ஒளி பட்டுத் தெறிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன
தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை
" ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? "
" நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை. நீ பிதற்றுகிறாய். வழி தவறி வந்திருக்கிறாய் "
" இல்லை. உன் மனதுக்கு நீ தனித்தவன். இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூடியை அணிந்தபடியே ஊர்கள் தோறும் சுற்றி வந்திருக்கிறாய். நீ நீயாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். நீ ஆதித்யா. ஆனால் ஆதித்யாவாக என்றும் நீ இருந்ததில்லை. உனது சுயத்தை வெளிக்காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். "
" உன்னிடம் என்னைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கென்ன இருக்கிறது ? நீ யார் ? எதற்கு வந்திருக்கிறாய்? "
" இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "
" சரி. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு...கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? "
" நானாக வரவில்லை. அன்பே உருவான ஸ்ரீயைப் பிரிந்தாய். நான் தானாக வந்துவிட்டேன். நான் வரக்கூடாதெனில் ஏன் அவளையும் பிரிந்தாய்? இது உனது முதல் மனைவிக்குப் பிறகான நான்காவது காதல். அவளை நேரில் பார்க்காமலே வந்த காதல். அசிங்கங்களுக்குள் வாழ்ந்த உன்னைத் தூய்மைப்படுத்தி அருகிலமர்த்திக் கொண்டவளை உதைத்து நீ வந்திருக்கிறாய். நான் வந்துவிட்டேன். "
" ஆம். அவளைப் பிரிந்தேன். அவளென்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை அடிமைப்படுத்தப் பார்த்தாள். அவள் சொல்லும்விதமெல்லாம் நான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தாள். மீறினால் வாதித்தாள். "
" எதனால் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்தாயா ? ஒரு கணமேனும் அது குறித்து அவள் நிலையிலிருந்து சிந்தித்தாயா? "
" எதற்கு சிந்திக்கவேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன். அவளுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? "
" நீ மாற்றிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? "
" அவளுக்கு என் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் மாறச் சொல்கிறாள். நான் ஆண். அவளையும் விட மூத்தவன். பல அனுபவங்களைக் கற்றவன். அவள் சொல்வதைக் கேட்கவேண்டுமென்ற கடமையோ அவசியமோ எனக்கில்லை. "
" அவள் இளமை மிகுந்த அழகி. இதுவரையில் எக்காலத்திலும் உன்னைத் தவிர்த்து எவருடைய காதலுக்கோ , வேறு எச்சலனத்துக்கோ இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்லமாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்காவிட்டால் பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. "
" நீ அதிகம் பேசுகிறாய். "
" உண்மையைப் பேசுகிறேன். நீ இதுபோல அவளைப் பேசவிடவில்லை. அவள் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அடங்காப்பிடாரி என அவள் பற்றி உன் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பாய். வழமை போலவே அவர்களிடத்தில் உன்னை நல்லவனாகக் காட்ட அவள் குறித்துத் தீய பிம்பங்களை உருவாக்கிப் புலம்பித் தீர்த்திருப்பாய். "
" இல்லை. அவளும் பேசினாள். இது போல அல்லது இதைவிடவும் அதிகமாக அவள் பேசினாள். எனக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனது சுதந்திரத்தை அவளது வார்த்தைகளுக்குள், சத்தியங்களுக்குள் அடக்கினாள்.அவள் சொன்ன சிலவற்றை செய்யத்தானே செய்தேன். இருந்தும் போதவில்லை அவளுக்கு. தினமும் இன்னுமின்னும் புதுப்புதுக் கட்டளைகளோடு வந்தாள். "
" சரி. அந்தக் கட்டளைகளால் இதுவரை உனக்குத் தீயவை எதேனும் நடந்ததா சொல். எல்லாவிதத்திலும் உனது உயர்ச்சியைச் சிந்தித்துத்தானே அவள் தன் எண்ணங்களை உன்னிடத்தில் சொன்னாள். நீ நடந்துகொண்ட விதமும், உனது வாழ்க்கை முறையான தீயநடத்தைகளும் அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?"
