Monday, December 1, 2008

ஒற்றைச் சுவடு

ஒளி பட்டுத் தெறிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன

தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை


" ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? "

" நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை. நீ பிதற்றுகிறாய். வழி தவறி வந்திருக்கிறாய் "

" இல்லை. உன் மனதுக்கு நீ தனித்தவன். இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூடியை அணிந்தபடியே ஊர்கள் தோறும் சுற்றி வந்திருக்கிறாய். நீ நீயாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். நீ ஆதித்யா. ஆனால் ஆதித்யாவாக என்றும் நீ இருந்ததில்லை. உனது சுயத்தை வெளிக்காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். "

" உன்னிடம் என்னைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கென்ன இருக்கிறது ? நீ யார் ? எதற்கு வந்திருக்கிறாய்? "

" இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம் தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "

" சரி. இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு...கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? "

" நானாக வரவில்லை. அன்பே உருவான ஸ்ரீயைப் பிரிந்தாய். நான் தானாக வந்துவிட்டேன். நான் வரக்கூடாதெனில் ஏன் அவளையும் பிரிந்தாய்? இது உனது முதல் மனைவிக்குப் பிறகான நான்காவது காதல். அவளை நேரில் பார்க்காமலே வந்த காதல். அசிங்கங்களுக்குள் வாழ்ந்த உன்னைத் தூய்மைப்படுத்தி அருகிலமர்த்திக் கொண்டவளை உதைத்து நீ வந்திருக்கிறாய். நான் வந்துவிட்டேன். "

" ஆம். அவளைப் பிரிந்தேன். அவளென்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை அடிமைப்படுத்தப் பார்த்தாள். அவள் சொல்லும்விதமெல்லாம் நான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தாள். மீறினால் வாதித்தாள். "

" எதனால் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்தாயா ? ஒரு கணமேனும் அது குறித்து அவள் நிலையிலிருந்து சிந்தித்தாயா? "

" எதற்கு சிந்திக்கவேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன். அவளுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? "

" நீ மாற்றிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? "

" அவளுக்கு என் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் மாறச் சொல்கிறாள். நான் ஆண். அவளையும் விட மூத்தவன். பல அனுபவங்களைக் கற்றவன். அவள் சொல்வதைக் கேட்கவேண்டுமென்ற கடமையோ அவசியமோ எனக்கில்லை. "

" அவள் இளமை மிகுந்த அழகி. இதுவரையில் எக்காலத்திலும் உன்னைத் தவிர்த்து எவருடைய காதலுக்கோ , வேறு எச்சலனத்துக்கோ இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்லமாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்காவிட்டால் பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. "

" நீ அதிகம் பேசுகிறாய். "

" உண்மையைப் பேசுகிறேன். நீ இதுபோல அவளைப் பேசவிடவில்லை. அவள் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அடங்காப்பிடாரி என அவள் பற்றி உன் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பாய். வழமை போலவே அவர்களிடத்தில் உன்னை நல்லவனாகக் காட்ட அவள் குறித்துத் தீய பிம்பங்களை உருவாக்கிப் புலம்பித் தீர்த்திருப்பாய். "

" இல்லை. அவளும் பேசினாள். இது போல அல்லது இதைவிடவும் அதிகமாக அவள் பேசினாள். எனக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனது சுதந்திரத்தை அவளது வார்த்தைகளுக்குள், சத்தியங்களுக்குள் அடக்கினாள்.அவள் சொன்ன சிலவற்றை செய்யத்தானே செய்தேன். இருந்தும் போதவில்லை அவளுக்கு. தினமும் இன்னுமின்னும் புதுப்புதுக் கட்டளைகளோடு வந்தாள். "

" சரி. அந்தக் கட்டளைகளால் இதுவரை உனக்குத் தீயவை எதேனும் நடந்ததா சொல். எல்லாவிதத்திலும் உனது உயர்ச்சியைச் சிந்தித்துத்தானே அவள் தன் எண்ணங்களை உன்னிடத்தில் சொன்னாள். நீ நடந்துகொண்ட விதமும், உனது வாழ்க்கை முறையான தீயநடத்தைகளும் அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?"

" அவள் என்னை அடிமையாக்கப்பார்த்தாள். "

" மன்னிக்கவும். திருத்திக்கொள். அவள் உன்னை நல்வழிப்படுத்த முயற்சித்தாள். உன்னை நேர்வழியில் கூட்டிச் செல்லவெனக் கைகோர்த்து நடந்தாள். வீணாகும் உனது நேரங்களைச் சுட்டி உனது எழுத்துக்களில் நீ பெரிதாக ஏதாவது சாதிக்கவேண்டுமென விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப்பார்த்தாய். காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப்பார்த்தாய். உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள் தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கியபொழுதாவது அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? "

" நீ பழையவற்றைக் கிளறுகிறாய். "

" சரியாகச் சொன்னாய். நீ இன்னும் பழைய குப்பைகளை உன் வாசலில், உனது முகத்துக்கு நேராகவே வைத்திருக்கிறாய். அகற்றவும் மறுக்கிறாய். அதற்கூடாகவே அவளையும் அழைக்கிறாய். குப்பைகள் சூழ வாழ்ந்து பழகாதவள் நாற்றம் தாங்காமல் அதை அகற்றச் சொல்கிறாள். உனது சுவாசத்திற்காகச் சோலைகளை வழிகளில் நிறுத்துகிறாள். நீயாகப் புறந்தள்ளி இன்னுமின்னும் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாற்றங்களில் மெய்மறக்கிறாய். அவளென்ன செய்வாள் விட்டுப் போவதைத் தவிர."

" அவள் சொன்ன ஒரு சிலவற்றையாவது நான் செய்திருக்கிறேன் .ஆனால் அவள் எனக்காக இதுவரையில் அணுவளவாவது ஏதேனும் செய்திருக்கிறாளா ? "

" இதற்குத்தான் அவள் நிலையில் உன்னை வைத்துச் சிந்திக்கச் சொன்னேன். அவள் உன்னைப் பற்றி, உனது உயர்ச்சி பற்றி ஒவ்வொரு கணமும் யோசித்ததால்தானே உனக்கு நல்ல அறிவுரைகள் சொன்னாள். அவள் இதுவரையில் உன்னை நேரில் கூடப் பார்த்ததில்லை. நீ அவளுக்குக் கிடைப்பாயென்ற நிச்சயமேயில்லை. இருந்தும் உன்னை மிகவும் நல்வழிப்படுத்த முயற்சித்தாள். மெய்யான அன்போடு தனது ப்ரியத்திற்குரிய எழுத்தையும் உனக்காக விட்டுவிட்டு தனது சொந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து உன்னுடன் வந்து, உனக்காகவே வாழ்கிறேன் என்றாள். . உன்னுடன் வாழவந்த பிறகும் உனக்குப் பிடித்தவகையில் சமைத்து, உனக்குப் பிடித்தவகையில் உடுத்தி, உனக்குப் பிடித்தவகையில் உறவாடி உன்னுடனே இருந்திருப்பாள். இதைவிடவும் வேறு என்ன வேண்டும் உனக்கு ? என்ன எதிர்பார்க்கிறாய் நீ ? உனது தவறுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதவளையா? அதற்கு நீ ஒரு பொம்மையைக் காதலித்திருக்கவேண்டும். ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்ணையல்ல. "

" நான் என்ன செய்யவேண்டுமென நீ சொல்லவருகிறாய்? "

" இந்தக் காதலிலிருந்தாவது , இந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொள். உனது வீண்பிடிவாதங்களையும் துர்நடத்தைகளையும் தீய சினேகங்களையும் உனை விட்டும் அப்புறப்படுத்து. நீ தவறு செய்தால் அடுத்தவர் மேல் பழியினை ஏற்றித் தாண்டிப்போகப் பார்க்காமல் அது உனது தவறுதானென ஒத்துக்கொள். மீண்டும் அத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள். "

" சரி. நானும் அவள் மேல் அன்பாகத்தானே இருந்தேன்."

" அன்பு இருந்திருந்தால் அதனை உள்ளுக்குள் வைத்திருந்ததில் என்ன பயன்? இருவரும் அருகிலிருந்தாலாவது அன்பைச் சொல்ல ஒரு புன்னகை, ஒரு சிறு தொடுகை போதும். பகிர்ந்தருந்தும் தேனீர்க்கோப்பை போதும். ஆனால் கடல் கடந்து, தேசங்கள் கடந்து காதல் கொள்பவர்களுக்கு அன்பைச் சொல்ல எழுத்துக்களும் பேச்சும் மட்டும்தானே உள்ளன. அவற்றில் ஏன் உன் அன்பைக் காட்டவில்லை ? யார் யாருக்காகவோ கவிதை, கதை எனக்கிறுக்குமுன்னால் அவளுக்கான காலை வணக்கத்தை ஏன் அன்பைக் குழைத்தனுப்ப முடியவில்லை ?"

" இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? "

" உனது தீய நடத்தைகளை விட்டொழி. யாருக்கும் வாக்குறுதியளிக்கும் முன்பு இரு தடவைகள் யோசி. கொடுத்த வாக்குறுதியை மீறாதே இனிமேல் உன்னை நேசிக்கும் எவர்க்கும் உனது அன்பினை செய்கைகளாலும் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்து. நீ நீயாக இருந்து அவளது விருப்பப்படியே எழுத்துக்களில் சாதித்துக்காட்டு. "

" சரி. செய்கிறேன். அவள், அவளது அன்பு எனக்கு மீளவும் வேண்டும். கிடைப்பாளா ? "

" முதலில் இப்படி அழுவதை நிறுத்து. ஒன்று அவளில்லையேல் வாழ்க்கையே இல்லையென்று விசித்து விசித்தழுகிறாய். இல்லாவிடில் இனி மகிழ்ச்சியாக வாழ அவள் நினைவுகள் மட்டுமே போதுமெனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாய். முதலில் ஒரு நல்ல மனநலவைத்தியனிடம் போய் முழுமையாக உன்னைப் பற்றி எடுத்துரைத்து சிகிச்சை பெற்றுக்கொள். யதார்த்தம் உணர். சூழவும் பார். இப்பொழுது கூட உன்னையே நீ இரண்டாம் நபரென எண்ணி உன்னுடனே நீ சத்தமாகக் கதைத்துக்கொண்டிருக்கிறாய். . காலை நடைக்காக வந்திருப்பவர்கள், வீதியில் செல்பவர்கள், பால்காரன், பத்திரிகை போடுபவன் என எல்லோரும் வீதியோரம் அமர்ந்திருக்கும் உன்னைப் பைத்தியக்காரன் எனச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள் பார். "

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

நன்றி - உயிர்மை

Tuesday, November 18, 2008

ஒரு தினக் குறிப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.

எனதிப்போதைய கண்கள் பொய் சொல்கின்றன. மனதின் விசித்திரக் கோலங்களை முன்னைப்போல ஒழுங்கான விம்பங்களாக அவை காட்டுவதில்லை. சில சமயங்களில் மனது அழும்போதுகூட என்னிரு கண்களும் சிரித்தபடியேயிருக்கின்றன. சில சமயங்களில் உதடுகளில் தோன்றும் சிரிப்பு பொய்யாக இருப்பதைக் கூட உணர்கிறேன். எனது சுயத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப, சுற்றியிருப்பவர்களுக்கேற்ப நான் நடிக்க வேண்டியவளாக இருக்கிறேன் என்பதனை எனது வதனமும் அதன் பாகங்களும் உணர்ந்தே இருக்கின்றனவோ என்னவோ ?

இன்று எதிலும் ஒரு பற்றற்றவளாக இக்கணங்களைக் கடந்தபடியிருக்கிறேன். அவனது அல்லது அவன் பற்றிய பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்க்க நினைக்கிறேனா ? அல்லாவிடில் ஏன் வழமையைப் போல இந்நேரத்தின் எனது தேவையான ஒரு தேனீரை ஊற்றவோ, அத் திரவத்தின் ஒவ்வொரு மிடறாகப் பருகியபடி அந்தியின் வண்ணத்தை ரசிக்கவோ மறந்தபடி படுக்கையில் உடலைப் பரப்பி விட்டத்தை வெறித்தபடி இருக்கிறேன் ?

உயிர் பிழைத்த தீப்பற்றிய தேகமொன்றுக்கு மயிலிறகால் களிம்பிடப்படுவதைப் போல எல்லாக் காயங்களையும் காலம் தடவித்தடவி ஆற்றிவிடுகின்றது. தழும்புகள் மட்டும் ஆற்றப்படுவதாகவோ, முழுவதுமாக அகற்றப்படுவதாகவோ இல்லை. வாழ்க்கை ஒரு ஒழுங்கான பாதையில் பயணித்தபடி இருக்கும்பொழுது மட்டும் எப்பொழுதாவது ஓர் நிமிடம் பழைய தடங்களை நினைவில் கொண்டுவந்து ' ஒரு பெரும் வலியைக் கடந்துவந்தவள்' எனச் சந்தோஷிக்கச் சொல்லும் மனம். அக்கணங்களில் மனது தன்னம்பிக்கையால் நிரம்பி வழியும். எவ்வலியையும் தாங்கச் சக்திபெற்றவள் என்ற எண்ணங் கொள்ளவைக்கும். அப்படிப்பட்ட எண்ண அலைகள் மிகுந்திருந்த பொழுதொன்றில்தான் எனது திருமணத்திற்குச் சம்மதித்தேன்.

என்ன விசித்திர மனமிது? என் துணை பற்றி மட்டுமே எண்ண வேண்டிய இதயம் இன்று அவன் நினைவுகளைக் கிளறியபடி இருக்கிறது. அவன் பற்றிய செய்தியைச் சுமந்துவந்த வார்த்தைகளை நான் ஏன் என் காதுக்குள், இந்த அறைக்குள் தொலைபேசியின் துளைகள் வழியே நழுவவிட்டேன்? அவன் பற்றி வந்த இத்தகவலை நல்ல தகவல் அல்லது கெட்ட தகவல் எவ்வகையில் பொருத்திப்பார்ப்பது என்றே தெரியாதவளாக நான் இருக்கிறேன்.

எம்மிருவருக்குமிடையில் ஒரு இறந்தகாலம் இருந்தது. அதில் அவன் என் நேசனாகவும் ஒரு நல்ல நண்பனாகவும் இருந்திருக்கிறான். அந்த நுனியைப் பற்றிப் பிடித்தபடி நான் இப்பொழுது அவனது நினைவுகளை இழுத்துக் கொண்டிருக்கிறேனா? அல்லது அவன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை, நினைவுகளை முழுவதுமாக மறந்துவிட்டேனா என என்னையே நான் சோதித்துக் கொண்டிருக்கிறேனா ? அல்லது நானும் அவனைக் காதலித்தேனா ?

