'நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல
இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும்
பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு அளந்துட்டுத்
திரியுறான். நீ ஒருக்காப் போய் தேடிப் பார்த்துட்டு
வாயேன் ராசா. காலைல வெளிய இறங்கினவன். பசி
தாங்கமாட்டானே புள்ள'
வழமையாக சோறு வடித்து, பானையை
இறக்கி வைக்கும்போதே பசியெனக் கத்திக் கொண்டு வந்து நிற்பவனை இன்னும் காணவில்லை
என்று புலம்பிக் கொண்டிருந்த வள்ளித்தாயி, வாசலோடு ஒட்டிய
உள்தரையில் அமர்ந்திருந்தாள். அவள் ஏவிய மூத்தவன், அவளது பேச்சே
தன் காதுகளில் விழாதது போல சாக்குக் கட்டிலில் படுத்து, கூரைத்
தகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்திப்
பொழுதை அந்தக் குடிசைக்குள் தள்ளிச் சென்றது போல மழை இருட்டு மதியம் தாண்டிய அப்
பிற்பகல் வேளையை சற்று இருளாக்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய
வரை வெளியே எட்டி தெருவைப் பார்த்தாள். எப்பொழுதும்
பழைய சைக்கிள் டயரை உருட்டியபடியோ, கூட்டாளிகளோடு
விளையாடியபடியோ அத் தெருவே பழியெனக் கிடப்பவனை இன்று காணவில்லை. தூரத்திலிருந்து
மழையின் பெருஞ்சத்தம் மிகுந்த வெறியோடு யாரையோ விரட்டிவருவது போலக் கேட்டது. பின்
அப்படியே அவளது குடிசையின் தகரக் கூரையிலும் சத்தத்தோடு விழ ஆரம்பித்தது. அவள்
தெருவிலிருந்து தூரத்தே தெரிந்த மலைத் தொடருக்கு பார்வையை நகர்த்தினாள்.
'இந்த மழயப் பாரு. எங்கிட்டோ
போற மழ. இங்க வந்து கொட்டித் தீக்குது ஆகாசமே
பொத்துக்கிட்ட மாதிரி. அந்த மலயக் கூட மூடல. முத்தம்
இருட்டல. வுட்டதத் தேடி வர்றாப்ல மழ பேஞ்சு
கொட்டுது பாரு. இந்தப் பய நனஞ்சிட்டு வந்து நிப்பானோ, பத்திரமா
புத்தி யோசனையா எங்கிட்டாவது நிழல்ல குந்தியீந்துட்டு மழவுட்டாப்புல வூடு வந்து
சேருவானோ? தடுமக் காச்சல்னா தாங்கமாட்டானே ராசா. பச்சபச்சயாச்
சளி கட்டிக்கும் அவனோட அப்பனுக்குப் போல. இருமி
இருமியே சீவன் தேஞ்சிடும். ஏலே போய் எங்கிட்டிருக்கான்னு ஒருக்காப்
பாத்துக் கூட்டி வாயேண்டா'
மூத்தவன் அதையும் காது கொடுத்துக்
கேட்கவில்லை. காதில் விழுந்ததுதான். ஆனால்
சொல்லப்படுவது தனக்கில்லையென்பது போல அமைதியாக இருந்தான். ஏதோ இவள்
மட்டும் தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு சுவர்களுக்கும் கேட்கும்படி புலம்பிக்
கொண்டிருந்தாள். தகரக் கூரையின் ஓட்டைகளிலிருந்து
துளித்துளியாக சொட்டிய நீர் களிமண் பூசிய தரையில் விழுந்து, விழுந்த
இடத்தைக் குழியாக்கியது. விட்டு விட்டுப் பெய்யும் மழையின்
காரணமாக நிலமே ஈரலித்துக் கிடந்தது. மூலையில்
அடுக்கியிருந்த சில மண் சட்டிகளைக் கொண்டுவந்து கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும்
இடங்களைப் பார்த்துத் தரையில் வைத்தவள், அப்படியே
சாக்குக் கட்டிலருகே போய் மூத்தவனை தோளில் பிடித்து உசுப்பிவிட்டாள்.
