Saturday, November 1, 2008

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

" அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பொஸ் " என்றான்.

"கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?"

" அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பொஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பொஸ் ? "

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

16 comments:

வல்லிசிம்ஹன் said...

மகாத்துயரம். ரிஷான் அற்புதமான கதை.

''அம்மா இன்னிக்குச் செத்தா நல்லா இருக்கும்''னு எண்ணுகிற கொடுமைக்கு இடம் கொடுக்காத கிஷோரைப்

படைத்த உங்களுக்கு வாழ்த்துகள்.

சித்தன் said...

கதையைப் படித்ததும் நெகிழ்ந்து போனேன் ரிஷான்..

கோகுலன் said...

பணம் சம்பாதிக்க மாத்திரம் வேண்டி குடும்பம் பிரிந்து புலம்பெயர்ந்து அவதியுறும் சாதாரணன் கிஷார்..

வாழ்வின் கட்டாயத்தில் இருக்குற எத்த்னைபேர் கிஷோர் போன்று எளிதில் அன்பை மாத்திரம் பெரிதாய் எண்ணிவிட முடிகிறது?

பெரும்பாலோனோர் வாழ்வின் தந்திரத்த்ல் அகப்பட்ட பொம்மைகளாகவே உள்ளனர்..

கிஷோர் பாராட்டப்பட வேண்டியவன்..

கதையின் போக்கு நன்று.. வாழ்த்துக்கள்

Kavinaya said...

//ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள்.//

யதார்த்தமான உண்மை.

கிஷோரின் மன உறுதி அரிதான ஒன்று. அயல் தேசங்களில் வாழும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நல்ல கதை ரிஷு.

ராமலக்ஷ்மி said...

கிஷோரைப் போல முடிவெடுக்கக் கூடியவர்கள் அபூர்வம் ரிஷான். மிக உருக்கம்.

வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

மனதை நெகிழவைத்துவிட்ட கதை.
கதை நடையும் படைத்த விதமும்
அருமை ரிஷான்.
பாராட்டுக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் வல்லிசிம்ஹன்,

//மகாத்துயரம். ரிஷான் அற்புதமான கதை.

''அம்மா இன்னிக்குச் செத்தா நல்லா இருக்கும்''னு எண்ணுகிற கொடுமைக்கு இடம் கொடுக்காத கிஷோரைப்

படைத்த உங்களுக்கு வாழ்த்துகள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி. :)

M.Rishan Shareef said...

அன்பின் சித்தன்,

//கதையைப் படித்ததும் நெகிழ்ந்து போனேன் ரிஷான்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

//வாழ்வின் கட்டாயத்தில் இருக்குற எத்த்னைபேர் கிஷோர் போன்று எளிதில் அன்பை மாத்திரம் பெரிதாய் எண்ணிவிட முடிகிறது?

பெரும்பாலோனோர் வாழ்வின் தந்திரத்த்ல் அகப்பட்ட பொம்மைகளாகவே உள்ளனர்..//

ஆனாலும் அன்பிற்கு முதலிடம் கொடுக்கப்படுமிடத்து எல்லாம் சாத்தியப்படுமல்லவா ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//யதார்த்தமான உண்மை.

கிஷோரின் மன உறுதி அரிதான ஒன்று. அயல் தேசங்களில் வாழும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நல்ல கதை ரிஷு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//கிஷோரைப் போல முடிவெடுக்கக் கூடியவர்கள் அபூர்வம் ரிஷான். மிக உருக்கம்.

வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா,

//மனதை நெகிழவைத்துவிட்ட கதை.
கதை நடையும் படைத்த விதமும்
அருமை ரிஷான்.
பாராட்டுக்கள் //

வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)

Sakthy said...

இது என்ன புதுசா இருக்கே நேபாள அம்மா ...என நினைத்துக் கொண்டு வந்தேன்,,,
கடைசி வரிகள் நெகிழ வைத்து ...
இது எமக்கும் பொருந்து என்ன ரிஷான்...

Divya said...

உருக்கமான கதை......:(

உங்கள் எழுத்து நடையில் கணமான இந்த கதை, என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கை என்னிடம் வார்த்தைகள் இல்லை.

மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் ரிஷான்!!!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//கடைசி வரிகள் நெகிழ வைத்து ...
இது எமக்கும் பொருந்து என்ன ரிஷான்...//

அன்பிற்குரிய தாயினைப் பிரிந்து பொருள் தேடியும், வாழ வழியற்றும் இருப்பிடம் அகன்று தனித்து வாழும் அனைவருக்கும் பொருந்தும். இல்லையா சக்தி?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//உருக்கமான கதை......:(

உங்கள் எழுத்து நடையில் கணமான இந்த கதை, என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கை என்னிடம் வார்த்தைகள் இல்லை.

மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் ரிஷான்!!!//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)