ஐந்து வருடங்களுக்கு முன்னதாக என் மனப்பிம்பத்தில் பதிந்திருக்கும் உருவத்தின்படி, அவன் அழகன். அழகன் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அவனை அடக்கி விட முடியாது எனினும் வேறுவழியில்லை. கம்பீரமானவனாகவும், உயரமானவனாகவும் ஏன் தேவதைப் பெண்கள் கூட வரிசையில் நின்று அவனை அள்ளிப் போவதற்குத் தயாராகும் தோற்றத்திலும் அவன் இருந்தான். ஒரு குழந்தையைப் போன்ற மனமுடையவனாக அவன் இருந்தான். அவனது நாட்களின் ஒவ்வொரு துளியையும் என்னிடம் ஒப்புவிப்பவனாக இருந்தான். அவனது உதடுகள் என்னிடம் உதிர்த்த சொற்களில் பொய்கள் இருக்கவில்லை. கபடங்கள் இருக்கவில்லை. எந்த எதிர்பார்ப்புகளும் கூட இருக்கவில்லை. எனினும் ஒரு சிறுகுழந்தை தனது உலக ஆச்சரியங்களைத் தன் தாயிடம் ஒப்புவிப்பதைப் போல அவனும் என்னிடம் ஒப்புவித்தபடி இருந்தான்.

இருவரும் ஒரே இடத்தில்தான் வேலை பார்த்தோம். அவனுக்கு மிகவும் பொறுப்பான வேலை. நான் அவனது உதவியாளாகச் சேர்ந்திருந்தேன். அன்பான மொழிகளில் வேலைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்ததில் அவனை எனது நண்பனாக ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிரமமேற்படவில்லை. வேலை நேரங்கள் தவிர்ந்து நான் தங்கியிருந்த பெண்கள் விடுதி வரை அவன் தனது வாகனத்தில் என்னைக் கொண்டுவந்து விட்டுப் போகிறவனாகவும் இருந்தான். ஒரு கம்பீரமான மேலாளர் எனக்குச் சாரதி வேலை பார்ப்பதில் நான் கர்வப்பட்டேனோ என்னமோ? மறுக்கவில்லை.

சில நேரங்களில் கவிதையெனச் சொல்லிக்கொண்டு நான் கிறுக்குபவைகள் அவனுக்குப் பிடித்திருந்தன. சொல்லச் சொல்ல, சில நேரங்களில் சொல்லச் சொல்லியும் கேட்பான். அலை நுரைத்துக் கரையிலடிக்கும் கடற்கரையோரம் மாலை நேரங்களில் அவனிடம் கவிதை சொல்லியபடி அந்தியை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்பொழுதும் பிடிக்கும். எனினும் அருகினில் கடலோ, கவிதை ரசிக்கும் துணையோ எனக்கு வாய்க்கவில்லை.

அவனது பிறந்தநாளொன்றின் போது, நினைவிருக்கிறது. அது அவனுடைய இருபத்தி ஏழாம் பிறந்தநாள். முதன்முதலாக அவன் வசித்த வீட்டுக்கு அழைத்தான். சம்மதித்த பின்னர் அந்த விடுமுறை நாளில் அவனே விடுதிக்கு வந்து அழைத்துச் சென்றான். அன்று நான் வெள்ளை நிற உடையில் இருந்ததாக நினைவிலிருக்கிறது. அவ்வீட்டில் அவனை விடவும் மிகுந்த அன்புடையவர்களாக அவனது பெற்றோரை நான் கண்டேன். ஒரு தேவதையைப் போல இருப்பதாக அவனது அன்னை என் காதில் கிசுகிசுத்தார். அக்கணம் தொட்டு நானும் அவரை அம்மா என்றழைக்கலானேன்.

எனக்கு மட்டுமாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழா அது. என்னை அவனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா அதுவெனப் பின்னாளில் அறிந்தேன். அன்றைய தினம் அங்கிருந்து, அவன் அம்மாவுக்குச் சமையலில் உதவிசெய்தேன். அப்பாவின் மூக்குக் கண்ணாடி துடைத்துக் கொடுத்தேன். அழகிய, அன்பான குடும்பமொன்றின் சூழலுக்குள் நான் ஆட்பட நேர்ந்ததையெண்ணி அன்றைய இரவில் நெடுநேரம் மகிழ்வில் விழித்திருந்தேன். பின்வந்த காலங்களில் எனது வாரவிடுமுறை நாட்கள் அவன்வீட்டில் கழிந்தன. விடுதியை விட்டு முழுவதுமாக வந்துவிடும்படி அவனது பெற்றோர் அன்பாக நச்சரித்தபடி இருந்தனர்.

விவாகரத்துப் பெற்றுத் தந்தை ஒரு தேசத்திலும், தாய் இன்னுமொரு தேசத்திலும் தத்தம் துணைகளுடன் வசித்தபடியிருக்க சிறுவயதிலிருந்தே விடுதி வாழ்க்கை பழகிவிட்டிருந்தது எனக்கு. அத்துடன் எனது சுயத்தை அல்லது சுயமரியாதை என என்னைச் சூழ எழுப்பிக் கொண்டிருந்த அரணை அக்குடும்பத்துக்காக இழக்க நான் விரும்பவில்லையோ என்னவோ, அவர்களது வேண்டுகோளை மறுத்தே வந்தேன். அதே எண்ணம்தானோ என்னவோ ஓரு அழகிய மழை நாளில் அவன் தன் காதலை என்னிடம் சொன்னபோது கன்னத்தில் அறைந்தது போல என் மறுப்பைக் காட்டமாகச் சொல்லச் செய்தது ?

'உனது நேசத்தில் பொய்யிருக்கிறது. உனது கண்களில் கள்ளமிருக்கிறது. உனது நட்பில், உனக்கு மட்டுமே எனச் சொல்லிக்கொள்ள ஒரு சுயநலமிருக்கிறது. இத்தனை நாளாக நட்பாகப் பழகியதுவும் அன்பாகப் பேசியதுவும் இதற்குத்தானா? பழகத் தொடங்கிய மூன்றாம் நாளில் ரோசாப்பூக் காகிதத்தில் இதயமும் அம்புக்குறியும் வரைந்து காதல் கடிதம் நீட்டும் எல்லா ஆண்களையும் போலவேதானா நீயும்? உன்னை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். இன்று அதிலிருந்து அதலபாதாளம் நோக்கி நீ குதித்துவிட்டாய். ஒரு நல்ல தோழனாகவும், நேசனாகவும் உன்னையே நினைத்தேன். இன்று ஒரு சுயநலவாதியாகவும்,பொய்காரனாகவும், நட்பிற்குத் துரோகமிழைத்தவனாகவும் ஆகிவிட்டாய்' என ஒரு நல்ல நட்பைக் கொச்சைப்படுத்துவதாகச் சொல்லி அவனை வார்த்தைகளால் இம்சித்தேன்.

இப்பொழுது புலம்பிப் பயனென்ன இருக்கிறது? என்னிடம் காதலைச் சொன்ன அவனைக் காயப்படுத்தும் நோக்கில் அல்லது எனது இருப்பையும் கருத்தையும் நியாயப்படுத்தவேண்டி முட்டாள்தனமான முடிவொன்றை அப்பொழுதில் எடுத்தேன். அவனையும், அவனது குடும்பத்தையும் நிராகரிக்கத் தொடங்கினேன். அவனுடன் நானென்ன தொழில் பார்ப்பது என்ற சுயகௌரவம் தடுக்க அவ்வேலையை உதறினேன். 'சரி. காதல் வேண்டாம். நட்பாகவே தொடர்ந்து பழகலாம்' எனத் திரும்பத் திரும்ப விடுதிவரை தேடி வந்த அவனது அன்பை காவல்காரனைக் கொண்டு விரட்டியடித்தேன். அவ்வளவு வதை செய்ய அவன் செய்த தவறுதான் என்ன? இப்பொழுது நினைத்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஆமாம் ஒன்றுமேயில்லை.

அந்த நேரத்தில் எனக்கென்ன தேவையாக இருந்தது ? பணமா? இல்லை. எனது மூலங்கள் வசிக்கும் இரு தேசங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அது தேவைக்கும் அதிகமாகக் கிடைக்கும். பிறகு தொழில் ? இல்லை. படித்திருக்கும் படிப்பு வேறு நல்ல தொழில்களை இலகுவாகத் தேடித்தரும். பிறகென்ன ? அன்புதானே ? எனது கிறுக்கல்களைப் பாராட்டவும், எனது துயரங்களைச் சொல்கையில் தோள்கொடுத்துத் தலை தடவவும் ஒரு ஜீவன் தானே? அந்த அன்பு அவனிடம் மிகைத்திருந்த பொழுது ஏன் அதை நிராகரித்தேன்? நட்பு என்ற முலாம் பூசிய காதலின் சுயநல உருவம் என அவனைத் தப்பாக நினைத்ததுதான் அவனை, அவனது அன்பான குடும்பத்தை நிராகரிக்கத் தூண்டியதா? இல்லாவிடில் அனேகமாகச் சந்திக்க நேர்ந்த ஆண்கள் அனைவரும் போல எனதழகையும், தனித்திருக்கும் அவலத்தையும் கண்கொத்திப் பாம்பாக நோக்கிக் காதல் விண்ணப்பம் விடுத்ததில் காதல் மேல் எனக்கிருந்த வெறுப்பா?

எதுவோ ஒன்று. என்னையும் அவனையும் பிரித்திற்று. அவனைப் பழிவாங்குவதாக நினைத்து எனது தோழியொருத்தியின் அண்ணனொருவனைக் காதலித்து ஆமாம் நானே வலியப் போய்க் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். எனது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இரு நாட்கள் கழித்து மின்னஞ்சலில் தகவல் சொல்லி அதிலேயே வாழ்த்துக்களும் பெற்றேன். எனது திருமணத்திற்கு அவனையோ, அவனது குடும்பத்தையோ ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அழைக்கவில்லை. ஆனால் அவன் அழைத்தான். ஒரு ஏழைப்பெண்ணுக்கு எளிமையான முறையில் அவன் வாழ்வளித்தபொழுது எந்தவித அதிருப்திகளோ, பகைமை உணர்ச்சியோ இன்றி அவன் அழைத்தான். நான் செல்லவில்லை. அழைப்பிதழை பல நூறு துண்டுகளாகக் கிழித்தெறிந்தேன். அவனுக்குச் சமமாக அந்த ஏழைப் பெண்ணைக் காணத் திராணியற்று அல்லது நானமர்த்தப்பட வேண்டிய மணமேடையில் மங்களங்கள் சூழ இன்னொருத்தி அமர்ந்திருப்பதைப் பார்க்கச் சகிக்காமல் நான் அப்படிச் செய்ததாக இன்று என்னால் நியாயம் கற்பிக்கமுடியும். எனினும் அன்றைய நாளில் முழுத்தவறும் செய்தவள் நானாகிறேன். இப்பொழுதும் வருந்துகிறேன்.

எல்லாம் நடந்து முடிந்து இன்று ஐந்து வருடங்களாகின்றன. பனி பொழியும் ஐரோப்பிய தேசமொன்றில் இயந்திர மகளாகத் தொழில்செய்து கொண்டு முரட்டுக்கணவனோடு வாழ்ந்துவருமெனக்கு அவனைப்பற்றிக் கிடைத்த தகவலைத்தான் இந்நாட்குறிப்பில் எழுதி வைக்க நினைக்கிறேன். இழந்த நாட்களின் குறிப்புக்கள் வானத்தில் சஞ்சரித்தபடியே இருக்குமோ? எல்லாவற்றையும் மீட்டெடுத்து எழுத்துக்களில் வார்த்துச் சேமிக்க முடியுமோ? இந்தக் குறிப்புகளை எழுதிவைப்பதன் மூலம் அவனது நினைவுகளை பின்னொரு காலத்தில் மீட்டிப்பார்க்க விரும்புகிறேனா? எவ்வாறாயினும் எழுதிவைக்கலாம். இனித் தவறுகள் செய்யுமிடத்து மீட்டிப்பார்த்துத் தவறுகளைத் தவிர்க்கலாம். எழுதி முடித்த பின்னர் துணையின் பாசம் வரண்ட விழிகளிலிருந்து இந்நாட்குறிப்பை, இவ்வெழுத்துக்களை எப்படிப் பாதுகாப்பதெனப் பின்னர் யோசிக்கலாம். எழுதத் தொடங்குகிறேன்.

15.11.2008

முன்னர் வேலை பார்த்த அலுவலகத் தோழி இன்று மாலை தொலைபேசியில் அழைத்தாள். அவன் வேலையை விட்டு நீங்கிவிட்டானாம். மிகுந்த சம்பளத்துடனான வேலையை விட்டு நீங்கியதற்குக் காரணம் என்னவெனத் தெரியவில்லை என்றாள். அத்துடன் அவனது ஒரே குழந்தைக்கு என் பெயர் வைத்திருக்கிறான் என்ற தகவலையும் சொன்னாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத் திரும்பவும் திரும்பவும் கேட்டுவிடத் திராணியற்றவளாக என்னை உணர்கிறேன். நான் அழுகிறேனா? சொல்லத் தெரியவில்லை. கண்கள் கலங்கியுள்ளன. ஆனால் கன்னங்களில் வழிந்தோடவோ, சிறு விசும்பல்களை உடைப்பதாகவோ இல்லை.....


- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, November 1, 2008

நேபாளத்து அம்மா

அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

" அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பொஸ் " என்றான்.

"கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?"

" அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பொஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பொஸ் ? "

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, October 15, 2008

அப்பாச்சி - 2

அப்பாச்சியின் முதற்பாகம் இங்கே பார்க்கலாம்.

சித்தப்பாவுக்குத் தண்ணீர் எடுக்கச் சமையலறைக்குள் வந்த சங்கீதாவுக்கு அப்பொழுதுதான் அந்த ஞாபகம் வந்தது. அவசரமாகத் தண்ணீரைக் கொண்டுபோய்ச் சித்தப்பாவிடம் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் பார்த்துப்பயந்த அந்த அறைக்குள் போனாள். வெள்ளைப் புடைவையில் போர்த்தப்பட்ட உருவம் அசைவுகளேதுமின்றி முகம் முழுதும் சுண்ணாம்படித்த வெள்ளையோடு , வட்ட வட்டமான கண்களை மூடிப் படுத்திருந்தது. அவள் சிறிதும் அஞ்சவில்லை.

