்குக் கூட்டி வர எண்ணினான் அவன்.விடயத்தைச் சொன்ன கணம் புகைந்து கொண்டிருந்த தணல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திற்று.
ஊர் விதானையாராக இருந்த அவனது தந்தைக்கு தன்னை விடக் குறைந்த சாதியில் ஒரு அநாதையாய்,சொத்துக்களேதுமற்று நிற்கும் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனம் இடங்கொடுக்கவில்லை.அவரது அந்தஸ்தும்,அவனது அரச சம்பாத்தியமும் அவனது எதிர்காலத்தின் தீர்ப்பை அவர் மனதுக்குள் எப்பொழுதோ எழுதியிருந்தது.
காதலின் மென்கரங்கள் சிறிது சிறிதாக முறிக்கப்பட்டது.அவனுக்குள் ஒட்டியிருந்த அவள் மெல்ல மெல்ல உரித்தெடுக்கப்பட்டாள்.காதலின் நூலிழை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது அவனுள்.
இருவரதும் காதல் மூங்கில் புல்லாங்குழலாகி,வசந்தங்களைப் பாடும் முன்பே தீயிட்டுச் சிதைக்கப்பட்டதாகச் செய்தியறிந்த நாளொன்றின் விடியலில் அவள் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தாள்.
அந்த மாலைப்பொழுது :
அவனது பார்வையிலிருந்து தப்பி,திறந்திருந்த நுழைவாயிலினூடு வீதிக்கு வந்து மண்ணை அள்ளி விளையாடிக்கொண்டிருந்த அவனது நான்கு வயது மகனின் கரங்களை வசமாகப் பிடித்துக் கொண்டாள் முழங்கால் வரை நீண்ட கூந்தலை முழுவதுமாக மழித்து,காவியுடை தரித்துப் பிக்குனியாயிருந்த அவள்.அவனைஅழைத்து,பிள்ளையை வீதிக்குப் போகாமல் பார்த்துக்கொள்ளும் படியும் வீதியில் வேகமாக வாகனம் வருவதாயும் கூறி ஒப்படைத்த பின்னர் நிலம் பார்த்து நடந்து சென்றாள்.
படபடக்கும் எண்ணத்தோடும்,குறுகுறுக்கும் மனதோடும் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் அவன்.
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இயல்பான நடப்புகளை சுவைபடச் சொல்லுகிறீர்கள்.
//காலம் இருவரது காதலையும் காற்றோடு அள்ளிப் போய் ஊர்வாயில் போட்டது.இருவரதும் காதல் ஊர்வாயில் மெல்லப்படும் அவலானது.கற்பனையில் இருவரும் வரைந்து வைத்திருந்த காதல் ஓவியங்கள் இராட்சத நாக்குகளில் சிக்கிச் சப்பித் துப்பப்பட்டது. //
அருமை!
//காதலின் மென்கரங்கள் சிறிது சிறிதாக முறிக்கப்பட்டது.அவனுக்குள் ஒட்டியிருந்த அவள் மெல்ல மெல்ல உரித்தெடுக்கப்பட்டாள்.காதலின் நூலிழை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது அவனுள். //
பெரும்பாலான 'காதல்'கள் இப்படித்தான் போலும். அப்படி ஆன பின்னர் அவை 'காதல்' என்று அழைக்கப்படும் தகுதியை இழந்து விடுகின்றன.
நல்லாருக்குங்க :))
சோகத்திற்கு மேல் சோகம்......அதன் வலிகளை மிக அற்புதமாக ஒவ்வொரு வார்த்தைகளும் விவரிக்கின்றது.
\\காதலெனும் இனிப்பு தடவப்பட்டதொரு கசப்பு மாத்திரையை அவள் நம்பி விழுங்கிடலானாள்\\
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீங்க ரிஷான்.
ரொம்ப நல்ல நடை ரிஷான்,
அனுபவித்து படித்தேன்!
\\அவளது அம்மாவும்,அண்ணாவும் இறந்த தினங்களில் வீட்டின் அனைத்துக்காரியங்களிலும் உதவியாக இருந்தவனின் காதல் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாதளவுக்கு அவள் மனதில் அவன் சிம்மாசனமிட்டு உட்காந்திருந்தான்.\\\
சோகத்தின் உச்சியில்,
இழப்புகளின் வெறுமையில்,
ஆறுதல் தோள் கொடுப்பவர் மீது இத்தகைய உணர்வு வருவதை, காதல் என்று அர்த்தம் கொள்வது தான் எத்தனை ஒரு மடத்தனம், என உணர முடிந்தது.
