Tuesday, May 26, 2009

இருப்புக்கு மீள்தல் - 02

 
       சவத் துணி உடுத்து, சவப்பெட்டிக்குள் படுத்து, சூழப் பல இதயங்களை விம்மச் செய்தபடி கல்லறைக்கு நகரும் ஊர்வலம் இப்பொழுது எனக்கு வாய்க்கவில்லை. வாழ்தலுக்கான உத்வேகத்தைத் தரும்படியான எந்தவொரு நிகழ்வும் சமீபத்தில் நடக்கவில்லைதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். சில துரோகங்களைத் தாங்கச் சக்தியற்றதான மனம் பல நாட்களாக உணவு மறுத்து, புன்னகை மறுத்து, உறக்கம் மறுத்து அழுதுவழிந்து தவித்துக் கிடந்ததுதான். அதற்காக மரணம் ஒரு விமோசனமா?

        ஒரு இளம் மருத்துவரைத் தாதி உடனே அழைத்துவந்தாள். ஒரு ஆறுமாதக் குழந்தையைப் போன்ற புன்னகையொன்று அவர் முகத்தில் தவழ்ந்தது. எனது உடல் நிலைமை குறித்து என்னை விடவும் நன்கறிந்தவர் அவரெனினும் என்னிடமே அன்பாக விசாரித்தார். தலை கோதிவிட்டார். எனக்கு என்ன நிகழ்ந்திருந்ததென மென்மையாகச் சொன்னார். எனது உடல் மிகவும் பலவீனமுற்று இருப்பதாகவும் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படியும் கூறி, புன்னகைக் குழந்தையை என்னிடம் தந்து நகர்ந்தவர், அவ்வளவு நேரமும் காத்திருந்தவர்களுள் எனக்கென கையெழுத்திட்ட நண்பரை மட்டும் என்னிடம் வர அனுமதித்தார். ஏதோ ஒரு அச்சத்தில் பதறியபடி உள்ளே வந்தவர் எனது விழிப்பைக் கண்டதும் மகிழ்ந்துபோனார். எனது வீட்டின் இலக்கம் வாங்கித் தன் கைபேசியில் அழுத்தி சகோதரனிடம் பேசச் சொன்னார்.

        உடலில் விஷமேறி நான் மருத்துவமனையின் வெள்ளை விரிப்பில், தாண்டப் போகும் அபாயகட்டத்தை நகர்த்தியபடி சோர்வாக பச்சைத் திரைச்சீலைகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறேனென்பதனை வீட்டார் அறிவார்களா? அவர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்தபொழுது மிகவும் நலமாக இருப்பதாகப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. மாதக்கணக்கில் பேசும் வாய்ப்புக் கிட்டாமல் முதன்முதல் உரையாடியபொழுது இத் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள மனம் அனுமதிக்கவில்லை. ஏதேதோ பேசினோம்.

        நான் விழித்த செய்தியை, வெளியே காத்திருந்தவர்களிடம் சொல்லவென நண்பர் அகன்ற பின்னர் கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. தொடர்ச்சியாக முப்பத்தாறு மணித்தியாலங்கள் மயங்கிக் கிடந்தது போதாதா? வெளியுலகில் ஏது நடக்கிறதென அறியாமல் விழி மூடிக்கிடந்தது போதாதா? ஏதோ ஒரு நினைப்பு மனதினில் பெரும்பாரமாய் வந்து உட்கார்ந்தது. வேறு சிந்தனைக்கு மாறச்சொல்லி மனதை ஊக்குவித்தேன். உறக்கத்துக்குப் பதில் இறுதியாக, இதற்கும் முதலாக எப்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேனென்பது நினைவுக்கு வந்தது.

        முன்பொரு நாள் இதுபோல மஞ்சள் காமாலை என்னில் மிக உக்கிரமாகத் தாக்கி வைத்தியசாலையில் மயங்கிக் கிடந்திருக்கிறேன். அது எனது உயர்தரப்பரீட்சை நேரம். மயக்கம் தெளிந்தபோது அம்மாவும் சகோதரர்களும் அருகிலிருந்தது இன்னும் நினைவிலிருக்கின்றது. அழுது சிவந்த அம்மாவின் கண்கள் கண்ணாடித் தொட்டியில் பேணி வளர்க்கப்படும் செம்மஞ்சள் தங்கமீன்களை ஒத்தவையாயிருந்தன. விழித்தெழுந்து நான் மிகவும் மன்றாடி, வைத்தியரிடம் அனுமதி வாங்கி வைத்தியசாலையிலிருந்தே பரீட்சை எழுதவெனப் போய் எழுதிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டேன். வயிற்றின் மேற்பகுதியில், நெஞ்சின் வன்கூட்டுக்குக் கீழ்பகுதியில் தசை மேலெழுந்திருந்தது. ஈரல் மிகவும் உக்கிரமாக வீங்கியிருக்கிறதென வைத்தியர் சொன்னார். அம்மா மிகவும் பயந்துபோனார். நான் மருந்துகளின் உபயத்தில் ஏதுமறியாது உறங்கிக்கொண்டிருந்தேன். முன் தினம்தான் மஞ்சள்காமாலை தாக்கி ஈரல் வீங்கிய சிறுமியொருத்தி அதே வைத்தியசாலையில் செத்துப் போயிருந்தாள். கூற்றுவன் அப்பொழுதும் அம்மாவின் அருகிலமர்ந்து என்னைப் பார்த்திருந்திருக்கக் கூடும்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Thursday, May 21, 2009

