Tuesday, April 15, 2008

வீடு


கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது.இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு.இதில் அப்பாவுக்கு ஒரு அறை.அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும் ஒரு அறை.இவர்களது அறை கொஞ்சம் பெரியது.அதில்தான் ஆடைகளையும்,சில பாத்திரங்களையும் இவளுக்கு மிகவும் பிடித்த வானொலிப் பெட்டியையும் வைத்திருந்தார்கள்.

இவளுக்குத் தூக்கம் வரவில்லை.என்ன முடிவெடுப்பது என்றும் தெரியவில்லை.நாளை தண்ணீர் எடுத்துவரப் போகும்போது இது சம்பந்தமாகப் பேசலாமா சரவணனிடம்? அவரென்ன? என்னை விரும்புகிறாரா இல்லை இந்த வீட்டை விரும்புகிறாரா எனக்கேட்டு விடலாமா?

மூத்த மகளின் 31 வயதுக்குப் பின்னர் ஒரு வழியாக அமைந்த வரன் சீதனமாகப் பணமும் நகையும் பெருந்தொகையாகக் கேட்பதில் தனியார் கம்பனியொன்றில் சாதாரண பியூனாக வேலை செய்யும் அப்பாவுக்கு வீட்டை விற்றுத் திருமணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அவரும்,அம்மாவும் பலநாட்கள் தூக்கமின்றித் தவித்து சேர்ந்து இம்முடிவுக்கு வந்திருந்தனர்.வீடு அப்பா வழி வந்தது.ஒரு மகளின் திருமணத்தை வீட்டை விற்றாவது ஒப்பேற்றிவிட்டால் வரும் மருமகன் இளையவளின் திருமணத்துக்கு எப்பாடு பட்டாவது உதவுவார் என்ற நம்பிக்கையை மலையாய்ச் சுமந்தனர் இருவரும்.

அவளும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள்.ஒருத்தி திருமணத்திற்காக இன்னொருத்தியும்,பெற்றவர்களும் நடுத்தெருவில் நிற்பதனை அவள் சிறிதேனும் விரும்பவில்லை.வேறொரு வரன் பார்க்கலாமென வாதாடித் தோற்றாள்.கெஞ்சிப் பார்த்தாள்.பெற்றவர்களின் முடிவில் எந்தச் சலனமும் இல்லை.எதுவும் செய்ய இயலாதவளாக சுதாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

காலம்,காலமாக பரம்பரைகள் பலகடந்து வந்து அப்பாவுக்குச் சொந்தமான புராண வீடதனை விற்பதொன்றும் இலகுவாக அமையவில்லை.பல ஓட்டைகள் கொண்ட கூரையும்,இப்பொழுதோ,அப்பொழுதோ என இடிந்துவிழப் பார்த்துக்கொண்டிருந்த சுவர்களும்,வீட்டிற்கான பெறுமதியை தங்களால் இயன்றவரை குறைத்துக் கொண்டிருந்தன.

இறுதியில் ஊர்ப் பெரியவரே விலையைக் குறைக்கப் பல காரணங்கள் சொல்லி வீட்டை வாங்கினார்.தெரு முச்சந்தியில் அமைந்திருந்த அந்த வீட்டை உடைத்து கடை அமைக்கலாமென்பது அவரது எண்ணமாக இருந்தது.அவரது எண்ணத்திற்கேற்ப அதிஷ்டமும் சேர்ந்ததில் அப்பாவின் இயலாமையால் போட்டி போட முடியவில்லை.இருப்பினும் ஊர்ப்பெரியவருக்கும் நெஞ்சின் ஒரு மூலையில் இரக்கமிருப்பதை திருமணத்திற்கும்,அதன் பின்னர் ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து அதில் தங்குவதற்கான அனுமதியும் அளித்தமை காட்டியது.வீட்டை விற்ற பணத்தில் திருமணச் செலவுக்கும் ஒதுக்கி,மணமகளுக்கான உடைகள்,நகைகளோடு,ஒரு சோடித் தங்கக் காதணி,அரைப்பவுனில் ஒரு சங்கிலி,ஒரு நல்ல சேலை தங்கைக்கும் கிடைத்தது.

நிலவு,கண்ணாடித்துண்டில் முகம் பார்த்துத் தாண்டிப் போயிருக்க வேண்டும்.அவ்விடத்தை மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது.அவளுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை.அருகிலிருந்த சுவரை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள்.சிறுவயது முதல் அவளைத் தாலாட்டிய வீடு.முதன்முதலாகத் தவழ்ந்து,நடந்து விழுந்த தரையிது.அவளை முழுவதுமாகத் தாங்கிச் சுமந்த நிலமிது.