\\படபடக்கும் எண்ணத்தோடும்,குறுகுறுக்கும் மனதோடும் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் அவன். \\
ஏன் ஏன் படபடக்க வேண்டும்??? ஒருத்தியை காதலித்தால், அதில் உருதியாக இருந்தால், இப்படி ஒரு பெண்னை பித்து பிடித்தவள் போல் உருவாக்க வேண்டிருக்காதே..
\\காதலெனும் இனிப்பு தடவப்பட்டதொரு கசப்பு மாத்திரையை அவள் நம்பி விழுங்கிடலானாள்\\
கசப்பான உண்மை :((
அன்பின் கவிநயா,
//பெரும்பாலான 'காதல்'கள் இப்படித்தான் போலும். அப்படி ஆன பின்னர் அவை 'காதல்' என்று அழைக்கப்படும் தகுதியை இழந்து விடுகின்றன.//
ஆமாம்.இன்றைய காலகட்டத்தில் காதலென்னும் போர்வையின் பின்னர் இப்படிப்பட்ட குரூர முகங்கள்தான் காணக் கிடைக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சென்ஷி ,
உங்கள் முதல்வருகை என எண்ணுகிறேன்.
//நல்லாருக்குங்க :))//
உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சென்ஷி ,
உங்கள் முதல்வருகை என எண்ணுகிறேன்.
//நல்லாருக்குங்க :))//
உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
ஜெயித்த காதலிலும் பார்க்க தோற்றுப் போகும் காதலே அதிகமாகி விடும் போலிருகிறது..
ஒரு திரைப்படத்தை பார்த்த முழுமை இங்கே உங்கள் கதியில்..
அருமையான எழுத்து நடை
வாழ்த்துக்கள் தோழரே..
very good..flow..really good story
//தனக்கு நிகழ்ந்த அத்தனை துயரங்களையும் புனிதத் தலங்களில் செருப்பினைக் கழற்றிவிட்டு உள்நுழைவதைப் போலக் கழற்றிவிட்டே அவள் இம்மருத்துவமனையின் உள்நுழைந்தாள்.இவள் துயரங்களையொரு பாடலாய்ப் பாடினாலுமங்கு செவிமடுக்க யாருமில்லை//
என்னமா எழுதறீங்க! எப்டிங்க? நீங்க வெறும் ப்ளாக்ல மட்டும் எழுதரவரா,இல்லை லதானந்த் மாதிரி பத்திரிக்கைகளுக்கும் கதை எழுதறீங்களா? இல்லைனா முயற்சி பண்ணுங்களேன்.
ரிஷான்
கவிதை நடையுடன் கூடிய உங்கள் கதைகள் என்னை வெகுவாக ஈர்ப்பவை.
இந்தக் கதையும் அவ்வாறே.
ஏனைய கதைகளில் இருந்து வித்தியாசப் படும் வடிவத்தில் எழுதியிருக்கிறீர்கள். இன்னும் புதிய உத்திகளை உங்கள் கதைகளில் புகுத்துங்கள். நவீன கதைகளுடனான உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேலும் அகலப் படுத்துங்கள். மேலும் வளர்வீர்கள்.
வாழ்த்துக்களுடன்
பஹீமாஜஹான்
ரிஷான், புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க
ரிஷான்,
இன்றுதான் உங்களின் இந்தக் கதையைப் படித்து விட்டு, ஆர்வ மிகுதியால் மற்ற கதைகளையும் (பழைய பதிவுகளையும்) தேடிப் படித்தேன். ஊங்களின் வார்த்தைப் பிரயோகம் அசத்தல். கதை நடை பிரமாதம்... தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி......
இந்தக் கதை, எத்தனை இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்யும் என்று சொல்ல இயலாது.
அன்பின் திவ்யா,
//சோகத்தின் உச்சியில்,
இழப்புகளின் வெறுமையில்,
ஆறுதல் தோள் கொடுப்பவர் மீது இத்தகைய உணர்வு வருவதை, காதல் என்று அர்த்தம் கொள்வது தான் எத்தனை ஒரு மடத்தனம், என உணர முடிந்தது.//
சரியாகச் சொன்னீர்கள்.
கதைகளில்,காவியங்களில் மட்டுமே அனுதாபங்கள் உண்மைக் காதலாக மாறச் சாத்தியங்கள் இருக்கிறது.
