Saturday, August 1, 2009

பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !


 
      எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த பெண் சடாரெனக் கீழ விழுந்ததுல எனக்குச் சரியான அதிர்ச்சியாகிப் போச்சுது. சொந்த ஊரிலெண்டால் ஓடிப்போய் உதவியிருக்கலாம். என்ரை மனசு ஒரு கணம் பதறிப் போச்சுது. இப்பொழுது என்ன செய்றதென்டு தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தன். என்ரை கண்ணுல ஆருமே தட்டுப்படேல்ல. ஒரு ஈ,காக்கை கூடக் காணக் கிடைக்கேல்ல..
   
    அரபு நாட்டுச் சூடான பகல் வேளையது. கடும் வெக்கை.காத்துக் கூட கடும் சூடாத்தான் வீசும். அவசரத் தேவையில்லாம ஆரும் வெளிய இறங்கமாட்டினம். வெயில் ஆரையும் வெளியில் இறங்கவிடாது. பன்னிரண்டு மணிக்கு அத்தனை அலுவலகங்களும் பகலுணவு இடைவேளைக்காக மூடப்பட்டதெண்டால் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும். நான் கடும் பசியிலிருந்தன். சூட்டையும்,வெக்கையையும் பொருட்படுத்தாமல் மதிய உணவுக்காகப் போய்க் கொண்டிருந்தன். அப்பதான் என் முன்னால போன அவ விழுந்தவ.
   
    அது ரெண்டு வங்கிகளுக்கு இடைப்பட்ட சிறிய ஒழுங்கை. வருகிறவங்கள் வங்கியின்  பின்புறத்தில வாகனங்கள நிறுத்துறதுக்காகக் கட்டப்பட்டிருக்குற இடத்துல வாகனங்களை நிறுத்திவிட்டு வருவினம். கீழே விழுந்து அரபு மொழியில் முனகிக் கொண்டிருந்தவளுக்கு இருபது வயதுக்குள்ள தானிருக்கும். நல்ல வடிவாக இருந்தவள் ஈரான் இல்லாட்டி லெபனான் தேசத்தவளாக இருக்கவேணும். அவங்களது உடுப்புக்கள்தான் இந்த நாட்டில இப்படி அரையும் குறையுமாக இருக்கும்.

     ஒரு கூலித் தொழிலாளியாக இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்திருக்கிற நான் ஏற்கெனவே லேசாக் கருப்புத்தான் எண்டாலும் பாலைவன வெயில் என்னை இன்னும் கருப்பாக்கிட்டுது. ஏற்கெனவே தன்ட அழகினால் பெருந்திமிர் பிடிச்சவள் போலக் காணப்பட்டவள் எழுந்து கொள்ளச் சிரமப்பட்டு இயலாதவளாக என்னை நோக்கிக் கை நீட்டியதில எனக்குப் பெரும் சங்கடமாப் போச்சுது.

    ஒரு பெண் அதிலும் வடிவான பெண் என்னை நோக்கிக் கை நீட்டியதுல சங்கடமாப் போச்சுதெண்டாலும் அந்த இடத்துல அவளுக்கு உதவுறதுக்கு ஆருமில்லையெண்ட காரணத்தினால அவளைக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டன். அவளின்ர கைகள் கடும் மென்மையாக இருந்ததில எனக்கு ஒரு மாதிரியாகிப் போச்சுது .இதுவரையில எந்தப்பெண்ணினதும் கைகளைத் தொட்டிராத என்ரை கைகள் காய்ச்சுப்போய்க் கரடுதட்டி இருந்திச்சுது. தங்கச்சிகள் ரெண்டு பேரும் வயசுக்கு வந்த பின்னால அவங்களது கைகளைக் கூடத் தொட்டதில்ல. ஊரில கல்லுடைக்கப் போற அவங்களிண்ட கைகளும் கூடக் காய்ச்சுப்போய்த்தான் இருக்கும்.

    நல்ல வாசனையோடு இருந்தவள் ஜீன்ஸும்,சட்டையும்,அரை அடிக்கும் சற்றுக் குறைவான அடி உசந்த செருப்புக்களும்  போட்டிருந்தவ. எனக்கு அந்தச் செருப்புக்கள் கனக்க ஆச்சரியத்தைத் தந்தன. என்ரை அம்மாவோ, தங்கச்சிகளோ இது போன்ற அடி உசந்த செருப்புக்களை அணிந்த பெண்களைப் பார்த்திருக்க மாட்டாங்கள். அவங்களெண்டு மட்டுமில்ல. கூலி வேலைகளுக்காக மட்டுமே வீட்ட விட்டு வெளியே கிளம்புற என்ரை ஊர்ப் பெண்களெவரும் கூடப் பார்த்திருக்க மாட்டாங்கள்.

