Thursday, June 25, 2009

அடைக்கலப் பாம்புகள்


       எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம். தோலில் என்ன மாதிரியான வடிவங்களிருந்தன என்று நினைவில்லை. நான் அந்தக் காலைவேளையில் கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். வீடு கூட்டிக் கொண்டிருந்த தங்கை  கட்டிலுக்கடிக்கடியில் தும்புத் தடியைப் போட்டு இழுத்ததில் உள்ளிருந்த பாம்பு மாட்டிக்கொண்டு வெளியே வந்து விழுந்தது. அவள் 'பாம்பு, பாம்பு' எனப் பெரிதாகக் கத்தத் தொடங்கி விட்டிருந்தாள். நான் சத்தம் கேட்டு அதிர்ந்து முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தபொழுது அவள் ஓடி விட்டிருந்தாள். பாம்பைத் துணைக்குச் சேர்த்த தும்புத்தடி நிலத்தில் கிடந்தது. பாம்பைக் காணவில்லை.

        சவரம் செய்து கொண்டிருந்த அப்பா, முகத்தில் பாதி நுரையோடு தங்கையின் அலறலுக்கு ஓடி வந்து என்னறையை எட்டிப் பார்த்தவாறு நின்றிருந்தார். அம்மாவின் ஒரு கையில் ஈர மா அப்பியிருந்தது. சமையலறையில் வேலையாக இருந்திருக்க வேண்டும். பாம்பு திரும்பவும் போய் கட்டிலடியில் ஒளிந்திருக்க வேண்டுமென்பது அவர்களது ஊகம். 'டேய்..இறங்காதேடா..நிலத்தில காலை வைக்காதேடா' என எனது கட்டிலைச் சுற்றியும் என்னைக் கொத்தவென்றே பல நூறு பாம்புகள் நெளிவது போன்று வாசலில் நின்றிருந்த அம்மா பதறிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பாம்பு நாங்களிருந்த மொத்த வீட்டையும் விழுங்கிவிடுமெனப் பயந்தோ அல்லது தனது சாகசத்தை விவரிக்கவெனவோ தங்கை அயல்வீடுகளுக்கெல்லாம் செய்தி பரப்பி உதவி கேட்டு விட்டிருந்தாள். அயல்வீடுகளின் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எனது அறை வாசலை நிறைத்தார்கள். ஏதோ அவர்களது பேச்சும், மொழியும் பாம்புக்குக் கேட்டு அது வேறு திட்டத்துக்கு நகருமென நினைத்தார்களோ என்னவோ எல்லோருமே மெதுவான குரலில் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். நான் கட்டிலில் மேற்சட்டையின்றி இருந்ததால் எல்லோரின் முன்பும் இயல்பாக வந்த ஒரு கூச்சத்தோடு காய்ச்சல் கண்டவனைப் போல போர்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். இப்படி எழும்பிய முகத்தோடு இவ்வளவு அசிங்கமாக ஊரை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென பாம்பு நினைத்ததோ இல்லையோ, நான் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

        பாம்பு சீறிப் பாய்ந்து வந்து தன் வாயை அகலத் திறந்து அவர்கள் எல்லோரையும் ஒரே மூச்சில் விழுங்கி விடுமோ என்பது போல அந்த அறைக்குள் அடியெடுத்து வைக்கப் பலரும் பயந்தார்கள். பாம்பு கட்டிலின் அடியில் எந்த மூலையில் ஒளிந்திருக்கிறது எனப் பலரும் தூர இருந்தே குனிந்து குனிந்து பார்த்தார்கள். அறைக்குள் பரவியிருந்த மின்சார வெளிச்சம் கட்டிலுக்கு நிழலைக் கொடுத்து அதனடியை இன்னும் இருட்டாக்கியிருந்தது. ஒருவரது பார்வைக்கும் பாம்பு எட்டவில்லை. ஒருவர் தனது கூரிய கண்களுக்குத் தென்பட்ட பாம்பு கட்டிலின் வலது மூலையிலிருக்கிறது என்றார். இன்னொருவர் இடது மூலையிலென்றார். இப்பொழுது ஒற்றைப் பாம்பு இரண்டு பாம்புகளாகி விட்டிருந்தது. தங்கை அதற்குள் ஏதோ பெருங்கதையைச் சொல்வதைப் போல மூச்சு வாங்கி வாங்கித் தான் அந்தப் பாம்பை இழுத்துப் போட்டதைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் இரு அடி நீளப்பாம்பு எனச் சொன்னது பலரது வாய்வழியாகப் போய் இறுதியில் ஆறு அடி நீளப்பாம்பாகி ஓய்ந்தது.

        கட்டிலடியில் வந்து ஒளித்திருப்பதனால் சிலர் அது சாரைப் பாம்பாக இருக்கும் என்றார்கள். சிலர் நல்ல பாம்பென்றும், இல்லாவிட்டால் புடையனாக அல்லது கண்கொத்திப் பாம்பாக இருக்கக் கூடுமென்றும் சொன்னார்கள். புடையனென்றால் அது நல்ல விஷமாம். சாரை அவ்வளவாக விஷமில்லையாம். கண்கொத்திப் பாம்பென்றால் கண்ணை மட்டும் குறி பார்த்துக் கொத்திவிடுமாம். அது நல்ல பாம்பென்றால் ஏதேனும் பழைய பகையை மனதில் வைத்து பழி வாங்க வந்திருக்குமென்றார்கள். நான் பாம்புக்கு என்ன செய்திருக்கிறேன். அது என்னைப் பழி வாங்க?

        பெருநாட்களுக்கு, திருநாட்களுக்கு ஊருக்குள் வரும் பாம்பாட்டி, மகுடி ஊதுகையில் ஆடும் நீளமான நல்ல பாம்பைக் கூட எட்டி நின்றே பார்த்திருக்கிறேன். அதுவும், எல்லோரும் சுற்றிவர நின்று பாம்பு, 'எந்நாளும் ஒரே இசைதான்' என்று மகுடி இசையை வெறுத்துத் தங்கள் கால்களுக்கிடையால் எங்காவது ஓடி விடுமோ எனப் பயந்து, அழுக்குச் சாக்கடையருகில் நிற்பது போல ஆண்கள் அன்று உடுத்திருக்கும் தங்களது புதுச் சாரனை அல்லது களிசானை, பெண்கள் தங்கள் புதுப்பாவாடையை அல்லது சேலையை முழங்காலோடு சேர்த்துப் பிடித்தவாறு ஓடுவதற்குத் தயாராக நின்றபடிதான் பாம்பாட்டியின் மகுடி வாசிப்பைக் கேட்டு அச்சத்தோடு பாம்பு நடனத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பார்கள்.

