Monday, September 1, 2008

விட்டில் பூச்சிகள்

நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை அணிந்துகொண்டேன். அம்மாவுக்குச் செருப்பணியும் பழக்கம் கிடையாது. மழையோ, வெயிலோ எந்தக் காலநிலையானாலும் அம்மா செருப்பணிவதில்லை. ஆனாலும் அம்மாவிடம் செருப்புச் சோடியொன்று இருக்கிறது. அதனை அம்மா யாருடைய வீட்டிலாவது கல்யாணத்துக்கு அழைத்திருந்தால் அணிந்துகொண்டு போவாள். அங்கும் சமையல் வேலைகளை அவள்தான் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். அணிந்துசெல்லும் செருப்பினை சமையலறையின் மூலையில் கழற்றிவைக்கும் அவள் எல்லா வேலைகளும் முடிந்ததன் பின்னால் மீண்டும் செருப்பினை அணிந்துகொண்டு மணப்பெண், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு வருவாள். அவள் வீடு வரும் போது சாப்பாட்டின் மிச்சம்மீதிகளையெல்லாம் ஒரு காகிதப்பெட்டியில் போட்டு எங்களுக்காக எடுத்துவருவாள்.

அம்மா ஆகாய நீல சேலையொன்றை அணிந்துகொண்டிருந்தாள். எல்லாப் பயணங்களுக்கும் இதே சேலைதான். எங்காவது உடுத்திக் கொண்டுபோய் அழுக்காகி விடும் நாளில் வீட்டுக்கு வந்த உடனேயே கிணற்றடியில் கொண்டு போய் அலசிக் கழுவி காயவைத்து எடுத்து மடித்து வைப்பாள். சாதாரணமாக வீட்டிலோ, கூலி வேலைக்குச் செல்லும் நாட்களிலோ மேற்சட்டையும், சீத்தைத் துணியும் மட்டும்தான்.

யசோதா அத்தை எங்கள் வீட்டுக்கருகில் வந்து குடியிருக்கத் தொடங்கி அப்பொழுது ஆறுவருடங்களாகி விட்டிருந்தது. எனது மாமா, அம்மாவின் தம்பி எங்கோ தூர இருந்த நகரமொன்றிலிருந்து பதினெட்டு வயதுகளிலிருந்த அவரைத் தன்னோடு கூட்டிவந்திருந்தார். ஆரம்பத்தில் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. பின்னர் போகப் போக யசோதா அத்தையின் நற்குணங்கள் அம்மாவை அவர் பக்கம் ஈர்த்தது.

அவர் வந்த சில மாதங்களில்தான் நான் பிறந்தேனாம். வைத்தியசாலையில் நிரப்பிக் கொடுக்கவேண்டிய பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை அவள்தான் பூரணப்படுத்திக் கொடுத்தாளாம். நன்றாகப் படித்த பணக்கார வீட்டுப் பெண். அவளது வீட்டில் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்த எனது மாமாவிடம் தன் மனதைப் பறிகொடுத்து அவளது நகை, உடுபுடவைகள் அனைத்தையும் சுற்றி எடுத்துக் கொண்டு மாமாவுடன் வந்து ஒருநாள் விடிகாலையில் எமது வீட்டுக்கதவைத் தட்டியிருக்கிறார்கள். கதவைத் திறந்த அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் பிறகு புரிந்து தன் தம்பியைத் திட்டித் தீர்த்திருக்கிறார். அப்பாதான் சமாதானம் செய்து இருந்த ஒரு அறையையும் அவர்களுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கிறார்.

தனது மகள் , வீட்டுவேலைக்காரனோடு ஓடிப் போய்விட்ட சங்கதி அறிந்ததும் அவள் வீட்டில் அவளைத் தலைமுழுகி விட்டிருந்தனர். அவர்கள் உயர்சாதிக்காரர்கள். பெரும்பணக்காரர்கள். இந்தத் தீட்டை அவர்களுக்குள் பூசிக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால் யசோதா அத்தையிடம் இது குறித்தான எந்தப்பெருமையையும் காணமுடியாது. மிக இயல்பாக இருந்தாள். என்னை அம்மா வளர்த்ததை விடவும் யசோதா அத்தை வளர்த்ததுதான் அதிகம்.