" அவள் என்னை அடிமையாக்கப்பார்த்தாள். "
" மன்னிக்கவும். திருத்திக்கொள். அவள் உன்னை நல்வழிப்படுத்த முயற்சித்தாள். உன்னை நேர்வழியில் கூட்டிச் செல்லவெனக் கைகோர்த்து நடந்தாள். வீணாகும் உனது நேரங்களைச் சுட்டி உனது எழுத்துக்களில் நீ பெரிதாக ஏதாவது சாதிக்கவேண்டுமென விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப்பார்த்தாய். காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப்பார்த்தாய். உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள் தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கியபொழுதாவது அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? "
" நீ பழையவற்றைக் கிளறுகிறாய். "
" சரியாகச் சொன்னாய். நீ இன்னும் பழைய குப்பைகளை உன் வாசலில், உனது முகத்துக்கு நேராகவே வைத்திருக்கிறாய். அகற்றவும் மறுக்கிறாய். அதற்கூடாகவே அவளையும் அழைக்கிறாய். குப்பைகள் சூழ வாழ்ந்து பழகாதவள் நாற்றம் தாங்காமல் அதை அகற்றச் சொல்கிறாள். உனது சுவாசத்திற்காகச் சோலைகளை வழிகளில் நிறுத்துகிறாள். நீயாகப் புறந்தள்ளி இன்னுமின்னும் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாற்றங்களில் மெய்மறக்கிறாய். அவளென்ன செய்வாள் விட்டுப் போவதைத் தவிர."
" அவள் சொன்ன ஒரு சிலவற்றையாவது நான் செய்திருக்கிறேன் .ஆனால் அவள் எனக்காக இதுவரையில் அணுவளவாவது ஏதேனும் செய்திருக்கிறாளா ? "
" இதற்குத்தான் அவள் நிலையில் உன்னை வைத்துச் சிந்திக்கச் சொன்னேன். அவள் உன்னைப் பற்றி, உனது உயர்ச்சி பற்றி ஒவ்வொரு கணமும் யோசித்ததால்தானே உனக்கு நல்ல அறிவுரைகள் சொன்னாள். அவள் இதுவரையில் உன்னை நேரில் கூடப் பார்த்ததில்லை. நீ அவளுக்குக் கிடைப்பாயென்ற நிச்சயமேயில்லை. இருந்தும் உன்னை மிகவும் நல்வழிப்படுத்த முயற்சித்தாள். மெய்யான அன்போடு தனது ப்ரியத்திற்குரிய எழுத்தையும் உனக்காக விட்டுவிட்டு தனது சொந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து உன்னுடன் வந்து, உனக்காகவே வாழ்கிறேன் என்றாள். . உன்னுடன் வாழவந்த பிறகும் உனக்குப் பிடித்தவகையில் சமைத்து, உனக்குப் பிடித்தவகையில் உடுத்தி, உனக்குப் பிடித்தவகையில் உறவாடி உன்னுடனே இருந்திருப்பாள். இதைவிடவும் வேறு என்ன வேண்டும் உனக்கு ? என்ன எதிர்பார்க்கிறாய் நீ ? உனது தவறுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதவளையா? அதற்கு நீ ஒரு பொம்மையைக் காதலித்திருக்கவேண்டும். ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்ணையல்ல. "
" நான் என்ன செய்யவேண்டுமென நீ சொல்லவருகிறாய்? "
" இந்தக் காதலிலிருந்தாவது , இந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொள். உனது வீண்பிடிவாதங்களையும் துர்நடத்தைகளையும் தீய சினேகங்களையும் உனை விட்டும் அப்புறப்படுத்து. நீ தவறு செய்தால் அடுத்தவர் மேல் பழியினை ஏற்றித் தாண்டிப்போகப் பார்க்காமல் அது உனது தவறுதானென ஒத்துக்கொள். மீண்டும் அத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள். "
" சரி. நானும் அவள் மேல் அன்பாகத்தானே இருந்தேன்."
