Thursday, January 7, 2010
தூண்டில்
நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும். எங்களூரின் வண்ணான்காரத் தெருப்பையன். கறுத்துப் போய், துறுதுறுவென இருப்பான். பேச்சும்கூட அப்படித்தான். எனக்கும் சின்னுவுக்கும் ஒரே வயது. அந்தப் பதினாறு வயதுக்கு நான் படிப்பைப் பாதியில் விட்டு எனது அப்பாவின் கடையில் அண்ணனுடன் சேர்ந்து அவருக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். சின்னுவுக்குக் குறையேதுமில்லை. வசதியான வீட்டுப் பையன். பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதிவிட்டு என்னுடன் சேர்ந்து மாலைவேளைகளில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
சின்னுவும் என் வீட்டிலிருந்த நேரம், கழுவித் தோய்த்த துணிகளை என் வீட்டுக்குக் கொண்டு தர வந்திருந்த நித்திதான் எங்களிருவரையும் தனியே அழைத்து மிக ரகசியமாக அந்த யோசனையை முதலில் சொன்னான். அவர்கள் துணி துவைக்கும் குளத்துக்கருகில் இன்னுமொரு சிறு குளம் இருப்பதாகவும் அதில் பெரிய பெரிய விரால் மீன்கள் நிறையப் பிடித்துவரலாம் என்றும் அவனோடு வரும்படியும் சொன்னான். 'நீர் மட்டம் கெண்டைக்கால் அளவுதான் இருக்கும், வலை, தூண்டில் எதுவும் தேவையில்லை, மீன்களைக் கைகளாலேயே பிடிக்கலாம்' என அவன் சொன்னபோதே சுதாகரித்திருக்க வேண்டாமோ? அதைச் செய்யத் தவறிவிட்டோம். சரியென நாங்கள் இருவரும் மீன் பிடித்துவர அவனுடன் கிளம்பிவிட்டோம். இது நடக்கும்போது காலை ஆறுமணி இருக்கும். ஒரு மணித்தியாலத்துக்குள் மீன்களைப் பிடித்து எடுத்துவந்து வீட்டில் கொடுத்துவிட்டு, குளித்துக் கடைக்கு எட்டுமணிக்குக் கிளம்பச் சரியாக இருக்குமெனத் திட்டமிட்டுக்கொண்டேன். கடற்கரைக்குப் போய் மீன் வாங்கிவருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நடந்தோம்.
இங்கு நித்தியைப் பற்றிச் சொல்லவேண்டும். கொக்கரித்துக் கொண்டே முட்டை அடைகாக்கும் பெட்டைக் கோழி போல நித்தியின் அம்மா எப்பொழுதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். சண்டை போடாவிட்டால் அவருக்கு உண்ட சோறு செரிக்காது, நிம்மதியாகத் தூக்கம் வராது என நினைக்கிறேன். நித்தியின் அப்பாவும் அம்மாவும் பொழுதுபோக்கு போல எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதனால் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக ஒன்றாக எங்காவது செல்வதைக் காண்பின் உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல ஊர்மக்கள் பார்த்திருப்பர். ஊருக்குள் நித்தியைப் பற்றி ஒரு கதை உண்டு.
ஒரு முறை நித்தியின் அப்பா, காலையிலேயே அம்மாவுடன் சண்டைபோட்டுக் கொண்டு, ஐந்து வயதான நித்தியையும் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு விறகு தேடி எடுத்துவரப் போயிருக்கிறார். காட்டுக்குள் போகும் வழியிலெல்லாம் ஒவ்வொன்றையும் காட்டிக் காட்டி 'அது என்ன?' ,'இது என்ன?' என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறான் நித்தி. அப்பாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே காட்டு மரங்களையும் சுள்ளிகளையும் சேகரித்துக் கொண்டுவந்து ஆற்றங்கரையோரம் அடுக்கிவைத்திருக்கிறார். வேலைக் களைப்பும் வெயிலும் அவருக்குள் எரிச்சலை மூட்டியிருக்க விறகுகளை அடுக்கிவிட்டு நித்தியை அந்த விறகுகளுக்குக் காவல் வைத்துவிட்டு அவர் திரும்பவும் காட்டுக்குள் போகப்பார்க்கையில்,
'அப்பா இது என்ன?' என்று கேட்டிருக்கிறான் நித்தி ஆற்றைக் காட்டி.
' இது ஆறு'
'இந்தத் தண்ணியெல்லாம் எங்க போகுது?'
'ம்ம்..உன் அம்மாவோட வீட்டுக்குப் போகுது..வேலையைப் பார்க்க விடுறியா?' என்று எரிந்து விழுந்துவிட்டு அவர் காட்டுக்குள் போயிருக்கிறார்.
அப்பா திரும்பி வந்து பார்க்க ஒரு விறகுத் துண்டையும் காணவில்லை. நித்தி மட்டும் நின்று கொண்டிருந்திருக்கிறான்.
'எங்கேயடா விறகெல்லாம்?'
'அம்மா இந்நேரம் எடுத்திருப்பா. இந்தத் தண்ணியெல்லாம் வீட்டுக்குத்தானே போகுது. அதனால எல்லாத்தையும் தண்ணிக்குள்ள போட்டுட்டேன்' என்றானாம்.
அப்படிப்பட்ட நித்தி சொன்ன சிறிய குளம் ஊரைவிட்டும் சற்றுத்தள்ளி சிறிது தொலைவில் இருந்தது. மக்கள் அவசரத்துக்கு ஒதுங்குமிடம் போல இருந்த முற்காட்டுக்கு நடுவே இருந்தது. சுற்றிவரச் சாக்கடையோடு கோழி முட்டை வடிவத்தில் பரந்திருந்த அதில் பெரிய விரால் மீன்கள் நீந்துவது கரையிலிருந்தே தெரிந்ததுதான். ஆனால் நீர்மட்டம்தான் அதிகம். முழங்கால் வரையாவது இருக்கும். நீர்ப்பரப்பும் அகன்றது. அதற்குள் இறங்கி கைகளால் மீன்பிடிப்பது சாத்தியமில்லை என்பது நீருக்குள் இறங்கிய பின்னர்தான் தெரிந்தது. தெளிந்த நீர்தான். ஆனால் கால்வைத்தவுடன் சேற்றுக்குள் புதைந்து, முற்றாகக் கலங்கியது நீர். முழங்கால் வரை மடித்துக் கட்டியிருந்த வெள்ளைச் சாறனில் சேற்று நிறம் படியத் தொடங்கியது.
சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே கரைக்கு ஏறி குளத்துக்கு அருகிலிருந்த ஒரு வீட்டில் போய் வாளிகள் இரண்டை வாங்கிவந்தான். அதிலொன்று ஓட்டை. 'மீனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்' என நான் வீட்டுக்குப் போயிருக்கவேண்டும். மீண்டும் அதைச் செய்யத் தவறிவிட்டேன்.
மூவருமாக நீண்ட நேரத்துக்கு நீரை இரைத்துப் பார்த்தோம். அகன்ற குளத்தில் நீர் மட்டம் குறைவதாக இல்லை. கடும் வெயில் வேறு ஏறத் தொடங்கியிருந்தது. மூவருக்கும் பசியும், களைப்பும் வேறு. 'சரி..இன்னுமொரு நாளுக்குப் பார்ப்போம். இப்பொழுது வீட்டுக்குப் போவோம்' என நான் சொன்னதை சின்னு ஏற்றுக்கொள்ளவில்லை. முன் வைத்த காலை, பின் வைத்த மீனை எனப் பழமொழிகளெல்லாம் சொல்லி அடுத்த முயற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினான். இம் முறை நித்தி எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ கொடிய மிருகமொன்று அவனைத் துரத்துவது போல தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து கரைக்கு ஓடினான். பின்னர் அப்படியே ஈரத்தோடு அவனது வீடிருந்த திசையில் ஓடினான். நாங்கள் இருவரும் செய்வதறியாது தண்ணீருக்குள் நின்று பார்த்திருந்தோம்.
சொற்ப நேரத்தில் அவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். இப்பொழுது அவனது கைகளில் ஒரு சேலை இருந்தது. அதன் ஒரு முனையின் இரு மூலைகளை விரித்து எனக்குப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, மறு முனையின் இரு மூலைகளையும் அவன் பிடித்துக் கொண்டான். அச் சேலையை நீருக்குள் போட்டு உயர்த்தும்பொழுது சேற்று நீர் அதனூடாக வடிந்து, சேறு மட்டும் திட்டுத்திட்டாய் சேலையில் எஞ்சியது. தண்ணீருக்குள் நாங்கள் சேலையை விரித்துப் பிடித்துக் கொண்டு சின்னுவை அதை நோக்கி மீன்களை விரட்டும்படி ஏவினோம். அவனும் மாடு மேய்ப்பவன் போலச் சத்தமிட்டுக்கொண்டே தண்ணீருக்குள் அதிர்வுகளைக் கிளப்பி விரட்டிக் கொண்டிருந்தான். இருந்த எல்லாச் சோர்வும், பிடித்த முதல் மீனோடு போயிற்று. அது ஒரு அடி நீளமான பெரிய மீன். பல மணித்தியாலச் சிரமத்திற்குப் பிறகு பல மீன்களைப் பிடித்திருந்தோம்.
எல்லா மீன்களுமே அங்கிருந்த அழுக்குகளைத் தின்று செழித்து வளர்ந்திருந்தன. மீன்களைப் பிடித்து முடித்து கரைக்கு வந்து அவற்றை மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டோம். ஒற்றைப்படையாக எஞ்சியிருந்த சின்ன மீனொன்றை நித்திக்குக் கொடுத்துவிட்டோம். அவன் மீன்களையெல்லாம் தான் கொண்டுவந்த சேலையில் சுற்றியபடி, வாளிகளோடு ஈரம் சொட்டச் சொட்டத் தன் வீட்டுக்குப் போய்விட்டான். எங்களிருவருக்கும்தான் பெரும் சிக்கலொன்றிருந்தது. உடுத்து வந்திருந்த வெள்ளை சாரன்கள் ஈரமாகி, திட்டுத் திட்டாய் சேறு படிந்திருந்தது. அப்படியே வீதிவழியே போக வேண்டியிருக்கும். அத்துடன் மீன்களை எடுத்துப் போக எதுவுமில்லை எங்களிடம். வேறு வழியின்றி கரையில் கழற்றிப் போட்டிருந்த எங்கள் பனியன்களால் உடலையும், தலையையும் இயன்றவரை துடைத்துப் பின் அவற்றிலேயே அம் மீன்களைச் சுற்றியெடுத்து, சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு காண்போரெல்லாம் விசித்திரமாகப் பார்க்க எங்கள் வீடுகளுக்கு நடக்கத் தொடங்கினோம்.
போகும் வழியில் நித்தியின் வீட்டைக் கடக்கும்போது அந்த வீட்டிலிருந்து நித்தியின் கதறல் வெளியே கேட்டது. அவனது அம்மா அவனுக்கு ஒரு புளியமர விளாறால் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார். சலவைக்காரி என்பதால் அடிப்பதுவும் துவைப்பது போலத்தான் இருந்திருக்கும். அவனது தங்கை வாசலில் நின்றுகொண்டு மூக்கு வழிய வழிய சத்தமாக அழுதுகொண்டிருந்தது. மீன்கள் சுற்றப்பட்ட சேலை அப்படியே மீன்களோடு வெளியே வீசப்பட்டுக் கிடந்தது. ஒரு கணம் நின்று பார்த்ததில் சலவைக்கு வந்திருந்த புதுச் சேலையொன்றை நித்தி மீன்பிடிக்க எடுத்து வந்திருந்தது புரிந்தது. அங்கிருந்தால் நமக்கும் அடிவிழுமென ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு நடந்தோம். நேரம் மதியப் பொழுதைக் கடந்திருந்தது. அங்கிருந்து முதல் சந்தி தாண்டினால் பூரணம் அக்கா வீடு.
எங்கள் ஊருக்கு முதன்முதல் போலிஸ் வந்தது பூரணம் அக்கா வீட்டுக்குத்தான் என அம்மா சொல்லியிருக்கிறார். அப்பொழுது எனக்கு மூன்று வயதிருக்குமாம். ஒரு காலைப் பொழுதில் ஊருக்குப் புதிதாக வந்திருந்த பூரணம் அக்காவையும் அவரது கணவரையும் கைது செய்யவெனப் போலிஸ் வந்து ஜீப்போடு அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்ததாம். ஊர் மக்களெல்லாம் திரண்டுபோய் ஒரு வித பயத்தோடு காக்கிச் சட்டைக்காரர்களையும், ஜீப் வண்டியையும், ஒப்பாரியோடு பயந்து அழும் பூரணம் அக்காவையும் பார்த்திருந்தார்களாம். பூரணம் அக்காவுக்கு மேல் உதடு மூக்குவரை பிளந்திருக்கும். இரு உதடுகளையும் மூடிப் புன்னகைப்பது அவரால் இயலாது. பேச்சும் கொன்னையாக இருக்கும். 'சாப்பிட வா' என்பதனை 'ஞாந்நின வா' என்பார். அவருடன் பல ஆண்டுகளாகப் பேசிப் பழகியவர்களுக்கே அவரது மொழியைப் புரிந்துகொள்ளல் இலகு. ஆனால் எப்பொழுதும் சிரித்த முகம். அன்று அழுதபடியே இருந்தாராம். அவரது கணவன் அநியாயத்துக்கு ஒல்லியான மனிதன். உயர்ந்து வளர்ந்தவருக்கு ஒரு காலில் ஊனம். முழங்காலை ஒரு கையால் தாங்கித் தாங்கி நடப்பார். மிகக் கம்பீரமான குரல் அவருடையதாக இருந்தது. ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஏதோ வேலை பார்த்து வந்தார்.
அவர்களிருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. அப்பொழுது அதற்கு ஒரு வயதுதான் இருக்கும். அவர்களிருவரும் எங்கள் ஊருக்கு வரும்போது அவர்களுடன் கூடவே வந்த அந்தக் குழந்தை அவர்களுடையதல்ல என்றும், அவர்கள் அதைக் கடத்திக் கொண்டுவந்திருப்பதாகவும் போலிஸ் சந்தேகித்து வாசலில் வந்து நின்றிருந்தது. அந்தக் குழந்தை அவ்வளவு அழகு. நல்ல சிவப்பு நிறம். அழகிய சுருண்ட தலைமயிர். அவர்களிருவரது சாயலும் அதனிடம் கிஞ்சித்தேனும் இல்லை. அப்படியே அழகிய குழந்தை பொம்மையொன்றுக்கு உயிர் கொடுத்து நடமாடவிட்டதைப் போல அழகுக் குழந்தை அது. அம் மூவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு ஜீப்பில் கூட்டிப் போனார்கள். மாலை பஸ்ஸில் அம் மூவரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள். பஸ்ஸிலிருந்து இறங்கி ஊருக்குள் நடந்துவந்த வழியெங்கும் பூரணம் அக்கா அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே வந்தார். பூரணம் அக்காவின் கணவருக்குப் பிடிக்காத எவனோ ஒருவன் போலிஸுக்கு தவறான தகவல் வழங்கியிருக்கிறான் என்றார்கள்.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் நாங்களிருவரும் உடுத்துப் போன வெள்ளைச் சாறன், வெள்ளைச் சட்டை முழுக்க நாற்றம் பிடித்த சேறு அப்பியிருக்க இந்த அசிங்கமான நிலையில் மீன்களைத் தூக்கிக்கொண்டு பூரணம் அக்கா வீட்டினைத் தாண்டிச் செல்லவேண்டும். எப்பொழுதும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கும் பூரணம் அக்காவின் கண்களில் ஒன்று தைக்கும் புடைவையில் இருக்கும், மற்றது தெருவில் இருக்கும். அவர் கண்டால் கூடப் பரவாயில்லை. அவரது அழகு மகள் கலைச்செல்வி பார்த்துவிட்டால் எங்களைப் பற்றி என்ன நினைப்பாள்? காலையும், மாலையும், இன்னும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவள் பள்ளிக்கு, வகுப்புகளுக்கு போகும்போதும் வரும்போதும் சைக்கிள்களில் பின்னாலேயே போய் காவல் காத்துத் திரியும் எங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் (அப்படியொன்றிருந்தால்?! ) சரியும்தானே. அவள் எங்களைக் காணக் கூடாதென்று மனதுக்குள் வேண்டியபடி விறுவிறென்று நடந்தோம்.
சின்னு வழியிலேயே அவன் வீட்டுக்குப் போய்விட்டான். நான் அவர்கள் வீட்டையும் தாண்டி இன்னும் ஒரு தெரு நடக்கவேண்டும். அந்தப் பின் மதிய வெயிலில் பலத்த பசியோடு வீட்டுக்குப் போய் பின்வாசல் வழியே நுழைந்தேன். எல்லோரும் சாப்பிட்டுத் தூக்கத்திலிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு திருட்டுப் பூனை போல மெதுவாக பின்வாசல் கதவைத் திறந்தால் அம்மாவும், தங்கையும் தூங்காமல் அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 'நாற்றம் நாற்றம்... வெளியே போய்க் குளிச்சுக்கொண்டு வா சனியனே' எனச் சத்தம் போடத் தொடங்கினார்கள். நான் மீன்களைச் சமையலறையில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் நல்லபிள்ளை போல கிணற்றடிக்குப் போய் இரண்டு வாளித் தண்ணீரள்ளி தலையிலிருந்து கால்வரை ஊற்றிக் கொண்டு, கொடியில் காய்ந்துகொண்டிருந்த கழுவிய ஆடைகளை அணிந்து உள்ளே வந்தேன். இல்லாவிட்டால் சாப்பாடு கிடைக்காது எனப் பயந்தேன். அம்மா சாப்பிட்டு முடித்து எனக்குச் சோறு போட்டுத் தந்தார். பின்னர் எழுந்துபோய் பனியனில் சுற்றியிருந்த அந்த மீன்களை கைபடாமல் ஒரு சிறு விறகுக்குச்சியால் திறந்து பார்த்தார். மிகவும் புளித்த மாங்காயை, கூசும் பற்களால் கடித்ததுபோல அறுவெறுப்போடு அஷ்டகோணலாகியது அவரது முகம். 'இதுதான் கடல் மீனா? உடல் முழுக்கச் சொரி பிடித்த மீன்கள். தூக்கியெறி இதை. இரு அப்பா வரட்டும். உனக்கு இருக்கு நல்லா' எனச் சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அண்ணி எழுந்து வந்தார். தம்பி ஏன் இன்று கடைக்கு வரவில்லையென்று அண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வந்த வேளை கோபமாகக் கேட்டதாகச் சொன்னார். அவரும் போய் மீன்களைப் பார்த்து தன் பங்குக்கு முகத்தைச் சுழித்தார். அப்பாவும் அண்ணாவும் வந்தால் இன்று எனக்கு 'நல்ல' அறிவுரை கிடைக்குமென்பதை நினைத்து ஏதேதோ உளறிக் கொண்டிருந்தேன். மீன் வாங்கி வரக் கடற்கரைக்குத்தான் போனதாகவும், மீனே கிடைக்கவில்லையாதலால், குளத்துக்கு மீன் பிடிக்கப் போனதாகவும் நான் சொன்ன பொய்யை வீட்டில் யாரும் ஒரு கடுகளவு கூட நம்பவில்லை. மீன் விற்கும் கடற்கரையில் மீன் கிடைக்கவில்லை எனப் பொய் சொன்னவன் உலகிலேயே முதன்முதலாக நானாகத்தான் இருக்கும் எனத் தங்கை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து அம்மா தூக்கியெறியச் சொன்ன மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடித்த மீன்கள். இவற்றைத் தூக்கியெறிய முடியுமா? இனி இதனைக் கொண்டுபோய் சின்னுவுக்காவது கொடுக்கவேண்டும். அவன் எடுத்துப் போனவற்றோடு போட்டு இதையும் சமைக்கட்டும். நன்றாக உடுத்துக் கொண்டு வாசனையெல்லாம் பூசி, சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனால் அவன் ஒரு பையில் மீன்களைப் போட்டுக்கொண்டு எனது வீட்டுக்கு வரத் தயாராக நின்று கொண்டிருந்தான். அவன் வீட்டிலும் ஏற்கவில்லையாம். இனி மீன்களை நித்திக்கும் கொண்டுபோய்க் கொடுக்கவியலாது. சேலையைப் பாழாக்கி நாங்கள் செய்த மீன் கொலைகளுக்காக அவன் அம்மா அந்தச் சேலையைத் துவைப்பதுபோல எங்களையும் துவைத்துவிடக் கூடும். இருவரும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். அடுத்த தெருவில் ஒரு மெலிந்த சிறுவன் ஒரு டயரைக் குச்சியால் தள்ளியபடி வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை யாரென்று தெரியவில்லை. நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோம். அச் சிறுவனின் அருகில் போய் அவன் அப்பா தந்ததாகவும் அம்மாவிடம் கொடுத்துவிடும்படியும் சொல்லி, அம் மீன் நிரம்பிய பைகளை அவனிடம் கொடுத்து சைக்கிளில் ஏறிப் பறந்தோம்.
இது நடந்து இரண்டு, மூன்று மாதங்களிருக்கும். எங்கள் கடை மூடப்பட்ட ஒரு விடுமுறை நாளில் சின்னு எனது வீட்டுக்கு வந்திருந்தான். நாங்கள் அந்த மாலைவேளையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு உலாத்தப்போனோம். அப்பொழுதுதான் எங்களூரில் வெற்றிலை பீடாக்கடை அறிமுகமாகியிருந்த காலமது. ஒரு பீடா போட்டால் உதடெல்லாம் சிவந்துபோய் ஏதோ சாதித்தது போல இரண்டு நாளைக்கு அப்படியே இருக்கும். பீடா சாப்பிட்டு, உதட்டைச் சிவக்கவைத்து, கலைச்செல்வியை நோட்டமிடப் போகலாம் என்ற யோசனையை பெருமையோடு சின்னுதான் சொன்னான். இப்பொழுதாவது நான் மறுத்திருக்கவேண்டாமா? சரியென பீடாக் கடைக்கு சைக்கிளை விட்டோம். பீடாக்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று சாதாரண வெற்றிலைக்குள் பாக்குச் சீவல், இன்னுமேதேதோ இனிப்பு வைத்துச் சுற்றியது. இதைச் சாப்பிட்டால் வெறுமனே வாய் சிவக்கும். சுவையாக இருக்கும். மற்றது போதை தருவது. மடித்த வெற்றிலைக்குள் ஏதேதோ பொடிப்பொடியாக இட்டு நிரப்பி போதையை அள்ளித்தருவது. விலையும் கூடுதலானது. சத்தியமாக நாங்கள் இருவரும் சாதாரண பீடா இரண்டுக்குக் காசுகொடுத்து சாதாரண பீடாதான் கேட்டோம். எங்களது கெட்டநேரம் பீடா விற்பவன் அப்பொழுது பார்த்துத் தன் சின்ன மகனைக் கடையில் விட்டு வீட்டுக்குள் போயிருந்தான். அச் சிறுவன் ஏற்கெனவே சுற்றிவைத்திருந்த சுருள்கள் இரண்டை எங்களுக்கு எடுத்துத் தந்தான். அவை போதை தருவன என்பதனை சாப்பிட்ட பின்னர்தான் அறிந்தோம்.
வெற்றிலை சாப்பிடும்பொழுது ஊறும் சிவப்பு எச்சிலை துப்பிவிடுவது எனது வழக்கம். விழுங்கிவிடுவது சின்னுவின் வழக்கம். அந்த பீடாவை வாய்க்குள் இட்டு மென்று, உதடு சிவக்க ஆரம்பித்த கணம் நாங்கள் கலைச்செல்வி வீட்டுத் தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். பூரணம் அக்கா, வழமை போலத் தைத்துக் கொண்டிருந்தார். கலைச்செல்வி, தன் வீட்டுக் கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களிருவரோடு, அவ் வீடும் திடீரெனத் தலைகீழாய்ச் சுழலத் தொடங்கியது. தெருவில் யாருமே இல்லை. சின்னு சைக்கிளோடு பாதையின் அங்குமிங்கும் போய் சரியாக பூரணம் அக்கா வீட்டு வேலிக்குள் போய்க் கவிழ்ந்து விழுந்தான். நானும் தலைசுற்றிப் போய் சைக்கிளோடு தெருவில் விழுந்தேன். பூரணம் அக்காவும் கலைச்செல்வியும் பதைபதைத்துப் போய் எழுந்து ஓடி வந்தார்கள்.
எங்களைச் சிரமப்பட்டு அவர்களிருவரும் அவர்களது வீட்டுக்குக் கூட்டிப் போனதை உணரமுடிந்தது. கூட்டிக்கொண்டு போய் உட்காரவைத்து இருவரதும் வாய் வழியே வழிந்த சிவப்பு எச்சிலையெல்லாம் துடைத்துவிட்டார் அக்கா. எனக்குச் சற்றுத் தெளிவு இருந்தது. சின்னுவுக்கு கிஞ்சித்தேனும் தெளிவு இல்லை. ஆழ்ந்த தூக்கத்திலிருப்பவன் போல கண்மூடி சரிந்துகொண்டிருந்தான். பிறகு எங்களிருவரையும் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று சலவைக் கல் மேல் உட்காரவைத்து இருவரதும் சட்டையைக் கழற்றி ஒரு எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி இருவர் தலையிலும் சூடு பறக்கத் தேய்த்து வாளிவாளியாக நீரள்ளி ஊற்றினார் அக்கா. சின்னப் பையன்களை ஏமாற்றி போதைக்குப் பழக்குவதாக அந்த பீடாக்காரனைத் தனது கொன்னை மொழியால் திட்டியபடியே தலை துவட்டியும் விட்டார். சிறு குழந்தைகள் கையில் வைத்து ஆட்டும் கிலுகிலுப்பை போன்ற அவரது பேச்சால் சின்னுவுக்கும் கொஞ்சம் தெளிவு வந்தது. இதற்கிடையில் மகளிடம் எங்களிருவரதும் வீட்டுக்கு செய்தி சொல்லி அனுப்பிவிட்டிருந்தார். அக்கா, தன் மகள் மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார். மிகவும் செல்லமாக வளர்த்தவளை தனியே எங்கேயும் அனுப்பாதவர் அந்த மாலைவேளையில் அன்று எங்கள் வீடுகளுக்கு அனுப்பினார்.
இருவர் வீடுகளிலிருந்தும் பதற்றத்தோடு ஆட்கள் ஓடி வந்தனர். சைக்கிள்களைப் பிறகு எடுக்கலாம் எனச் சொல்லி அவர்கள் அவரவர் வீடுகளுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு வீட்டில் எல்லோராலும் எனக்குப் பெரிய அர்ச்சனைகள் நடந்திருக்கக் கூடும். எனக்கு எதுவும் தெரியவில்லை. அப்படியே தூங்கியவன் காலையில் தான் விழித்தேன். மயக்கம் முழுசாகத் தெளிந்திருந்தது எனினும் வாய்ச் சிவப்புப் போகவில்லை. தங்கை என்னைக் காணும்போதெல்லாம் விழுந்துவிழுந்து சிரித்தாள். இப்பொழுது சைக்கிளை எடுத்து வரப் போகவேண்டும். அங்கு போக ஒரு வித வெட்கமாக இருந்தது. எனினும் அப்பா வந்து சைக்கிள் இல்லாவிட்டால் என்னைப் போட்டு மிதிப்பாரோ எனப் பயந்து சைக்கிளை எடுத்துவரப் போனேன்.
பூரணம் அக்கா தெருவில் என்னைக் கண்டதுமே முகம் முழுதும் சிரிப்போடு அன்பாக உள்ளே வரச் சொல்லி வீட்டினுள்ளே வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துப் போகச் சொன்னார். அக்காவும் அவரது கணவரும் மட்டும் வீட்டிலிருந்தார்கள். கலைச்செல்வி பள்ளிக்குப் போயிருந்தாள். வந்த நேரம் நல்லதாகப் போயிற்று. சைக்கிளை எடுத்துப் போனால் இனி இந்தத் தெருப்பக்கமே வரக் கூடாது. அவ்வளவு வெட்கக் கேடு என எண்ணிக் கொண்டேன். சைக்கிளின் கம்பிகள் வளைந்திருந்தன. அக்கா கணவர் அதைத் தட்டித் தட்டி நேராக்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அக்கா தேனீர் ஊற்றித்தந்தார். மறுக்கமுடியாமல் வெட்கத்தோடு வாங்கிக் குடித்தேன். அழகான சிறிய வீடு. வீட்டின் ஒவ்வொரு பாகமும் படுசுத்தம். அக்கா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு எதுவுமே புரியவில்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். சின்னுவின் சைக்கிள் வீட்டினுள்ளே அப்படியே கிடந்தது. அவனின்னும் எடுத்துப் போக வந்திருக்கவில்லை.
அன்று அந்தச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தவன்தான். பிறகு நானும் சின்னுவும் அந்தத் தெருப்பக்கமே போகவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பிறகொருநாள் ஒரு விடிகாலையில் அந்த அசம்பாவிதம் குறித்துக் கேள்விப்பட்டோம். நம்பமுடியாமல் நானும் சின்னுவும் உடனே சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பூரணம் அக்கா வீட்டுக்கருகே விரைந்தோம். தெருவில் எல்லோரும் பார்த்திருக்க பூரணம் அக்கா திண்ணையில் அமர்ந்து கொண்டு சத்தமாக அழுதுகொண்டிருந்தார். 'குடி கெடுக்க வந்தவளே....' என்று வீட்டுப் படலையருகே நின்றபடி மிகக் கொச்சையாகச் சத்தமிட்டுக் கத்திக் கொண்டிருந்த நித்தியின் அம்மாவை நாலுபேர் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். விட்டால் ஓடிப் போய் பூரணம் அக்காவை அடித்துவிடுவார் போலிருந்தது. அவருக்கருகே நித்தியும் தன் பங்குக்கு ஒரு அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். அவனையும் சிலர் முன்னேறவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
'இதுக்குத்தான் ஓடிப்போனவளோட மகளை எடுத்து வளர்க்காதேன்னு அன்னிக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன்..அம்மா புத்திதானே புள்ளைக்கும் வரும்..இப்ப பாரு..அவ இவ புருஷனோடு ஓடிப்போய்ட்டா.அவன் ரெண்டு புள்ளைக்கு அப்பா வேற' எனத் தன் கம்பீரமான குரலில் கத்தியபடி அவர் கணவர் தனது நன்றாக இருந்த காலால் அக்காவின் இடுப்பில் உதைத்துக் கொண்டிருந்தார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அந்த வீட்டுக்கு அன்று மதியம் போலிஸ் வந்தது.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழ் (டிசம்பர் 2009) - சிறுகதைச் சிறப்பிதழ்
# திண்ணை
Subscribe to:
Posts (Atom)