        பாம்பை விடவும் பாம்பாட்டியுடன் கூடவரும் குரங்கு அதிகமான ஆட்டத்தைக் காட்டி ரசிக்கச் செய்யும். மனிதர்களைப் போலவே சின்னச் சின்னதாய் வண்ண வண்ண ஆடை அணிந்து, சின்னதாக ஒரு தொப்பி போட்டுக் கொண்டு பல்லை இளித்தபடி ஆடும்போது சில மனிதர்களது நடனத்தை விடவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். ஒரு நீண்ட கோலைக் கழுத்தில் வைத்துக் கொண்டு திருடன், பொலிஸ் கதை சொல்லும். அதை விடப் பெரிய குரங்குகள்தான் பொலிஸில் இருப்பதாலோ என்னமோ அக் கதையில் மட்டும் எப்பொழுதும் திருட்டுப்பயலின் கதாபாத்திரம்தான் குரங்குக்கு வழங்கப்பட்டிருக்கும். அதுவும் தலையில் பானை திருடிப் போவது போலவும் பிறகு பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு பொலிஸ் தன்னைக் கைது செய்து கொண்டு போவது போலவும் நடித்துக் காண்பிக்கும். இப்பொழுதெல்லாம் கைது செய்யப்பட்டுப் பல்லிளித்துக் கையசைத்துச் செல்லும் அரசியல்வாதிகளைப் போல நடிக்க அப்பொழுதே குரங்குக்குத் தெரிந்திருக்கிறது என்பதில்  ஆச்சரியம்தான் எனக்கு.

        இறுதியில் பாம்பினதும், குரங்கினதும் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் குரங்கு, பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தனது தொப்பியை நீட்டியபடி காசு கேட்டு வளைய வரும். அப்போது பார்த்துக் கொண்டிருந்த சில குரங்குகள் காசு போடாமலேயே பின்னால் நகர்ந்து மாயமாவதையும் கண்டிருக்கிறேன். அப்பொழுதுகளில் கூட நான் பாம்புக்கோ, குரங்குக்கோ, அவற்றின் சொந்தக்காரனுக்கோ மனதளவில் கூடத் துரோகம் செய்ததில்லை. காசு போட்டுவிட்டுத்தான் நகர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னில் நல்ல பாம்புக்கென்ன கோபமிருக்கமுடியும்?

        வந்திருந்த இன்னுமொருவர் அது மண்ணிறப் பாம்பு என்பதால் அதற்கு வேறு ஒரு பெயர் சொன்னார். பெயர் நினைவில்லை. ஆனால் அந்தப் பெயருடைய பாம்பைத் தொட்டாலே உயிர் போய்விடுமென்றார். வந்திருந்த எல்லோரும் பாம்பை நான் என் நெற்றியில் வைத்திருப்பதைப் போல என்னைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலொருவர் என்னைக் கட்டிலிலிருந்து அப்படியே தூரப் பாய்ந்து ஓடி வந்துவிடும்படி சொன்னார். அதிலொரு சிக்கலிருந்தது. கட்டிலை விட்டும் பாய வேண்டுமானால் எழுந்து கட்டிலின் மேல் ஏறி நிற்க வேண்டும். கட்டிலின் மேல் ஏறி நின்றால் தாழ்ந்த கூரையில் சத்தமாகச் சுழலும் பழங்காலத்து மின்விசிறி கழுத்தை வெட்டி முண்டமாக்கிவிடுமென ஐயப்பட்டேன். அதனால் அதுவும் சாத்தியமாகவில்லை.

        முன்னொரு முறை தயிர்க்கார மாமி வீட்டுப் பெண்ணை இப்படித்தான் ஒரு மண்ணிறப் பாம்பு தீண்டிவிட்டது. அந்த மாமி வீடு அடுத்த ஊரிலிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பத்துநிமிட சைக்கிள் பயண தூரம். மாமியென்றால் சொந்த, இரத்தபந்த உறவுமுறை மாமி ஏதும் இல்லை. கிராமங்களில் அப்படித்தான் ஊர் மக்களை, தெரிந்தவர்களை  ஏதாவது உறவு முறை வைத்து அழைக்கவே பழக்கப்பட்டிருந்தோம். அதனால் நாம் அவரை மாமி என்றழைத்தோம். அத்தோடு இன்னுமொரு காரணம் இருந்தது. அந்த மாமிக்கு ஒரு அழகான, எங்களை விடவும் இளவயதில் ஒரு மகளிருந்தாள். அந்த விதவை மாமி தனது மகளோடு எங்கோ தூரத்திலிருந்து வந்து, அடுத்த ஊரிலிருந்த தன் தம்பி வீட்டில் தங்கியிருந்தார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமலோ, அல்லது வருமானத்துக்கென்றோ தயிர் தயாரித்து விற்கத்தொடங்கியிருந்தார். மண் சட்டிகளில் நிரப்பி வீட்டுத் திண்ணையிலிருந்த கண்ணாடி அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தயிரை அவரது மகள்தான் விற்பாள். மாமிக்குக் கணக்கு வழக்குத் தெரியாது. அப்படியொரு அழகான பெண் அடுத்த ஊரில் தயிர் விற்கிறாளெனக் கேள்விப்பட்டதும் நானும், எனது நண்பர்கள் இருவரும் சைக்கிள்களில் ஒருமுறை அந்த ஊருக்குப் போய் அவளது வீட்டுமுன்பிருந்த தெருவில் சுற்றி அவளைப் பார்த்துவந்தோம்.

        முழுக்க முழுக்கத் தயிரும் வெண்ணையும் நெய்யும் மட்டும் தின்றே வளர்ந்திருப்பாளோ என எண்ண வைக்கும்படியான மிக அழகான நிறம். கூர்மையான விழிகள். நல்ல கறுப்புப் பட்டுத் தாவணியின் நுனிகள் இரண்டில் முடிச்சுக்களிட்டு நேராகக் கொடியில் காயப்போட்டது போல ஒரு சுருக்கம் கூட இல்லாமல் நீண்ட அழகிய, அடர்த்தியான கூந்தல். இந்த மாதிரியான கூந்தல் சீனப்பெண்களுக்கே வாய்க்கக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அவிழ்த்து விட்டிருந்தாள். அவளைப் பார்த்த கணம் முதல் நாங்கள் மூவரும் அவளைக் காதலிக்கத் திட்டமிட்டோம். தனக்குத்தானெனச் சொல்லி அப் பதின்ம வயதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டோம். இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்தோம். மூவரும் போய் தினமும் அவளை வளைய வருவதும், அவள் யாரை விரும்புகிறாளோ அவனுக்கு மற்றவர்கள் விட்டுக் கொடுக்கவேண்டுமெனவும் ஒற்றுமையாகத் தீர்மானமெடுத்துக் கொண்டோம்.