'ராசா..மின்னல் வெட்டுது..இடி விழுது..சின்னவன் எங்கிட்டிருக்கானோ..பயப்புடுவான்..போய்ப் பார்த்துட்டு வாயேண்டா' என்றாள்
திரும்பவும்.
'சும்மா போம்மா..நேத்துத்தான் பொறந்தாம் பாரு மடியில
வச்சுப் பாத்துக்கிடறதுக்கு. பத்து வயசாச்சு. நாலு ஆடு
கண்டுகளப் புடிச்சுக் குடுத்து மேச்சுட்டு வான்னு அனுப்பியிருந்தாலும் அர வயித்துக்காவது
தேறும். வேலயத்துப்போன கண்ட கண்ட தெருப்பசங்களோட
வெளையாட அனுப்பிட்டு என்னவுட்டு தேடச் சொல்றியா?'
அவன் சலிப்போடு கத்திக் கொண்டு அடுத்த
பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். திடீரென
நினைவு வந்தவன் போலவும், குளிரெடுத்தவன் போலவும் திரும்பவும்
மல்லாந்து படுத்து, உடுத்திருந்த சாரத்தை அவிழ்த்து
கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, திரும்பவும் அடுத்த
பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். இனி அவனை
எழுப்ப முடியாது என உணர்ந்தவள், மீண்டும் வாசலுக்கு வந்து தெருவை எட்டிப்
பார்த்தாள். முகத்தில் மழைச் சாரலடித்தது. அது அவளை
உசுப்பிவிட்டது.
'ஆமா. சின்னவனை
வேலைக்கனுப்பித்தா இந்தக் கெழவி பட்டும், மூக்குத்தியுமாப்
போட்டு மினுக்கிக்கப் போறேம் பாரு. வெளாடுற
வயசுல அப்படி இப்படித்தா இருப்பான். யேன் நீ
இருக்கல? உன் தம்பிதான.. நீ
கூட்டிட்டுப் போ.. பட்டற வேலைய அவனுக்கும் கத்துக் குடு. நானா
வேணாங்குறே?' அவிழ்ந்த தலைமுடியைச் சுருட்டிக் கொண்டை
கட்டியவாறே மீண்டும் வாசலோரச் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி குரலெழுப்பிச் சொன்னாள்
வள்ளித்தாயி.
'க்கும். தெருவுல போற
ஆனக்கிச் சாப்பாடு கொடுக்குறது இருக்கட்டும்..முதல்ல வளக்குற பூனக்கி மீதியைக் கொடுங்குற கதையா, இருக்குற ஒரு பட்டறக்கே அப்பவோ
இப்பவோன்னுதா வேலை வருது. எல்லாத்துக்கும் மெஷினுன்னு வந்தபொறவு
எவன் வாறான் அருவா செய்ய கோடரி செய்ய மம்பட்டி செய்யன்னு. இதுல இவனயும்
கூட்டிட்டுப் போய் வெட்டியா சோறு போடச் சொல்றியா?'
இதுவரையிலும் நிலத்திலமர்ந்து, சுவரின்
மூலையில் சாய்ந்து, கிழிந்த துணியொன்றைத் தைத்துக்
கொண்டிருந்த மருமகள் முதன்முதலாக வாயைத் திறந்து சொன்னதைக் கேட்டதும் ஆவேசம் வந்தவளைப்
போலானாள் அவள்.