" அன்பு இருந்திருந்தால் அதனை உள்ளுக்குள் வைத்திருந்ததில் என்ன பயன்? இருவரும் அருகிலிருந்தாலாவது அன்பைச் சொல்ல ஒரு புன்னகை, ஒரு சிறு தொடுகை போதும். பகிர்ந்தருந்தும் தேனீர்க்கோப்பை போதும். ஆனால் கடல் கடந்து, தேசங்கள் கடந்து காதல் கொள்பவர்களுக்கு அன்பைச் சொல்ல எழுத்துக்களும் பேச்சும் மட்டும்தானே உள்ளன. அவற்றில் ஏன் உன் அன்பைக் காட்டவில்லை ? யார் யாருக்காகவோ கவிதை, கதை எனக்கிறுக்குமுன்னால் அவளுக்கான காலை வணக்கத்தை ஏன் அன்பைக் குழைத்தனுப்ப முடியவில்லை ?"
" இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? "
" உனது தீய நடத்தைகளை விட்டொழி. யாருக்கும் வாக்குறுதியளிக்கும் முன்பு இரு தடவைகள் யோசி. கொடுத்த வாக்குறுதியை மீறாதே இனிமேல் உன்னை நேசிக்கும் எவர்க்கும் உனது அன்பினை செய்கைகளாலும் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்து. நீ நீயாக இருந்து அவளது விருப்பப்படியே எழுத்துக்களில் சாதித்துக்காட்டு. "
" சரி. செய்கிறேன். அவள், அவளது அன்பு எனக்கு மீளவும் வேண்டும். கிடைப்பாளா ? "
" முதலில் இப்படி அழுவதை நிறுத்து. ஒன்று அவளில்லையேல் வாழ்க்கையே இல்லையென்று விசித்து விசித்தழுகிறாய். இல்லாவிடில் இனி மகிழ்ச்சியாக வாழ அவள் நினைவுகள் மட்டுமே போதுமெனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாய். முதலில் ஒரு நல்ல மனநலவைத்தியனிடம் போய் முழுமையாக உன்னைப் பற்றி எடுத்துரைத்து சிகிச்சை பெற்றுக்கொள். யதார்த்தம் உணர். சூழவும் பார். இப்பொழுது கூட உன்னையே நீ இரண்டாம் நபரென எண்ணி உன்னுடனே நீ சத்தமாகக் கதைத்துக்கொண்டிருக்கிறாய். . காலை நடைக்காக வந்திருப்பவர்கள், வீதியில் செல்பவர்கள், பால்காரன், பத்திரிகை போடுபவன் என எல்லோரும் வீதியோரம் அமர்ந்திருக்கும் உன்னைப் பைத்தியக்காரன் எனச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள் பார். "
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - உயிர்மை
15 comments:
ஆதித்யா,
உன் தனிமை பின்னூட்டம் இடுகிறேன்!
படிக்கிறாயா?
தனிமை சொல்வதைக் கேள்!
தனிமை போய்விடும்!
இனிமை வேர்விடும்!
வாங்க கேயாரெஸ் :)
//ஆதித்யா,
உன் தனிமை பின்னூட்டம் இடுகிறேன்!
படிக்கிறாயா?//
ம்ம் :)
//தனிமை சொல்வதைக் கேள்!
தனிமை போய்விடும்!
இனிமை வேர்விடும்! //
அதே அதே.. :)
அது எப்படிங்க ஒரு ஸ்மைலி கூடப் போடாமல் இப்படி ஒரு நக்கல்? :P
இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "
Super!!!!
அன்பின் Thevanmayam,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே :)
ரிஷான்......நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வலைதளம் வர நேரம் கிடைத்தது இன்று,
உங்கள் எழுத்து நடை.....கட்டிபோட்டு விட்டது:)))
எப்படி இவ்வளவு அழகா உங்களால எழுத முடியுது??