         எங்களூருக்கு கிழமைக்கு ஒரு முறை தயிர்க்காரன் வருவான். ஊரிலுள்ளவர்கள் அவனிடமே எப்பொழுதும் தயிர் வாங்கிக்கொள்வார்கள். கடனுக்கும் தந்துசெல்வான். மாதம் முடியப் பணம் கொடுப்போம். கத்தியால் வெட்டியெடுக்கும்படியான நல்ல, சுத்தமான கெட்டித்தயிர். அப் பெண்ணைப் பார்க்கப் போகவேண்டுமென்றால், அவளுடன் பேச வேண்டுமென்றால் அவர்களிடம் போய் தயிர் வாங்கவேண்டும். தயிர்க்காரனிடம் வாங்கிப் பழகிப் போயிருந்த எனது வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும் அப் பெண்கள் தயாரித்து விற்கும் தயிரை வாங்கத் தயாரில்லை. அப்பொழுதுதான் நாங்கள் தயிர்க்காரனுக்கு ஒரு துரோகம் செய்தோம். தான் தயாரிக்கும் தயிர் கெட்டியாக, கிழவன் ஏதோ தீயதைக் கலக்கிறானென ஊருக்குள் பரப்பிவிட்டோம். கிணற்றடியிலிருந்த ஒரு வாயாடிக் கிழவியிடம் 'அது உண்மையா?' என்பதுபோல விசாரித்தும் பார்த்தோம். அதன்பிறகு அவ் வதந்தி இலகுவாக ஊருக்குள் பரவிவிட்டது.

        இப்பொழுது எனது வீட்டுக்கு, அயல் வீட்டுக்கு, இன்னும் ஊருக்குள்ளிருந்த சில சொந்தக்கார வீடுகளுக்கென்று தயிர் வாங்கிவரும் பொறுப்பை நானெடுத்துக் கொண்டேன். அப்படியே நண்பர்களும் ஒவ்வொரு வீடாகப் பொறுப்பெடுத்திருந்தார்கள். மூவரும் தினமும் வேளைக்கொருவராகப் போய் தயிர் வாங்கி வந்துகொடுத்துச் சமூக சேவையாற்றிக் கொண்டிருந்தோம். நான் தயிர் வாங்கப் போகும்வேளை எப்பொழுதுமே முறைத்துப் பார்த்தபடி அவளது மாமாவும் கூடவே இருப்பார். அவள் ஏதாவது புத்தகம் வாசித்தபடி இருப்பாள். என்னைக் கண்டதும் மெலிதாகச் சிரித்தபடியே, காசை வாங்கிக் கல்லாவில் போட்டு விட்டுத் தானியங்கிக் கதவைப் போலத் திரும்பி தயிர்ச் சட்டிகளை அலுமாரியிலிருந்து எடுத்துவைப்பாள். மாமா அதை நாரில் கட்டிப் பின் சைக்கிளின் பின்பகுதியில் பிணைத்துத் தருவார். இனி எடுத்துக் கொண்டு வரவேண்டியதுதான். சைக்கிளில் ஏறும் கணத்தில் அவளைப் பார்ப்பேன். அவள் என்னைக் கண்டுகொள்ளாமல் திரும்பவும் புத்தகத்துக்குள் மூழ்கிப் போயிருப்பாள். அவள் முதுகுக்கும் கதிரைக்கும் சிக்காத தலைமுடியில் சில காற்றிலாடி நாளைக்கும் வா என்கும்.

        இவ்வளவுதான் எனக்கும் அவளுக்கும் நடந்திருக்கும். ஆனால் இரவில் நண்பர்கள் மூவரும் கூடிக் கதைக்கும்பொழுது இச் சம்பவத்துக்குள் பல பொய்கள் வந்துவிழும். அந்தப் பெண் தனியே இருந்தாள் என்றும், என்னைப் பார்த்துச் சிரித்தாள் என்றும் என்னை விரும்புவதாகச் சொன்னாளெனவும் நான் சொல்வேன். நண்பர்களும் இதேபோலக் கதையளப்பார்கள். அவள் தனக்குத்தானென ஒவ்வொருவரும் உள்ளுக்குள் மருகி  சிலிர்த்துக் கொள்வோம். இப்படிச் சில நாட்கள் கழிந்திருக்கும். ஒருநாள் தயிர் வாங்கப் போனவேளை அவளில்லை. தயிரும் அன்று விற்கப்படவில்லை. என்றுமே வெளியில் வந்து கண்டிராத அவளின் தாய், அன்று வெளியே வந்தார். கோட்டுப் போல மெலிந்த அந்த மனுஷி வெளியே வந்து தன் மகளை விஷப்பாம்பு கொத்திவிட்டதென்றும் நாட்டுமருந்துக்கும் விஷம் இறங்காமல் நகரத்திலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலையோடு சொன்னார். நான் சைக்கிளை மூச்சு வாங்க வாங்க வேகமாக மிதித்துவந்து நண்பர்களிடம் தகவலைப் பரிமாறினேன்.

        அவர்களும் பதறிப்போனார்கள். நாங்கள் மூவரும் பஸ் பிடித்து வைத்தியசாலைக்குப் போய் அவளைப் பார்த்துவருவது எனத் தீர்மானித்துக் கொண்டோம். அவ்வேளை ஊருக்குள் பஸ் காலையும் மாலையும் மட்டுமே வந்துபோகும். நாங்கள் அடுத்த நாள் காலை பஸ் பிடித்துப் போய்க் காத்திருந்து நோயாளர் பார்வை நேரத்தில்  வைத்தியசாலைக்குள்ளே போனோம். முறைத்துப் பார்த்தபடி மாமா நின்றிருந்தால் தற்செயலாக, வேறு யாரையோ பார்க்கவந்தது போல காட்டிக் கொள்ளவேண்டுமென முன்பு பேசிக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக அவள் மட்டுமே அங்கு இருந்தாள். மிகுந்த கரிசனையோடு வந்திருக்கும் எங்களைப் பார்த்ததும் ஒருவித வெட்கத்தோடு புன்னகைத்தாள். எழுந்து உட்கார முயற்சித்தாள். விடிகாலையில் மாட்டிடம் பால் கறக்கும் போது ஏதோவொரு மண்ணிறப் பாம்பு அவள் காலைக் கொத்திவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்றுதான் அவளது குரலைக் கேட்டோம். மிக இனிமையான குரல்.

        நாங்கள் மூவரும் எதிர்பார்க்காச் சமயம் கையில் தேனீர்ப் போத்தலோடு நன்கு வளர்ந்து, உயர்ந்த, திடகாத்திரமான ஒரு இளைஞன் எங்களருகில் வந்து நின்றான். அவள், எங்களை 'ஒரு ஊருக்கே தயிர் வாங்க வருபவர்கள்' என அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் புன்னகைத்தான். பிறகு எங்களிடம் அவள், அவர் தன் மாமாவின் மகன் என்றாள். அவளைத் திருமணம் செய்யப்போகிறவர் என்றாள். எங்கள் மூவர் முகமும் பேயறைந்து வாடிப் போயிற்று. மாமாவின் முறைத்த கண்கள் இப்பொழுது அவன் முகத்திலிருந்தது போலப்பட்டது. அன்று அவளிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்த நாங்கள் 'அந்த விஷப் பாம்பு ஏன் அவனைக் கொத்தியிருக்கக் கூடாது?' எனப் பாம்பின் மேல் கோபப்பட்டோம். அதன்பிறகு அந்த ஊர்ப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. திரும்பவும் தயிர்க்காரக் கிழவன், கெட்டித் தயிரோடு ஊருக்குள் வந்துபோகத் தொடங்கினான்.