    நான் இந்த நாட்டுக்கு வந்த கொஞ்சநாட்களுக்குள்ளேயே இது போல அடி உசந்த செருப்புக்கள் போடுற பெண்பிள்ளைகள் கனக்கப்பேரைப் பார்த்தாச்சுது. ஆனாலும் அதுக்கான வியப்பு மட்டும் என்னை விட்டும் இன்னும் விலகேல்ல. மாபிள்கள் பதிக்கப்பட்ட தரையில புது லாடமடிச்ச குதிரை போற சத்தமிருக்கேல்லே ? அதே மாதிரியான சத்தத்தோட சிலர் நடக்கேக்க பார்க்க வினோதமாயிருக்குமெனக்கு. என்ரை சிறு அறையில அந்த மாதிரி உசந்த செருப்புக்களைப் போட்டுக் கொண்டு நடப்பதாக நினைச்சிக் கொண்டு கால் முன்விரல்களால மட்டும் நடந்து பார்த்து நொந்திருக்கிறன். என்னைப் பொறுத்தவரையில அந்த மாதிரியான செருப்புக்களைப் போடுறவங்கள் கடும் திறமை வாய்க்கப்பெற்றவங்கள்.

    எனக்கு நினைவு தெரிஞ்ச காலந்தொட்டு என்ரை அம்மா என்றைக்குமே சாதாரண ரப்பர் செருப்புக் கூடப் போட்டதை நான் கண்டதில்ல. அவரின்ற அடிக்கால்கள் ரெண்டும் பித்தவெடிப்பாலும், கல்குவாரியில் நிறைஞ்சிருக்கும் சில்லுக் கல்லு இருக்கேல்ல?அது குத்தியும் காய்த்துத் தடித்துப் போய்க் கிடக்கும். அதில எந்த உணர்ச்சிகளும் தெரிவதில்லை எண்டுகூடச் சொல்லுவா அம்மா.

    தங்கச்சிகள் ஸ்கூலுக்குப் போட்டுப் போறதுக்கெண்டும் கூலி வேலைக்குப் போகேக்க போட்டுக் கொண்டு போறதுக்கெண்டும் ரெண்டு சோடி றப்பர் செருப்புக்கள் வேற வேற கலர்கள் ல வச்சுக் கொண்டிருக்கினம். ஸ்கூலுக்குப் போட்டுப் போகும் செருப்புக்கள் மட்டும் தான் ஒரே நிறத்தில ஒரே அளவோடு இருக்கும். அதையும் வீட்டுக்கு வந்ததுமே கழுவி மூலையில் பத்திரமா வச்சிடுவினம் . மற்றைய சோடி எப்பொழுதோ ஸ்கூலுக்குப் போட்டுச் சென்று வார் அறுந்ததாகவோ, இல்லையெண்டால் நன்றாகத் தேய்ஞ்சுபோனதாகவோதான் இருக்கும்.

    நான் கூட அப்படித்தான். என்ரை ஆறு வயசில முதன்முதலா என்ரை அப்பா என்னை ஊர் ஸ்கூலுக்குச் சேர்க்கப் போகேக்க தான் கால்ல றப்பர் செருப்புப் போட்டன். அந்த ஊரில பதினோராம் வகுப்பு முடியுமட்டுக்கும் செருப்பு மட்டும் தான். மேல படிக்குறதுக்காக பக்கத்துப் பெரிய ஊருக்குப் போகச் சொல்லி எல்லோரும் சொல்லேக்க எனக்கு செருப்புப் போட்டுக் கொண்டு அங்கேயெல்லாம் படிக்கப் போகப் பெரும் தயக்கமாயிருந்துச்சுது. அப்ப என்ரை ஊர் ஸ்கூல் அதிபர் தான் நான் பதினோராம் வகுப்புச் சோதினையில நல்லாப் பாசாகி ஊர்ப்பாடசாலைக்கு நல்லபெயர் வாங்கித் தந்தனெண்டு சொல்லி ஒரு சோடிச் சப்பாத்துக்களைப் பரிசளிச்சவர்.

    அண்டைக்கு எனக்கு சப்பாத்துப் போட்டுக்கொண்டு வானத்துல நடக்குறது போலத் தாங்கொணாத களிப்பு. அந்தச் சோடியை  வீட்டுக்குக் கொண்டுவந்த நாள் என்ரை தங்கச்சிகளும் ஆசையோடு அதைப் போட்டுப்பார்த்தவள்கள். இந்த மாத சம்பளத்தில அவையள் ரெண்டு பேருக்கும் நல்ல செருப்பு இரண்டு சோடி வாங்கி வைக்கவேண்டுமென நினைச்சுக் கொண்டன்.