நிஜவாழ்வில் எதிர்பார்ப்பது கடினம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் ரம்யா ரமணி,
உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
///ஏன் ஏன் படபடக்க வேண்டும்??? ஒருத்தியை காதலித்தால், அதில் உருதியாக இருந்தால், இப்படி ஒரு பெண்னை பித்து பிடித்தவள் போல் உருவாக்க வேண்டிருக்காதே..//
சரியாகச் சொன்னீர்கள்.அது குற்ற உணர்ச்சி.
இனி ஆயுள் வரை அது அவனைக் கொல்லும்..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சக்தி,
//ஜெயித்த காதலிலும் பார்க்க தோற்றுப் போகும் காதலே அதிகமாகி விடும் போலிருகிறது..
ஒரு திரைப்படத்தை பார்த்த முழுமை இங்கே உங்கள் கதியில்..
அருமையான எழுத்து நடை
வாழ்த்துக்கள் தோழரே..//
உலகிலேயே அதுதான் உண்மை.
ஜெயித்த காதலை விட தோற்ற காதல்களின் கரங்களில் தான் நிறையக் கதைகள் இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)
//very good..flow..really good story //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி நண்பரே :)
அன்பின் வெட்டி ஆபிஸர் (உங்கள் பெயர் தெரியவில்லை.வலைப்பதிவின் தலைப்பிலேயே உங்களைக் கூப்பிடுகிறேன்.தவறில்லை தானே? :) )
//என்னமா எழுதறீங்க! எப்டிங்க? நீங்க வெறும் ப்ளாக்ல மட்டும் எழுதரவரா,இல்லை லதானந்த் மாதிரி பத்திரிக்கைகளுக்கும் கதை எழுதறீங்களா? இல்லைனா முயற்சி பண்ணுங்களேன்.//
பெரிய எழுத்தாளருடனெல்லாம் ஒப்பிடுகிறீர்கள்.ஆனால் நான் இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை.
இப்போதைக்கு ப்ளாக் மற்றும் திண்ணை,வார்ப்பு,கீற்று இணைய இதழ்களில் எழுதிவருகிறேன்.
பத்திரிகைகளுக்கு இனித்தான் முயற்சிக்கவேண்டும்.
வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சகோதரி.
அன்பின் பஹீமாஜஹான்,
//ரிஷான்
கவிதை நடையுடன் கூடிய உங்கள் கதைகள் என்னை வெகுவாக ஈர்ப்பவை.
இந்தக் கதையும் அவ்வாறே.
ஏனைய கதைகளில் இருந்து வித்தியாசப் படும் வடிவத்தில் எழுதியிருக்கிறீர்கள். இன்னும் புதிய உத்திகளை உங்கள் கதைகளில் புகுத்துங்கள். நவீன கதைகளுடனான உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேலும் அகலப் படுத்துங்கள். மேலும் வளர்வீர்கள்.
வாழ்த்துக்களுடன்
பஹீமாஜஹான் //
உங்கள் கருத்து என்னை மிகவும் மகிழ்விக்கிறது.தக்க சமயங்களில் ஊக்கப்படுத்தும் மாயவித்தையை வார்த்தைகளில் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களின் வழிகாட்டலே அழகிய எழுத்துநடையில் என்னைச் சேர்த்தது.
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் அனானி,
//ரிஷான்,
இன்றுதான் உங்களின் இந்தக் கதையைப் படித்து விட்டு, ஆர்வ மிகுதியால் மற்ற கதைகளையும் (பழைய பதிவுகளையும்) தேடிப் படித்தேன். ஊங்களின் வார்த்தைப் பிரயோகம் அசத்தல். கதை நடை பிரமாதம்... தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.....//
அனானியாக வந்து பாராட்டுகிறீர்கள்.உங்கள் பெயரை மட்டுமாவது தெரிந்துகொள்ள ஆவல்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் விஜய் கோபால்ஸ்வாமி,
//இந்தக் கதை, எத்தனை இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்யும் என்று சொல்ல இயலாது.//
உங்களுக்கு மிகவும் இளகிய மனது வாய்த்திருக்கிறது என எண்ணுகிறேன்.
இந்தக் கதைக்கு வந்த பின்னூட்டங்களில் நண்பர் சென்ஷியைத் தவிர மற்ற எல்லாப் பின்னூட்டங்களையும் எழுதியவர்கள் பெண்கள்.
நாயகனைக் குற்றவாளியாக்கி எழுதியது ஆண்களுக்குப் பிடிக்கவில்லையோ தெரியவில்லை.
உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
நல்ல கதை.. மிக ரசித்தேன் நண்பா.. இறுதியில் மனம் வலிக்கிறது.. அதுதான் கதையின் வெற்றி..
Post a Comment