அவள் எப்படிப்பயப்படுவாள்? எல்லாம் அவளது கைங்கர்யம் தானே? நேற்று அழகுக் கலை வகுப்பில் படித்த ஃபேஷியல் முறையைப் பரீட்சித்துப் பார்க்க தங்கையின் முகத்திலும், கழுத்திலும் ஏதோ ஒரு வெள்ளைக் கலவையைப் பூசிப் படுக்கவைத்திருந்தாள். வீட்டுச் சமையலுக்குக் கொண்டுவந்திருந்த வெள்ளரிக்காயை வெட்டிக் கண்களை மூடிவிட்டிருந்தாள். தங்கையும் நடந்துகொண்டிருக்கும் அமளி துமளி எதுவும் தெரியாமல் 'கிடைத்ததடா ஓய்வு' என வெள்ளைப் போர்வையால் உடலைப்போர்த்தி நன்றாகத் தூங்கிவிட்டிருந்தாள்.

சங்கீதா அரை இருட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் தோளில் தட்டி எழுப்பினாள். கண்களை மூடியிருந்த வெள்ளரிக்காய்த் துண்டுகளை எடுத்து அறையின் மூலைக்கு வீசியெறிந்தாள். ஆங்கிலப் பேய்ப்படங்களில் வரும் பிசாசினைப் போல இருந்த சவீதா கண்விழித்து நேரம் காலம் தெரியாமல் சோம்பல் முறித்து " விடிஞ்சுட்டுதே அக்கா ? " என்றாள்.

"ஓம். உனக்கிப்போ நல்லா விடியும் அப்பாச்சிக்கிட்ட இருந்து. முதல்ல எழும்பிப் போய் முகம் கழுவு "

" இவ்வளவு நேரம் வச்சிருந்தது போதுமோ அக்கா? நான் வடிவாகியிருப்பேனே ? " என்றவாறு கட்டிலிலிருந்து எழும்பி நின்றாள்.

சங்கீதா பதில் சொல்லாமல் போர்வையைச் சுருட்டி அவள் முதுகில் அடித்து அவளை குளியலறைக்கு விரட்டிவிட்டாள். பெரியாச்சியின் ஓயாத வாய்க்குப் பூட்டுப் போட்டாயிற்று. அவர் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஓதித் தன் நெஞ்சுக்குள் ஊதிக் கொண்டார். சங்கீதா கூடத்துக்கு வந்து சித்தப்பாவை மட்டும் சாடை செய்து கூப்பிட்டாள். பலி கொடுக்க அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போல மருண்ட பார்வையோடு அவர் அவளை நோக்கி வந்தார். சமையலறைப் பக்கமாகக் கூட்டிப் போய் விஷயத்தைச் சொன்னாள்.

அவருக்குச் சிரிப்புத் தாளவில்லை. அப்பாச்சியிடம் சொன்னால் நன்றாக எல்லோரும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டி வருமெனச் சொல்லி விஷயம் அவர்களுக்குள்ளேயே மூடி மறைக்கப்பட்டது. அம்மாவையும் அழைத்து விஷயத்தைச் சொல்லியாயிற்று. அவள் பயத்தில் தான் கோயிலுக்குக் கோழி கொடுப்பதாக நேர்ச்சை வைத்ததைச் சொன்ன போது சிரிப்புப் பலமடங்காகியது. எல்லோரும் சத்தம் வெளியே கேட்காமல் வாயைப் பொத்திச் சிரித்தனர். அப்பொழுதுதான் முகம் கழுவிவந்த சவீதா தன்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறார்கள் என நினைத்து ஓடிப் போய்க் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

எல்லோரும் கூடத்துக்கு வந்தனர். அப்பாச்சி இன்னும் கண்ணை மூடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். சித்தப்பா "அம்மா " என்றார்.

" ஓமடா... ஒரு தென்னமோலைக்காக ஊர் விட்டு ஊர் வந்து இப்படிப் பேயாய் அலைவாளெண்டு நான் இண்டைக்குத் தான் தெரிஞ்சு கொண்டன்.இனியெண்டால் நான் எல்லோருக்கும் தென்னமோலை சும்மா கொடுப்பன். அவளுக்குச் சொல்லடா..இனியும் என்ர பின்னால பேயாய் வந்து துரத்தாதையெண்டு " என்றார்.

பின்னர் சித்தப்பாவும் மற்றவர்களும் எவ்வளவு சொல்லியும் அந்த அறைக்குப் போகவே மாட்டேன் என்றார். சரியெனச் சொல்லி அம்மாவின் அறைக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஆடை மாற்றச் சொன்னார்கள். அவர் கையோடு கொண்டுவந்திருந்த பழைய ஆடைக்குத் தன்னை மாற்றிக் கொள்ளும் வரையில் அம்மாவும் அவருடனே இருக்க வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப்பின்னர் ஆரம்பித்தது வம்பு. அப்பாச்சி எங்கே போனாலும் அவரது கைத்தடி போல யாராவது துணைக்குப் போகவேண்டியிருந்தது. அம்மா, சங்கீதாவிடம் அப்பாச்சியைப்பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எல்லோருக்கும் இஞ்சி தட்டிப் போட்டுத் தேநீர் ஊற்றிக்கொடுத்தாள்.

அப்பா வந்ததும் இந்த வீட்டில் பேயிருக்கிறதெனச் சொல்லி அப்பாச்சி அப்பாவையும், அம்மாவையும் ஒரு பிடிபிடித்தார். அப்பா ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்த்து விழித்தார். அம்மா வாய்க்குள் சிரிப்பதைப் பார்த்து முறைத்தார். சித்தப்பா வெளியே கூட்டிக் கொண்டு போய் விடயத்தை விபரித்தபின்னர் அப்பாவும் இரண்டு குரும்பட்டிகளை வாய்க்குள் போட்டு அதக்கியதைப் போலக் கன்னங்கள் விரிய வெகுநேரம் சிரித்தார்.வீடு முழுக்க எல்லோரும் வந்து சேர்ந்ததும் அப்பாச்சியின் அதிகாரம் திரும்பவும் ஆரம்பித்தது.

எவ்வளவு சாப்பிட்டாலும் சதை ஒட்டாத உடம்பு சவீதாவிற்கு. பதினாலு வயது நடந்துகொண்டிருந்தது. ஒட்டடைக் குச்சிக்கு உடுப்புப் போட்டு விட்டது போல வீடு, பள்ளிக்கூடமென வளைய வந்துகொண்டிருந்தாள். அவளுக்குச் சதை பிடிக்க வேண்டுமென அம்மா ஒரு நேர்ச்சையும் வைத்திருந்தாள். ஆச்சியின் பார்வை இப்பொழுது அவள் மேல் படிந்தது. கூப்பிட்டு அருகில் அமர்த்திக் கொண்டாள்.

" ஏண்டியம்மா? இவளுக்கு நீ சாப்பாடு கொடுக்குறியோ இல்லையோ ? இவளைப்பார்த்தால் இவளுக்குக் கொடுக்காமல் எல்லாத்தையும் நீயே விழுங்குற மாதிரியல்லோ கிடக்குது " என்று அம்மாவைச் சாடத் தொடங்கினார்.

" இந்த வீட்டுல இல்லாத சாப்பாடோ மாமி? அதெல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறன். இவள் தான் ஒழுங்காச் சாப்பிட மாட்டாள் "

" உன்ர சமையலின்ர தரம் எனக்குத் தெரியாதே..பச்சத் தண்ணிக்கு உப்புப் போட்டு அதை ரசம் எண்டு சொல்லுவாய் நீ "

அப்பாச்சி சொன்னதும் அம்மாவின் முகம் வாடிப்போனது. மனதுக்குள் "சூட்டுக் கிழவி, சூட்டுக் கிழவி" எனத் திட்டிக் கொண்டாள். உண்மையிலேயே அம்மாவின் சமையல் வெகுசுவையாக இருக்கும். புளியெல்லாம் கரைத்துப் போட்டு , மசாலா எல்லாம் அரைத்துப் போட்டு அவள் மீன்கறி செய்தாளானால் அந்த வாசனை எட்டி அப்பா ஆபிஸிலிருந்தே மோப்பம் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவார்.அம்மா எதுவும் பேசாமல் சமையலறைக்குள் போய் இரவுச் சாப்பாட்டைத் தயார் பண்ண ஆரம்பித்தாள்.

அப்பாச்சி, சவீதாவைக் கூட்டிக்கொண்டு அங்கேயும் வந்துவிட்டார். ஆச்சியின் கண்கள் விறகடுப்பைத் தேடியது. சமையலறையின் மூலையிலிருந்த விறகடுப்பை எப்போதோ அகற்றி கேஸ் அடுப்பில்தான் சமைத்துக்கொண்டிருந்தனர். விறகடுப்பு சம்பந்தமான ஆச்சியின் கேள்விகளுக்கு அம்மாவால் விளக்கம் கொடுக்கமுடியாமல் அப்பாதான் வந்து விளக்கவேண்டியிருந்தது. திடீரென " என்ர அம்மியையும், குளவியையும் எங்கேயடி காணோம்? " என்றார்.

"அதை வெளியில போட்டிருக்கிறம் அப்பாச்சி. " என்றாள் சவீதா.

"வெளியிலயோ..? என்ர அம்மா, எனக்குச் சீதனமாத் தந்தது. அதை உனக்குத் தந்தால் நீ வெளியில வீசுடுவியே..? " என்று காட்டமாக அப்பாவை முறைத்து " இவள் தான். எல்லாம் இவளோட வேலைதான். நினைச்சுக் கொண்டிருப்பாள். ஒருநாளைக்கு என்னையும் இப்படி வெளியில தூக்கிப் போட " என்று அம்மாவையும் சாடி " எனக்கிப்பவே என்ர அம்மியைப் பார்க்கவேணும் " என்று அடம்பிடித்தார்.

"அம்மா, இப்ப இருட்டாகிப் போச்சுது. விடியற்காலையில பார்ப்போம்..வெளியிலயெண்டால் ஸ்டோர் ரூமில வச்சிருக்கிறோம்" என்று பேயை நினைவுறுத்திப் பயமுறுத்தி,ஒருவாறு சமாதானப்படுத்தி விட்டார் அப்பா. ஆச்சி அவரது ஒல்லிக் குச்சிக் கைத்தடி போல சவீதாவைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பேய் அறையைத் தவிர்த்து வீடு முழுக்க வலம் வந்தார்.

சித்தப்பா டீவியின் முன் தேமே என்று உட்கார்ந்துவிட்டார். அவரது கிராமத்துவீட்டுக்கு இன்னும் டீவி வந்திருக்கவில்லை. டீவியை விட்டு மின்சாரமே இல்லை. தன்வீட்டில் வழமையாக இரவு எட்டு மணிக்கே கும்பகர்ணனுக்குத் தம்பி போலக் குறட்டை விட்டுத் தூங்கி விடுபவர் அன்று டீவியின் முன் உட்கார்ந்துவிட்டார். அசைவதாக இல்லை. கண்ணைக் கூடச் சிமிட்டுவதாக இல்லை.

வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய நிகழ்ச்சிநிரலை அறிவிப்பாளருக்கு அடுத்து சவீதா மனப்பாடமாக ஒப்பிப்பாள். அந்தளவுக்கு அவளுக்கும் டீவிக்கும் நெருக்கம். அப்பொழுது இரவுச் செய்தி போய்க்கொண்டிருந்தது.

" உவள் எப்படியடி உந்தப் பெட்டிக்குள்ள போய்க் கதைக்குறாள்? மூச்சு முட்டாதே " என்றார் அப்பாச்சி செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பாளரைப் பார்த்து. சவீதாவும், சங்கீதாவும், சித்தப்பாவும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினர். அப்பாவுக்கும் சிரிப்புச் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்து விஷயம் தெரிந்து திரும்பவும் அவர் வாயில் குரும்பட்டி.

இரவுச் சாப்பாடு முடிந்த கொஞ்சநேரத்தில் அப்பாச்சிக்குத் தூக்கம் வந்துவிட்டது. அறைக்குள் தனியாகப் போய்த் தூங்கப்பயம். யாரிடமும் சொல்லவும் வெட்கம். " இனி எல்லோரும் தூங்குவம். என்ன? " என்றார்.

" மாமிக்கு நித்திரை வருதே ? மாமி போய்த் தூங்குங்கோ" என்ற அம்மா அப்பாச்சியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள். கடைசியில் அப்பாச்சியை மேலும் உசுப்ப விரும்பாமல் எல்லோரும் நேர காலத்துடன் தூங்கவேண்டியதாகிவிட்டது. இதில் இரண்டு சகோதரிகளுக்கும் தான் கடும் வருத்தம். அன்றைக்குப் பார்த்துப் புதிய தமிழ்ப்படமொன்று டீவியில் போட இருந்தார்கள். நாளைக்கு வகுப்பிலும், பள்ளிக்கூடத்திலும் சினேகிதங்களுக்கிடையில் நடக்க இருக்கும் இப்படம் சம்பந்தமான திரை விமர்சனத்தில் இவர்களால் கலந்துகொள்ள முடியாது.

அப்பாச்சி தூங்கும்வரை சுலோகங்களைச் சொல்லியபடி இருந்தார். கனவில் காமாட்சியும், புளியமரமும், தென்னஞ்சூளையும் வந்துவிடக்கூடாதென்பது அவரது வேண்டுதலாக இருந்தது. அதிகாலையில் இல்லாத சேவல் கூவி நாலு மணிக்கே எழும்பிவிட்டார். அம்மாவையும் எழுப்பி முகம் கழுவிக் கொண்டு மகள்களை எழுப்பச் சொன்னார்.

இரண்டு அருமைச் சகோதரிகளும் பிறந்த காலம் தொட்டு "சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கும்" எனப் பாடத்தில் மட்டுமே படித்துவளர்ந்தவர்கள். அவர்கள் சூரியோதயத்துக்கு முன்னர் எழும்பியதாகச் சரித்திரம், விஞ்ஞானம் எதுவுமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் ஆச்சியின் சத்தத்துக்குச் சலிப்போடு எழும்பி குட்மோர்னிங் சொல்லிக் கொண்டார்கள்.