    அந்த உசந்த செருப்புத் தடுக்கியதிலதான் இவள் விழுந்திருக்கவேணும். எழுந்து நிண்டுகொள்ளச் சிரமப்பட்டவள், ஒரு அடிபட்ட பாம்பினைப் போல 'ஸ்ஸ்ஸ்' எண்டு முனகினாள். ஒரு அடி எடுத்துவைச்சவள் மேலும் நடக்க முடியாமல் அவளாகவே பக்கத்திலிருந்த என்ரை  தோளினைப் பிடிச்சுக்கொண்டாள். பின்னர் அரபு மொழியில் அவள் சொன்னதெதுவும் எனக்குப் புரியேல்ல.

    நான் புரியேல்லை என்டது போலச் சாடை செய்தன். பிறகு அவள் ஆங்கிலத்தில் கூறியதை வைச்சும் தூரத்து நிழலில நிறுத்தியிருந்த சிவப்பு நிறக்காரினைக் காட்டியதைக் கொண்டும் அவளிண்ட கார் வரையில நடந்து போக என்னை உதவும் படி கூறுகிறாள் என்றதப் புரிஞ்சுகொண்டனான்.

    'தயக்கமில்லாமல் வெளிநாட்டுக்குப் போ ராசா..நீ எங்கேயோ போயிடுவாய் ' என்டு விசா வந்த அண்டைக்கு அம்மாவுடன் ஊர் ஜோஸியக்காரரைப் பார்க்கப் போன போது ஜோஸியக்காரர் சொன்னது சம்பந்தமேயில்லாமல் இப்பொழுது என்ரை நினைவில வந்துச்சுது.

அவள் என்னை விடவும் உயரமானவளாக இருந்ததுல என்ரை தோளைப் பற்றியிருந்தாள். அவளது மற்றக் கை என்ரை கைகளைப் பற்றியிருந்துச்சுது. என்ரை வாழ்வின் மிகப்பெரும் தயக்கம் என்னைச் சூழ்ந்தது போல இருந்துச்சுதெண்டாலும் அவளை நான் கார் வரைக்கும் கூட்டிப் போனன்.

    காரின் அருகினில் போய்ச் சேர்ந்ததும் அதுக்கான சாவியை விட்டுத் திறந்து சாரதி இருக்கையில மெதுவாக அமர்ந்து கொண்டவள், நான் நகர முற்பட்ட வினாடி 'மீண்டும் ஒரு உதவி' என்றாள். அவள் தன்ட கைப்பையிலிருந்து பேனையை எடுத்து என்ரை  உள்ளங்கையை நீட்டச் சொல்லி அதில நான்கு இலக்கங்களை எழுதினாள். எனக்கு இண்டைக்கு நடப்பதெல்லாம் பெரும் வியப்புக்குரியதாகவும் குழப்பமளிப்பதாகவும் இருந்துச்சுது. என்ரை வாழ்விலேயே இன்றுதான் பெரும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாளெண்டு  எண்ணிக் கொண்டன்.

    அவள் திரும்பவும் தன்னோட கைப்பையிலிருந்த வங்கியிலிருந்து காசெடுக்கும் ஏடீஎம் கார்டினை எடுத்து நீட்டினாள். நான் புரிஞ்சு  கொண்டவனாக எவ்வளவு எனச் செய்கையில கேட்டன். அவள் மீண்டும் என்ரை உள்ளங்கையினை வாங்கி 5000/= என எழுதி காசு  எடுத்துவரும்வரையில் காரில காத்திருப்பதாகச் சொன்னாள்.

    அவள் காசு எடுப்பதற்காகத்தான் அந்த ஒழுங்கையால் போயிருக்கவேணும். ஒழுங்கையின் மூலையில் வங்கிக்கு முன்னால் இரு ஏடீஎம் மெஷின்கள் இருக்குது. நான் என்ரை அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தவாறே மீண்டும் ஒழுங்கையால் ஓடினன். வங்கிகள்ல இருந்து நானிப்படிக் காசு எடுப்பது இதுதான் முதல் முறை. மெஷின்கள் கொடுத்த அறிவுருத்தல்களின் பிரகாரம் நான் என்ரை உள்ளங்கையைப் பார்த்தவாறு செயல்பட வேண்டியிருந்திச்சு. அந்த வங்கியில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு எடுக்கக் கூடிய தொகை 5000/= மட்டும் தான்.

    கார்டினைப் போட்டுக் காசு எடுக்குறதுவும், இவ்வளவு பெருந்தொகையை ஒரே முறையில் எண்ணிப்பார்க்குறதுவும் எனக்கு இதுதான் முதல் முறை. ஏடீஎம் மெஷின் இருந்த அறைக்குள்ளே பல தடவைகள் அக்காசுத்தாள்களை எண்ணிப்பார்த்தன். புது உலகத்தில மிதக்குற மாதிரி உணர்ந்தன். திரும்பவும் அவளின்ரை காரை நோக்கி ஓடிப்போனன்.