'எண்ட ராசா
எங்கிட்டும் போய்ச் சோத்துக்குக் கெஞ்சப் போறதில்ல. இந்தக்
கெழவிக்கு ஒடம்பு குளுந்து போகாம இருக்குற மட்டும் அவன நா பாத்துப்பே. பெத்தவளுக்கு
வளக்கத் தெரியாது? வக்கப்போருல மழக்கி மொளச்ச காளானப்போல
நேத்து வந்தவளுங்கெல்லாம் அவனுக்குப் பொங்கிப் போடத் தேவல்ல. நடு முதுகுல
வந்த கட்டி மாதிரி சொமையா நெனக்கத் தேவயுமில்ல. நா
எதுக்கிருக்கே. நா ஆக்கிப் போடுறே..நா பார்த்துப்பே'
இதைக் கேட்டதும் மருமகளுக்கு இப்பொழுது
கோபம் வந்துவிட்டது. தைத்துக் கொண்டிருந்த துணியைச் சுருட்டி
ஒரு மூலைக்கு எறிந்தாள். குளித்த தலை காய, அவிழ்த்துப் போட்டிருந்த கூந்தலைக்
கொண்டையாகக் கட்டிக் கொண்டு, வலுத்த மழை தகரக் கூரையில் எழுப்பும்
சத்தத்தை விட அதிகமான சத்தத்தோடு அவளும் குரலுயர்த்தினாள். அவளுக்குக்
கீச்சுக் குரல். தகரத்தில் கம்பியால் கீறுவதைப் போல அது
மாறியிருந்தது இப்பொழுது.
'நேத்து வந்தவளாம்ல..சூடு சொரணயிருக்குறவங்க இதுக்கு மேல இங்க
இருப்பானுங்களா? இதுக்குத்தா நா இதுக்கிட்ட படிச்சுப்
படிச்சுச் சொன்னே. நம்மள மதிக்காதவோ வூட்டுக்கு எதுக்குப்
போவணும்னு...கேட்டுச்சா
இது? ஏதோ வூட்டுல மூட்ட மூட்டயா பொதையல் கட்டி
வச்சிருக்காப்புலல்ல வூட்டுக்குப் போவணும்னு அடம்புடிச்சுக் கூட்டி வந்துச்சு?'
அவளுக்கு தன் மாமியார் வீட்டுக்கு வர
விருப்பமே இருக்கவில்லை. ஊரில் கல்யாண காலம் இது. சமையல், கூலி
வேலைகளுக்குப் போனால் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். உடுத்துக்
கொள்ளப் பழந் துணிகளும் கிடைக்கும். போதாதற்கு
மாமியார் வீட்டுக்கு மூன்று பஸ்கள் மாறி மாறி வரவேண்டும். அவன் எங்கே
கோபித்துக்கொண்டு தனியே போய்விடுவானோ என்ற பயத்தில் அவன் தன் அம்மா வீட்டுக்குக்
கூப்பிடும்போதெல்லாம் முடியாதென அடம்பிடித்துச் சண்டை போட்டுவிட்டுப் பின்னர்
அவனுடன் சேர்ந்து வந்து விடுவாள்.
'ஏம் புள்ள
என்னப்பாக்க வராம வேற எங்கிட்டுப் போவான்? இந்த வூட்டுல
பொதையல் இல்லாமப் போனாலும் அவன் பொறந்து வளந்த வூடு. அவன்
மண்ணள்ளித் தின்ன வூடு. இந்த வூட்டுல நா பொணமா வுழுற வரைக்கும்
அவன் வரத்தான் செய்வான்..நீ இவன
முந்தானைல முடிஞ்சிக்க நெனச்சாக் கூட எண்ட வூட்டுப் புள்ள அதுக்கெல்லாம் ஒத்துவர
மாட்டான். போக்கிடமில்லாத சோம்பேறிக் கழுதயப்
புடிச்சுக் கொண்டு வந்து அவன் கட்டிக்கிட்டதுக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ'
நகரத்தில் இரும்புப் பட்டறை வேலைக்கெனப்
போனவன் ஒரு நாள் அவளைக் கோயிலில் வைத்துத் தாலி கட்டிக் கையோடு கூட்டிக்கொண்டு
வந்து நின்றான். வள்ளித்தாயி வாசலருகே இருந்து முதலில்
கத்திப் பார்த்தாள். அவனை எப்படியெல்லாம் தான் கஷ்டப்பட்டு
வளர்த்த கதையைச் சொல்லி, ஒப்பாரி வைத்து அழுதாள். அக்கம்பக்கத்து
வீட்டு ஆட்களெல்லாம் வந்து சமாதானம் செய்த பிறகுதான் அவர்களை உள்ளே விட்டாள். முதல் சில
நாட்களுக்கு மகனையோ, மருமகளையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூலைக்கு
மூலை அமர்ந்து புலம்பி அழுதுகொண்டிருந்தாள். வீடுகளுக்கு
பாத்திரம் கழுவப் போகையில், விஷயம் கேள்விப்பட்டு
விசாரிப்பவர்களிடமெல்லாம் வசியம் வைத்து, மருந்து
கொடுத்து தன் மகனை மயக்கிவிட்டதாக மருமகளைக் குறைசொல்லி திட்டியபடியே இருந்தாள்.