அப்பாச்சிக்குத் தேநீர் ஊற்றித்தர அம்மா ஹீட்டரைப் போட்டாள். ஆச்சி அருகில் வந்து ஹீட்டரைப் பார்த்து " என்ன இது? "என்று கேட்டார். ஆச்சிக்கு அம்மா மின்சாரம் கண்டுபிடித்த எடிசனின் கதையிலிருந்து ஆரம்பித்து ஹீட்டரின் உருவாக்கமும் பயன்பாடுகளும் வரை விபரிக்கவேண்டியிருந்தது. எல்லாவற்றையும் பல குறுக்குக்கேள்விகளோடு காதில் வாங்கிக் கொண்ட ஆச்சி " இரும்பைச் சூடாக்கித் தண்ணியில கலந்து , அதுல தேத்தண்ணி ஊற்றி என்னைக் கொல்லப்பார்க்குறியோ? " என அம்மாவைக் கடுப்பாக்கினார்.

பிறகு அம்மா அவருக்காகக் கேத்தலில் தண்ணீர் சுட வைத்துத் தேநீர் ஊற்றிக் கொடுத்தார். அதிலும் ஆயிரம் குறைகள் சொல்லிக் குடித்தவருக்கு நேற்றைய இரவின் அம்மி நினைவுக்கு வந்துவிட்டது. உடனே ஸ்டோர் ரூமுக்குப் போகவேண்டுமெனச் சொன்னார். இன்னும் முற்றாக இருள் கூட விலகியிருக்கவில்லை. அம்மாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அம்மி இருப்பது ஸ்டோர் ரூமின் உள்ளே ஒரு மூலையில். அதனைத் தேடிப் போவதென்பது ஆபிரிக்காவின் தங்கச் சுரங்கத்துக்குள் போவது போல மிகக் கடினமான வேலை. இடையிடையே தேள், பல்லி, கரப்பான் பூச்சி,எலி எனக் காவல்காரர்களும் எதிர்ப்பட்டு பயமுறுத்துவார்கள். அவைகள் கூடப் பரவாயில்லை. அப்பாச்சியுடன் ஒப்பிடும்போது அவை சாதுக்கள். அப்பாச்சியுடன் ஸ்டோர் ரூமில் மல்லுக்கட்டுவதை மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வது போல எண்ணிப்பயந்தாள் அம்மா.

அப்பாவுக்கு அன்று ஆபிஸ் லீவு. அப்பாச்சிக்கு அம்மிக்குளவியைக் கண்டுபிடிக்க அப்பாதான் சரியான ஆள். அவருக்குத் தேநீர் கொடுத்துவிட்டு வருவதாக ஆச்சியிடம் சொல்லிவிட்டு தேநீரோடு விஷயத்தை அவரிடம் சொல்லிவிட்டாள். அப்பாவுக்கு 'இன்றைக்கும் ஆபிஸ் இருந்திருக்கலாமே' எனத் தோன்றியது. துணைக்குச் சித்தப்பாவையும் கூட்டிக் கொண்டு வீட்டின் பின்முற்றத்தின் ஒரு மூலையிலிருந்த ஸ்டோர் ரூமுக்கு அப்பாச்சியுடன் வந்துவிட்டார்.

" எங்கேயடா இங்க வச்சிருந்த கோழிக் கூடு? "

" அது பராமரிக்க ஏலா எண்டு வித்துப்போட்டம் அம்மா. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னம் இருந்தது. உங்களுக்கு இன்னும் நினைவிருக்கே?"

" ஏன் நினைவில்லாமல்? நான் முட்டை வச்சுக் குஞ்சாக்கிக் கொடுத்தவை. நீயெல்லாத்தையும் வித்துப் போட்டனியோ? நீ எதுமறியாப் பிள்ளை. எல்லாம் உவளின்ர வேலைதான் "

விற்கும் போது அம்மா வேண்டாமெனத் தடுத்தவர். அப்பாதான் கோழி நாற்றம் வீடுமுழுக்க வீசுகிறதெனச் சொல்லி எல்லாக் கோழியையும் கோழிக் கடைச் சந்திரனுக்கு விற்றார். அப்பா எதுவும் பேசவில்லை.

ஸ்டோர் ரூமுக்குள் அம்மி தேடிய பொழுது அப்பாச்சி அப்பாவுக்குக் கொடுத்திருந்த பல பொக்கிஷங்கள் 'இவ்வளவு நாளும் இதற்குள்ளேதான் அடைபட்டுக் கிடந்தோம்' என அப்பாச்சியின் முன்னால் தலை நீட்டின. அப்பாவுக்கான அர்ச்சனைகள் அப்பாச்சியிடமிருந்து வரத்தொடங்கின. அந்த அர்ச்சனைகளில் அம்மாவையும் அவரது ஜாதகத்தோடு சேர்த்துவிட அப்பாச்சி தவறவில்லை.

ஸ்டோர் ரூமினைப் பார்த்துவிட்டு வந்த அப்பாச்சியிடமிருந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாகப் புலம்பல்களும் , வசவுகளும் ஓயாமல் வந்துகொண்டே இருந்தன. அம்மா, அவித்துக்கொண்டிருந்த இடியப்பத்தின் துளைகளில் அப்பாச்சியின் வசவுகளை நழுவவிட்டாள்.

வாசலில் "சங்கீ, சங்கீ" என யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

தனது அழகுக்கலை வகுப்புக்குப் போவதற்கான அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சங்கீதாவுக்கு உடனே எழுந்துபோய் வரவேற்க முடியாமல் போனது அழைத்தவளின் துரதிஷ்டம். அழைத்தவள் அன்று யார் முகத்தில் விழித்தாளோ, அப்பாச்சிதான் முதலில் போய் யாரென்று பார்த்தார்.

" ஆரடா நீ? ஆர் வேணும் உனக்கு? " என்றார் அப்பாச்சி அவளைப் பார்த்து. அவள் ஜீன்ஸும், டீசேர்ட்டும் அணிந்து தலைமுடியை பாப் கட் வெட்டியிருந்த பக்கத்துவீட்டுப் பெண். சங்கீதாவுடன் தான் அழகுக்கலை படிக்கிறாள். அவளை வகுப்புக்கு அழைத்துப்போக வந்திருந்தாள். அப்பாச்சியின் கண்களுக்குப் பையனாகத் தெரிந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

" சங்கி இருக்கிறாளோ ஆண்ட்டி ?"

" அப்படி ஆரும் இங்க இல்லை "

இப்பொழுதுதான் சங்கீதா முன்னால் வந்தாள்.

" உள்ளே வா..இதுதான் என்ர பாட்டி " வந்தவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

" நில்லு. ஆரிந்தப் பையன்? அதுவும் பொம்பிளைக் குரலில பேசுறான் ? "

" ஐயோ பாட்டி. இது பையனில்லை. பொண்ணு. "

" இந்த மாதிரி உடுப்பெல்லாம் உடுத்துக்கொண்டிருக்குது ? உன்ர பழைய உடுப்புக்கள் இருந்தாக் கொடு இவளுக்கு..என்ன பேர் சொல்லிக் கூப்பிட்டனீ என்ர பேத்தியை ? சங்கீதா எண்டு இவளோட அப்பாம்மா வடிவா வச்சிருக்காங்கள். முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிடு...என்ன ? "

வந்தவளுக்குப் பேயறைந்தால் போல் ஆகிவிட்டது. இது போல ஒன்றை அவள் தன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை. அவள் கராத்தே எல்லாம் கூடக் கற்றறிந்திருக்கிறாள். ஆனால் அப்பாச்சியின் வாய் பற்றி அந்தக் கலையில் சொல்லித்தரவில்லை. தப்பித்தால் போதுமென சங்கீதா அம்மா,அப்பாவிடமும், அப்பாச்சியிடமும் சொல்லிவிட்டு அவளுடன் வகுப்புக்குக் கிளம்பிவிட்டாள். அப்பாச்சி சவீதாவைக் கூட்டிக் கொண்டு முற்றம் முழுதும் ஒவ்வொரு சாணுக்கும் ஒவ்வொரு குறைகள் சொல்லியபடி உலாத்தித் திரிந்தார்.

ஏறத்தாழ ஐந்துநாட்கள் அப்பாச்சியின் அதிகாரம் அந்த வீட்டில் மேலோங்கியிருந்தது. அவர் அந்த வீட்டிலிருந்த நாட்களில் ஒவ்வொருவரும் அப்பாச்சிக்கு எதிர்த்திசையிலேயேதான் மூச்சுக் கூட விட்டார்கள். அம்மாவின் பாடுதான் பாவம். எல்லாவசவுகளின் இறுதியிலும் அம்மாவைச் சாடாமல் அப்பாச்சிக்குச் செமிக்கவில்லை.

அப்படியாகப்பட்ட ,அதிகாரமிக்க அப்பாச்சி தன் மகன் வீட்டுக்கான அடுத்த விஜயத்தை இன்னும் இரண்டுநாட்களில் மேற்கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி ஒரு பேரிடியாக இப்பொழுது அம்மாவையும், சங்கீதாவையும் தாக்கியிருந்தது. அப்பா வந்தபிறகு அவரையும் தாக்கும்.

இப்பொழுது சித்தப்பாவின் கிராமத்துக்கு மின்சாரம், டீவி எல்லாம் வந்துவிட்டது. கேஸ் அடுப்பும் வந்திருக்கும். ஊருக்குத் தொலைபேசியும் வந்திருந்தது. அப்பாச்சி இருக்கும் வீட்டுக்குள் போனிருந்தால் ஒரு மாத போன் பில் கட்ட அவரது முழுச்சொத்தையும் விற்க வேண்டி வருமென நினைத்தோ என்னவோ அவர் வீட்டுக்குத் தொலைபேசி இணைப்பை எடுக்கவில்லை.அப்பா வந்ததும் அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவருக்கிருந்த பதற்றத்தில் நல்லவேளை மீன்கறி நினைவில் வரவில்லை. ஒல்லிப்பெண் சவீதாவுக்கும் கூடப் பதற்றமாக இருந்தது. இரண்டாவது நாள் அப்பா ஆபிஸுக்கு லீவு போட்டுவிட்டுத் தன் அம்மாவைக் கூட்டிவர கிராமத்துக்குப் போனார்.

வீட்டின் கேட் அருகில் ஆட்டோ வந்துநின்றது. இந்த முறை முதலில் அதைக் கவனித்தவள் சவீதா. அப்பாச்சியின் முன்னால் எப்படி நடந்துகொள்ளவேண்டுமெனத் தன் அனுபவங்கள் மூலம் தங்கைக்குப் பாடம் எடுத்திருந்தாள் சங்கீதா. அதன்படி மெதுவாக, நிலத்துக்கும் வலிக்குமோ என்பது போல ஆறுதலாக நடந்துசென்று கேட்டைத் திறந்தாள். தனது நடையைப் பார்த்து அப்பாச்சி பூரித்துப் போயிருக்குமென நினைத்து ஆச்சியின் முகத்தைப் பார்த்தவளுக்கு ஆயிரம் கருந்தேள் ஒன்றாகக் கொட்டிய அதிர்ச்சி. அப்பாச்சியின் முகத்தில் அன்று போல் இன்றும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

" என்னடி நீ? சித்திரைத் தேர் போல மெதுவாக வர்றாய்? அங்க சாரதா பிள்ளைத்தாச்சியாயிருக்கிறாள். நேற்று வலியெடுக்க ஆரம்பிச்சிட்டுது. அவளிண்ட வீட்டுக்காரன் கூடப் பக்கத்துல இல்ல.என்ன ஆச்சோ? ஏதாச்சோ? நீ என்னடாவென்றால் இவ்வளவு மெதுவா வாறாய்.. "

அப்பாவுக்கும் , சவீதாவுக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. யார் இந்த சாரதா ? அவளுக்குப் பிரசவ வலியெடுத்தால் அப்பாச்சி எதற்குப் பதற வேண்டும் ? ஒருவேளை வயசான காலத்தில் ஆச்சிக்கு மூளை பிசகிவிட்டதோ ? ஆச்சியின் கையைப் பிடித்த சவீதாவின் கையை உதறிவிட்டு, சாரதா ஏதோ அவர்கள் வீட்டுக்குள்தான் இருந்து துடிப்பதைப் போல அப்பாச்சி விறுவிறுவென வேகமாக வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

சுற்றுமுற்றும் எதையும் பார்க்கவில்லை. வாசலில் அம்மாவின் வரவேற்பிற்காகக் காத்திருக்கவில்லை. நேராக டீவி இருந்த அறைக்குள் போய் " போடடி டீவிய" என்று சங்கீதாவிடம் சொல்லிவிட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார் தொலைக்காட்சித் தொடர்களுக்குள் தன்னைத் தொலைத்திருந்த அப்பாச்சி !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, October 4, 2008

அப்பாச்சி

தொலைபேசியை வைத்தவளுக்குப் பதற்றமாகிவிட்டது. அடுத்தகிழமை அவளை நிச்சயிக்க திலகன் வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள். இப்போதைய பதற்றத்துக்குக் காரணம் அதுவல்ல. வீட்டுவாசலில் போய் நின்றாள். நண்பகலுக்கு முன்னதான வெளிச்சத்தோடு வெப்பத்தையும் சுமந்திருந்த வெயில் அகன்ற முற்றத்தில் அகலப் படுத்திருந்தது. வீதியில் மீன்காரன் போவது தெரிந்தது. வெயிலை எதிர்க்கத் தலையிலொரு தொப்பி.சைக்கிளின் பின்பகுதியில் தராசால் மூடியபடி மீன் பெட்டி. மீன்காரனைக் கண்டால் நிறுத்தும்படி அம்மா சொல்லியிருந்தாள்.

அவளது வீட்டுக்கும் வீதியோரத்தோடு ஒட்டியிருந்த கேட்டுக்கும் இடையில் பாய் போட்டு ஒரு ஊருக்குச் சாப்பாடு போடலாம்.அவ்வளவு பெரிது. இவள் கூப்பிடுவாளென எதிர்பார்த்தோ என்னவோ, அவன் வேக வேகமாகத் தன் சைக்கிளை மிதித்து அடுத்த தெருவுக்குப் போய்விட்டிருந்தான். யாருக்கும் இவளோடு பேரம் பேசி முடிக்கமுடியாது. அதுவும் மீன்காரனோடு பேரம் பேசப்போனால் மீனைத் துப்புரவாக்கும் போது ஒதுக்கப்படும் பகுதிகளுக்காகக் காத்திருக்கும் பூனை கூட 'மீனும் வேண்டாம், அதன் வாலும் வேண்டாம்' என ஓடிப்போகும்.

'தப்பிவிட்டான்' என மனதிற்குள் கறுவிக்கொண்டவள் சமையலறைக்குள் போனாள். அம்மா அரிசி கழுவிக் கொண்டிருந்தாள்.