        இப்பொழுது கட்டிலடியில் ஒளிந்திருப்பது தண்ணீர்ப் பாம்பென்றால் அவ்வளவு பயம் இல்லை. தண்ணீர்ப் பாம்புக்கு அவ்வளவு விஷமில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தண்ணீருக்குள் இருக்கும் போது அது தீண்டினால் கரைக்கு வந்துவிட வேண்டுமென்றும், கரையிலிருக்கும்போது தீண்டினால் தண்ணீருக்குள் இறங்கிவிட வேண்டுமென்றும் ஊரில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரிந்த நண்பனொருவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீர்ப் பாம்பொன்று கால் சுண்டு விரலைத் தீண்டிவிட்டது. உடனே கரைக்கு ஏறித் துடைத்தது பாதி, துடைக்காதது மீதியென அவசர அவசரமாக உடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினான். 'பயப்படாதடா..விஷமெல்லாம் இப்ப இறங்கியிருக்கும்டா' என்று சொல்லச் சொல்லக் கேட்காமல் 'போற உசுரு வீட்லயே போகட்டும்' என்று வீட்டுக்கு ஓடிப் போனான். பிறகு உடனே வைத்தியரிடம் போய் ஊசியெல்லாம் போட்டுக் கொண்டான். அதுபோல இப்பொழுது ஒரு ஊசியோடு போகுமென்றால் பயப்படாமல் நிலத்தில் காலை வைக்கலாம். உயிரோடு போகுமென்றால் எப்படிக் காலைக் கீழே வைப்பது? அதில் வேறு தங்கை போட்டு விட்டுப் போன தும்புத்தடி, பாம்பைப் போலவே உருவெடுத்துத் தோன்றிக் கொண்டிருந்தது.

        அறை முழுதும் பெற்றோல் வாசனையைப் பரவவிட்டால் ஒளிந்திருக்கும் பாம்பு எங்கிருந்தாலும் வெளியே ஓடி வந்துவிடுமென ஒருவர் சொன்னார். அந்த விடிகாலையில் நகரத்துக்கு ஓடிப்போய் பெற்றோல் வாங்கிவருவது சாத்தியப்படாது என்பதனால் அந்த யோசனை கைவிடப்பட்டு எனது அறை காப்பாற்றப்பட்டது. 'சரி..பெற்றோலுக்குப் பதிலாக மண்ணெண்ணைய் பாவிப்போம்' என இன்னொருவர் கூறினார். மண்ணெண்ணைய் வீட்டிலிருந்தது. இப்பொழுது மண்ணெண்ணையை எப்படி அறை முழுதும் ஊற்றுவதா, விசிறுவதா, தெளிப்பதா எனச் சிறிய ஆலோசனை நடந்தது. இறுதியில் நீண்ட மூங்கில் கழியொன்றின் முனையில் ஒரு புடவையைச் சுற்றி அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கட்டிலுக்கடியில் அங்குமிங்குமாக ஆட்டினால் ஒளிந்திருக்கும் பாம்பு, அதன் வாடை தாங்காமல் எப்படியும் வெளியே ஓடிவந்துவிடுமெனும் முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கும் முதலில் வாசலில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். பிறகு வாசலின் இரட்டைக் கதவில் ஒன்று மூடப்பட்டு மற்றதன் அருகில் மண்ணெண்ணெய்ப் புடவையை எதிர்முனையில் சுற்றியிருந்த நீண்ட கழியை வைத்தபடி ஒருவர் குந்திக் கொண்டிருந்தார். யன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருந்ததால் வெளியேறும் பாம்பு எப்படியும் கதவு வழியாகத்தான் வருமென அவர் ஓடத்தயாராக இருந்தபடியேதான் அக் கழியை கட்டிலடிக்கு அனுப்பி ஆட்டிக் கொண்டிருந்தார். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலால் ஆட்டியும் பாம்பு வரவில்லை. எனக்குத்தான் அந்த வாசனைக்கு மூக்கரித்துக் கொண்டிருந்தது.

        'அதுதான் முன்பே சொன்னேன்..பாம்புக்கென்ன மோப்பம் புடிக்கிற சக்தியா இருக்கு?' என்றபடி வேறொருவர் முன்னே வந்தார். அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்தான். 'அப்போ மகுடிச் சத்தம் கேட்டா மட்டும் அது ஆடுதே..அதுக்கென்ன காதா இருக்கு?' என்று திருப்பிக் கேட்டார் கழியை வைத்திருந்தவர். 'இப்படிச் சும்மா கதைச்சுக்கொண்டிருக்காம ஆக வேண்டியதைப் பார்ப்போம்' என்றார் ஆலோசனைக் கூட்டத்தின் மற்றவர். அவர் எனது அப்பா. அப்பாவுக்கு பாம்புடனான அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். இருந்திருக்கின்றன என அவரே சொல்லியுமிருக்கிறார். அவரது சிறிய வயதிலெல்லாம் ஊரில் இந்தளவுக்கு நெருக்கமாக வீடுகளோ, கடைகளோ இருந்ததில்லையாம். வீட்டுக்கு முன்னாலுள்ள வயல்..அதைத்தாண்டிக் காடு..அதையும் தாண்டினால் தூரத்தே தெரியும் மலை. முன்னரெல்லாம் காட்டுக்குள் இரவு நரிகள் ஊளையிடுவது கேட்குமாம். ஊருக்குள் கோழிகளை வேட்டையாட காட்டுப் பூனைகள் வந்து போகுமாம். இப்பொழுதும் மலை இருக்கிறது. காடுமில்லை. வயலுமில்லை.

        அப்பொழுது அப்பம்மாவுக்குச் சொந்தமான பெரிய வயலில் ஒரு பெரிய, நீள நாகம் இருந்திருக்கிறது. அதைக் காவல் நாகமென அப்பா சொன்னார். அது நீளமானது. எலிகளிலிருந்தும், இன்னும் விஷ ஜந்துகளிலிருந்தும், திருடர்களிடமிருந்தும் அவ் வயலைக் காத்து வந்தது. தண்ணீர் செல்லும் வாய்க்காலின் மூலையொன்றில் படுத்து ஓய்வெடுக்கும் அதனை அப்பா நிறையத் தடவை பார்த்திருக்கிறார். அவரை அது எதுவும் செய்யாதாம். அந்த வயலுக்குச் சொந்தக்காரர்களை அது எதுவுமே செய்யாதாம். பல பரம்பரைகளாக அது இருந்து வந்ததாம். பிறகு அப்பம்மா, அப்பாவுக்கு அவ் வயலை எழுதிக் கொடுத்த பொழுதும் அங்கேயே இருந்திருக்கிறது. அப்பா, அப்பம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வயலை மூடி, மண் நிரப்பி, கட்டிடங்கள் கட்ட விற்ற பின்னர் ஓர் நாளில் அப் பாம்பு அவ் வாய்க்காலில் செத்துக் கிடந்ததாம். அது செத்த அன்று அப்பம்மா சாப்பிடக் கூட இல்லையாம். அன்றோடு வயலுக்கும் காவலற்றுப் போயிற்று. இயற்கைக்கும் காவலற்றுப் போயிற்று.