'ந்த.. கழுத
கிழுதன்ன..அப்றம்
நடக்குறதே வேற..தோ..இந்தக் கழுததான் எம்பின்னால வந்துச்சு.. மொளகாயக்
கடிச்சேனோ..கஞ்சியக்
குடிச்சேனோன்னு அர வவுறு நெறஞ்சாலும் எம் பாட்டுல நிம்மதியாக் கெடந்தேன். புலாலுக்குப்
பின்னால போற பூன மாதிரி சத்தமில்லாம வந்து தாலியக் கட்டிக்கிட்டதுக்கு சொத்தக்
கண்டேனா..சொகத்தக்
கண்டேனா..ஆஸ்தியக்
கண்டேனா..அந்தஸ்தக்
கண்டேனா'
சத்தமாக ஆரம்பித்தவள், இறுதிவரிகளைச்
சொன்னபோது விசும்ப ஆரம்பித்தாள்.
' ஆமா.. பெரிய ராசா
வூட்டு மக பாரு. வரிசயாக் கெடந்தானுங்க இவளத்தான்
கட்டிக்கணும்னு..கேக்கப்
பாக்க நாதியத்துக் கெடந்தவளுக்கு வாழ்க்க கொடுத்தேம்பாரு..என்னச் சொல்லணும்'
இவ்வளவு நேரமும் கண்ணை மூடியவாறு
தூங்கியது போல படுத்துக் கொண்டிருந்தவன் ஓட்டுக்குள்ளிருந்து தலையை நீட்டும்
ஆமையைப் போல தலையை உயர்த்திப் பார்த்து அங்கிருந்தபடியே கத்தினான். அவளை
முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டான்.
'ராசா மகளோ இல்லயோ..எங்க அப்பன் என்ன ராசா மக போலத்தான்
வளத்தாரு..செறப்பாத்தானே
இருந்தேன்..மகராசா ஒரு
நாளாச்சும் என்னப் பட்டினியில போட்டிருக்குமா..இப்படி எங்கிட்டோ வந்து கதறத்தான் விட்டிருக்குமா..செருப்புக்கு அளவா கால வெட்டிக்கிடற மாரி
வெட்டிக்கிட்டு ஓடி வந்து கானல் தண்ணிய நம்பிப் பாழுங்கெணத்துக்குள்ள குதிச்ச
கதயாப் போச்சு யேன் வாழ்க்க'
' பெத்தவன் மேல
அம்புட்டுப் பாசமிருக்குறவ இப்படி எதுக்கு எவன் கூடவாவது ஓடியாரணும்..? ஓலப்பாயில
நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி சலசலன்னு பொலம்பிட்டுக் கெடக்கணும்..? அவன வுட்டுப்
போயிட வேண்டியதுதான?'
இப்பொழுது வள்ளித்தாயி குரலுயர்த்த, தனக்கு இரு
புறத்திலிருந்தும் ஆதரவில்லை என்பதை உணர்ந்தவள் வாய்க்குள் ஏதேதோ முணுமுணுத்தபடி
வெடித்து அழுதாள். அவள் இவனுடன் வந்ததிலிருந்து, அவளது
வீட்டில் அவளைச் சேர்க்கவில்லை. திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவளுக்கு
மூத்தவளும் இளையவள்களுமாக வீட்டில் 5 பேர். அம்மா இல்லை. அப்பாவும்
மற்றவர்களும் கூலி வேலைகளுக்குப் போய் எப்படியோ சீவனம் நடத்திக் கொண்டு போக, இவளால்
ஏற்பட்ட அவப்பெயர் மற்றப் பெண்களின் திருமணத்திற்குப் பெறும் குறுக்கீடாக இருந்தது. அவனது
அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு போன பிறகு அவளிடம் இருந்த தோடுகளையும் வளையலையும்
விற்று, அவளது ஊரில் வாடகைக்கு ஒரு சிறிய வீடு
தேடிக் குடியேறியிருந்தார்கள்.
'வுட்டுப் போறதுக்கா
நம்பிக் கழுத்த நீட்டினேன்? எத்தன சொம வந்தாலும் கண்ண மூடுற காலம்
மட்டும் ஒண்ணாச் சேந்திருப்போமுன்னுதான் இந்தக் கழுத மஞ்சக் கெழங்கச் சொமந்து
வாக்கப்பட்டுச்சு. பாத்துக்க. பெத்த
பயலுக்கு பொஞ்சாதியக் காலம் பூராம் நல்லபடியா வச்சுக் கஞ்சி ஊத்துன்னு சொல்லிக்
குடுக்காம கெழவி என்னெல்லாம் சொல்லிக் குடுக்குது. சோத்துக்கு
வக்கத்த குடும்பம்னாலும் கெட்டது சொல்லிக் குடுக்க மட்டும் நல்லாத் தெரிஞ்சிருக்கு
பூராத்துக்கும்'
அவள் விசும்பிக் கொண்டே இருந்தாள். அமர்ந்திருந்த
இடத்திலேயே காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். ஈரலித்த மண்
தரை குளிர்ந்திருந்தது. உடல் சிலிர்த்தது.
'க்கும்.. செவப்புத்
தோலுக்கு மயங்கினானோ..முழிக்குற
முழிக்கு, ஆட்டுற நடக்கி மயங்கினானோ..நோய்காரின்னு தெரியாம கட்டிக்கிட்டு
வந்து நின்னவன் எம் பேச்சக் கேட்டானா? உண்டதுமில்ல..கொண்டதுமில்ல..பூ வச்சுக் கட்டக் கொண்டயுமில்ல..நாலு சுத்து சுத்திக் கட்ட
சேலயுமில்லங்குற கதயா உருப்படியில்லாத மலட்டுச் சிறுக்கியக் கட்டிக்
கூட்டிக்கிட்டு வந்தான். அப்பவே அத்துட்டிருந்தா நாறச் சிறுக்கி
மக இப்படிப் பழிபோட்டுப் பேசுவாளா?'
நான்கு வருடங்களுக்கு மேலாகியும்
தனக்குக் குழந்தையில்லையென்ற கவலை உள்ளூர ஊறிப் போயிருந்தது அவளுக்குள். அந்தப்
புண்ணைக் கிளறிவிட்டது வள்ளித்தாயியின் பேச்சு. வலிக்க
வலிக்கக் கீறப்படும் ரணம். போகுமிடமெல்லாம் அன்பான விசாரிப்புக்கள்
போலப் புறப்படும் முட்கள். புண்ணைக் கீறி, மேலும்
மேலும் ரணமாக்கி, பெரும் வலியில் வெளிப்படும் அவளது
அழுகையைக் காணும் உள்ளூர ஆவலுடனான விசாரணை அது. அவளுக்குப்
பின்னால் ஊர் முழுதும் அவளைப் பற்றிப் பேசப்படும் பேச்சுக்கள் குறித்து அவள்
அறிந்திருந்தாள். கணவனிடம் சொல்லிப் பல தடவை
அழுதிருக்கிறாள்.
'ந்த..ஒண்ணுமில்லாத விஷயத்துக்குத் தொண
தொணன்னுக்கிட்டு..செத்த கண்ணசர
வுடுறீங்களா..முட்ட போட்ட
கோழிங்க மாரி கொக்கரிச்சுக்கிட்டு...மனுச இருப்பானா இந்த வூட்டுல'
மழை விட்டிருந்தது. கட்டிலிலிருந்து
லேசாகக் கழுத்தை உயர்த்தியவன் இருவரையும் பார்த்துக் கத்தினான். அவனது சத்தம்
பலமாக இருந்தது. இடி இடிப்பதைப் போல. பெரிய
மரமொன்று உடைந்து விழுவதைப் போல. வாசலருகே அமர்ந்திருந்த வள்ளித்தாயியின்
குரல் அடங்கியது. ஏதோ வாய்க்குள் முணுமுணுத்தாள். மருமகளது
விசும்பல் தொடர்ந்தும் கேட்டது.