" அந்தப் பழைய தட்டைக் கொண்டு போ "

" எதுக்கு? எங்க? "

" உன்ர மாமியார் வீட்டுக்கே கொண்டு போகச் சொன்னனான் ? மீன் துண்டுகளைப் போடத்தான். இல்லையெண்டால் புதுத்தட்டெல்லாம் மீன் வாசமடிக்கும் "

" அவன் நிக்காமப் போயிட்டான். நீங்கள் மீன் துண்டு கேக்குறீங்கள். இண்டைக்கு வேற ஏதாவது செய்யுங்கோ."

" வேற ஏதாவது செய்யுறதோ..? உன்ர அப்பாக்கிட்ட மீன் சமைச்சு வைக்குறன். பகலைக்கு வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன். அந்த மனுஷன் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடி வரும்.புளியைக் கூடக் கரைச்சு வச்சிட்டன். மீனெண்டால் அவருக்கு உசிரெண்டு உனக்குத் தெரியும் தானே ?"

"அப்ப பேசாம கடலுக்குள்ள போய் இருக்கச் சொல்லுங்கோ. மீன்காரன் நிக்காமப் போயிட்டான்.நானே இங்க உடம்பு பதறிக் கொண்டு நிக்குறன் "

சொல்லிவிட்டு ஃபிரிட்ஜிலிருந்து ஒரு போத்தல் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை மேல் உட்கார்ந்துகொண்டாள்.

" ஏண்டியம்மா? அவன் நிக்காமப் போயிட்டான் எண்டால் நீ எதுக்குப் பதற வேணும் ? "

" பதறுறதே ? எதுக்குப் பதறுறேன் எண்டு தெரிஞ்சுக் கொண்டால் நீங்களும் ஆடிப் போவியள் "

அம்மா அரிசியை அப்படியே வைத்துவிட்டு சங்கீதாவின் அருகில் வந்தாள். சங்கீதாவின் அம்மா ஒரு வாயில்லா ஜீவன். அப்பாவி. அடுத்தவீட்டுக் குழந்தைக்கு அம்மை ஊசி போட்டார்கள் என்றால் கூடக் கேட்டுக் கண்கலங்குகிற மனசு.

" என்னடி ?அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு என்னைப் பதற விடுறாய் ? அப்பாவுக்கு விஷயந்தெரிஞ்சால் என்னாகும்?"

" அப்பாவுக்கு எப்படியும் தெரியத்தானே வேணும்...இண்டைக்குப் பகல் சாப்பாட்டுக்கு வர்றப்ப நானே அவரிட்டச் சொல்லப் போறன்..கேட்டு ஆடிப்போகப் போறார் பாருங்கோ. "

அம்மாவின் கண்கள் அதற்குள் கலங்கத் தொடங்கிவிட்டது. இடுப்பில் சொருகியிருந்த புடைவை முந்தானையெடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

"அம்மா, நீங்கள் எதுக்கு இப்ப அழுறீங்கள் ? "

" நீதான் ..அடுத்த கிழமை நிச்சயத்தை வச்சுக் கொண்டு இப்ப உனக்கும் மீன்காரனுக்கும் ஏதோ..."

"அடச்சீ..அம்மா..வாயை மூடுங்கோ முதல்ல..நான் சொல்லவந்தது அதில்ல... சித்தப்பா கோல் பண்ணியிருந்தவர் "

அம்மாவிற்கு தனது கணிப்பு தப்பாகிப் போனதில் வெட்கமாகப் போய்விட்டது சங்கீதாவின் தோளில் செல்லமாகத் தட்டி "என்ன சொன்னவர்? " எனக் கேட்டாள்.

" அப்பாச்சி என்னோட நிச்சயத்துக்கு இங்க இருக்கவேணுமெண்டு விரும்புறாவாம். சித்தப்பாவுக்குக் கால்ல ஏதோ வருத்தமாம்.நடக்க ஏலாதாம். முடிஞ்சால் அப்பாவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்து அப்பாச்சியக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார் "

சங்கீதாவைப் பீடித்திருந்த பதற்றம் இப்பொழுது அம்மாவையும் பிடித்துக் கொண்டது. சட்டென்று அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாச்சி என அழைக்கப்படுபவர் சங்கீதாவுடைய அப்பாவின் அம்மா. அவளது அதிரடி மாமியார். 'சூட்டுக் கிழவி' என அவள் மனதிற்குள் மட்டும் அடிக்கடி திட்டிக் கொள்வாள். அந்தளவுக்கு அவரது சொல்லும் செயலும் பெரும் புயலைக் கிளப்பும். அப்பாச்சி ஐந்து வருடத்திற்கு முன்னால் வந்து ஒரு கிழமை இருந்துவிட்டுப்போன போது நடந்த கூத்துக்கள் சொல்லிமாளாது.

போனமுறை சித்தப்பாவே அவரைக் கூட்டிவந்தார். இரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து நேராக வீட்டு கேட்டருகில் வந்து இறங்கினர். சங்கீதாவுக்கு அப்பொழுது பத்தொன்பது வயது. அழகுக்கலை பற்றிப் படித்துக் கொண்டிருந்தாள். படித்ததைச் செய்துபார்க்கத் தங்கையோடு சேர்ந்து தன் நீளத் தலைமுடியை நேர்படுத்தி, அயர்ன் பண்ணிக் கொஞ்சம் செம்பட்டை நிறத்தில் சாயமும் அடித்திருந்தாள். அன்றைக்கு அவளுக்குச் சனி உச்சத்தில் இருந்திருக்கவேண்டும். வீட்டு கேட்டருகில் வந்துநின்ற ஆட்டோவை அவள்தான் முதலில் கவனித்தாள்.

வாசலிலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து கேட்டைத் திறந்துவிட்டாள். எண்பது வயதில் சாதாரண தோற்றத்திலிருந்த ஆச்சி முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. அந்த வயதான ரௌத்ரத்தைக் கவனிக்காத இவள் " வாங்கோ ஆச்சி, வாங்கோ சித்தப்பா" என்று ஆச்சி கையைப் பிடித்துக் கொண்டாள்.

"ஆச்சி வாறது இருக்கட்டும்..குமருப்பிள்ள தானே நீ..? இப்படி ஓடி வாறாய்? இப்படியே உன்னை உன்ர அம்மா வளர்த்திருக்குது ? என்ர காலத்துலயும் இருந்தோமே. முத்தத்துல ஒரு ஈ,காக்கை அசைஞ்சாக் கூட வெட்டைக்கு இறங்கேலாது. அவ்வளவு ஒழுக்கமா வளர்ந்தோம். உன்னையும் வளர்த்திருக்குது பார் உன்ர அம்மா "

சங்கீதாவுக்குத் திகைப்பாகிப் போய்விட்டது. சித்தப்பாவைப் பார்த்தாள். 'இது எதையும் கண்டுகொள்ளாதே' என்பது போலக் கண்களால் சாடை செய்தார். பின்னர் அவள் கையில் ஆச்சியின் பயணப்பையைக் கொடுத்துவிட்டு முன் கடையில் வாழைப்பழம் வாங்கிவருவதாகச் சொல்லி ஆச்சிக்குக் களவாக சிகரெட் குடிக்கப் போனார். வாய் சவ சவ எனச் சிகரெட் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்கு. ஆச்சி முன்னால் அதெல்லாம்... ம்ஹூம்..மூச்.

" என்ன நீ ? சாமத்துல ஊர் சுத்துற மோகினிப் பேயாட்டம் தலையை இப்படி விரிச்சுப் போட்டுக் கொண்டு இருக்கிறாய் ? ஒரு நூல்துண்டாவது கிடைக்கேல்லியே நல்லாச் சடை பின்னிக் கட்டுறதுக்கு ? "

" ஆச்சி முதல்ல உள்ளே வாங்கோவன், கதைப்பம் "

" ஓம் கதைப்பம் கதைப்பம்." என்ற ஆச்சி அவள் தலைமுடியைப் பிடித்து உற்றுப் பார்த்து,

"அடக் கடவுளே..இங்கே பாரடி..உன்ர தலைமயிரெல்லாம் வெள்ளக் காரச்சியாட்டம் செம்பட்டைக் கலராகிப் போய்க்கிடக்கு . எங்கேடி உன்ரை அம்மா? நல்லா எண்ணைய் வச்சு, வழிச்சுக் கோதிக் கட்டிவிடாம உன்னை இப்படித் திரியவிட்டிருக்கிறாள். அப்படியென்ன செய்து கிழிக்கிறாள் வீட்ட ? நீ இப்படித் திரிஞ்சியெண்டால் உன்னை ஆரு கட்டுவினம் ?" என்றவாறு வாசல்வரை வந்த அப்பாச்சி, முற்றத்தைத் திரும்பவும் பார்த்து வீட்டின் திண்ணையிலிறங்கி வலது கோடிக்குப் போனார். பின்னாலேயே சங்கீதாவும் அவரைத் தொடர்ந்தாள்.

" எங்கேயடி இங்க இருந்த பெரிய மாங்காய் மரம் ? " ஆச்சியின் கண்களில் சினம் தெறித்தது.

" காய் நிறைஞ்சு கூரை மேல விழுந்து ஓடெல்லாம் உடையுதெண்டு அப்பாதான் வெட்டினவர் " என்று குரல் நடுங்கச் சொன்னாள்.

" உன்ர அப்பாவின்ர கல்யாணத்தப்ப என்ர கையால நாட்டிக் கொடுத்த மரம். அதப் போய் வெட்டியிருக்கானே. உன்ர அம்மாதான் வெட்டச் சொல்லியிருப்பாள். எனக்குத் தெரியாதெண்டு நெனச்சியே ? "

ஆச்சிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. சங்கீதா அவர் தோளைப் பிடித்து அணைத்து மெதுவாகச் சொன்னாள்.

" ஆச்சி, இப்ப நீங்கள் களைச்சுப்போய் வந்திருக்கிறியள். முதல்ல உள்ள வாங்கோ. ஒரு தேத்தண்ணியக் குடிச்சுப் போட்டு தோட்டத்துக்குப் போகலாம். ஏழெட்டு மணித்தியாலப்பயணமெண்டால் லேசே ? "

இப்பொழுது ஆச்சி கொஞ்சம் சமாதானமானார். அவளது கையை விட்டுவிட்டு விடுவிடுவென்று வீட்டுத் தலைவாசல் வரை வந்தார். ஆனால் உள்ளே போகவில்லை. வைராக்கியம். மருமகள் வந்து தன் வாயால் கூப்பிடும் வரை உள்ளே செல்வதில்லையென்ற வைராக்கியம். சங்கீதாவுக்குப் புரிந்தது.

"அம்மா..அம்மோவ்"

" ஏணடியம்மா இப்படித் தலவாசல்ல நின்றுகொண்டு கூப்பாடு போடுறாய்? நான் உன்ர சாமத்தியச் சடங்குக்கு வந்தப்ப மூங்கில் கேட்டல்லோ இருந்தது. இப்ப என்ன இரும்புக்கு மாறியிருக்குது ? "

" ஓம் ஆச்சி..அது பழசாகிப் போச்சுதெண்டு அப்பாதான் இதைச் செஞ்சு போட்டவர். "

" என்னது பழசாகிப் போச்சுதே ? அதை ஆறுமாசத்துக்கொருதரம் புதுப்பிச்சுக் கட்ட வேணும். அதைக் கூடச் செய்ய ஏலாமல் உன்ர அப்பா சோம்பேறியாகிப் போய்ட்டாரே? உன்ர அம்மாவுக்குச் சொல்றதுக்கென்ன ?. இது ஆஸ்பத்திரி கேட் மாதிரியல்லோ கிடக்கு ? "

" வாங்கோ மாமி..வாசல்லையே நிண்டு கொண்டிருக்கிறியள் ? பின்கட்டுல உடுப்புக் காயப்போட்டுக் கொண்டிருந்தனான். அதுதான் நீங்கள் வந்த சத்தமே கேக்கல்ல..உள்ளுக்கு வாங்கோ " என்றவாறு உள்ளிருந்து அம்மா வந்தாள்.

" வாறன் வாறன்.என்ன இந்த அந்தி பட்ட நேரத்துல உடுப்புக் கழுவுற பழக்கம்? காலையிலேயே கழுவிப் போட ஏலாதே ?..என்ன எல்லாமே மாறிக்கிடக்கு ? நீ இதையெல்லாம் கவனிக்கிறதில்லையோ? இவளிண்ட கொண்டையைப் பார். சேவல் கருமலாட்டம் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு நிறத்துல கிடக்கு. அடி ..முந்தானையை ஒழுங்காப் போடடி" எனச் சங்கீதாவின் தோளில் நொடித்தார். அவள் சிணுங்கியவாறு அம்மாவை முறைத்தாள்.

" நானெல்லாம் இவளிண்ட வயசுல கையில ரெண்டு, இடுப்பில ரெண்டெண்டு நாலு புள்ளயச் சொமந்தவள். இவளுக்கு இன்னும் மாப்பிளை பார்க்கலையோ ?"

" பார்த்துக் கொண்டிருக்கிறம் மாமி.. முதல்ல இந்த ரூமுல போய் உடுப்பை மாற்றிக் கொள்ளுங்கோவன். உவர் சித்தப்பா வந்தவரல்லோ ? எங்கே காணோம் ? "

அம்மா சித்தப்பாவைத் தேடி முற்றத்துக்குப் போனார். சங்கீதா ஆச்சியின் பின்னால் அவர் பயணப்பையை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குப் போனாள். ஆச்சி அறைக்குள் நுழைந்த அடுத்தகணம் அலறியடித்து, சங்கீதாவையும் தள்ளிக்கொண்டு வீட்டு வாசலுக்கு ஓடி வந்து மூச்சிரைத்தார்.

" என்னாச்சுது மாமி என்னாச்சுது? " எனக் கத்திக் கொண்டு முற்றத்திலிருந்த அம்மா உள்ளே ஓடிவந்தார். சித்தப்பா பின்னால் ஓடி வந்து ஆச்சியைத் தாங்கிக் கூடத்திலிருந்த கதிரையில் உட்காரவைத்தார்.

" மகள்..ஒரு கிளாஸ் தண்ணி கொண்டுவாங்கோ " என்றார்.

சங்கீதா ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். ஆச்சி அதை வாங்கி ஒரே மூச்சில் அவ்வளவையும் குடித்தார். பொக்கை வாயில் வழிந்த தண்ணீர் அவர் நெஞ்சையும் நனைத்தது.