        இப்பொழுது திரும்பவும் ஆலோசனைக் கூட்டம் கூடியிருந்தது. 'ஒரு கீரிப் பிள்ளையை அறைக்குள்  விட்டால் அது பாம்பை எப்பாடு பட்டேனும் வெளியே இழுத்துக் கொண்டுவந்து விடும் ' என தெருமுனைப் பெரியவர் சொன்ன யோசனைதான் அந்த யோசனைகளிலேயே மிகவும் அபத்தமான யோசனையாகப்பட்டது. பாம்புக்கு நிஜமாகவே காதிருந்தால், அதற்கும் நம் மொழி தெரிந்திருந்தால் ஊர்ந்து ஊர்ந்து சிரித்திருக்கும்.

        அறைக்குள் பாம்பு எப்படி வந்திருக்குமென பெண்கள் கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததுவும் வேடிக்கையாக இருந்தது. சிலர் விறகுக் கட்டுடன் சில சமயம் காட்டுப் பாம்புகள் சேர்ந்து வருமென்றார்கள். அப்படி ஒரு சமயம் அதைச் சொல்லிக் கொண்டிருந்த பெண்ணின் மாமியாரை விறகுக்கட்டோடு வந்த ஒரு பாம்பு கடித்துவிட்ட செய்தியை பாம்புக்கு நன்றி கலந்த புன்னகையோடு பகிர்ந்துகொண்டாள். பிறகு பாம்புதான் செத்ததாம். மாமியாரே அதை அடித்துக் கொன்றுபோட்டாராம். அப்போது அவர் பாம்பைத் திட்டிய வசவுகளில் பாதி தனக்கென்றாள். அத்தோடு நின்றுவிடாமல் தூரத்துக்குக் கொண்டுபோய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு வந்தாராம். பாம்புகள் பற்றியெரியும் வாசனை கூட மனிதர்களுக்கு ஆகாது என அப்பெண் சொன்னாள். இச் சமயம் எங்கள் வீட்டுக்குப் புதிதாக விறகுக்கட்டு எதுவும் வந்திருக்கவுமில்லை. இப் பாம்பெப்படி வந்திருக்கும்?

        அடுத்து அப்பாவுக்கு வந்த யோசனையை செயல்படுத்திப் பார்த்தார்கள். அடுத்த வீட்டுக்குப் போய் வீழ்ந்துகிடந்த தென்னமோலையின் கீற்றுக் கீற்றாக உருவியெடுத்து வந்து மூங்கில் கழியின் ஒரு முனையில் கட்டினார்கள். கதவடியில் அமர்ந்தபடி அந்த நீண்ட மூங்கில் கழியின் ஒரு முனையைப் பற்றியபடி இப்பொழுது அப்பா. மறுமுனையில் எண்ணெய்த் துணிக்குப் பதிலாக நீளநீளமான தென்னமோலைக் கீற்றுக்கள். அதன் மூலம் கட்டிலடியை அவர் கூட்டுவது போல அங்குமிங்குமாக உசுப்பிவிட்டார். அதற்குப் பலனிருந்தது. கட்டிலடியைக் கூட்டுவதற்கு இடம் விடுவோமென பாம்பு நினைத்ததோ என்னவோ வெளியே ஓடி வந்துவிட்டது. அது மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறமென இப்பொழுது நன்றாகத் தெரிந்தது.

        ஈரடியுமல்ல, ஆறடியுமல்ல. எல்லோரையும் பதைபதைக்க வைத்த அது, ஒரு அடிக்கும் குறைவாக இருந்த ஒரு புல்லுப் பாம்பு. ஒரு குஞ்சுப் பாம்பு. முற்றத்தில் உலாத்தியிருந்தால் புழு என எண்ணி மைனாப் பறவை தூக்கிப் போகக் கூடிய அளவான சின்னப்பாம்பொன்று. நேற்று முற்றத்தில் பதிக்கவென மைதானத்திலிருந்து சதுரம் சதுரமாக  வெட்டிக் கொண்டு வந்து சுவரோரமாகப் போட்டிருந்த சிறு புல்லுப் பாத்தித் துண்டுகளோடு சேர்ந்து வந்துவிட்டிருக்கிறது. பின்னர் தனித்திருக்கப் பயந்து முன்னிரவில் யன்னல் வழியே அறைக்குள்ளே வந்து விட்டிருக்கிறது.

        வாசலடியிலிருந்தவர்கள் கூப்பாடு போட்டபடி அப் பாம்பு ஓட வழி விட்டார்கள். அடியடா..பிடியடா எனச் சத்தங்கள் வேறு. நானும் இப்பொழுது கட்டிலிருந்து தைரியமாக இறங்கிவிட்டேன். பெரும் வீரர்களைப் போல பாம்பின் பின்னாலேயே விரட்டிப் போனோம். அது ஊர்ந்து ஊர்ந்து போய் நாங்கள் என்றுமே தேடி மீளப் பெற்றுக் கொள்ளமுடியாதபடிக்கு புதுக் கட்டடங்கள் கட்டக் கொண்டு வந்து போட்டிருந்த பெரிய கருங்கல் குவியலின் இண்டு இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டது, எங்கள் வயலைப் போல.

- எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை.

Monday, June 15, 2009

இருப்புக்கு மீள்தல் - 06


         ஒரு குழந்தையைத் தூக்குவது போல அறுபது கிலோகிராம் எடையை வைத்தியர் தூக்கிக் கட்டிலில் படுக்கவைத்தார். 'முதல் முயற்சிதானே. போகப்போகச் சரியாகிவிடும்' எனப் புன்னகையோடு சொன்னார். எனது பதற்றம் நீங்கும்வரை அருகிலேயே இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். எனது பொழுதுபோக்குகள் பற்றி விசாரித்தறிந்தார். காலித் ஹுசைனியின் எழுத்துக்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவரது கதாபாத்திரங்களின் வைத்தியசாலை அனுபவங்களைப் பற்றிக் கதைத்தோம். மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் குறித்துச் சொன்னபடி அன்றைய இரவு உணவை அவரே ஊட்டிவிட்டார். மருந்துகளையும் அவரே தந்தார். கதைத்துக் கொண்டிருந்தபடியே தூங்கிப்போய்விட்டேன்.