மழைக்குச் சாத்தியிருந்த கதவைத்
தள்ளிக்கொண்டு அவள் இவ்வளவு நேரமும் தேடிக் கொண்டிருந்த அவளது இளைய மகன் 'அம்மா..பசிக்குது' எனக் கத்திக்
கொண்டு உள்ளே வரும் வரை அந்த நிலையே நீடித்தது. பின்னங்கால்களில்
பொட்டுப் பொட்டாய்ச் சேறு. தலை, உடலெல்லாம்
மழை ஈரம். கைகளில் நெளிந்த சைக்கிள்
டயர். ஒரு நீளக் குச்சி. அவனைக்
கண்டதும் அவ்வளவு நேரமும் புகைந்துகொண்டிருந்த தணல் பற்றியெரிவது போல ஆவேசத்தோடு
எழுந்த வள்ளித்தாயி, அவன் கையிலிருந்த குச்சியைப் பிடுங்கி
தாறுமாறாய் அவனை அடிக்கத் தொடங்கினாள்.
'பசிக்குதாம்ல..இம்புட்டு நேரம் தெரு நாய் மாரி எங்க
போய்ச் சுத்திட்டு வரே...அங்கயே
போய்ச் சாப்டுக்க வேண்டியதுதான..இங்க எதுக்கு
வரே? உனக்கு இன்னிக்குச் சோறு கெடயாது..பட்டினி கெட எரும மாடு..உன் காலு ரெண்டையும் முறிச்சுப் போடுறேம்
பாரு..எங்கிட்டுச் சுத்தப்
போறேன்னு பாக்குறேன் நானு இனிமே'
வலி தாங்காமல் அவன் கத்தியழ ஆரம்பித்தான். வள்ளித்தாயி
இப்பொழுது குச்சியை விட்டுவிட்டு கையால் அவன் முதுகில் ஓங்கி ஓங்கி அறைய ஆரம்பித்தாள். அவன் 'அம்மா அம்மா' என்றே கத்தியழுதான். மூத்தவன்
திரும்பிப் பார்த்துத் திரும்பவும் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டான். மருமகள்
எழும்பி ஓடி வந்து சின்னவனை இழுத்தெடுத்துத் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டாள்.
'சின்னப் புள்ளயப்
போட்டு மாட்டுக்கு அடிக்கிற மாரி அடிக்குற? பெத்த
அம்மாவா நீயி?'
மிகச் சத்தமாய் மருமகள் கத்தியதும், வள்ளித்தாயியின்
ஆவேசமெல்லாம் அடங்கிப் போனது போல, அப்படியே
தரையில் அமர்ந்துகொண்டாள். மருமகள், அவன்
முகத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டாள். தான்
கட்டியிருந்த சேலை முந்தானையெடுத்து அவன் தலையைத் துவட்டிவிட்டாள். பின்னர்
உள்ளே போய்த் தட்டெடுத்து அதில் சோறு, ரசமென
ஊற்றிப் பிசைந்து எடுத்துவந்தாள். அவன் இன்னும்
கத்தி அழுதுகொண்டே தன் அண்ணியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னால்
நின்றுகொண்டிருந்தாள். வள்ளித்தாயி தன் அழுகையை மறைக்கப் போல
முற்றத்துச் சகதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'பாரு மேலெல்லாம்
எப்படி வீங்கியிருக்குன்னு...அழுவாத ராசா..அண்ணன் தூங்குதில்ல..இந்தா சாப்டு ராசா'
அவனை அருகிலமர்த்தி, அவளும்
அமர்ந்து, விம்மிக் கொண்டே சோற்றைப் பிசைந்து
அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - ஆகஸ்ட்,
2012, காற்றுவெளி இதழ், பதிவுகள் இதழ், சிறுகதைகள் இணையத்தளம், ஓவியர் - Ganga Narayan Maharana