    அவள் உள்ளங்கை அளவேயான சின்னக் கண்ணாடியொன்றில பார்த்துத் தன் உதடுகளுக்குச் சாயமிட்டுக் கொண்டிருந்தாள். என்னிட்டயிருந்து பணத்தினை எண்ணி வாங்கியவள் கணக்கின் மீதியைக் கேட்டாள். எனக்கு அவள் கேட்பது புரிந்தும் புரியாமலுமிருந்திச்சு. மீண்டும் என்னிட்ட கார்டினைத் தந்தவள் 'பேலன்ஸ் ரிஸீட்' எனச் சொல்லி லேசாச் சிரிச்சாள். மறுக்க வழியின்றி அதனை வாங்கிக் கொண்டு மீண்டும் மெஷினுக்கு ஓடினன்.

    கடும்பசி ஒரு பக்கம் வயிற்றில தாளம் போட்டுக் கொண்டிருந்துச்சு. என்ரை மேலேயே எனக்கு ஒரு கணம் கோபம் கூட வந்துச்சுது. மறுகணம் 'எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படிப்பட்ட வடிவான பெண்ணின்ட நம்பிக்கை? ஆரென்றே அறியாத என்னிடத்தில எவ்வளவு நம்பிக்கையோட கார்டினையும் ரகசிய இலக்கங்களையும் தருகிறாள்?' எண்டு நெனச்சிக் கொண்டே பேலன்ஸ் ரிஸீட்டோடு ஓடி வந்து பார்க்க, கார் அங்கிருக்கேல்ல.

    என்னவாச்சுது இவளுக்கு? எங்கே போனவள் ?அப்படியென்ன அவசரம் அதற்குள்? எனக்கு எதுவும் புரியேல்ல.வெயிலால கடுமையா  வியர்த்து வழிஞ்சது. சில நிமிஷங்கள் அங்கு நின்று பார்த்தன். பின்னர் அவள் என்னைத் தேடி வங்கியின் முன்பக்கமாக வந்திருப்பாளோ எண்டு நெனச்சு மீண்டும் மெஷினுக்கருகில ஓடிவந்தன்.

    அங்கேயும் அவள் இல்லை. பசியும்,வெயிலும் என்ரை உடலுக்கு ஒரு உதறலைத் தந்து கொண்டிருந்துச்சுது. அவள் மீண்டும் என்னைத் தேடிவருவாள் எண்டு நம்பினன்.வெயிலிலிருந்து தப்பிக்க ஏடீஎம் மெஷினிருந்த சிறு அறைக்குள்ளேயே சில நிமிஷங்கள் காத்துக் கொண்டிருக்கேக்க முன் வீதியில அந்த வாகனம் வந்து நிண்டுச்சுது.

    அதிலிருந்து நாலு பேர் இறங்கி மெஷினிருந்த அறைக்குள் வருவதைக் கண்டு, அவங்களுக்கு இடம் கொடுத்து வெளியேற முற்பட்ட என்னை  அவங்கள் இறுகப்பிடிச்சுக் கொண்டாங்கள். தடித்து, உயர்ந்திருந்த அவங்கள் சூடான் தேசத்தவராக இருக்கவேணும். பெரிய உதடுகள் துடிக்க மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்த அவங்கள் பொலிஸ்காரர்கள். அது பொலிஸ் வாகனம்.

    அந்த ஏடீஎம் கார்ட் ரெண்டு நாட்களுக்கு முன்பு திருடு போனதொன்று எண்டும், மெஷினிருந்த அறையின் கேமராவின் மூலம் நான் மாட்டிக் கொண்டனெண்டும் , ஒரு அறபி ஷேக்குக்குச் சொந்தமானதை எப்படித் திருடினாய் எண்டும் விசாரித்ததில எனக்கு எதுவும் விளக்கிச்  சொல்ல பாஷை தெரியேல்ல.

    ஆங்கிலத்தில 'எனக்கொண்டும் தெரியாது' எண்டு மட்டும் திக்கித் திணறிச் சொல்லமுடிந்தது என்னால. என்ரை கையிரண்டையும் இறுக்கமாகப் பிடிச்சு இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில ஏற்றினாங்கள். திடீரென எனக்கு இழைக்கப்பட்ட அநீதியிண்ட பாரத்தாலயும்,கடும் பசியினாலயும் நான் கண்கள் மயங்கிச் சரியும் இறுதிநொடியில பொலிஸாரின் அடி உயர்ந்து தடித்த சப்பாத்துக்களைத்தான் கடைசியாக் கண்டன். ஜோஸியக்காரனின்ட குரலும் காதுக்குள் ஒலிச்ச மாதிரிக் கேட்டது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி - உயிர்மை