இருப்புக்கு மீள்தல் - 01


மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். இரத்த நாளங்களெங்கிலும் அப்பொழுதுதான் அருந்திய உணவிற்குள் ஒளிந்திருந்த விஷம் வேகமாகப் பரவியபடி இருக்கையில் அருகில் யாருமற்ற சூழலில் தனித்து, மயக்கமுற்றுக் கிடப்பதென்பது கூற்றுவனைத் தோளிலமர்த்திப் பார்த்திருக்கச் செய்வதன்றி வேறென்ன? நான் அப்படித்தான் கிடந்திருந்திருக்கிறேன். புறச்சூழல் நிசப்தத்தை, செவிகளில் மெதுமெதுவாக ஏற்ற, மயங்கிச் சரிந்திருக்கிறேன். விழி சொருகும் இறுதிக் கணத்தில் என்ன நினைத்தேனென இன்னும் ஞாபகத்திலில்லை.

இன்னும் உணவருந்திய பகல்பொழுது நினைவிலிருக்கிறது. பிறகுதான் மயங்கியிருக்கிறேன். விடுமுறை நாளில் அலுவலக வேலைக்கென வந்து ஏறத்தாழ நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக உள்ளே தனித்த நிலையில் விழுந்துகிடந்தேனென என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சக அலுவலகர் பின்னர் சொன்னார். அங்கு உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொழுது அவரிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக்கொண்டு, வெளியே காத்திருக்கச் சொன்னார்களாம். காத்திருந்த பொழுதில் அவரிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது எனக்கான முதல் பிரார்த்தனை.

ஊர் நண்பர்கள், சக ஊழியர்கள் பதறித்துடித்து ஓடிவந்து காத்திருந்தும், மயங்கிப் பின் முப்பத்தாறு மணித்தியாலங்களுக்கு முன்பதாக நான் கண்விழிக்கவில்லை. இருபத்துநான்கு மணித்தியாலங்கள் தாண்டியும் விழிப்பு வராமல் போகவே வைத்தியர்கள் எனது அபாயநிலையை வீட்டுக்கு அறிவிக்கும்படி சொல்லிவிட்டார்களாம். யாரிடமும் எனது வீட்டுத் தொலைபேசி எண் இல்லை. என்னோடு சேர்ந்து வீழ்ந்து உடைந்து சிதறிப் போன கைத்தொலைபேசியும் அலுவலகத்தில் எனதிருக்கையருகில் அப்படியே கிடக்கும். அதுபோலவே அங்கங்கே உறைந்து போய் எல்லோரும் எனது விழிகள் திறக்கக் காத்துக் கிடந்தார்கள். சக அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஈரானியச் சகோதரி, அவரதும் எனதும் நண்பர்களுக்கெல்லாம் நான் நோயுற்ற செய்தியை அனுப்பி எனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனப் பின்னர் அறிந்தேன்.

ஒன்றரை நாட்கள் கடத்தி நான் விழித்துப் பார்த்தபொழுது வேறொரு உலகத்தில் இருக்கிறேனோ என்ற நினைவினைத் தோற்றுவிக்கும்படி என்னைச் சுற்றிலும் ஏராளமான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாடிக் கிடந்த என்னுடலில் இணைக்கப்பட்டிருந்தன. அணிந்திருந்த ஆடை மாற்றப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓயாது சேர்ந்தடித்து நொறுக்கியதைப் போன்றதொரு சோர்வையும் வலியையும் என்னில் உணர்ந்தேன். என் நிலையைக் கண்காணிக்கவென எப்பொழுதும் கூடவே இருக்கும்படி நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவத்தாதி என்னிலேற்பட்ட சிறு சலனத்துக்கு முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன். அவ்வளவு நேரமும் காத்திருந்த கூற்றுவன் என் உயிர் வாங்கிப் போகும் உத்தேசமற்று நகர்ந்துபோனதை அறியாது விழித்தேன். ஏன் விழித்தேன்? ஏன் இவ்வுலகை மீளவும் பார்த்தேன் ?

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்.

இருப்புக்கு மீள்தல் - 02 இங்கே...