வியந்தேன்!!!
\\இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது.\\
மீண்டும் ஒரு முறை.......படிக்க தூண்டிய வரிகள்!!
வார்த்தை பிரயோகம்....அபாரம்!!!
வாழ்த்துக்கள் ரிஷான்!!
தொடர்ந்து நீங்க.....பல படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள்!!
//ரிஷான்......நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வலைதளம் வர நேரம் கிடைத்தது இன்று,//
வாங்க திவ்யா :)
நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே என்று யோசித்தேன்.
//உங்கள் எழுத்து நடை.....கட்டிபோட்டு விட்டது:)))
எப்படி இவ்வளவு அழகா உங்களால எழுத முடியுது??
வியந்தேன்!!!//
சில அனுபவங்கள்..சில கேள்வி ஞானங்கள்..அவ்வளவுதான்..
இதில் வியக்க எதுவுமில்லை தோழி :)
அன்பின் திவ்யா,
//மீண்டும் ஒரு முறை.......படிக்க தூண்டிய வரிகள்!!
வார்த்தை பிரயோகம்....அபாரம்!!!
வாழ்த்துக்கள் ரிஷான்!!//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)
//ஒளி பட்டுத் தெறிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன
தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை//
அருமை ரிஷு. கதையுடன் இதனையும் ரசித்தேன் :)
அன்பின் கவிநயா,
//அருமை ரிஷு. கதையுடன் இதனையும் ரசித்தேன் :)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்து வரும் விம்பங்கள் ,என்பதிற்கு பதிலாக
பிம்பங்கள் என்பது சரி , என்று நினைக்கிறேன் ரிஷான் . விம்பங்கள் என்பதே சரியெனில் இக்கருத்தை பொருட்படுத்த வேண்டாம் .
அன்புடன் கண்ணன் .
அன்பின் கண்ணன்,
//முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்து வரும் விம்பங்கள் ,என்பதிற்கு பதிலாக
பிம்பங்கள் என்பது சரி , என்று நினைக்கிறேன் ரிஷான் . விம்பங்கள் என்பதே சரியெனில் இக்கருத்தை பொருட்படுத்த வேண்டாம் .
அன்புடன் கண்ணன் .//
விம்பங்கள், பிம்பங்கள் குறித்து எனக்கும் சந்தேகம் இருந்துவருகிறது. விம்பமும் பிம்பமும் ஒன்றா என்று..? சில நண்பர்களிடம் கேட்டபொழுது கண்ணாடியில் தெளிவாகத் தெரிவது விம்பம் எனவும், நீரின் மேற்பரப்பில், திரைமறைவில் ஒழுங்கற்றுத் தெரிவது பிம்பம் என்றும் சொன்னார்கள். எதற்கும் இன்னுமொருமுறை நன்றாக விசாரித்துப் பார்க்கிறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாசிக்கும்போது கண்ணாடியையும் பிம்பத்தையும் நினைத்துப் பார்த்தேன். புதிய புதிய உத்திகளைக் கையாள்கிறீர்கள் நன்று. நிறைய எழுதவேண்டுமென்றே மறுஜென்மம் பெற்றதாக நினைத்துக்கொண்டு உற்சாகமாக இருங்கள். (புத்திமதி சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது:))
அன்பின் தமிழ்நதி,
//வாசிக்கும்போது கண்ணாடியையும் பிம்பத்தையும் நினைத்துப் பார்த்தேன். புதிய புதிய உத்திகளைக் கையாள்கிறீர்கள் நன்று. நிறைய எழுதவேண்டுமென்றே மறுஜென்மம் பெற்றதாக நினைத்துக்கொண்டு உற்சாகமாக இருங்கள்.//
உங்கள் வரிகள் ஊக்கம் தருகின்றன..முயல்கிறேன் :)
// (புத்திமதி சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது:))//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment