பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு,
அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க
முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள்.
காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும்
முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த
அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது.
மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது.
ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை
மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின்
மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு.
விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான்.
அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும்
உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன்
எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத்
தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை.
போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா
என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும்
செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் 'பாருய்யா
பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல' என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே
இருந்தாள்.
பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக்
கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது.
இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத்
தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப்
போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை
விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை.
காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம்
கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை.
வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து
காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து
விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது
அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து
கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப்
போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப்
பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு
எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை.
எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச்
சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட
தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த
போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
புஷ்பமாலா சலிக்காது இலையான்களை
விரட்டிக் கொண்டிருந்தாள். யாராவது அவர்களைப் பார்த்துக் கொண்டு
வருவதைக் கண்டால் குழந்தையைப் படுக்க வைத்திருந்த தொடையினை ஆட்டி தாலாட்டுவது போல மெலிதாக
வாய்க்குள் முணுமுணுத்தாள். பச்சை நிற பழைய சீலையொன்றால் சுற்றி
பிணத்தை அவளிடம் கொடுத்திருந்தார்கள். பிணம் என்பதாலோ என்னவோ
அது பெரிதாய்க் கனத்தது போல உணர்ந்தாள். முகத்தை மட்டும் திறந்து
மற்ற எல்லாவற்றையும் முழுவதுமாகச் சுற்றி மறைத்திருந்தாள். ஏனைய
நாட்களிலென்றால் அவளுக்குத் தரப்படும் குழந்தை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறதா என
அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். சாயத் தேனீர் வாங்கி போத்தலில்
நிரப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று அந்தத் தொந்தரவு ஏதும்
இல்லை. ஆனாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள்.
இன்றைக்கு தன் மடியிலிருக்கும் குழந்தைப் பிணம் நாளைக்கு எங்கிருக்குமோ?
பிண வாடையை அவள் லேசாக உணர்ந்தாள். அதை அவளால்
மட்டுமே உணர முடிந்தது. விகாரை வளவுக்குள் பரவலாகப் புகைந்து
கொண்டிருந்த சந்தனத்திரி வாடையும், புத்தருக்குப் படைக்கப்பட்ட
பூக்களின் நறுமணமும், பக்தர்களிடமிருந்து எழுந்த வாசனையும் பிண
வாடையை எப்படியும் மறைத்துவிடக் கூடும் என்பதால் அவள் சற்று தைரியமாக இருந்தாள்.
புஷ்பமாலா குழந்தையைப் பார்த்தாள்.
அதன் சிவப்பு நிறம் கறுப்பாக மாறிக் கொண்டு வருவதைக் கவனித்தாள்.
தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. எப்படியும்
அழுகி விடும். விடிகாலையில் செத்துப் போயிருக்கிறது. இரண்டு நாட்களாக வயிற்றோட்டமும், வாந்தியும்,
காய்ச்சலுமென அவஸ்தைப்பட்டு இன்று அதிகாலையில் உயிரை விட்ட எட்டு மாதக்
குழந்தை. வழமையாக ஏஜண்ட்காரன் வாடகைக்கு எடுத்துவரும் குழந்தைதான்.
இவளுடன் இதற்கு முன்பும் பிச்சைக்கென இதே குழந்தையைக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள்.
குழந்தைக்கு ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாய். எப்படியும்
அதற்கு மேலேயே அது உழைத்துக் கொடுக்கும். அதற்காக மழையும்,
வெயிலும் பாராமல், ஒழுங்காக பால் கொடுக்காமல் தெருவில்
காலை தொடக்கம் இரவு வரை வைத்திருந்தால் குழந்தை உடம்பு என்னவாகும்? அதிலும் அதனை அடிக்கடி அழ வைக்க வேண்டுமென்பதற்காக தூங்க விடாமல், வயிறு நிறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான்
தாங்கும் குழந்தை? ஆனாலும் அவளுக்குக் கிடைக்கும் ஊதியத்தை விடவும்
அதிகமாக அந்தக் குழந்தையை வாங்கும்போதே அதன் தாய்க்காரிக்கு குழந்தையின் ஒரு நாள் வாடகையாக
முழுமையாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால்
அதன் தாய்க்காரி சண்டைக்கு வந்துவிடுவாள் என்று தெரியும். காசைக்
கண்ணில் காட்டாமல் குழந்தையைக் கொடுக்கவும் மறுத்துவிடுவாள். இந்தக் காலத்தில் பிச்சையெடுக்கவென குழந்தைக்கு எங்கு போவது? பிச்சைக்காரியின் கையில் குழந்தையொன்றைப் பார்த்தால்தான் பரிதாபப்பட்டு கொஞ்சம்
அதிகமாகப் பிச்சை போடுவார்கள். பிச்சை போடுபவர்களின் மனிதாபிமானத்தின்
அளவும், அப்போதைய கையிருப்பின் அளவும்தான் போடப்படும் பிச்சைத்
தொகையைத் தீர்மானிக்கிறது என்பதை புஷ்பமாலா அறிவாள். ஒருவரைப்
பார்த்தவுடனேயே அவள் அவர் குறித்து மதிப்பிட்டுவிடுவாள். இவரிடம்
பிச்சை தேறுமா, எவ்வளவு தேறும் என்பதையெல்லாம் அவளது அனுபவ உள்ளுணர்வு
சொல்லிவிடும். அது ஒருபோதும் பிழையாகிப் போனதில்லை. அவளது கையில் குழந்தையொன்றிருந்தால் அன்று எப்படியும் நிறைய காசு தேறும்.
பிச்சை போடுபவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அக் குழந்தையோடு ஒப்பிட்டுப்
பார்த்து பரிதாபப்பட்டு எப்படியும் பிச்சை போட்டு விடுவார்கள்.
வெள்ளை உடுத்திக் கொண்டு விகாரைக்கு
வந்த பக்தர் கூட்டமொன்று அவளை நோக்கி வருவதைக் கண்டாள். குழந்தையின்
தலை வைத்திருந்த தொடையை ஆட்டிக் கொண்டே தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி, வந்த கூட்டத்திடம் கையை நீட்டி இறைஞ்சினாள். வந்தவர்கள்
ஒவ்வொருவராக பத்து ரூபாய் நோட்டுக்களை அவள் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டுச்
சென்றார்கள். அவள், அவர்கள் போகும்வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படியும் இன்றைய வருமானம் ஐயாயிரத்தைத் தாண்டி விடும். காலையிலிருந்து எவ்வளவு பக்தர் கூட்டம்... எந்நாளும்
இப்படியில்லை. வருடத்துக்குச் சில நாட்கள்தான். புத்தரின் பிறந்தநாள் வழிபாடுகளுக்காக அந்த விகாரை வருடந்தோறும் இந்த நாட்களில்
எப்படியும் பக்தர்களால் நிறைந்துவிடும். வந்தவர்கள் தமது பாவங்களைக்
கரைக்கவென்று உண்டியலிலும், பிச்சைக்காரர்களது தட்டுக்களிலும் காசுகளை இறைத்துக் கொண்டிருந்தார்கள்.
புஷ்பமாலா குழந்தையை அடுத்த தொடைக்கு மாற்றிக் கொண்டாள். எவ்வளவுதான் வெயிலடித்தபோதிலும், உஷ்ணமாக இருந்தபோதிலும்
குழந்தை குளிர்ந்து விரைத்திருந்தது. வெள்ளைத் துணியில் சேர்ந்திருந்த
ரூபாய் நோட்டுக்களை எடுத்து மடித்து, தான் உட்கார்ந்திருந்த துணியின்
உள்மடிப்பில் செருகி வைத்தாள். விரித்து வைத்திருந்த வெள்ளைத்
துணி நிறைய ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தால் எவரும் பிச்சை போட மாட்டார்கள் என்பது
அவளுக்குத் தெரியும்.
அவளிருந்த சேரியில் அனேகருக்கு
பிச்சை எடுப்பது என்பது முக்கியமான ஒரு தொழில். ஊர் உலகத்தில்
ஏதாவது பண்டிகை நெருங்கும்போது ஏஜண்ட்காரர்கள் அந்தச் சேரியைத்தான் தேடி வருவார்கள்.