" என்ன அம்மா என்ன ஆச்சுது? "

" உவள் காமாட்சி இருந்தாளே...எங்கட ஊர்க் கோயில் புளியமரத்துல தூக்குப் போட்டுச் செத்தவள்."

ஆச்சி இளைத்து இளைத்துச் சொல்லத்தொடங்கினார். சித்தப்பாவும், அம்மாவும், சங்கீதாவும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

" ஓம் அம்மா. அவளுக்கென்ன இப்ப. அவள் செத்து இப்ப கன நாளாச்சுல்லே..? ஆறுமாசத்துக்கும் மேல ஆகியிருக்கும் "

" உவள் சாகுறதுக்கு கொஞ்சநாள் முன்னாடி எங்கட தோட்டத்துல தென்னமோலை பொறுக்க வந்தாள். அப்ப நான் நல்லா ஏசி அனுப்பிட்டன். இப்ப ... இப்ப.. "

" இப்ப என்ன மாமி ? "

" உவள் பேயாகி நான் போற இடமெல்லாம் வந்து பழி வாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாள்."

இப்பொழுது சங்கீதாவின் அம்மா நன்றாகப் பயந்துபோனாள். சங்கீதாவின் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

" என்ன மாமி சொல்றியள்? "

சித்தப்பா எதுவும் பேசாமல் ஆச்சி போய்ப்பார்த்துப் பயந்து ஓடி வந்த அறைக்குள் போனார். இருட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தவராக அவரும் விரைந்து திரும்பி வந்தார்.

"மகள்..எனக்கும் ஒரு கிளாஸ் தண்ணி கொண்டு வாங்கோ " என்றார்.

( தொடரும் )

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


Monday, September 15, 2008

பயணம்

அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக நெற்றியைத் தடவிக் கொண்டன. காலையில் வேலைக்கு வரும் அவசரத்தில் வீட்டுக் கதவில் இடித்துக் கொண்டிருந்தான். அது இலேசாகப் புடைத்திருந்தது. அம்மா சகுனம் சரியில்லையோ என வருத்தப்பட்டுத் தன் புடவையின் நுனியை ஒரு பந்து போலாக்கி அதனை வாயில் பொத்திக் காற்றூதிச் சூடாக்கி உடனே அவன் நெற்றிக்கு ஒத்தடமிட்டாள். இருந்தும் அந்தப் புடைப்பு இன்னும் முற்றாக நீங்கவில்லை.

அவனுக்கு அந்த ஆசிரியர் வேலை மிகவும் பிடித்திருந்தது. காலையில் அதிபர், காலைக்கூட்டத்தில் அவனை சக ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் வரவழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிந்த, உயர்ந்த, சிவந்த தோற்றம் அவனுடையது. குரல் மட்டும் கம்பீரமாக இருந்தது. இந்த வேலைக்காகத்தான் அவன் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அவனை விடவும் சிரமப்பட்டவள் அவனது விதவைத் தாய். வறுமைக்குள் உழலும் குடும்பம் அவனுடையது. அரச உதவிப்பணம் தவறாமல் கிடைத்ததால் அவனால் தொடர்ந்து படிக்க முடிந்தது. இனி தாயை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தாமல் அவளை ஒரு மஹாராணி போல மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டுமென எண்ணிக் கொண்டான்.

பஸ்ஸினுள் சனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே இருந்தது. பஸ்ஸின் படிக்கட்டில் நின்றபடி நடத்துனர் ஒவ்வொரு ஊர் பெயராகக் கூவியபடி சனங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.வெள்ளைச் சீருடையில் பாடசாலை மாணவ,மாணவிகள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டனர். பஸ்ஸினுள் இருக்கைகள் எல்லாம் நிறைந்து அவர்கள் நின்றுகொண்டனர். அவர்களுடன் தான் மனிஷாவும் இருந்தாள். மனிஷாவை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்திருந்தார்கள். ஆறு வயது நடந்துகொண்டிருந்தது.அழகிய சிவப்பு நிறம். கருமையான முடி.சிறகுகள் முளைக்காத சின்ன தேவதை போல இருந்தாள். தனியாக பஸ்ஸில் போய் வரத் தெரியாது. அதுவும் பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் போகக் கிட்டத்தட்ட இருபது கிலோமீற்றர்கள் பிரயாணம் செய்ய வேண்டும். ஊர் விகாரை தாண்டியதும் இறங்கிக் கொள்ளவேண்டும். இது எதுவும் அவளுக்குத் தெரியாது.பாடசாலைக்கு வரும்போது அதே பாடசாலையில் மேல்வகுப்பில் படிக்கும் சபீதா அக்கா கூடவே வருவாள். போகும் போது அக்காவின் வகுப்புக்கள் முடியும்வரை காத்திருந்து அவளுடனேயே வீடுதிரும்புவது இவளின் வழமையாக இருந்தது.

மனிஷாவுக்கும் இன்று இடம் கிடைக்கவில்லை. அக்கா பஸ் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அவளும் அருகிலேயே நின்றுகொண்டாள். ஓரளவு சனம் நெருக்கியடித்தது. அவ்வளவு நெருக்கத்திலும் மனிஷா தன் மழலை கலந்த குரலில் வகுப்பில் நடந்தவற்றை அக்காவிடம் ஒப்பிப்பதை நிறுத்தவில்லை. அவளது வகுப்பில் படிக்கும் சஞ்சீவ் தனது பென்சிலைப் பறித்ததை ஏதோ ஒரு பெரிய குற்றத்தைப் பற்றி பொலிஸாரிடம் முறையிடுவதைப் போன்று சொல்லிக் கொண்டிருந்தாள். சூழ இருந்த ஒன்றிரண்டு சனம் அந்தப் பேச்சினைக் கேட்டு ரசித்துப் புன்னகைத்தது. அக்காவுக்கு அது சங்கடமாகப் போயிற்று. எல்லாவற்றையும் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாமெனத் தங்கையிடம் அன்பாகவும் மெதுவாகவும் சொன்னாள்.

அவ்வளவு கூட்டத்துக்குள்ளும் கிறிஸ்தோபர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை சபீதா உணர்ந்தே இருந்தாள். இலேசாகத் திரும்பிப் பார்த்தபொழுது அவன் சட்டென்று தலைகுனிந்து கொண்டான். அவன் தலை உயர்த்தி இவளைப் பார்க்க நோக்கும் கணம் இவள் இலேசாகப் புன்னகைத்தாள். கிறிஸ்தோபரும் அதே பாடசாலைதான். வேறு பிரிவில் படிக்கிறான். பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும், பாடசாலைக்குள் முகம் பார்க்க நேரிடும் போதும் இப்படித்தான் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்.

பஸ்ஸினை இன்னும் எடுத்தபாடில்லை. நடத்துனர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். அது நீண்ட, பெரிய அரசுக்குச் சொந்தமான பஸ்.அந்த ஊருக்குப் போகும் இந்த பஸ்ஸைத் தவற விட்டால் அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகும். அதுவரைக்கும் காக்கப் பொறுமையற்ற மக்களும், அவசரத்திலிருந்த மக்களும் கூட்டத்துக்கு மத்தியிலும் ஏறிக் கொண்டார்கள். சனம் நெருக்கத் துவங்க மனிஷா சிணுங்கத் தொடங்கினாள். அவள் பிடித்திருந்த கைப்பிடிக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி மனிஷாவை அழைத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

விஜயட்சுமியின் மனது இன்று மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை கோயில்கள் ? எத்தனை வேண்டுதல்கள் ? எத்தனை நேர்ச்சைகள் ? எல்லாமே பலித்துவிட்டன. இரவுகளில் தலையணை நனைய அழுத காலங்களுக்கு இனி விடுதலை. மாமியாரின் ஏச்சுக்களும் ஊர்ப்பெண்கள் சிலரின் தகாத வார்த்தைகளும் இனி அவளை நோக்கி ஏவப்படாது. திருமணமாகி எட்டு வருடங்கள். இதுவரையில் குழந்தையில்லை. அனைவரினதும் வாய்களுக்கு அவலாகிப் போயிருந்தாள். இனி அவர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கலாம். வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்ளலாம். தாயாகப் போகிறாள்.அவளுக்கென்றொரு அந்தஸ்து வந்துவிட்டது. ஒரு பெரும் நிம்மதி வந்து மனதில் அப்பிக் கொண்டது.

அருகிலிருந்த கணவனின் தோள்களில் ஆறுதலாகத் தலைசாய்த்துக் கொண்டாள். அவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.மருத்துவமனையில் அவளது சிறுநீரைப் பரிசோதித்து கர்ப்பிணி என உறுதிப்படுத்தியிருந்தார்கள். அவளுக்குச் சீக்கிரமாக வீடுதிரும்பி மாமியாரிடம் தான் மலடியில்லை எனச் சொல்லவேண்டும் போல இருந்தது. இதோ அடுத்தவருடம் அவளது கைகளில் ஒரு சிறுகுழந்தை துயிலும். அதற்கடுத்த வருடம் , முன்னிருக்கையில் தாயின் கைகளிலிருந்து மனிஷாவை நோக்கிக் கை நீட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை போலச் சிரிக்கும். இன்னும் ஏழு வருடங்களில் தன் மடியிலமர்ந்திருக்கும் மனிஷாவைப் போலத் தன் குழந்தையும் பள்ளிக்கூடம் போகும்.

முன் இருக்கையிலிருந்த தன் அம்மாவின் கைகளிலிருந்து கொண்டு அக்குழந்தை மனிஷாவைப் பார்த்துச் சிரித்தது. ஒரு வயதிருக்கும். ஐம்பது காசு அளவில் பெருத்த பொட்டொன்று அதன் நெற்றியில் இடப்பட்டிருந்தது திருஷ்டிக்காக இருக்கவேண்டும். மனிஷாவும் அக்குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். அதுவரையில் வாய்க்குள் போட்டுச் சப்பிக்கொண்டிருந்த கையினை எடுத்து அவளை நோக்கி நீட்டியது. அவளும் அதன் எச்சில் பட்ட விரல்களைப் பிடித்துக்கொண்டாள். அது கைகளை விடுத்து கறுப்பு ரிப்பன் கட்டிய அவள் தலைமயிரைப் பிடித்திழுத்தது.

கூட்டத்துக்குள் காவியுடையணிந்த பௌத்தபிக்கு ஒருவர் ஏறிக் கொண்டார். கைகளில் கறுப்புக் குடை. அப்துல்லாஹ் உடனே எழுந்து அவருக்கு இருக்கையை அளித்துக் கூட்டத்துக்குள் நின்றுகொண்டான். அவர் ஒரு மெல்லிய புன்னகையைத் தன் முகத்தில் படரவிட்டு அவ்விருக்கையில் உட்காந்து கொண்டார். அவனது கையிலிருந்த புத்தகங்களை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

காலையில் தன் பாடசாலைக்கு புதிதாக வந்த ஆசிரியர் தன்னருகில் நிற்பதைக் கவனித்த கிறிஸ்தோபர் அப்துல்லாஹ்வுக்கு நின்றுகொள்ளச் சௌகரியமாக இடம் கொடுத்தான். அப்துல்லாஹ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். பஸ் இப்பொழுது மெதுவாக நகர ஆரம்பித்தது. சபீதாவைப் பல தலைகள் மறைத்துக் கொண்டதில் கிறிஸ்தோபர் பெரிதும் எரிச்சலுற்றான். சக வகுப்பில் படிக்கும் அவள் மேல் புரியாத ஓர் ஈர்ப்பு வந்திருந்தது. அவளது அடக்கமான அமைதி அவள்பக்கம் அவனை ஈர்த்திருக்க வேண்டும்.

நடத்துனர் இப்பொழுது பஸ்ஸின் உள்ளே வந்து முன்னிருக்கையிலிருந்து சில்லறைகளை வசூலிக்க ஆரம்பித்திருந்தார். சாரதி தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டே பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தார். பஸ் அதன் வழமையான பாதையின் இரண்டாவது சந்தியைத் தாண்டிய கணத்தில்தான் பஸ்ஸிற்குள் அதி சக்திவாய்ந்த அந்தக் குண்டு வெடித்து அனைவரும் பலியானதாக மாலைச் செய்தியறிக்கையில் சொன்னார்கள்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, September 1, 2008

விட்டில் பூச்சிகள்

நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை அணிந்துகொண்டேன். அம்மாவுக்குச் செருப்பணியும் பழக்கம் கிடையாது. மழையோ, வெயிலோ எந்தக் காலநிலையானாலும் அம்மா செருப்பணிவதில்லை. ஆனாலும் அம்மாவிடம் செருப்புச் சோடியொன்று இருக்கிறது. அதனை அம்மா யாருடைய வீட்டிலாவது கல்யாணத்துக்கு அழைத்திருந்தால் அணிந்துகொண்டு போவாள். அங்கும் சமையல் வேலைகளை அவள்தான் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். அணிந்துசெல்லும் செருப்பினை சமையலறையின் மூலையில் கழற்றிவைக்கும் அவள் எல்லா வேலைகளும் முடிந்ததன் பின்னால் மீண்டும் செருப்பினை அணிந்துகொண்டு மணப்பெண், மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு வருவாள். அவள் வீடு வரும் போது சாப்பாட்டின் மிச்சம்மீதிகளையெல்லாம் ஒரு காகிதப்பெட்டியில் போட்டு எங்களுக்காக எடுத்துவருவாள்.

அம்மா ஆகாய நீல சேலையொன்றை அணிந்துகொண்டிருந்தாள். எல்லாப் பயணங்களுக்கும் இதே சேலைதான். எங்காவது உடுத்திக் கொண்டுபோய் அழுக்காகி விடும் நாளில் வீட்டுக்கு வந்த உடனேயே கிணற்றடியில் கொண்டு போய் அலசிக் கழுவி காயவைத்து எடுத்து மடித்து வைப்பாள். சாதாரணமாக வீட்டிலோ, கூலி வேலைக்குச் செல்லும் நாட்களிலோ மேற்சட்டையும், சீத்தைத் துணியும் மட்டும்தான்.

யசோதா அத்தை எங்கள் வீட்டுக்கருகில் வந்து குடியிருக்கத் தொடங்கி அப்பொழுது ஆறுவருடங்களாகி விட்டிருந்தது. எனது மாமா, அம்மாவின் தம்பி எங்கோ தூர இருந்த நகரமொன்றிலிருந்து பதினெட்டு வயதுகளிலிருந்த அவரைத் தன்னோடு கூட்டிவந்திருந்தார். ஆரம்பத்தில் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. பின்னர் போகப் போக யசோதா அத்தையின் நற்குணங்கள் அம்மாவை அவர் பக்கம் ஈர்த்தது.