        அடுத்தநாட்களிலும் நடைப்பயிற்சி தொடர்ந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவிட்டேன். சோர்வும் உடல் பலவீனமும் தொடர்ந்தும் இருந்ததுதான். எனினும் அறையை விட்டும் வெளியே வந்து சுற்றிவர இருந்த புல்வெளிகளிலும் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். நீண்ட நாட்களின் பின்னர் வெளிக்காற்று உடலில் பட மிகவும் இதமாக இருந்தது. அதிகநேரம் வெளியில், அந்த மருத்துவமனை வளாகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். புல்வெளியிலமர்ந்து ஏதேதோ சிந்தனையிலாழ்ந்திருந்ததைப் பார்த்த வைத்தியர் வெள்ளைக் காகிதங்களும், பேனையும் கொண்டு வந்து தந்து கவிதைகள் எழுதச் சொல்லிக் கட்டளையிட்டார்.

        இரண்டு வருடங்களாக கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறெதற்கும் பேனையைத் தொட்டவனில்லை. எல்லா எழுத்துக்களும் கணினி வழியேதான். அகில இலங்கை ரீதியில் அழகிய கையெழுத்துக்கெனப் பரிசு பெற்றிருந்த எனது கையெழுத்து எனக்கே சகிக்காமல் மற்றும் புரியாமல் கோணல் மாணலாக வந்தது. எதுவும் எழுதமுடியவில்லை. வெள்ளைத் தாள்கள் மையிட்டு நிரப்பப்படாமல் அப்படியே கிடந்தன.

        பார்க்க வந்த நண்பர்களோடு இயல்பாகக் கதைப்பது இப்பொழுது முடியுமாக இருந்தது. ஈரானியச் சகோதரியின் குழந்தைகளோடு விளையாடினேன். பழைய ஆரோக்கியத்துக்கு மீண்டு வந்துகொண்டிருந்தேன். இனி இயல்பாக இருக்கலாமென என் மேலே எனக்கு நம்பிக்கை வந்த பொழுதொன்றில் எனது அறைக்குப் போகவேண்டுமென வைத்தியரிடம் வேண்டுகோளை முன்வைத்தேன்.

        அவர் அதையும் ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். இன்னும் ஓர் நாள் தங்கிப் போகும்படி கேட்டுக் கொண்டார். முழு உடல் பரிசோதனை நிகழ்ந்தது. அன்றைய தினமும் நிறையக் கதைத்தோம். அவரது தேசக் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார். இனிமையான ராகத்தில் பாடியும் காட்டினார். மிகவும் ரசித்தேன். அவரது அனுபவத்திலேயே என்னைக் காப்பாற்றியதுதான் மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்ததெனச் சொன்னார். என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார். இரண்டாம் உயிர் பெற்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் வாழ்நாளிலேயே என்னை மறக்கமுடியாதெனவும்  சொன்னார். இறுதியாக 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

        எங்கெங்கோ பிறந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் சந்தித்துக்கொண்டோம். அந்த வைத்தியர் பாலஸ்தீனியர். அமெரிக்காவில் வைத்தியம் கற்றவர். அவரது மனைவி பாகிஸ்தானியர். அத் தாதிகள் பிலிப்பைனையும், லெபனானையும் சேர்ந்தவர்கள். எனக்குச் சேவை செய்தவர் சூடான் தேசத்தவர். இன்னும் இலங்கை நண்பர்கள், ஒன்றாக வேலைசெய்யும் ஈரான், லெபனான்,பாகிஸ்தான், கொரியா, இந்தியா மற்றும் நேபாள தேசத்தவர்கள். இணையம் தந்த அன்பு நண்பர்கள் உலகின் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். எல்லோரினதும் அன்பான, உருக்கமான பிரார்த்தனைகள்தான் என்னை எனக்கே மீட்டுத்தந்திருக்கின்றன. நான் இவர்களுக்காக, இந்தக் கணம்வரை என்ன செய்திருக்கிறேன் ?

        வைத்தியர் என்னைப் போக அனுமதித்த நாளில் நண்பர்கள் அனேகர் வந்திருந்தனர். அறை நண்பர்களையும், அலுவலக நண்பர்களையும் அழைத்து எனது மருந்து, உணவு முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் இரு கிழமைகள் முழுதாக அறையினில் ஓய்வெடுத்துப் பின் இயலுமெனில் மட்டும் வேலைக்குப் போகும்படி அன்புக் கட்டளையிட்டார். புன்னகையோடு தலையசைத்து வைத்தேன். மிகுந்த நன்றிகளை வார்த்தைகளில் பரிமாறி தாதிகளிடமும், பணியாளரிடமும் விடைபெற்றேன்.

        அன்று பூத்த புதுரோஜாக்களால் செய்த பூங்கொத்தினை வைத்தியர் எனக்குப் பரிசளித்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. நெற்றியில் முத்தமிட்டுப் பத்திரமாகப் போய்வரும்படி அனுப்பிவைத்தார். தொடர்ந்தும் வேளாவேளைக்குத் தொலைபேசியில் அழைத்து நலம்விசாரித்துக் கொண்டும் மருந்துகளை நினைவூட்டிக்கொண்டுமிருக்கிறார். இந்த வெள்ளிக்கிழமை அவரைப் போய்ப் பார்க்கவேண்டும். என் வாழ்நாள் சகல ஆரோக்கியத்துடனும் நீடிக்கவென எனக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் அனைவரையும் ஓர் நாள் நேரில் சந்திக்கவேண்டும்.

அந்த இனிய நாளுக்காகக் காத்திருக்கிறேன் !

(நிறைவு)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Wednesday, June 10, 2009

இருப்புக்கு மீள்தல் - 05


இப்பொழுது புதிதாகக் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்துவிட்டிருந்தது. பேசாமல் இறந்துபோயிருக்கலாமோ என எண்ணும்படியான வலி உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. வாயைத் திறக்கவோ, பேசவோ, மெலிதாகப் புன்னகைக்கவோ கூட முடியாதபடி தசைகள் எல்லாம் இறுகிப் போய் வலித்தன. இருந்தும் பேச முயற்சித்தேன். எதுவுமே ஒத்துழைக்கவில்லை. பேச்சு வராமலே போய்விடுமோ எனவும் அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். பார்க்க வந்தவர்கள் எல்லாம் விழிகள் கசியப் பார்த்து மௌனமாக நகர்ந்தனர். வைத்தியர் அடிக்கடி வந்துபார்த்து அன்பாக ஏதேனும் கதைத்துக் கொண்டிருந்தார். இருபத்துநான்கு மணித்தியாலங்களும் அந்த வைத்தியரும், இரண்டு தாதிகளும் என்னை அவர்களது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருந்தனர். ஈரானியச் சகோதரி என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஏதேனும் திரவ உணவுப்பொருட்கள் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தார். எதையும் பருகமுடியவில்லை.

