Friday, November 23, 2007
பள்ளிக்கூடம்
காற்று இழுத்துவிட்ட காதோர முடியை ஒதுக்கிக் கொண்டாள்.
'பள்ளிக்கூடத்திற்கு ஓடியே போய்விடலாமா ? ' ஒரு கணம் சிந்தித்தாள். வேண்டாம் , தன் வயதொத்த சிறுமிகளெல்லாம்
இரட்டை ஜடையோடு மெதுவாக நடை போடுகையில் தான் மட்டும் ஓடுவது நன்றாக இருக்காது எனத் தனக்குத்தானே தீர்மானித்துக்கொண்டாள்.
கொஞ்சம் வேகமாக நடை போட்டாள்.காலையில் அப்பா வீடு வந்த சத்தத்திற்குத்தான் விழித்துக் கொண்டாள்.அவசரமாகக் கொல்லைப்புறம் போய் வாய் கொப்பளித்து,முகம் கழுவி, கண்ணாடியை ஒரு கணம் எட்டிப்பார்த்து வெளியே வந்தவள்தான். பசித்தது. கொஞ்சம் தண்ணீராவது குடித்து விட்டு வந்திருக்கலாம்.
பண்ணையார் வீட்டுச்சிறுமி புது ஆடையோடு 'பளிச்'சென்று பள்ளிக்குச் செல்வது தெரிந்தது. இவளுக்கும் அப்படிப் போக ஆசைதான். அப்பா ஒழுங்காக இருந்திருந்தால் தான் இப்படி அல்லாட வேண்டி வந்திருக்குமா? ஒரு கணம் கண்கள் சொல்லாமலேயே கலங்கியது.ச்சீ... என்ன இது? மற்ற சிறுமிகள் பார்த்தால் சிரிப்பார்கள்.
பள்ளி ஆரம்பித்திருக்குமா? மணியடித்திருப்பார்களா? இப்போது நேரம் என்ன? மணியடித்த பிறகு சென்றால் கேட் வாசலிலேயே நிற்க வேண்டி வரும். முதலாம் வகுப்பு மாணவிகளின் அறையிலிருந்து பார்த்தால் கேட் வாசல் மிக நன்றாகத் தெரியும். இவள் கேட் வாசலில் நிற்பதைப் பார்த்தால் இவள் வயதொத்த அந்த வகுப்புச் சிறுமிகளெல்லாம் கை காட்டிச் சிரிப்பார்கள்.
தெருமுனையைத் தாண்டியதும் பள்ளிக்கூடம் தெரிந்தது. நல்ல வேளை. இன்னும் மணியடித்திருக்கவில்லை. வாசலில் சிறுமிகளெல்லாம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேட்டருகே வந்தவள் கண்கள் அங்குமிங்கும் யாரையோ தேடின. தேடிய கண்கள் ஒரு இடத்தில் நிலைத்தன.அங்கே ஓடினாள்.
" அம்மா,அப்பா ராத்திரி எங்கேயோ குடிச்சுட்டு விழுந்து கிடந்தாராம். உடம்பெல்லாம் ரத்தம். யாரோ நாலு பேர் ஊட்டுக்கு கூட்டி வந்திருக்காங்க.உடனே உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாங்க.வாம்மா போகலாம் "
கேட்ட அவள் அம்மாவுக்கு கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை. பெருக்கிக் கொண்டிருந்த முற்றத்தின் ஓரத்திலேயே விளக்குமாறைப் போட்டாள்.வந்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் அவருக்குச் சுகமில்லை , அவசரமாய்ப் போவதாகச் சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக நடக்கத் தொடங்கினாள்.
வந்து கொண்டிருந்த சிறுமிகள் எல்லாம் அவளைப் பார்த்து வாய் பொத்தி மௌனமாகச் சிரிப்பதாக அவளுக்குத் தோன்றியது.
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
Friday, November 16, 2007
இருபது ரூபாய் நோட்டு !
நரகலையெடுத்து தனது சட்டைப் பைக்குள் தானே போட்டுக் கொண்டதாய் அருவருப்பாய் உணர்ந்தார் அவர். பணம் தான். சாதாரண இருபது ரூபாய் நோட்டு. இத்தனைக்கும் ஊரில் பெரிய மனிதர் என்று பெயர் வாங்கியிருக்கிறார்.
திருப்பி கொடுத்து விடலாம் என்கிற முடிவோடு பையனை நெருங்கினார். விடிகாலைதான் என்றாலும் அதற்குள் இரண்டு , மூன்று பேர் கூடி விட்டார்கள் . இப்பொழுது
" நான்தான் பா , கீழே விழுந்து கிடந்த உன் இருபது ரூபாய் நோட்டை எடுத்தேன் "
என்று கொடுத்தால் தனக்குத்தான் அவமானமென்று கொஞ்சம் சிந்தித்தார். அமைதியாய் இருந்தார். பையன் மட்டும் அழுது கொண்டிருந்தான்.
அவர் வழமை போல் உடற்பயிற்சிக்காக சிறிது நடந்து விட்டு வரலாம் என்று வந்த போதுதான் கீழே கிடந்த இந்த இருபது ரூபாய் நோட்டு கண்ணில் பட்டது. என்ன தோன்றியதோ... சுற்றுமுற்றும் பார்த்து எடுத்து சட்டைப் பையில் அனிச்சையாகப் போட்டுக் கொண்டார்.
சற்று தூரம் நடந்து விட்டு திரும்பி வரும் வழியில்தான் தான் ரூபாய் நோட்டைக் கண்டெடுத்த அதே இடத்தில் பேப்பர் , பால் போடும் பத்து,பதினொறு வயது மதிக்கத்தக்க பையன் நின்று அழுது கொண்டிருப்பதைக் கவனித்தார்.
வீடுகளிலிருந்து கிடைத்த பணத்தை அந்த இடத்தில் வைத்து எண்ணியதாகவும் அப்பொழுதுதான் விழுந்திருக்கக் கூடும் என்பது அவன் எண்ணம் . ஊகம் சரிதான்.
ஏற்கெனவே அவன் முதலாளி தொட்டதெற்கெல்லாம் சந்தேகப்படும் சந்தேகப் பிராணி எனவும் நோட்டு தொலைந்ததையும் நம்ப மாட்டார் என்பதையும் விம்மலிடையே சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு முடிவுக்கு வந்தவராய் ஏற்கெனவே தனது சட்டைப் பையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
" வேணாம் ஸார் . இன்னிக்கு நீங்க தருவீங்க. நாளைக்கு நான் திரும்பவும் தொலைச்சா யாராவது தருவாங்களான்னு எதிர்பார்க்கத் தோணும். ஒவ்வொருத்தரிடமும் கை நீட்டத் தோணும். வேணாம் ஸார். ரொம்ப தாங்க்ஸ் ."
சொன்னவன் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டான் என்பது கூட புரியாமல் அதிர்ந்து நின்றார். மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
வழமையை விடத் தாமதிக்கும் கணவனை எதிர்பார்த்து, கேட்டருகே காத்திருந்த அவர் மனைவிக்கு , வீட்டில் அதிரடியாக நாத்திகம் பேசும் கணவன் தெருமுனைக் கோயில் உண்டியலில் காசு போட்டுக் கும்பிடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
- எம். ரிஷான் ஷெரீப் ,
இலங்கை.
Subscribe to:
Posts (Atom)