அம்மா எந்நாளும் போல வீட்டில் இருக்கமாட்டாள். பெரிய இடத்து வீட்டுவேலைகள், கூலிவேலைகள் இப்படி ஏதாவதொரு வேலை அவளைத் தேடி தினசரி வந்துகொண்டே இருக்கும். யசோதா அத்தைதான் என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டாள். கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய்த் தண்ணீர் இறைத்து என்னைக் குளிப்பாட்டி விடுவதிலிருந்து, அழகாக உடுத்திவிடுவதுவும், உணவு சமைத்து ஊட்டிவிடிவதுவும் அவளது வேலையாக இருந்தது. அது குறித்து அவள் என்றைக்குமே விசனப்பட்டதில்லை. இந்த வேலைகளை அவள் விருப்பத்துடனேயே ஏற்றுக் கொண்டிருந்தாள்.

மாமா, திரும்பவும் ஒரு தொழிலுக்காக அலைந்துகொண்டிருந்தார். கிராமங்களில் பெண்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கூலிவேலைகள் கூட ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. நான் பிறந்து சில மாதங்களில் மாமா, அத்தையின் நகைகளை விற்று எமது வீட்டுக்கு அண்மையிலிருந்த அவரது பூர்வீகக் காணியில் ஒரு சிறிய மண்குடிசையொன்றைக் கட்டிக் கொண்டார். அதுவரையில் எனது வீட்டில் தங்கியிருந்த அவர்கள் அன்றிலிருந்து அந்தக் குடிசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். நான் பெரும்பாலும் அவர்களுடனேயே வளர்ந்தேன்.

எங்கள் வீடு இருந்த மேட்டுப்பகுதியிலிருந்து குறுக்குவழியால் பிரதானவீதிக்கு நடந்தோம். அன்றும் இதே நேரம் தான். உடம்பெல்லாம் எரிந்த நிலையில் உயிர் மட்டும் மிச்சமிருக்க யசோதா அத்தை வேதனையில் ஓலமிட்டார். இதே பாதையில்தான் அவரைப் பாயொன்றில் கிடத்தி நாலுபுறமும் நான்கு அக்கம்பக்கத்து ஆண்கள் தூக்கிவந்து வைத்தியசாலையில் சேர்த்துவிட்டிருந்தனர். வைத்தியசாலைக்கு உடனே போனபோதும் யசோதா அத்தையைப் பார்க்கமுடியவில்லை. அவரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாக வெள்ளை வெளேரென உடையணிந்திருந்த தாதியொருத்தி சொன்னாள். நானும் அம்மாவும் அங்கிருந்த வாங்கில் நீண்ட நேரம் காத்திருந்தோம். இருட்ட ஆரம்பித்த போது அங்கிருந்து வெளியேறி, இரவுச் சாப்பாட்டுக்காகப் பாண் வாங்கிக் கொண்டு திரும்பவும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்த பொழுது செய்தி கேள்விப்பட்டு பக்கத்து நகர ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துவந்த அப்பா வந்திருந்தார். அம்மா அவரிடம் விபரம் சொல்லி அழுதாள்.

யசோதா அத்தைக்கு அதிர்ந்து பேசத் தெரியாது. அழகான பெண். எப்பொழுதுமே அவர் கண்கள் சிரிக்கும். எந்தக் கஷ்டமானாலும் முகத்தில் ஒரு புன்னகை இழையோடும். மாமாவின் பரம்பரையே அது போன்ற பெண்ணொருத்தியைப் பார்த்திருக்க மாட்டாது. தன்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிவர , கூட்டிப் போக எனது மாமாவைத்தான் சாரதியாகப் போட்டிருந்தார் எனவும் அது பின்னர் காதலாக அரும்பிற்று என்றும் அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.

அடுத்த கிராமத்தில் மாமாவுக்கு பலகை அறுக்கும் இடமொன்றில் வேலை கிடைத்தது. காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைப் பொதி செய்து எடுத்துக்கொண்டு அவர் தினமும் புறப்பட்டால் வீடுவர இரவாகிவிடும். அதுவரையில் யசோதா அத்தைக்கு நான் தான் துணை. அம்மா வேலை முடிந்து வீடுவரும் வரைக்கும் அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பேன். அம்மா வந்ததும், யசோதா அத்தையும் அவர் வீட்டுக்கதவைப் பூட்டிக் கொண்டு எனது வீட்டில் வந்திருப்பார். இரவில் மாமா வேலை விட்டு வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து அத்தையைக் கூட்டிப் போவார். அப்பொழுது அவரிடமிருந்து கடுமையான சாராய வீச்சமடிக்கும்.

அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே தாறுமாறான சத்தங்கள் அந்த வீட்டிலிருந்து கேட்கத் துவங்கும். யசோதா அத்தை அடிவாங்கிச் சிவந்திருப்பாள். போதையிலிருக்கும் மாமாவுக்குக் கோபம் வந்தால் கையில் எது கிடைத்தாலும் அதைக் கொண்டு அடிப்பார். யசோதா அத்தை கைகூப்பி மன்றாடுவாள். அவளது பெற்றோர்கள் கூட அவளை இதுவரை அடித்திருக்கமாட்டார்கள். முதல் கொஞ்ச நாளுக்கு அம்மா ஓடிப் போய் என்னவென்று விசாரித்துத் தடுத்தாள். பின்னர் அது வழமையாகி விட்டிருந்தது.

மாமாவுக்கு இன்னுமொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என யசோதா அத்தை சந்தேகப்பட்டாள். அம்மாவிடம் அது பற்றிக் கதைத்தபோது அம்மா யசோதா அத்தையைத் திட்டினாள். தன் தம்பியோ, தனது பரம்பரையோ அப்படிப்பட்டதல்ல என உறுதியாகச் சொன்னாள் அம்மா. ஆனாலும் யசோதா அத்தை தனது சந்தேகத்துக்குரிய காரணிகளை எடுத்துச் சொன்னாள். தான் கணவனுக்குச் சமைத்துக் கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டுப் பொதிகள் ஒருநாள் அவர்கள் போகும் ஒற்றையடிப்பாதையிலிருந்த வேப்பமரத்தடியில் வீசப்பட்டிருந்ததாகச் சொன்னாள்.

அம்மாவுக்குத் தனது தம்பி மேல் சிறிதும் சந்தேகம் எழவில்லை. யசோதா அத்தையைப் போல் அழகான பெண் இந்தச் சுற்றுவட்டாரத்திலோ, பக்கத்துக் கிராமங்களிலோ இருக்கமாட்டாள் என்பது அவளது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அவளை விட்டுவிட்டு இன்னுமொரு பெண்ணைத் தன் தம்பி நினைத்துக் கூடப் பார்க்கமாட்டான் என யசோதாவிடம் உறுதிபடக் கூறினாள்.

யசோதா அத்தையின் மனது ஓரளவு சமாதானமாகிவிட்டாலும் தொடர்ந்த மாமாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கிளறியபடியே இருந்தன. சில தினங்கள் மாமா வேலைக்குப் போனால் இரவில் வீட்டுக்கு வருவதில்லை. அத்தினங்களில் யசோதா அத்தை அவருக்காகக் காத்திருந்து காத்திருந்து எங்கள் வீட்டில்தான் தூங்கிப் போவாள். அவர் தன் வீட்டுக்கு வந்தநாட்களிலும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தங்கள் எங்கள் வீட்டுக்குக் கேட்கும்.

அன்று அம்மா வேலைக்குப் போகவில்லை. மாமாவை வேலைக்கு அனுப்பிவிட்டு யசோதா அத்தை எங்கள் வீட்டில் வந்திருந்தாள். தனக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும் எனவும், யாராவது கொஞ்சம் பணம் தந்தால் ஒரு தையல் மெஷின் வாங்கி ,வீட்டிலிருந்து துணிமணி தைத்துக் கொடுத்துச் சம்பாதிக்கலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் மாமா வந்தார். நன்றாகக் குடித்து விழிகள் சிவந்திருந்த மாமா.

அத்தை, உடனே அவருடன் அவர்கள் வீட்டுக்குப் போனார். போய்க் கொஞ்சநேரத்தில்தான் அந்த மரண ஓலம் கேட்டது. நாங்கள் எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தபொழுது அத்தை தன்னுடலை எரித்துக் கொண்டிருந்த தீக்கு மத்தியிலிருந்து அலறிக் கொண்டிருந்தாள். .தன்னைக் காப்பாற்றும்படி ஓலமிட்டுக் கொண்டிருந்த அத்தையின் குரல் அயலிலிருந்தவர்களையெல்லாம் அவள் வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தது. மாமா எங்கோ தப்பிவிட்டிருந்தார்.

பார்வையாளர் நேரமென்பதனால் வைத்தியசாலை நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. நோயாளிகளைப் பார்வையிட வந்தவர்கள் நோயாளிகள் அருகில் அவர்களுக்கு உணவூட்டிக்கொண்டும் நலம்விசாரித்துக் கொண்டுமிருக்க, அம்மா அவர்களுள் யசோதா அத்தையைத் தேடினாள். பெண்கள் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பெரிய தாதியிடம் விசாரித்தோம்.யசோதா அத்தை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

யசோதா அத்தையின் உடல் முழுதும் வெள்ளைப் பருத்தித் துணியினால் மூடப்பட்டிருந்தது. அவளது முகத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அழகான சிவந்த முகம், காதுமடல் என முழுதும் கருகி அதன் மேல் மஞ்சள் களிம்பு ஏதோ பூசப்பட்டிருந்தது. சேலைன் திரவம் சொட்டுச் சொட்டாக அவர் உடம்பில் ஏறிக்கொண்டிருந்தது. அம்மா பார்த்து விசும்பினாள். அம்மாவின் விசும்பல் கேட்டு அத்தை கண் திறந்தாள். வலிக்கிறதெனச் சொல்லி முனகினாள். பூசியிருந்த மஞ்சள் களிம்பின் மேலால் அத்தையின் கண்ணீர் ஓடியது.

நாங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு வரும்பொழுது வைத்தியசாலை வாயிலில் அப்பா எதிர்ப்பட்டார். அவரும் ஹோட்டலிலிருந்து நேராக அத்தையைப் பார்க்கவந்திருந்தார். பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டிருந்த காரணத்தால் அவரால் உள்ளே வரமுடியவில்லை. அம்மா, அவரிடம் நடந்த விபரங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

அன்று மாமா அத்தையிடம் அவரது காதணியைக் கேட்டுச் சண்டை பிடித்திருக்கிறார். அத்தை கொடுக்க மறுக்கவே போதையின் பிடியிலிருந்த அவர் அத்தையின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிய விட்டுவிட்டு ஓடித் தப்பியிருக்கிறார். காலை வைத்தியசாலைக்கு வாக்குமூலம் பெற வந்த பொலீஸாரிடம் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறாள் யசோதா அத்தை. அன்று மாலை நானும் அம்மாவும், அப்பாவும் அவரைப் பார்க்கப் போனபொழுது அத்தை இறந்துவிட்டிருந்தாள்.

அதன் பின்னர் சடங்குகள் எல்லாம் சம்பிரதாயமாக நடந்தன. அத்தையின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பியும் யாரும் வரவில்லை.அன்று ஓடிப்போன மாமாவும் வரவேயில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் கூடக் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நீர்வீழ்ச்சியொன்றிலிருந்து அவரது வயதினை ஒத்த ஒருவரது சிதிலமடைந்த உடல் கண்டெடுக்கப்பட்ட பொழுது மாமா தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். அம்மா அதற்கும் ஒரு பாட்டம் அழுதுதீர்த்தாள். பின்னர் எல்லாக் கண்ணீரும் வற்றிப் போன ஓர்நாளில் அம்மாவும், அப்பாவும், நானும் சேர்ந்து மாமாவும், யசோதா அத்தையும் வாழ்ந்து வந்த குடிசையினைத் துப்புரவாக்கி, ஒழுங்குபடுத்தினோம். அம்மா அவர்களது குடிசையினைப் பூட்டிச் சாவியினை எடுத்து வைத்துக் கொண்டாள்.

இது நடந்து ஒரு வருடமிருக்கும். ஒரு விடிகாலையில் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அம்மாதான் கதவு திறந்தாள். வாசலில் மாமாவும், கரங்களில் மாமாவின் சாயலையொத்த இரு வயதுக் குழந்தையோடு பதினெட்டு வயதுகளிலான ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

16 comments:

ராமலக்ஷ்மி said...

யசோதாவின் முடிவிலே இன்னொரு யசோதாவின் ஆரம்பம். விட்டில் பூச்சிகளுக்குத்தான் விடியலைக் காணும் பாக்கியமே கிடையாதே ரிஷான். உருக்கமான கதை. பாராட்டுக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

அட நெசமாவே யசோதா ஒரு விட்டில் பூச்சியாத்தான் இருந்திருக்கா

Bee'morgan said...

இன்றும் இருக்கும் இத்தகையப் பெண்களை நினைக்கையில் பரிதாபமே மிஞ்சுகிறது.. தெளிவான நடை ரிஷான். மிக இயல்பாக இருக்கிறது.. சில இடங்களில் அதனாலேயே கொஞ்சமாக போரடிக்கிறது..

Divya said...

மிக உருக்கமான கதை:(

உங்களது தெளிவான எழுத்துநடையில் கதை படிப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கு ரிஷான்!

வாழ்த்துக்கள்!

Kavinaya said...

கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்களில் கண்ணீர், இதழ்களில் சிரிப்பு. முக்கால்வாசி பெண்களுக்கு பழகிய மொழி இதுதான் ரிஷான். நல்லா எழுதியிருக்கீங்க.

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//விட்டில் பூச்சிகளுக்குத்தான் விடியலைக் காணும் பாக்கியமே கிடையாதே ரிஷான்.//

ஆமாம் சகோதரி.
தனக்கு ஒளியூட்டுவதாக நினைத்து விளக்கினையே சுற்றிவரும். பின் சிறகுகள் கருகி செத்துதிரும். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..!

M.Rishan Shareef said...

அன்பின் மதுரையம்பதி,

//அட நெசமாவே யசோதா ஒரு விட்டில் பூச்சியாத்தான் இருந்திருக்கா//

ஆமாம். :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

M.Rishan Shareef said...

// Bee'morgan said...

இன்றும் இருக்கும் இத்தகையப் பெண்களை நினைக்கையில் பரிதாபமே மிஞ்சுகிறது.. தெளிவான நடை ரிஷான். மிக இயல்பாக இருக்கிறது.. சில இடங்களில் அதனாலேயே கொஞ்சமாக போரடிக்கிறது..//

அன்பின் நண்பருக்கு,

காலங்கள் எவ்வளவு மாறினாலும் இன்னும் இதுபோலப் பல பெண்கள் உள்ளுக்குள் சிதைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//உங்களது தெளிவான எழுத்துநடையில் கதை படிப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கு ரிஷான்!//

:)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்களில் கண்ணீர், இதழ்களில் சிரிப்பு. முக்கால்வாசி பெண்களுக்கு பழகிய மொழி இதுதான் ரிஷான். நல்லா எழுதியிருக்கீங்க.//

எவ்வளவுதான் ஊருக்கெல்லாம் ஒளியூட்டினாலும் விளக்கின் அடியில் இருள்வட்டமே எஞ்சியிருக்கும். அது போலப் பெண்கள் சிலருக்கு வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. பெண்களுக்கு மட்டுமல்ல சில ஆண்களுக்கும்..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்
மிகவும் இயல்பாக கதையுடன் ஒன்றித்து எழுதியிருக்கிறீங்க.

இங்க நடைபெறும் அன்றாடத் துயரங்களில் இவும் ஒன்று.எல்லா இடங்களிலும் பெண் தான் துயரங்களுக்கு சொந்தக் காரியாக இருக்கிறாள்.
போராகட்டும் வாழ்வாகட்டும் இறுதியில் நசிபட்டச் சாவது பெண்கள் தான்.

ரிஷான் உங்கள் கருணை மிக்க உள்ளத்தால் கதையை அழகாக நகர்த்திச் செல்ல முடிந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் பஹீமா ஜஹான்,

//இங்க நடைபெறும் அன்றாடத் துயரங்களில் இவும் ஒன்று.எல்லா இடங்களிலும் பெண் தான் துயரங்களுக்கு சொந்தக் காரியாக இருக்கிறாள்.
போராகட்டும் வாழ்வாகட்டும் இறுதியில் நசிபட்டச் சாவது பெண்கள் தான்.//

அருமையாகச் சொன்னீர்கள். மீன்களின் கண்ணீர் போல வெளியில் அதிகம் பேசப்படாத் துயர வாழ்க்கையும் பெண்களையே சார்ந்திருக்கிறது. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Bee'morgan said...

உயிர்மையில் தங்களின் படைப்பை இப்போதுதான் கண்டேன்.. வாழ்த்துகள் ரிஷான்.. :)

M.Rishan Shareef said...

// Bee'morgan said...

உயிர்மையில் தங்களின் படைப்பை இப்போதுதான் கண்டேன்.. வாழ்த்துகள் ரிஷான்.. :)//

அன்பின் நண்பருக்கு,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

ஷைலஜா said...

யசோதா போல இன்னமும் பல இடங்களில்இருக்காங்க....ச்சே...என்னிக்குத்தான் இந்த நிலைமுற்றிலும் மாறுமோ?
கதை சிறப்பா இருக்கு ரிஷான் சோகம்னாலும் சொன்ன விதத்திலே...
உயிர்மைகவிதைக்கு தனி மடல்ல பாராட்டினேன் இப்போ இங்கயும்!!!
நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்!

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா,

//யசோதா போல இன்னமும் பல இடங்களில்இருக்காங்க....ச்சே...என்னிக்குத்தான் இந்த நிலைமுற்றிலும் மாறுமோ?
கதை சிறப்பா இருக்கு ரிஷான் சோகம்னாலும் சொன்ன விதத்திலே...//

நிலை மாற வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.
வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)