கண்களை மூடினால் இமைகளுக்குள் எரிந்தன. தூங்கவும் முடியவில்லை. இருந்தும் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் அகன்ற பின்னர் தூங்கமுயற்சித்தேன். ஏதேதோ யோசனைகள் தோன்றித் தோன்றி மறைய தலைக்குள் ஏதோ பெரும்பாரமாய் அழுத்தியது. எப்பொழுது தூங்கிப்போனேனென நினைவிலில்லை எனினும் தூங்கி எழும்போது காய்ச்சல் விட்டிருந்தது. அதற்குப் பதிலாக இடக் கையும், இடக் காலும் செயலிழந்து போயிருந்தது. ஒரு பாதி பொம்மையை என்னுடலின் இடப்புறத்தில் கிடத்திப் பொருத்தியது போல அப்பாகங்கள் அசையாமலும், அசைக்கமுடியாமலும் கிடந்தன. வைத்தியர் வந்துபார்த்து பதறிப்போனார். முதுகுப்புறத்தில் ஊசி ஏற்றினார். வாந்தியாகப் போனாலும் பரவாயில்லையென உப்புக் கலந்த பானம் ஏதோ பருக வைத்தார். பருகிச் சிறிது நேரத்திலேயே நான் திரும்பவும் தூங்கிப் போய்விட்டேன்.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனென நினைவிலில்லை. யாரோ மிருதுவாக கைகளையும் புருவங்களையும் நீவி விட விழித்துக் கொண்டேன். புதிதாக இரு வைத்தியர்கள் அருகிலிருந்தார்கள். என்னைப் பற்றிய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நான் விழித்ததும் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். அவர்களது செவிகளை எனது வாயருகே வைத்து பேசச் சொல்லிக் கேட்டார்கள். எனது கைகளைத் தம் கரங்களுக்குள் பொத்தி விரல் நகங்களை ஆராய்ந்தார்கள். எனது இமைகளை விரித்து ஒளி செலுத்தி உற்றுப் பார்த்தார்கள். சோதனைக் கூடப் பிராணியொன்றைப் போல வேதனையோடு எல்லாவற்றுக்கும் இசைந்துகொடுத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ புது மருந்துகளுக்குப் பரிந்துரைத்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.

எனக்கான பிரார்த்தனைகள் நண்பர்களிடத்தில் தொடர்வதாக சகோதரி தொலைபேசியில் சொன்னார். தொடர்ந்த சிகிச்சையின் இரத்தப்பரிசோதனைகளில் குருதியில் கலந்திருந்த நச்சின் அளவு குறைந்துவருவதாக அறிக்கைகள் நற்செய்தி சொல்லிற்று. மரணத்திலிருந்து மீண்ட உடல் மருந்துகளையும், வைத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. காரணம் சகோதரியினதும் எல்லோரினதும் அன்பான பிரார்த்தனைகளன்றி வேறு என்ன?

அடுத்த சிலநாட்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நல்லபடியான மாற்றம். உடல் புண்கள் ஆறத் தொடங்கியிருந்தன. உடலியக்கம் சீராகி, இறுக்கிப் பிடித்த தசை வலியும் உடல்வலியும் இனிப் போதுமெனச் சிறிது சிறிதாக விட்டு விலக ஆரம்பித்திருந்தன. வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன். வைத்தியரின் நகைச்சுவைகளுக்குப் பழையபடி சிரிக்கமுடிந்தது. ஈரானியச் சகோதரி தினந்தோறும் உணவுப் பதார்த்தங்கள் செய்து கணவர் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். கஞ்சி, பழச்சாறு போன்ற திரவப்பதார்த்தங்களை தாதிகள் ஊட்டிவிட்டார்கள். உடலில் இணைக்கப்பட்டிருந்த மருந்துக் குழாய்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முழுதாக அகற்றப்பட்டன. அந்த அறைக்குள்ளேயே எழுந்து மெதுவாக வைத்தியரின் துணையோடு நடமாடத் தொடங்கினேன். எவ்வளவு நாளைக்கு அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதென, தனித்து எழுந்து நடக்கமுயற்சித்த நாளில் கால்கள் துவள பளிங்குத் தரையில் வெட்டப்பட்ட மரம்போல வீழ்ந்தேன்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்

Friday, June 5, 2009

இருப்புக்கு மீள்தல் - 04


இம்முறை சற்று அதிக மணித்தியாலங்கள் மயக்கம். ஏறத்தாழ மூன்று நாட்கள். நண்பர்கள் வேலை நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்களிலெல்லாம் வந்து பார்த்துக் கவலையோடு திரும்பிப்போனார்கள். அவர்களது உரையாடல்களெல்லாம் மிகவும் பதற்றத்துடன் என்னைப் பற்றியே இருந்திருக்கக் கூடும். அவர்களுடனான எனது இனிய நினைவுகள் மீட்டப்பட்டிருக்கக் கூடும். நான் மீண்டு வருவேனோ, மாட்டேனோ என்ற பரபரப்பு எல்லோரிலும் தொற்றியிருந்திருக்கும். திரும்பவும் மூன்று நாட்கள் கழிந்த பின் ஓர் நாள் மிகவும் தாகத்தோடு மீண்டும் விழித்தேன். அதே தாதி. அதே பரபரப்பு.

தாதி, திரும்பவும் போய் உடனே வைத்தியரோடு வந்தாள். அதே இளவைத்தியர். அதே குழந்தைப் புன்னகை. நான் திரும்பவும் தண்ணீர் கேட்டேன். குரல் ஒத்துழைக்கவில்லை. சைகை செய்தேன். என்னருகே குனிந்தார். ஒரு குழந்தையிடம் சொல்வதைப் போன்ற அன்பான குரலில் சொன்னார்.

' நீங்கள் தொடர்ச்சியாகப் பலநாட்கள் பட்டினியிலிருந்திருக்கிறீர்கள். உடல் மிகவும் பலவீனமுற்றிருந்திருக்கிறது. உங்கள் உணவில் மறைந்திருந்த விஷம் உங்கள் தொண்டைக்குழியினூடு இறங்கிச் சென்ற வழியெங்கிலும் புண்களைத் தோற்றுவித்தபடி நகர்ந்திருக்கிறது. அவற்றின் புண்கள் முழுதாகக் காயும்வரையில் உணவெதற்கும் பரிந்துரைக்க முடியாதவனாக இருக்கிறேன். மன்னியுங்கள். தண்ணீரையும் கூட இன்னும் சில மணித்தியாலங்கள் கழித்தே அருந்தத் தரலாம்.'