அவர் வந்த சில மாதங்களில்தான் நான் பிறந்தேனாம். வைத்தியசாலையில் நிரப்பிக் கொடுக்கவேண்டிய பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தை அவள்தான் பூரணப்படுத்திக் கொடுத்தாளாம். நன்றாகப் படித்த பணக்கார வீட்டுப் பெண். அவளது வீட்டில் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்த எனது மாமாவிடம் தன் மனதைப் பறிகொடுத்து அவளது நகை, உடுபுடவைகள் அனைத்தையும் சுற்றி எடுத்துக் கொண்டு மாமாவுடன் வந்து ஒருநாள் விடிகாலையில் எமது வீட்டுக்கதவைத் தட்டியிருக்கிறார்கள். கதவைத் திறந்த அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் பிறகு புரிந்து தன் தம்பியைத் திட்டித் தீர்த்திருக்கிறார். அப்பாதான் சமாதானம் செய்து இருந்த ஒரு அறையையும் அவர்களுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கிறார்.

தனது மகள் , வீட்டுவேலைக்காரனோடு ஓடிப் போய்விட்ட சங்கதி அறிந்ததும் அவள் வீட்டில் அவளைத் தலைமுழுகி விட்டிருந்தனர். அவர்கள் உயர்சாதிக்காரர்கள். பெரும்பணக்காரர்கள். இந்தத் தீட்டை அவர்களுக்குள் பூசிக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால் யசோதா அத்தையிடம் இது குறித்தான எந்தப்பெருமையையும் காணமுடியாது. மிக இயல்பாக இருந்தாள். என்னை அம்மா வளர்த்ததை விடவும் யசோதா அத்தை வளர்த்ததுதான் அதிகம்.

அம்மா எந்நாளும் போல வீட்டில் இருக்கமாட்டாள். பெரிய இடத்து வீட்டுவேலைகள், கூலிவேலைகள் இப்படி ஏதாவதொரு வேலை அவளைத் தேடி தினசரி வந்துகொண்டே இருக்கும். யசோதா அத்தைதான் என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டாள். கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய்த் தண்ணீர் இறைத்து என்னைக் குளிப்பாட்டி விடுவதிலிருந்து, அழகாக உடுத்திவிடுவதுவும், உணவு சமைத்து ஊட்டிவிடிவதுவும் அவளது வேலையாக இருந்தது. அது குறித்து அவள் என்றைக்குமே விசனப்பட்டதில்லை. இந்த வேலைகளை அவள் விருப்பத்துடனேயே ஏற்றுக் கொண்டிருந்தாள்.

மாமா, திரும்பவும் ஒரு தொழிலுக்காக அலைந்துகொண்டிருந்தார். கிராமங்களில் பெண்களுக்கு எளிதாகக் கிடைக்கும் கூலிவேலைகள் கூட ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. நான் பிறந்து சில மாதங்களில் மாமா, அத்தையின் நகைகளை விற்று எமது வீட்டுக்கு அண்மையிலிருந்த அவரது பூர்வீகக் காணியில் ஒரு சிறிய மண்குடிசையொன்றைக் கட்டிக் கொண்டார். அதுவரையில் எனது வீட்டில் தங்கியிருந்த அவர்கள் அன்றிலிருந்து அந்தக் குடிசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். நான் பெரும்பாலும் அவர்களுடனேயே வளர்ந்தேன்.

எங்கள் வீடு இருந்த மேட்டுப்பகுதியிலிருந்து குறுக்குவழியால் பிரதானவீதிக்கு நடந்தோம். அன்றும் இதே நேரம் தான். உடம்பெல்லாம் எரிந்த நிலையில் உயிர் மட்டும் மிச்சமிருக்க யசோதா அத்தை வேதனையில் ஓலமிட்டார். இதே பாதையில்தான் அவரைப் பாயொன்றில் கிடத்தி நாலுபுறமும் நான்கு அக்கம்பக்கத்து ஆண்கள் தூக்கிவந்து வைத்தியசாலையில் சேர்த்துவிட்டிருந்தனர். வைத்தியசாலைக்கு உடனே போனபோதும் யசோதா அத்தையைப் பார்க்கமுடியவில்லை. அவரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாக வெள்ளை வெளேரென உடையணிந்திருந்த தாதியொருத்தி சொன்னாள். நானும் அம்மாவும் அங்கிருந்த வாங்கில் நீண்ட நேரம் காத்திருந்தோம். இருட்ட ஆரம்பித்த போது அங்கிருந்து வெளியேறி, இரவுச் சாப்பாட்டுக்காகப் பாண் வாங்கிக் கொண்டு திரும்பவும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்த பொழுது செய்தி கேள்விப்பட்டு பக்கத்து நகர ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துவந்த அப்பா வந்திருந்தார். அம்மா அவரிடம் விபரம் சொல்லி அழுதாள்.

யசோதா அத்தைக்கு அதிர்ந்து பேசத் தெரியாது. அழகான பெண். எப்பொழுதுமே அவர் கண்கள் சிரிக்கும். எந்தக் கஷ்டமானாலும் முகத்தில் ஒரு புன்னகை இழையோடும். மாமாவின் பரம்பரையே அது போன்ற பெண்ணொருத்தியைப் பார்த்திருக்க மாட்டாது. தன்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிவர , கூட்டிப் போக எனது மாமாவைத்தான் சாரதியாகப் போட்டிருந்தார் எனவும் அது பின்னர் காதலாக அரும்பிற்று என்றும் அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.

அடுத்த கிராமத்தில் மாமாவுக்கு பலகை அறுக்கும் இடமொன்றில் வேலை கிடைத்தது. காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைப் பொதி செய்து எடுத்துக்கொண்டு அவர் தினமும் புறப்பட்டால் வீடுவர இரவாகிவிடும். அதுவரையில் யசோதா அத்தைக்கு நான் தான் துணை. அம்மா வேலை முடிந்து வீடுவரும் வரைக்கும் அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பேன். அம்மா வந்ததும், யசோதா அத்தையும் அவர் வீட்டுக்கதவைப் பூட்டிக் கொண்டு எனது வீட்டில் வந்திருப்பார். இரவில் மாமா வேலை விட்டு வரும்போது எங்கள் வீட்டிற்கு வந்து அத்தையைக் கூட்டிப் போவார். அப்பொழுது அவரிடமிருந்து கடுமையான சாராய வீச்சமடிக்கும்.

அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே தாறுமாறான சத்தங்கள் அந்த வீட்டிலிருந்து கேட்கத் துவங்கும். யசோதா அத்தை அடிவாங்கிச் சிவந்திருப்பாள். போதையிலிருக்கும் மாமாவுக்குக் கோபம் வந்தால் கையில் எது கிடைத்தாலும் அதைக் கொண்டு அடிப்பார். யசோதா அத்தை கைகூப்பி மன்றாடுவாள். அவளது பெற்றோர்கள் கூட அவளை இதுவரை அடித்திருக்கமாட்டார்கள். முதல் கொஞ்ச நாளுக்கு அம்மா ஓடிப் போய் என்னவென்று விசாரித்துத் தடுத்தாள். பின்னர் அது வழமையாகி விட்டிருந்தது.

மாமாவுக்கு இன்னுமொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என யசோதா அத்தை சந்தேகப்பட்டாள். அம்மாவிடம் அது பற்றிக் கதைத்தபோது அம்மா யசோதா அத்தையைத் திட்டினாள். தன் தம்பியோ, தனது பரம்பரையோ அப்படிப்பட்டதல்ல என உறுதியாகச் சொன்னாள் அம்மா. ஆனாலும் யசோதா அத்தை தனது சந்தேகத்துக்குரிய காரணிகளை எடுத்துச் சொன்னாள். தான் கணவனுக்குச் சமைத்துக் கட்டிக் கொடுக்கும் சாப்பாட்டுப் பொதிகள் ஒருநாள் அவர்கள் போகும் ஒற்றையடிப்பாதையிலிருந்த வேப்பமரத்தடியில் வீசப்பட்டிருந்ததாகச் சொன்னாள்.

அம்மாவுக்குத் தனது தம்பி மேல் சிறிதும் சந்தேகம் எழவில்லை. யசோதா அத்தையைப் போல் அழகான பெண் இந்தச் சுற்றுவட்டாரத்திலோ, பக்கத்துக் கிராமங்களிலோ இருக்கமாட்டாள் என்பது அவளது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அவளை விட்டுவிட்டு இன்னுமொரு பெண்ணைத் தன் தம்பி நினைத்துக் கூடப் பார்க்கமாட்டான் என யசோதாவிடம் உறுதிபடக் கூறினாள்.

யசோதா அத்தையின் மனது ஓரளவு சமாதானமாகிவிட்டாலும் தொடர்ந்த மாமாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தைக் கிளறியபடியே இருந்தன. சில தினங்கள் மாமா வேலைக்குப் போனால் இரவில் வீட்டுக்கு வருவதில்லை. அத்தினங்களில் யசோதா அத்தை அவருக்காகக் காத்திருந்து காத்திருந்து எங்கள் வீட்டில்தான் தூங்கிப் போவாள். அவர் தன் வீட்டுக்கு வந்தநாட்களிலும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தங்கள் எங்கள் வீட்டுக்குக் கேட்கும்.

அன்று அம்மா வேலைக்குப் போகவில்லை. மாமாவை வேலைக்கு அனுப்பிவிட்டு யசோதா அத்தை எங்கள் வீட்டில் வந்திருந்தாள். தனக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும் எனவும், யாராவது கொஞ்சம் பணம் தந்தால் ஒரு தையல் மெஷின் வாங்கி ,வீட்டிலிருந்து துணிமணி தைத்துக் கொடுத்துச் சம்பாதிக்கலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் மாமா வந்தார். நன்றாகக் குடித்து விழிகள் சிவந்திருந்த மாமா.

அத்தை, உடனே அவருடன் அவர்கள் வீட்டுக்குப் போனார். போய்க் கொஞ்சநேரத்தில்தான் அந்த மரண ஓலம் கேட்டது. நாங்கள் எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தபொழுது அத்தை தன்னுடலை எரித்துக் கொண்டிருந்த தீக்கு மத்தியிலிருந்து அலறிக் கொண்டிருந்தாள். .தன்னைக் காப்பாற்றும்படி ஓலமிட்டுக் கொண்டிருந்த அத்தையின் குரல் அயலிலிருந்தவர்களையெல்லாம் அவள் வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தது. மாமா எங்கோ தப்பிவிட்டிருந்தார்.

பார்வையாளர் நேரமென்பதனால் வைத்தியசாலை நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. நோயாளிகளைப் பார்வையிட வந்தவர்கள் நோயாளிகள் அருகில் அவர்களுக்கு உணவூட்டிக்கொண்டும் நலம்விசாரித்துக் கொண்டுமிருக்க, அம்மா அவர்களுள் யசோதா அத்தையைத் தேடினாள். பெண்கள் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பெரிய தாதியிடம் விசாரித்தோம்.யசோதா அத்தை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

யசோதா அத்தையின் உடல் முழுதும் வெள்ளைப் பருத்தித் துணியினால் மூடப்பட்டிருந்தது. அவளது முகத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அழகான சிவந்த முகம், காதுமடல் என முழுதும் கருகி அதன் மேல் மஞ்சள் களிம்பு ஏதோ பூசப்பட்டிருந்தது. சேலைன் திரவம் சொட்டுச் சொட்டாக அவர் உடம்பில் ஏறிக்கொண்டிருந்தது. அம்மா பார்த்து விசும்பினாள். அம்மாவின் விசும்பல் கேட்டு அத்தை கண் திறந்தாள். வலிக்கிறதெனச் சொல்லி முனகினாள். பூசியிருந்த மஞ்சள் களிம்பின் மேலால் அத்தையின் கண்ணீர் ஓடியது.

நாங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு வரும்பொழுது வைத்தியசாலை வாயிலில் அப்பா எதிர்ப்பட்டார். அவரும் ஹோட்டலிலிருந்து நேராக அத்தையைப் பார்க்கவந்திருந்தார். பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டிருந்த காரணத்தால் அவரால் உள்ளே வரமுடியவில்லை. அம்மா, அவரிடம் நடந்த விபரங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

அன்று மாமா அத்தையிடம் அவரது காதணியைக் கேட்டுச் சண்டை பிடித்திருக்கிறார். அத்தை கொடுக்க மறுக்கவே போதையின் பிடியிலிருந்த அவர் அத்தையின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி எரிய விட்டுவிட்டு ஓடித் தப்பியிருக்கிறார். காலை வைத்தியசாலைக்கு வாக்குமூலம் பெற வந்த பொலீஸாரிடம் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறாள் யசோதா அத்தை. அன்று மாலை நானும் அம்மாவும், அப்பாவும் அவரைப் பார்க்கப் போனபொழுது அத்தை இறந்துவிட்டிருந்தாள்.

அதன் பின்னர் சடங்குகள் எல்லாம் சம்பிரதாயமாக நடந்தன. அத்தையின் பெற்றோருக்குத் தகவல் அனுப்பியும் யாரும் வரவில்லை.அன்று ஓடிப்போன மாமாவும் வரவேயில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் கூடக் கிடைக்கவில்லை. அருகிலிருந்த நீர்வீழ்ச்சியொன்றிலிருந்து அவரது வயதினை ஒத்த ஒருவரது சிதிலமடைந்த உடல் கண்டெடுக்கப்பட்ட பொழுது மாமா தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். அம்மா அதற்கும் ஒரு பாட்டம் அழுதுதீர்த்தாள். பின்னர் எல்லாக் கண்ணீரும் வற்றிப் போன ஓர்நாளில் அம்மாவும், அப்பாவும், நானும் சேர்ந்து மாமாவும், யசோதா அத்தையும் வாழ்ந்து வந்த குடிசையினைத் துப்புரவாக்கி, ஒழுங்குபடுத்தினோம். அம்மா அவர்களது குடிசையினைப் பூட்டிச் சாவியினை எடுத்து வைத்துக் கொண்டாள்.