அந்தச் சேரி ஏஜண்ட், ஆளுக்கு இவ்வளவுதான் என எவ்வளவு
சொல்வானோ அதை எடுத்து வைத்துவிட்டு அந்த சேரி வயோதிபர்களையும், சிறுவர், சிறுமிகளையும் கூட்டிச் சென்றுவிடுவார்கள்.
வருபவர்கள் மத்தியில் பத்தொன்பது வயது புஷ்பமாலாவுக்கு எப்பொழுதும் கிராக்கி
இருக்கும். கறுப்பு நிறமும், மூக்கு வரை
பிளந்த மேலுதடும், வளைந்த ஒரு கையும் அவளுக்கான வாடகையை அதிகப்படுத்தியிருந்தது.
சேரி ஏஜண்டிடம் அவளுக்கான வாடகையை மொத்தமாகக் கொடுத்துவிட்டு பண்டிகைக்
காலங்களில் கண்டிக்கோ, அனுராதபுரத்துக்கோ, பொலன்னறுவைக்கோ அவளைக் கூட்டிக்கொண்டு செல்லும் ஏஜண்ட் அவளைத் திருப்பியனுப்பி
வைக்கும்போது ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அனுப்புவான். ஒரு மாத
காலத்துக்கும் மேலாக வெயிலிலும் மழையிலும் அவள் உழைத்ததற்கு அது மட்டும்தான் அவளிடம்
எஞ்சும். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது அவளது அம்மாவிடம்
சேரி ஏஜண்ட் அவளுக்காகக் கொடுத்த காசு முழுவதுமாகத் தீர்ந்து போயிருக்கும்.
அம்மா, இவளிடமிருப்பதை நச்சரித்துக் கேட்டு வாங்கிக்
கொள்வாள். ஆனாலும் அம்மாவை புஷ்பமாலாவுக்கு மிகவும் பிடிக்கும்.
பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவளது
அம்மாவைத் தேடி வருவார்கள். ஒருமுறை ஒரு பிரபல நடிகையொருத்தி
கூட அம்மாவைத் தேடி வந்திருந்தாள். கவனக்குறைவால் மூன்று மாத
காலத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த கர்ப்பத்தை அம்மாதான் கலைத்து விட்டாள்.
சேரிக்குள் எல்லோருக்கும் இது தெரியும். யாரும்
காட்டிக் கொடுக்கவில்லை. பொதுவாக அப்படி யாரும் காட்டிக் கொடுப்பதில்லை.
சேரிக்குள் எல்லோருமே ஏதோவொரு தப்பான செயலைத்தான் தமது ஜீவனோபாயமாகச்
செய்துவருகிறார்கள். நெருக்கமான வீடுகள், குறைந்த வசதிகள், தீய பழக்கவழக்கங்கள் காரணமாக ஒருவருக்கொருவர்
சண்டை பிடித்துக் கொள்வார்கள்தான். கெட்ட கெட்ட வார்த்தைகளால்
திட்டிக் கொள்வார்கள்தான். ஆனால் அதற்காக காட்டிக் கொடுக்க முடியுமா?