சிறுவயது முழங்கை,கால் சிராய்ப்புகளுக்கு இதே சுவற்றின் சுண்ணாம்பைத் தொட்டுத் தடவியிருக்கிறாள்.சமையலறையில் படிந்திருக்கும் கருப்புக் கரியை விஷேட நாட்களில் விழிகளில் பூசியிருக்கிறாள்.அவளைப் பொறுத்தவரையில் இது அவளது விருப்பத்துக்குரிய ஒரு உயிர்.இது அவளோடு பேசும்.இவள் சொல்லும் கதைகள் எல்லாவற்றையும் கேட்கும்.சிரிக்கும்.அழும்.

சரவணன் அன்று முதன்முதலாகத் தந்த காதல் கடிதத்தை இந்த வீடு மட்டும் குறுகுறுப்பாய்ப் பார்க்க,இரகசியமாக இரவில் எழுந்து படித்து மகிழ்ந்திருக்கிறாள்.இனி எதுவும் அவளுக்குச் சொந்தமில்லை.

அக்கம்பக்கத்து வீட்டுத் தோழிகள் மணமகளின் இரு கரங்களுக்கும் மருதாணியிட்டுக் கொண்டிருந்தனர்.மருதாணியின்றிச் சிவந்திருந்தன அவளது விழிகள்.சிந்தனையோட்டம் சகோதரியைப் பற்றித் திரும்பியது.

பாடசாலைக் கல்வியைப் பாதியில் நிறுத்தியவள்,அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்தபடி இருக்கிறாள்.முன் துருத்திய பற்கள் குறையாக இருந்தது.இந்த லட்சணத்தில் வீடுமில்லையென்றால் எந்த ராஜகுமாரன்,எந்தக் குதிரையில் வருவான் இவளைப் பொக்கிஷமாக அள்ளிக் கொண்டு போக?அப்பாவைச் சொல்லிக் குற்றமில்லை.அம்மாவைச் சொல்லியும்தான்.

வீடு முழுக்க உறவினர் மற்றும் அயலவரின் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்திருக்க பெற்றவர்களின்,சகோதரியின் விழிகளில் துயரத்தின் சாயல் மிகக் கடுமையாகப் படிந்திருப்பதை சுதாவும் உணர்ந்தே இருந்தாள்.

திருமணம் நல்லபடியாக நடந்துமுடிந்தது.கழுத்தில் தாலி கட்டப்படும் சந்தர்ப்பத்திலும் வீடு பற்றிய எண்ணங்களே மிதந்திருந்தன அவளுக்கு.பலரிடமிருந்தும் மகிழ்ச்சியாக வாழ்கவென்ற ஆசிர்வாதங்கள் பல கிடைத்தபோதும் அத்தனையும், இழந்த அவளது வீட்டை மீட்டுத் தருமா என்ன?

மணமகளின் உடல் சுமந்திருந்த ஆபரணங்கள் மாமியாரின் முகத்தில் பெரும் புன்னகையைத் தீட்டின.தம்பதியினை வழியனுப்பி வைக்கையில் அப்பா,அம்மா,சுதாவின் விசும்பல்கள் மகளைப் பிரிவதற்கு மட்டுமேயானதல்ல எனவும் புரிந்தது அவளுக்கு.

சரவணனிடம் இன்று பகலே இதுபற்றிப் பேசப்போகிறாள்.திருமணத்திற்காக, ஆண்டாண்டு காலம் தன்னைச் சுமந்த வீட்டை விற்க நேர்ந்ததனைச் சொல்லப் போகிறாள்.நிர்க்கதியாகி நிற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவவேண்டுமெனக் கோரப் போகிறாள்.

சரவணன் என்ன சொல்வான்?ஒருமுறை ஏதோ தேவைக்காக இவளது ஊருக்கு வந்த சமயம் தண்ணீர் எடுத்துவர வெளியே வந்த இவளைப் பார்த்ததில்,அவனுக்கு இவளைப் பிடித்துப் போனது. பேசிய சிலநாட்களிலே அவ்வளவு முரடன் இல்லை என்பது தெரிந்து விட்டது.லொறி ட்ரைவராக வேலை செய்வதில் எப்படியும் மாதாந்தத் தேவைகளுக்கான பணத்தைச் சம்பாதித்துவிடுவான்.அதில் தான் மிச்சம்பிடித்து தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கி பெற்றோரை,அவர்களது இறுதிக் காலங்களில் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கனவாகச் சுமந்தலைந்தாள்.

பகல் அவனுடன் பேசியதில்,பிற்காலத்தில் நல்லதொரு நிலைமைக்கு வந்ததன் பிற்பாடு சொந்த வீடு வாங்கி அப்பா,அம்மாவைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் என்று அவன் அளித்த காதல் வாக்குறுதியை நம்பி, இரவானதும் புதுச் சேலையையும்,நகைகளையும் அணிந்துகொண்டாள்.தனக்கு மிகவும் பிடித்தமான வானொலிப்பெட்டியையும் தனது உடைகள் சுமந்த பையில் போட்டுக் கொண்டு,வீட்டின்,தெருவின் அனைத்து சந்தடிகளும் ஓய்ந்ததன் பிற்பாடு தெருமுனையில் காத்திருந்த சரவணனின் லொறியில் ஏறிக்கொண்டாள்.அது வீட்டைத் தாண்டிப்போகையில் ஏக்கமாக ஒருமுறை வீட்டைத்திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

தங்கை லொறி ட்ரைவருடன் ஓடிப்போன விடயம் மாப்பிள்ளை வீடுவரை போய்ச் சேர்ந்ததில்,மணமுடித்து இரண்டு நாட்களிலேயே வாழாவெட்டியாக வீடு வந்து சேர்ந்தாள் மூத்தவளான சுதா.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, April 1, 2008

அன்புள்ள அப்பாவுக்கு !


வழமைக்கு மாறாக வீடு அன்று பெரும் அமைதியிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் தான் வீட்டிலிருப்பது தெரியுமெனில் கொண்டாடிக்களிக்கும் அவரது பதினைந்து வயது மகள் அன்றைய விடியலில் இன்னும் நித்திரையை விட்டும் எழும்பாதது சிறிது கலவரத்தை உண்டுபண்ணியது.

நேற்று இரவு மகளின் பரீட்சை மதிப்பெண்கள் மிகக்குறைந்திருப்பதைக் காட்டி அவளைக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.ஒரே பெண்.எதிர்காலத்தில் சிறப்பாக வரவேண்டுமென எதிர்பார்ப்பது தப்பா என்ன ?இருந்தாலும் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்டு விட்டார்.எதுவும் உண்ணாமலும்,எந்த பதிலும் இல்லாமலும் உறங்கிவிட்டாள் மகள்.

அவளது அறைக்கதவை மெல்லத் தட்டி "ஸ்ருதி" என்றார்.எந்தப் பதிலுமற்ற மௌனத்தின் காரணத்தால் கதவை லேசாய்த் தள்ளினார்.வழமையாகக் கலைந்து கிடக்கும் அறையும் ,அவளுக்கான கட்டிலும் அன்று மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.அழகான படுக்கை விரிப்பின் மத்தியில் ஒரு வெண்ணிற உறையுடன் கூடிய கடிதம்.கடித உறையின் மேல் 'அன்புள்ள அப்பாவுக்கு !' என்றிருந்தது.

இலேசாகப் பீதி மனதைக்கவ்வ கடித உறையை எடுத்தார்.மறுபக்கம் திருப்பிப் பார்த்துவிட்டு உறையைக் கிழித்தார்.நடுங்கும் விரல்களால் கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.


அன்புள்ள அப்பாவுக்கு,

மிகத் துக்கத்துடனும்,வேதனையுடனும் நான் இதை உங்களுக்கு எழுத நேர்ந்திருக்கிறது.நான் இதுவரை வாழ்ந்த எனது இவ்வீட்டை விட்டும் செல்கிறேன்.எனது புதிய காதலனின் கட்டளைக்குத் தலைசாய்க்க வேண்டியும்,அவரது மேல் எனக்குள்ள அன்பை வெளிப்படுத்தவுமே இதனை நான் செய்கிறேன்.எனது காதலனைப் பற்றி அறிவீர்களெனில் ஒரு போதும் நீங்களோ,அம்மாவோ இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டீர்களென நான் நன்கு அறிவேன்.

எனக்கு மிகவும் பொருத்தமானவராகவும்,அன்பானவராகவுமான ஒரு வாழ்க்கைத் துணையை நான் தேடிக்கொண்டு விட்டேன்.எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது.ஒருவேளை நீங்களும் அவரைச் சந்திக்க நேரிடின் அவரது தோள்வரையிலான கூந்தலுக்காகவும்,உடம்பில் குத்தப்பட்டிருக்கும் பச்சைகளுக்காகவும்,அவரது மோட்டார் சைக்கிளுக்காகவும்,அலங்காரக் கிழிசல் மிக்க ஆடைகளுக்காகவும் உங்களுக்கும் சிலவேளை அவரைப் பிடிக்கக் கூடும்.

மேற்சொன்னவை மட்டுமே நான் அவரோடு செல்வதற்குக் காரணமல்ல அப்பா.நிஜக்காரணம் நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன்.கென்னி(அதுதான் அவர் பெயர்)யுடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் குடும்பமாய் வாழ்ந்துபார்க்கவும் ஆவலாக இருக்கிறது.அதுதான் அவரது விருப்பமும் கூட.

கென்னி என்னை விடச் சிறிது வயதில் அதிகமானவராய் இருப்பினும் (இந்தக்காலத்தைப் பொறுத்தவரையில் 42 வயதென்பது அவ்வளவு அதிகம் இல்லை அப்பா),பணம் மற்றும் வசதிகளற்றவரெனினும் எமது உண்மைக்காதலில் இவை என்றும் தடைகளேயல்ல என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்தானே அப்பா.

கென்னியிடம் ஏராளமான இசைத்தட்டுக்கள் இருக்கின்றன அப்பா.அவற்றை வைத்துக்கொள்ள ஒரு பலகையிலான அலுமாரி மட்டுமே இருக்கிறது.அதுவும் அவரது மற்றக் காதலியான ரீட்டா கொடுத்தது.நான் அதனை விடப் பிரமாதமான,பெறுமதிமிக்க ஏதாவது பரிசளிக்கலாமென எண்ணியிருக்கிறேன்.அத்தேவைக்கான பணத்துக்காக நீங்கள் எனது கடந்த பிறந்தநாளுக்குப் பரிசாக அளித்த வைரமோதிரத்தை விற்கவேண்டி வரும்.அதற்காக மன்னியுங்கள் அப்பா.

ஆமாம்.அவருக்கு ஏராளமான காதலிகள் இருக்கிறார்கள்தான்.எனினும் என்னிடம் உண்மையாகவும்,தனிப்பட்ட கரிசனத்தோடும் நடந்துகொள்கிறார்.வேறென்ன வேண்டும் அப்பா?என் மூலமாக அவருக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென எதிர்பார்க்கிறார்.எனது விருப்பமும்,கனவும் அதுவே.

மர்ஜுவானா போதைப் பொருள் உடம்புக்குத் தீங்கு பயப்பதில்லையென கென்னி சொன்னார்.முடியுமெனில் நாமே அதனைப் பயிரிட்டு நண்பர்களிடையே விற்பனை செய்யலாமெனவும் அவருக்கு எண்ணமிருக்கிறது.அத்துடன் விஞ்ஞானம் எய்ட்ஸுக்கான மருந்தைச் சீக்கிரம் கண்டுபிடித்துவிட வேண்டுமென நாமிருவரும் தினமும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறோம்.கென்னியைக் குணப்படுத்திவிடலாமல்லவா அப்பா?

என்னைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம் அப்பா.எனக்கு இப்பொழுது 15 வயது பூர்த்தியாகிவிட்டது.என்னைக் கவனித்துக்கொள்ள என்னால் முடியும்.என்றாவது ஒருநாள் உங்களையும் அம்மாவையும் பார்த்துப் போக நானும்,கென்னியும் உங்கள் பேரக் குழந்தைகளும் கட்டாயம் வருவோம்.

அன்றைய தினத்தில் சந்திக்கும் வரை,
உங்கள் அன்பு மகள்,
ஸ்ருதி.


முழுதாய்ப் படித்துமுடித்தவருக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. கட்டிலில் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.மனைவியை அழைக்கலாமா என ஒரு கணம் சிந்தித்தவர் பார்வைக்கு கடிதத்தின் இறுதிப்பாகத்தில் 'மறுபக்கம் பார்க்கவும்' என எழுதியிருந்தது தென்பட்டது.இன்னும் என்னென்ன வசனங்கள் தன்னை வதைக்கக் காத்திருக்கின்றனவோ என எண்ணியவாறே மறுபக்கம் புரட்டினார்.


பின்குறிப்பு :

அப்பா,மேற்சொன்ன எதுவுமே உண்மையில்லை.நான் இப்பொழுது பக்கத்து வீட்டிலிருக்கிறேன்.இந்த வருடப் பரீட்சையில் நான் பெற்றுக்கொண்ட குறைந்தளவிலான புள்ளிகளை விடவும் உலகில் என் வயதுப் பெண்கள் செய்யக்கூடிய எத்தனையோ தவறான காரியங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்கு உணர்த்தவே அப்படி எழுதினேன்.என் மேசை மேலிருக்கும் இறுதிப்பரீட்சைக்கான மதிப்பீட்டு அறிக்கையில் உங்கள் கையெழுத்திட்டு விட்டு தொலைபேசி மூலமெனக்கு அறிவிப்பீர்களெனில் வீடு வருவதை நான் பாதுகாப்பாயும்,மகிழ்வாயுமுணர்வேன்.


என்றும் உங்களை மட்டுமே நேசிக்கும்,
உங்கள் அன்பு மகள்,
ஸ்ருதி.



--------------------------------------------------------------------------------

எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.