மிகவும் அன்பான குரல் அவரிடமிருந்து வழிந்தது. அன்பு, வழிய வழியத் தரப்படும் அன்பு. காதலிக்கக் கெஞ்சும் நாட்களில் மனிதர்களிடம் மிகைத்திருக்கும் அதே அன்பான, இழைவான குரல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. அவரது குடும்பம், சக ஊழியர்கள், நண்பர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களென எண்ணிக்கொண்டேன். தாதியிடம் எதையோ எடுத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவள் நகர்ந்ததும் என்னருகில் குனிந்தார். ' எனது அன்புக்குரியவரே! அழகாக இருக்கிறீர்கள். எந்தக் குறைபாடுமற்றவராக இருக்கிறீர்கள். இளவயதினராக இருக்கிறீர்கள். உங்கள் குருதியெங்கிலும் நச்சு பரவியிருக்கிறது. நாங்கள் மருந்துகளின் மூலம் அவற்றை நீக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம். இறைவன் நாடினால் உங்களை எப்படியும் காப்பாற்றிவிடுவேன். நீங்கள் வாழவேண்டும். ' என்றார். உடல் முழுதும் நீலம் பாரித்துத் தோல் கறுத்துப் போயிருந்த நான் இன்னும் அபாயகட்டத்தைத் தாண்டவில்லையென அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

பல மணித்தியாலங்கள் கழித்துத் தரப்பட்ட முதல் தண்ணீர், தாகித்திருந்த நாவு வழியே சொட்டுச் சொட்டாக இறங்கியது. தொண்டை முதல் உள்நனைத்துப் போன அது சில நிமிடங்களே உள்ளே இருந்து பின்னர் வாந்தியாக வெளியே வரத் தொடங்கியது. ஒரு தாயின் பரிவோடு தாதி துடைத்துவிட்டாள். வைத்தியர் வந்து பார்த்து குளுக்கோஸ் மருந்துகளை நரம்பு வழியே தொடர்ந்தும் ஏற்றக் கட்டளையிட்டார். பெருங்கவலையோடும் பெருமூச்சோடும் தலைகோதி விட்டார். நான் புன்னகைத்தேன். பேச முயற்சித்தேன். வாந்திக்குப் பிறகு இப்பொழுதும் தொண்டை வழியே வெறும் காற்றுத்தான் வந்தது.

மணித்தியாலங்கள் நகர்ந்தன. நண்பர்கள் வந்து பார்த்துச் சென்றனர். இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன். முழுதாக, எனக்குப் புதிதான அனுபவம் இது. நண்பர்கள் எல்லோரும் எனது நிலை வீட்டுக்குத் தெரியாதபடி பார்த்துக்கொண்டார்கள். தொடர்ந்தும் தோல்நிறம் கறுத்துக்கொண்டே போனது. எல்லோரும் போய் நானும் மருந்துகளின் உபயத்தில் கண்மூடிக் கிடந்த நேரம் சடுதியாக உடல் உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே போய் ஒரு நிலையில் பேச்சும் உடலசைவுகளும் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகத் துவங்கியது. என்னையறியாமலே நான் மரணிக்கத் தொடங்கியிருந்தேன்.

(தொடரும்)


- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Monday, June 1, 2009

இருப்புக்கு மீள்தல் - 03

பின்னர் என்ன? அம்மாவின், சகோதர,சகோதரிகளின், நண்பர்களின் கூட்டுப் பிரார்த்தனையும் தொடர் சிகிச்சையும் என்னை எழுந்து நடமாடச் செய்தது. திரும்பவும் ஆறுமாதத்துக்கு அம்மா என்னை மீளப்பிறந்த குழந்தையாய்த் தாங்கினார். எனக்காக, வீட்டிலுள்ள அனைவரும் கூடப் பத்தியச் சாப்பாடுதான். உப்பும், மசாலாக்களுமற்று வெறுமனே அவித்த காய்கறிகளும், சோறும் உணவுக்கெனவும் இனிப்பு சேர்க்கப்பட்ட இளநீர் தாகமெடுக்கையில் அருந்தவெனவும் தரப்பட்டுக்கொண்டே இருந்தன. உறக்கம், அது தவிர்த்து அம்மாவின் கண்காணிப்பில் முற்றத்தில் சிறு உலாத்தல், அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு மாலை வகுப்பெடுத்தல் இப்படியாகப் பொழுதுகள் நகர்ந்துகொண்டே இருந்தன. அந்தூரியமும் ரோசாவும் வளர்த்தேன். அலுப்பூட்டினால் பார்த்து ரசியெனப் புது மீன் தொட்டியொன்றும் வர்ணமீன்களும் வரவேற்பறையை அலங்கரித்தன.

வாசிக்கவெனப் புத்தகங்களை சகோதரர்கள் வாங்கிவந்துகொண்டே இருந்தார்கள். நண்பர்களும் தொடர்ச்சியாகத் தேடி வந்துகொண்டே இருந்தனர். அப்பொழுதெல்லாம் நிறைய வாசிக்கவும் எழுதவும் செய்தேன். மனம் சொன்னவற்றையெல்லாம் எந்தத் தயக்கங்களுமற்று, எந்த நிர்ப்பந்தங்களுமற்று எழுத்துக்களாக்கிக் காகிதங்களில் மேயவிட்டேன். எல்லாவற்றையும் காலத்தோடு தாண்டிவந்து பலவருடங்களாகிடினும் இன்னும் நினைவில் இருந்துகொண்டே இருக்கின்றன எல்லாமும்.

இப்பொழுதும் அம்மாவும், அன்பானவர்களும் பக்கத்திலிருந்தால் நன்றாக இருக்குமேயென நினைத்துக்கொண்டேன். கண்விழித்துப் பார்த்தேன். கைநரம்பினூடு மருந்து கலக்கப்பட்ட திரவத்தைச் செலுத்தியபடி தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டிருந்த போத்தலில் திரவமட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. தாதி புதிய போத்தலை மாற்றமுயற்சித்துக் கொண்டிருந்தாள். எனக்குத் தாகமாக இருந்தது. உள்நாக்கு வரையில் வரண்டுபோய்க் கிடந்தேன். புன்னகையோடு என் விழிகளை நேரே பார்த்தவளிடம் மிகச் சிரமப்பட்டுத் தண்ணீர் கேட்டேன்.

அவள் வைத்தியரிடம் கேட்டுவருவதாகச் சொல்லிவிட்டுப் போனாள். சில நிமிடங்கள் தன்பாட்டில் கரைந்தபடி இருந்தன. இரவா,பகலா என இன்னும் தெரியவில்லை. எனது தேசத்தின் வைத்தியசாலைகளில் வரும் வாடையைப் போன்றதொரு வாடை இங்கு இல்லை. எனினும் ஏதோ ஒரு நெடி என்னைச் சுற்றி ஒரு வலையைப் பரப்பி அலைந்துகொண்டே இருந்தது. தாதி, வைத்தியரை அழைத்து வந்தபொழுது மூக்கின் வழியும், இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது. நான் திரும்பவும் மயங்கிப்போயிருந்தேன்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்