அம்மாவுக்கு, புஷ்பமாலாவின் அக்காக்கள் இருவரும்
இந்த வேலைகளில் உதவி செய்வார்கள். எப்படியும் மாதத்துக்கு நான்கைந்து
பெண்கள் அம்மாவைத் தேடி வந்துவிடுவார்கள். ஆளைப் பார்த்து எடை
போட்டு அதற்கேற்ப காசு வாங்கிவிடுவாள் அம்மா. கல்லூரி மாணவிகள்
நிறையப் பேர் வருவார்கள். ஒரு தடவை பள்ளிக்கூட மாணவியொருத்தியும்
வந்திருந்தாள். புஷ்பமாலா வயதுதான் இருக்கும். ஆளை, வயதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
வரும்வரைக்கும் இலாபம். எப்படியும் இந்த வருடத்துக்குள்
மூத்த அக்காவின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென அவளது அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அதிர்ஷ்ட லாபச் சீட்டுகள் விற்கும் சைமன் ஒரு நாள் அம்மாவிடமே நேரடியாக
அக்காவைப் பெண் கேட்டிருக்கிறான். அம்மா, அக்காவிடம் அவளது விருப்பம்
பற்றி எதுவும் கேட்கவில்லை. 'இந்த வருடத்துக்குள் அவனுடன் உனக்குக்
கல்யாணம்' என உத்தரவாகச் சொல்லி விட்டிருந்தாள். சைமனின் அம்மா எப்பொழுதும் குடித்துக் கொண்டேயிருப்பாள். அவளுடன் எப்படியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அக்காவுக்கென்று தனிக்குடிசையொன்று வாடகைக்கு எடுக்கவேண்டுமென அம்மா
தேடிக் கொண்டிருந்தாள். அது இந்தச் சேரியைத் தாண்டி வேறெங்காவது
இருந்தால் நல்லது என ஒருநாள் அவளது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருக்கையில் புஷ்பமாலா
கூறினாள். அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. அதுதான் அக்கா. அவளுக்கு திடீர் திடீரென கோபம் வரும்.
எதற்கென்றில்லை. அதனாலேயே ஒரு இடத்தில் வேலை பார்க்க
முடியாது. முன்பு பங்களாக்களுக்கு வேலைக்குச் சென்றவளால் அங்கெல்லாம்
ஒரு கிழமைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்துவிட்டாள். அம்மா, அடி அடியென அப்படி அடிப்பாள். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாளேயொழிய கோபத்தைக் கட்டுப்படுத்த
சிறிதும் முயற்சிக்க மாட்டாள். 'எல்லோரும் சேர்ந்து என்னை இங்கிருந்து
துரத்திடலாம்னு பார்க்குறீங்களா?' என அக்கா கத்தினாள்.
சின்னக்கா ஓடி வந்து சமாதானப்படுத்தினாள்.
புஷ்பமாலாவுக்கு மூத்தவளை விடவும்
சின்னக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவள்தான் இவளுக்கு தலைக்கு
ரிப்பன், முகத்துக்கு பவுடர் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பாள்.
புஷ்பமாலா எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்கும் பச்சை நிறச் சீப்பு அவள்
வாங்கிவந்து கொடுத்ததுதான். அவளுக்குத்தான் அந்த வீட்டில் முதன்முதல்
கல்யாணம் ஆனது. கல்யாணம் என்பது விழா எடுத்துச் செய்வது என்றால்
இது அப்படியில்லை. தனது பதினாறு வயதிலேயே பஸ் கண்டக்டராக வேலை
பார்க்கும் ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள். அவனும் இந்தச் சேரிக்குள்தான்
இருந்தான். இரண்டு நாள் கழித்து இருவரும் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு
சேரிக்கு வந்தார்கள். அம்மா விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு அவர்களை
அடிக்க ஓடினாள். 'எங்களை ஏதாவது செஞ்சே..நாங்க ஒன் தொழிலப் பத்தி பொலிஸ்ல சொல்லிடுவோம்' என்று
அவன் மிரட்டினதும் அடங்கினாள். அம்மா எதற்கும் பயப்படுபவளில்லை.
ஆனாலும் இந்த வார்த்தைகளுக்கு அவள் பயந்துதான் போனாள். 'எக்கேடு கெட்டும் போ' எனக் கத்திவிட்டு வீட்டுக்கு வந்தவள்
அன்றைய நாள் முழுக்க வாசலில் துப்பிக் கொண்டே இருந்தாள். அசிங்கமாகிக்
கூழான குழந்தைகளின் இரத்தக் கட்டிகளைப் பார்த்துக் கூட அவளுக்கு இதுவரை அப்படியொரு
அறுவெறுப்பு தோன்றியதில்லை. புஷ்பமாலாவின் அப்பாவைப் புதைத்த
அன்றுகூட அப்படித்தான். வந்திருந்த எல்லோரையும் தாண்டிப் போய்
துப்பி விட்டு வந்து கொண்டிருந்தாள். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட
வரவில்லை அவளுக்கு.
புஷ்பமாலாவுக்கும் அப்பாவைப் பிடிக்காது.
எப்பவுமே போதையிலிருப்பவனை எவருக்குத்தான் பிடிக்கும்? அவளது அப்பாவுக்கு நிரந்தரத் தொழிலில்லை. கஞ்சா கடத்துவான்,
தெருவோரத்திலிருக்கும் வாகனங்களின் பாகங்களைத் திருடி விற்பான்,
தப்பான தொழில் செய்யும் பெண்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷன்
வாங்குவான். புஷ்பமாலாவை பிச்சைக்கார ஏஜண்டுக்கு முதன்முதலில்
விற்றதும் அவன்தான். அப்பொழுது அவளுக்கு நான்கு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை.
கூட்டிப் போனவன் காலை முதல் மாலை வரை பேருந்துகளில் ஏற்றி பிச்சை எடுக்க
வைத்தான். 'அம்மா, அப்பா யாருமில்லை.
பசிக்குது' என அழுது பிச்சையெடுக்கச் சொன்னான்.
அவளுக்குச் சும்மாவே அழுகை வந்தது. 'அம்மா,
அம்மா' என அரற்றினாள். முதல்
நாளே நூறு ரூபாய்க்கும் மேலான வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டாள். ஒரு ராசியான பிச்சைக்காரியாக அவள் ஆனது அன்றிலிருந்துதான்.
செத்துப் போயிருந்த குழந்தையின்
தாய் இவளை நம்பித்தான் குழந்தையைக் கொடுத்திருந்தாள். குழந்தையைக்
கூட்டி வரவென விடிகாலையில் சக யாசகர்கள் எல்லோருடனும் வேனில் இவளும் போயிருந்தாள்.
யாரும் வேனை விட்டு இறங்கவில்லை. ஏஜண்ட் போய்ப்
பார்த்துவிட்டு வந்து 'அது செத்துப் போயிருக்கு' என்றான். இவள் பதறிப் போய், வேனை விட்டு இறங்கிப் போய்ப்
பார்த்தாள். நிலத்தில் கிடத்தப்பட்டிருந்த குழந்தைக்கருகில் சாய்ந்து
படுத்திருந்த அதன் அம்மா இவளைக் கண்டதும் எழுந்து அழத் தொடங்கினாள். இவள் அருகில்போய் அந்த அம்மாவினது முதுகை தனது வளைந்த கையால் தடவிக் கொடுத்தாள்.
அந்தக் குழந்தைக்கு தந்தை இல்லை. 'வளர்ந்து பெரியவளாகி
விட்டிருந்தாலும் அதன் அம்மாவைப் போல தப்பான தொழிலுக்குப் போயிருக்கும். அப்படிப் போகவில்லையாயினும் ஊரும் உலகமும் என்னவெல்லாம் பேசி அதன் மனதை நோகடிக்கும்.
நல்ல விதியைக் கொண்டு பிறந்திருக்கிறது அது. அதனால்தான்
கொஞ்சநாளிலேயே மண்ணுக்குப் போகும் அதிர்ஷ்டம் அதற்கு வாய்த்திருக்கிறது' என புஷ்பமாலா நினைத்துக் கொண்டாள். ஏஜண்ட்காரன்தான் தவியாய்த்
தவித்துக் கொண்டிருந்தான். வெசாக் நாளும் அதுவுமாக குழந்தை இல்லாமல்
பிச்சையெடுக்கப் போனால் காசு அதிகமாகத் தேறாது எனப் பொருமினான். 'ரெண்டாயிரம் தந்துட்டு வேணும்னா புள்ளயக் கொண்டுபோ..அந்திக்கு
கொண்டு வந்து கொடுத்துடு. நாறிப் போறதுக்கு முன்ன புதைச்சிறணும்...புதைக்கிற செலவுக்குக் கூடப் பணமில்ல' என்று குழந்தையின்
அம்மா சொன்னதும்தான் அவன் முகத்தில் ஒரு சாந்தம் தோன்றியது. அவன்
அதனை எதிர்பார்க்கவில்லை. அந்த யோசனை அவனுக்குக் கூட வரவில்லை.
இரண்டாயிரம்தானே? தங்க முட்டையிடும் வாத்து.
கொடுத்துவிட்டால் போச்சு. அடிக்கடி துணி மாற்ற
வேண்டாம். தேனீர் வாங்கிக் கொடுக்க வேண்டாம். எந்தத் தொந்தரவும் இருக்காது. பொம்மையைத் தூக்கிக் கொண்டு
போய் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பதுபோல கொடுத்து விடலாம். அதனை வைத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமாகவே உழைத்துவிடலாம். அழுது கொண்டிருப்பவளிடம் பேரம் கூடப் பேசவில்லை. பிணத்துக்கு
மேலால் நிறைய வாசனைப் பவுடர் தூவி பழந்துணியால் நன்றாக சுற்றியெடுத்து புஷ்பமாலாவிடம்
கொடுத்தான். அவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அந்தியானதும் குழந்தையைக் கொண்டு வந்து அதன் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அதைப்
புதைக்கும்வரை கூடவே இருக்கவேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.
தூரத்தில் ஏஜண்ட்காரன் வருவது தெரிந்ததும்
இன்னும் கடுமையாகப் பசித்தது. ஏஜண்ட்காரனைப் பார்த்ததுமே அவன்
முகத்தில் இருக்கும் ஒரு அப்பாவித்தனம்தான் முதலில் தெரியும். ஆனால் பொல்லாதவன். முரடன். அப்படியிருக்காவிட்டால்
அந்தப் பிச்சைக்காரர்களை கட்டிமேய்க்க முடியாதென்பதை அவன் அறிவான். ஆனாலும் புஷ்பமாலா மேல் அவனுக்கு தனிப்பட்ட பாசம் உண்டு. அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி,
கதிர்காமம், கெச்சிமலை என எல்லாப் புனித இடங்களுக்கும்
அவனுடன் போயிருக்கிறாள். எல்லா இடங்களிலும் அவளைப் பரிவுடன்தான்
கவனித்துக் கொண்டிருக்கிறான். 'பன்சலை வாசல்ல தன்ஸல் கொடுக்குறாங்க..
ஆளுக்கு ஒரு பார்சல் சோறுதான் கொடுப்பாங்களாம். வரிசையில நிக்கணும்..பிள்ளையத் தூக்கிட்டு வா'
என்றான். புஷ்பமாலா மடியில் கனத்த பிணத்தைக் கைகளில்
ஏந்திக் கொண்டு மெதுவாக எழுந்தாள். தான் உட்கார்ந்திருந்த துணியை,
காசு எதுவும் கீழே விழுந்து விடாமல் பத்திரமாகச் சுற்றியெடுத்துக் கொள்ளும்படி சொன்னாள்.
அவன் அதனைச் சுற்றியெடுத்து, தான் கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டுக்
கொண்டு முன்னே நடந்தான். அவனைத் தொடர்ந்த புஷ்பமாலாவுக்கு அவன்
அவளது கணவன் போலவும், அந்தப் பிணம் அவர்களது குழந்தை போலவும்
தோன்றியது. அவள் அப் பிணத்தை நெஞ்சோடு அணைத்தபடி தாலாட்டுப் பாடலை
முணுமுணுத்தபடி நடந்தாள்.
- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - அம்ருதா இதழ், குவர்னிகா இதழ், இனியொரு, வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், காற்றுவெளி
ஓவியர் - அம்ரிதா ஷெர் கில்
4 comments:
thinamum naam parthu kadanthu sellum manithargalin vali, vethanai niraintha
vaalkaiai kathaiaga illa.. oru kurum padamakavey soli irukireergal... romba arumai...
மனம் கசக்க வைக்கும் உதிரிகளின் கதை.கச்சிதமான உரைநடையில் எழுதப்பட்ட உதிரிகளின் இருண்ட எதார்த்தம்.
அன்பின் மாணிக்கம்,
நலமா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் அன்பும் !
அன்பின் நண்பர் சமயவேல்,
நலமா? உங்கள் வருகையும் கருத்தும் ஊக்கம் தருகிறது. மனமார்ந்த நன்றி நண்பரே.
Post a Comment