இது நடந்து ஒரு வருடமிருக்கும். ஒரு விடிகாலையில் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அம்மாதான் கதவு திறந்தாள். வாசலில் மாமாவும், கரங்களில் மாமாவின் சாயலையொத்த இரு வயதுக் குழந்தையோடு பதினெட்டு வயதுகளிலான ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 15, 2008

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று எழுந்து போர்வையை மடித்துவைத்துவிட்டு தாவணியைச் சரி செய்துகொண்டாள்.விளக்கேற்றினால் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கைகளின் தூக்கம் கலையுமென்று சிறுவயதிலிருந்தே பழகிய இடமாதலால் இருட்டுக்குள்ளும் எதிலும் முட்டிமோதாமல் குசினிக்கு நடந்தவள் அங்கிருந்த சிறு சிம்னி விளக்கைப் பற்ற வைத்து குசினிக்கு ஒளியூட்டினாள்.அடுப்பிலிருந்த குளிர்ந்த சாம்பலையள்ளி உள்ளங்கையில் ஏந்திப் போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள்.கடற்காற்று சிம்னி விளக்கை அணைத்து விடுவதிலேயே தன் பலம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

நேற்றுக் காலை தம்பி பிளந்து போட்டிருந்த விறகுத் துண்டுகளைப் போட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பினை எரிய வைத்துத் தண்ணீரைக் கொதிக்க வைக்கமுயன்றாள். ஈரலித்திருந்த விறகுத் துண்டுகளிலிருந்து பெரும் புகை கசிந்து குசினியைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.வேறொரு நாளென்றால் பெரும் எரிச்சலைச் சுமந்தவளாக முணுமுணுத்தபடி இருந்திருப்பாள். ஆனால் இன்று அப்படியில்லை. அவள் மனம் முழுவதிலும் ஸ்ரீதர் வண்ணம் வண்ணமாகக் கனவுகளைப் பூசி , வரப் போகும் வசந்தத்தை எதிர்பார்த்தவாறான மெல்லிசையொன்றை இசைத்துக் கொண்டிருந்தான்.

இருள் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அதன் நீண்ட பெரும் கரங்கள் அவள் வீட்டை , அருகிலிருந்த கடலை, அவளது ஊரை முழு இரவும் ஆட்சி செய்து இன்னும் தன் பிடியில் கொண்டிருந்தது.அவளது இரண்டு தங்கைகளும் தம்பியும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். ஞாயிறு விடுமுறை நாளென்பதால் அவர்களை எழுப்பாமல் தூங்கவிட்டிருந்தாள். முன்னறையிலிருந்து அப்பா இருமும் சத்தம் கேட்டது. அவருக்கும் இவளைப் போல இரவு முழுதும் உறக்கம் இருந்திருக்காது.

செல்வராணி தன் விரலில் பளபளத்த புது மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். குறைந்தது அரைப் பவுணாவது இருக்கும். அழகிய வடிவத்திலான தங்க மோதிரத்தின் மத்தியில் சிறிய சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.அது எவ்வளவு பெறுமதியானதாக இருப்பினும் அவளுக்கென்ன ? ஒரு ஆண்மகன் முதன்முதலாக ஆசையாக அவள் விரல்களில் அணிவித்தது. இப்படிப்பட்ட ஒரு நாளுக்காகத்தானே அவள் இவ்வளவு நாளும் காத்திருந்தாள். இந்த உலகையே விலையாக்கி அவளிடம் கொடுத்து மோதிரத்தைத் திருப்பிக் கேட்டால் கூட கொடுக்கவே மாட்டாள் என்பதைப் போல மிக ஆசையாக ஒரு புன்னகையோடு அதனையே பார்த்தவாறிருந்தாள்.

தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் சிவப்புத் தேனீர் ஊற்றியெடுத்து கருப்பட்டித் துண்டோடு அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.ஏதோ யோசனையோடு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா இவளை ஏறிட்டுப் பார்த்து எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். திரும்பவும் குசினிக்கு வந்தவள் நேற்றுச் செய்து எஞ்சியிருந்த இனிப்புப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்து அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அம்மா நினைவு வந்தது. அவளது சிறுவயதில் ஏதாவது விஷேசங்களின் போது அம்மா இதுபோலச் செய்து அன்பாகத் தருவாள். கடைசித் தங்கையைப் பிரசவித்த அதே நாளில்தான் அம்மாவும் இறந்து போனாள். பிரசவத்திற்காக வீட்டிலிருந்து போகும் போது இவளை அருகில் அழைத்துத் தலையைத் தடவி ' வீட்டைப் பத்திரமாப் பார்த்துக்கோ ராணி ' என்று சொல்லிப் போனது இவள் காதுகளில் இன்றும் எதிரொலிக்கிறது. அம்மா அவளிடம் கடைசியாகச் சொல்லிச் சென்றபடியே இன்றுவரையில் அவள் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அருகிலிருந்து பார்க்கத்தான் அம்மா இல்லை.

நேற்று இந்த நேரங்களில் மனதில் எந்த ஆரவாரங்களுமற்று மிகவும் சாதாரணமாகவே எந்நாளையும் போல வளைய வந்தாள். எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன ஸ்ரீதர் வீட்டிலிருந்து 'பெண்ணைப் பிடித்திருக்கிறது.இன்று மாலையே நிச்சயிக்க வருகிறோம் ' என்ற தகவல் கிடைக்கும் வரை தான். மீன் வியாபாரத்திற்காகப் போயிருந்த அப்பாதான் உடனே வீட்டுக்கு வந்து அவளிடம் விடயத்தைச் சொன்னார்.

அவளுக்கு தான் வானத்தில் மிதப்பது போல இருந்தது. எந்தப் பிடிமானமும் அற்ற ஒரு கொடியாகத் தன்னை எண்ணியிருந்தவளுக்கு ஒரு பெருவிருட்சமே படரக் கிடைத்தது போல ஆறுதலாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அவளைப் பெண் பார்க்க வந்த அன்று ஸ்ரீதரை அவள் ஒழுங்காகப் பார்க்கக் கூட இல்லை.ஏற்கெனவே இருபதிற்கும் மேற்பட்ட வரன்கள் வந்து பார்த்துப் போய்த் தட்டிக் கழித்து இருபத்தெட்டு வயதாகி நிற்கும் தன்னைக் கூட ஒருவர் பார்த்து ஏற்றுக்கொண்டு நிச்சயிக்க வருகிறார் என்பதே செல்வத்தைப் பெயரில் மட்டுமே கொண்டவளுக்கு பேருவகை கொள்ளவும் , அவர் மேல் விருப்பம் கொள்ளவும் போதுமானதாக இருந்தது.கொடுக்கப்பட வேண்டிய சீதன விபரப் பட்டியலும் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் வருகிற விடயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே தங்கைகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தி இயன்றவரையில் அழகுபடுத்தினாள்.அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகளை இரவல் வாங்கி வீட்டு முன் சாலையில் போட்டாள். இரண்டு தெரு தள்ளியிருந்த சித்தி வீட்டுக்குத் தம்பியிடம் தகவலனுப்பி சித்தியை வரவழைத்து வருபவர்களை உபசரிப்பதற்காக பலகாரங்கள் செய்தாள்.உடல் மற்றும் மனம் முழுதும் கல்யாணக் களை தாண்டவமாட அவள் இயந்திரமாக இயங்கினாள்.

நிச்சயம் செய்ய வருகிறார்களென்றதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள்.ஆனால் ஸ்ரீதரோடு அவனது பெற்றோரும் , அக்காவும் மட்டுமே வந்திருந்தார்கள். அக்கா குழந்தை எளிமையான அலங்காரத்தோடிருந்த இவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனது உறவுகளும் இவளது நெருங்கிய சொந்தங்களும் பார்த்திருக்க , மகிழ்ச்சி முகங்கள் சூழ்ந்திருக்க அவளுக்கு அவன் மோதிரம் அணிவித்தான். ஒரு வாலிபனின் கரம் முதன்முதலாகத் தொட்டதில் இயல்பாகவே வெட்கிச் சிவந்தவளை ஸ்ரீதர் ஒரு கணம் இமைக்காமல் பார்த்திருந்தான்.திருமணத்தை வரும் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.

அவள் வாழ்வினைப் போலவே விடிய ஆரம்பித்திருந்த கடல் வெளியை ஜன்னல் வழியே பார்த்தவாறிருந்தாள். திருமணத்திற்காக வீட்டுக்கு வர்ணம் பூசும் போது துருப்பிடித்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கும் வர்ணம் பூசவேண்டுமென எண்ணிக் கொண்டாள். அப்பா தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் பட்டினியில் போட்டதில்லை.கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்.அது இது போன்ற நல்ல காரியங்களின் போது பெரிதளவில் உதவும் என்பது சரியாகிப் போயிற்று இன்று.

அவள் காலை உணவை சீக்கிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். அப்பா முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போவது தெரிந்தது. பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வியாபாரத்துக்குச் செல்வது பகல்வேளையில் தான். அந்த நேரத்தில் தான் புதிதாக மீன்கள் கரைக்கு வரும். அவற்றை ஏலத்தில் வாங்கி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவருவது அவரது தொழில்.

காலை உணவுவேலைகள் முடிந்ததும் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் தனக்குச் சில உடுப்புக்கள் தைக்கக் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.பூரணி அக்கா வீடு நாலு தெரு தள்ளியிருந்தது. இதுவரையில் எங்கேயும் தனியாகப் போக அப்பா அனுமதித்தது கிடையாது.அவளது எல்லாப் பயணங்களும் தம்பியுடனும் ,அப்பாவுடனுமே நிகழ்ந்திருக்கின்றன.

சமையல் முடிந்ததும் சிறிய சாப்பாட்டு மேசையில் உணவை ஒழுங்குபடுத்தி அப்பாவை அழைத்துப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டு முடிக்கையில் உடுப்புத் தைக்கப் போகவேண்டுமென்பதைச் சொன்னவளுக்கு எதிர்பாராவிதமாகத் தனியே செல்ல அனுமதி கிடைத்தது. எல்லாம் ஒரு மோதிரம் செய்த மாயம். ஒரு மோதிரம் அவள் வாழ்விலிருந்த சில தடைகளை ஒரு சாவியைப் போலத் திறந்து விட்டிருந்தது.

அவளும் தனது உணவை முடித்துக் கொண்டு ,மேசையை ஒழுங்குபடுத்தி, மீண்டும் முகம்கழுவி வந்தாள்.இருந்ததிலேயே நல்ல ஆடையொன்றை அணிந்து கொண்டவள் முகத்தில் லேசாகப் பவுடர் தடவிக் கொண்டாள். தைக்கப்பட வேண்டிய துணியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பி,தங்கைகளை எட்டிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் நித்திரையிலேயே இருக்க விலகியிருந்த போர்வையைச் சரிசெய்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வீதியிலிறங்கி நடந்தாள்.

அவள் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் துணி தைக்கக் கொடுத்துவிட்டு , தனது வீடு நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த வேளையிலேயே அந்தப் பெருஞ்சத்தம் கேட்டது.

************************************************

எல்லோருடனும் அவள் முகாமிலிருந்தாள்.அப்பாவினதும் , தம்பி , தங்கைகளினதும் சடலங்கள் சிக்கி உடனுக்குடனே புதைக்கப்பட்டன எனக் காற்று வழி வந்த செய்திகள் சொல்லின. அழுதழுதே கண்ணீர் வற்றிப் போன விழிகளிரண்டும் கருவளையங்களைச் சுமந்து சோர்ந்திருந்தன.தொண்டு நிறுவனங்கள் உணவையும் மருந்தையும் வழங்கியவாறு இருந்த போதிலும் அவளுக்கு எதுவும் தேவையற்றதைப் போலவே உட்காந்திருந்தாள். இழப்பின் வலியானது அவளை மிகவும் பாதித்திருந்தது. தூக்கமில்லை .பசிக்கவில்லை. அப்பாவின் பாசமுகம் ,தம்பி,தங்கைகளுடனான செல்லச் சீண்டல்கள் நினைவுகளில் மாறி மாறி இடறிக் கொண்டே இருக்கையில் இப்படியொரு இடர் சூழ்ந்த பொழுதில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேனோ என்றும் துயருற்றுச் சோர்ந்தாள்.

அவளது வீடு இருந்த சுவடே இல்லையெனப் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் அப்பாவும் , உடன்பிறப்புகளும் உயிரோடு இருப்பார்களென்ற நம்பிக்கையின் கீற்று அவளுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது.

"ராணி அக்கா, உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. உங்க பேரைச் சொல்லி விசாரிச்சாங்க "

ஒரு சிறுமி வந்து சொன்னதும் பரபரப்பாக உடனே எழுந்துகொண்டாள்.அங்கிருந்தபடியே முகாம் வாசலை எட்டிப் பார்த்தாள். ஸ்ரீதர் நின்றிருப்பது தெரிந்தது.கால்கள் துவழ முகாம் வாசலுக்கு வேகமாக நடை போட்டாள்.ஸ்ரீதர் இவளை ஏறிட்டுப் பார்த்து " உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் " என்று முகாம் சுவரோரமாக நகர்ந்தான். அவள் மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

"உன் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருந்த அடையாளமே இல்ல. அப்பா, தம்பி,தங்கச்சிங்க எல்லோருமே இல்லாமப் போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. நீ இங்கேயிருக்கிறது இப்பத்தான் தெரிஞ்சது..அதான் ஓடி வந்தேன். "

'ஒரு உறவெனத் தேடி இவராவது வந்திருக்கிறாரே ' என மனம் சிறிது ஆறுதலடைந்திற்று. இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே இருந்தாள். நிலத்தில் எதையோ தேடுவதைப் போலத் தலை குனிந்து கொண்டவன்,
" நம்ம நிச்சயதார்த்தம் நடந்த வேளையிலதான் அபசகுனமா இப்படிச் சுனாமியெல்லாம் வந்திருக்குன்னு என்னோட வீட்டுல நினைக்கிறாங்க. வீட்டுல உள்ளவங்களை மீறி உன்னைக் கட்டிக்கிறது சாத்தியமில்ல. அதான் நம்ம கல்யாணம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். அந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துட்டேன்னா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன் " என்றான்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 1, 2008

எச்சம்


"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் ".

வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.

குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.

பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம் தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.

வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள் , முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.

கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து " என்னாச்சுப்பா? " என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.

உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான்.குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.

குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.

அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.

அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.

அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எரிந்துகொண்டேயிருந்தன.

கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.

மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.

தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.

'வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை' என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.

அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது.தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.

அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட... தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.

குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.

வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.

குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள் ? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.

கண் திறந்து பார்த்த அப்பாவிடம் " உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா? " எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.

" அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம் "

இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் 'தூ' எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.

மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.

" அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும் "

அப்பா சொல்வதைக் கேட்டவாறே,

" இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே...இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க ? " என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, July 15, 2008

என் ஜன்னலின் சினேகிதி !


ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை