Friday, February 22, 2008

ஓடிப் போனவள்


சரோ வீட்டை விட்டு ஓடிப்போவதென்று முடிவெடுத்துவிட்டாள். அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. மனதில் அசாத்திய தைரியமொன்று குடிபுகுந்துவிட்டது. எதுவானாலும் வரட்டும்,பார்க்கலாமென்ற துணிச்சல் எங்கிருந்து வந்ததென அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதென்றால் பகல் சரிப்பட்டு வராது.இரவுதான் சரி.

கல்யாணவேலைகள் வீட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.இன்னும் ஒருவாரத்தில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு தானிப்படி வீட்டை விட்டு ஓடிப்போவதென்பது சரியான முடிவுதானா என அவள் சிறிதேனும் எண்ணிப்பார்க்கவில்லை.அவள் மனம் முழுவதும் குமார் நிறைந்திருந்தான்.அவள் மனதுக்குள் அவன் நடந்தான்.சிரித்தான்.கதைகள் பேசினான்.வேறெந்த எண்ணங்களும் அவளுக்கு வரவிடாமல் தடுத்தான்.

வீடு முழுதும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்களெனப் பலர் வீட்டை நிறைத்திருந்தார்கள்.கல்யாண வேலைகளுக்காகவென்று இல்லை.மற்ற நாட்களில் கூட இப்படித்தான்.ரமா அக்கா வகுப்புத் தோழிகள்,சுரேஷ் அண்ணாவுடைய நண்பர்களெனப் பலர் அடிக்கடி வீட்டுக்கு வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.வீடும் எப்பொழுதும் கலகலவென்றிருக்கும்.வீட்டில் தேனீருக்கான வெந்நீர் நாள்முழுதும் கொதித்துக் கொண்டேயிருக்கும் இவள் மனதைப் போல.

மாப்பிள்ளை வீடும் இவர்களைப் போலவே பெரிய,வசதியான இடம்தான்.ராஜி அக்கா புருஷனின் சொந்தக்காரர் பையன்.பெண் பார்க்கவந்த அன்று இவள் பார்த்திருக்கிறாள்.அழகான,படித்த,நன்றாகச் சம்பாதிக்கிற பையன்.
முதல் பார்வையிலேயே அவர்களுக்குப் பெண்ணை மிகவும் பிடித்துப்போயிற்று. 'பொண்ணு ரொம்பக் குடுத்து வச்சவ' என்று சொந்தங்கள் பேசிக்கொண்டது இவள் காதிலும் விழுந்தது.ஆனால் இவளுக்குத்தான் இந்தக் கல்யாணத்தில் துளிக்கூட விருப்பமில்லை.வேண்டாவெறுப்பாகவே அத்தனை வேலைகளையும் செய்து வந்தாள்.

வீட்டாருக்கு எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாதென்று எல்லோர் முன்பும் வளையவந்தாள். எந்தப் பதற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள்.வேலைகள் சீக்கிரமாக முடிந்தால்தானே எல்லோரும் நேரகாலத்தோடு தூங்கப் போவார்கள்.தானும் ஓடிப்போகலாம்.

மழை இருட்டும் சேர்ந்து அந்தியைச் சீக்கிரம் இரவாக்கிவிட்டது.மழை பெய்யுமோ என்ற அச்சம் மனதில் பரவலாயிற்று. எது வந்தாலும் பார்க்கலாமென மனதுக்கு அவளே தைரியமூட்டிக்கொண்டாள்.தன்னோடு எதனையும் எடுத்துச் செல்லவில்லை. கையில் பையோடு நட்டநடு ராத்திரியில் வெளியில் இறங்குவது பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணும்.

இரவானதும்,இருந்த அனைவரும் சாப்பிட்டு ஓயும்வரை காத்திருந்து, இரவுச்சாப்பாட்டை இவளும் சாப்பிட்டு முடித்தாள். அவளுக்கிருந்த பதற்றத்தில் பசியெடுக்கவில்லையென்றாலும் ரொம்பத் தூரம் பஸ்ஸில் போயாகவேண்டுமே. இதுவரை தனியாக எங்கும் போய்ப் பழக்கமில்லை.ராஜி அக்காவின் குழந்தையை பள்ளிக்கு விட்டுக் கூட்டிவருவதோடு சரி.கடைகளுக்குக் கூடத் தனியாகப் போனதில்லை. பள்ளியின் அருகிலேயே பஸ் நிறுத்துமிடம் இருப்பது தெரியும்.இங்கிருந்து ஐந்து நிமிட நடையில் போய்விடலாம்.

இருப்பதில் நல்ல ஆடையொன்றை அணிந்துகொண்டாள்.புத்தம்புது ஆடை கூடப் பார்ப்பவர்க்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும்.கையில் பொத்தி வைத்திருந்த கைக்குட்டையைப் பிரித்துப்பார்த்தாள். சுரேஷ் அண்ணா எப்பொழுதோ கொடுத்த நூறு ரூபாயும் பத்திரமாக இருந்தது. அங்கு போய்ச் சேர இப்பணம் போதுமானதாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டாள்.

இவள் வருவதை குமார் கனவில் கூட எண்ணியிருக்கமாட்டான். ஏழைக் குடிசை இவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? வரவேற்குமா ? இல்லை திரும்ப இங்கே அனுப்பிவைக்குமா? குமாருக்கும், தாய்க்கும் இவள் வரவு அதிர்ச்சியை அளிக்குமா? ஆனந்தமாயிருக்குமா? குமார் இவளைப் பார்த்ததும் எப்படி நடந்துகொள்வான் ? திரைப்படங்களில் போல் கண்டவுடன் ஓடி வந்து கட்டிக் கொள்வானா?

தூரத்து இடிமுழக்கம் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தியது. அறையை விட்டு மெதுவாக வெளியே வந்து பார்த்தாள்.அனைவரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்திருந்தார்களே ஒழிய இவளைக் கண்காணிக்கும் நிலையில் யாருமில்லை.

காலில் செருப்பினை மாட்டிக்கொண்டாள்.பின் வாசலூடாக முற்றத்துக்கு வந்தாள்.இந்நேரத்தில் வாசல்கேட் மூடியிருக்கும். திறக்கமுடியும்.ஆனால் சத்தமெழுப்பும். மாட்டிக்கொள்வோம். அதனால் அவ்வழி வேண்டாமென முடிவெடுத்தாள். பழகிய இடமென்பதால் இருட்டு பரிச்சயமானது. கொல்லை வேலி இடுக்கினூடாக வீதிக்கு வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். யாருமில்லை. பஸ் நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடக்கவாரம்பித்தாள்.

திடீரெனத் தனக்குப்பின்னால் சலசலப்புக் கேட்டது. தன்னை யாராவது பின் தொடர்கிறார்களோ என்ற ஐயம் தோன்றி உடல் நடுங்கத் திரும்பிப் பார்த்தாள்.வீட்டு நாய் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. மனது ஆசுவாசமாக லேசாகப் புன்னகைத்துக் கொண்டாள்.அத்தனையையும் மௌனமாய் கருமேகத்துக்குள்ளிருந்து மெல்ல எட்டிப் பார்த்தபடி நிலவு ஊர்ந்து கொண்டிருக்க ,ஆந்தையின் அலறல் எங்கோ தூரத்தில் கேட்டது.

ஆந்தையின் அலறல் துர்ச்சகுனத்திற்கு அறிகுறி.அம்மா கதை,கதையாய்ச் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.அம்மாவின் நினைவு வந்தது.நாளைய நாளை அம்மா எப்படி எதிர்கொள்வாளோ ? இவள் மேல் கோபம் கொள்வாளா ? இல்லை.அம்மாவுக்கு இவள் மேல் பாசம் அதிகம்.இவள் நிலையை எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வாள்.அக்கம் பக்கத்து வீடுகள் தான் " பொட்டப்புள்ளைய ஒழுங்கா கண்டிச்சு வளர்த்திருக்கணும்.இல்லேன்னா இப்படி இருக்கிற வீட்டை விட்டு ஓடிப்போக மனசு வருமா ?" எனப் பல கதைகள் பேசும்.எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.பின்னாட்களில் மறந்துவிடுவார்கள்.

காலையில் இவளைக் காணாமல் எல்லோரும் தேட ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு இவள் இல்லாவிட்டால் வீட்டில் எந்தவேலையும் ஓடாது. கல்யாணவேலைகள் எல்லாம் அப்படியே நிற்கும். ஒழுங்காய்க் கவனிக்கவில்லையென ஆளுக்காள் குற்றம் சொல்லிக் கொள்வார்கள்.சிலவேளை பொலீஸில் கூட புகார் கொடுக்கக் கூடும்.

பரவாயில்லை. ஆனால் ராஜி அக்கா குழந்தைதான் பாவம்.எல்லாவற்றுக்கும் இவளிடமே பழகிவிட்டது. குளிப்பாட்டி , சாப்பாடு ஊட்டி , பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து உறங்கும் வரை இவள் அரவணைப்பிலேயே வளரும் குழந்தையது.நாளையிலிருந்து அது தனிப்பட்டுப் போகுமோ ?

வெளியூருக்குப் போகும் கடைசி பஸ் இருப்பதைக் கவனித்தாள்.இதில் சென்று அநதக் கிராமத்துத் தேயிலைத்தோட்டம் கடந்து குடிசைப்பகுதியில் இறங்கிக் கொள்ளத்தெரியும்.கொஞ்சம் பதற்றம் நீங்கப் பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பின்னால் வந்துகொண்டிருந்த நாயை வீடு நோக்கித் துரத்திவிட்டாள்.அது இவள் பஸ் ஏறும்வரை காத்திருந்து பார்த்து, வீடு நோக்கி நடக்க, பஸ் புறப்பட ஆரம்பித்தது.

****************************************************

" என்னைத் திரும்ப அங்கே போகச் சொல்லாதேம்மா. நான் மட்டும்தான் அங்க வேலைக்காரியா இருக்கேன்.ரொம்ப வேலை வாங்கறாங்க.எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா.அந்த வீட்டுச் சின்ன அக்காவுக்கு வர்ற கிழமை கல்யாணம் வேற இருக்கு. எல்லாவேலையும் நான் தான் செய்யவேண்டியிருக்கும்மா. தூங்கக் கூட நேரமில்ல.நான் இங்க இப்படியே தம்பி குமாரப் பார்த்துக்கிட்டு , உன் கூடவே கூலி வேலைக்கு வந்துக்கிட்டு இந்த வீட்டிலேயே இருக்கேன்மா. என்னை வீட்டை விட்டு அனுப்பிடாதேம்மா " எனக் குழந்தை குமாரைத் தூக்கி இடுப்பில் வைத்து, அம்மாவிடம் சொல்லி விம்மிக் கொண்டிருந்தாள் இரவு புறப்பட்ட பஸ்ஸில் தன் குடிசைக்குப் பத்திரமாக வந்துசேர்ந்த 12 வயது சரோ.


எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, February 1, 2008

சந்ததி !



வாகனத்திலேறி உட்கார்ந்ததுமே சீட் பெல்டை மாட்டிக் கொண்டேன்.கேமராவின் கண்களில் சிக்கிவிட்டால் சட்டத்தின் முன் நிற்கவேண்டி வரும்.இந்த நாடு இலங்கையைப் போன்றதல்ல.சட்டத்திலும் சரி,ஒழுங்கு விதிமுறைகளிலும் சரி,இந்நாட்டு மக்களின் நடை,உடை,பாவனை மற்றும் நடத்தைகளிலும் சரி அனைத்திலும் வித்தியாசமிருப்பதைப் பார்க்க முடியும்.

எனது நாட்டில் வாகனத்தின் வலது முன்புற இருக்கை ஓட்டுனர் இருக்கையாக அமைந்திருக்கும்.இங்கு அதுவே இடம் மாறி இருக்கும்.அங்கு மிகச் சிறப்பாக வாகனமோட்டி அனுபவப்பட்ட நண்பர்கள் கூட இங்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கான செயன்முறைப் பரீட்சையில் திணறுவதைப் பார்த்திருக்கிறேன்.

கடலோரமாக நான் பயணிக்கும் கார் சென்றுகொண்டிருந்தது. ஒன்றையொன்று துரத்தி விளையாடும் அலைகளில்லாக் கடல் நிரப்பப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.மாலை வேளைகளையும், விடுமுறை நாட்களையும் தவிர்த்து, இப்பாதையின் ஓரங்களில் நடந்துசெல்லும் எவரையும் எளிதாகக் காணமுடியாது.

அதுபோலவே இங்கு வீதிகளின் நடுவில் போக்குவரத்துப் போலீசாரையும் பார்ப்பது கடினம். அனைத்தும் கேமரா மயம். ஒவ்வொரு சிக்னல்களிலும் விளக்குகளுடன் கேமரா பொருத்தப்பட்டு அதனூடாகவே வீதி,வாகன நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன. ஏதேனுமொரு விபத்து நடந்துவிட்டால் அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் சமீபத்திலுள்ள காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினர் வந்துவிடுவார்கள்.

ஏதோ ஒரு எப்.எம் மின் பழைய ஹிந்திப்பாடலோடு சேர்ந்து முணுமுணுத்தவாறே பகதூர் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான். முன் சட்டைப்பையிலிருந்து நிஜாம் பாக்குத் தூள் பக்கெட்டை பற்களாலேயே கடித்துப் பிரித்து பாக்குத் தூளை வாய்க்குள் கொட்டிக் கொண்டான்.இவனிடம் சிகரெட் , பீடி ,சுருட்டு புகைக்கும் பழக்கம் இல்லாதது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இங்கிருக்கும் நேபாளிகள் அனைவரிடம் போல அந்தப்பழக்கங்கள் இருந்தன. வருடம் முழுக்கக் குளிர் சுமக்கும் நாடு நேபாளம். எனவே அங்கிருக்கும் அனைவரும் போல பெண்கள் உட்பட புகைபிடிப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தோள்வரை தலைமுடி வளர்த்த நேபாளியொருவன் காரைக் கை நீட்டி நிறுத்தினான். ஏதோ ஒரு முகவரி சொல்லிப் போகும் பாதையை பகதூரிடம் விசாரித்தான்.அவர்களது பாஷையும்,எழுத்தும் ஹிந்தி மொழியின் சாயலிலிருந்தாலும் இவர்களதனை அழகாய்ப் பேசி நான் கேட்டதில்லை. நேபாளிகளும் , பாகிஸ்தானிகளும், மலையாளிகளும் இந்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் காணப்படுகின்றனர். நேபாளிகளை சாரதிகளாகவும் , ஹோட்டல் ஊழியர்களாகவும், துப்புரவுத் தொழிலாளர்களாகவும், அலுவலக உதவியாளர்களாகவும் இங்கு காணலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிடைக்கும் விடுமுறையில் இந்நாட்டில் இருக்கும் அனைத்து நேபாளிகளும் ஒரு வெளியில் ஒன்று கூடுவார்கள். புரியாத மொழியில், பெருஞ்சத்தத்தோடு அனைவரும் உரையாடுவதைக் கேட்க வெளிநாட்டு நாரைப் பறவைகள் ஒருசேரக் கூச்சலிடுவதைப் போலிருக்கும்.

நேபாளிகளுக்கு இலங்கையர் , இந்தியர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒருமுறை காரணம் கேட்டதற்கு இரு நாட்டவரும் சிறந்த அறிவாளிகளெனவும், கல்வியை முழுதாகப் பூர்த்தி செய்து பின்னிங்கு வருகிறார்களெனவும் சொன்னான். அதே போல பாகிஸ்தானிகளிடம் பயங்கரக் கோபமுண்டு. அவர்கள் நேபாளிகளை இழிவாகப் பேசுவதும் , நேபாளிகளது உடல் வீச்சத்தைக் கிண்டல் செய்து கதைப்பதுமதற்குக் காரணமாக இருக்கலாம்.

நானிங்கு கடமைக்காக வந்த முதல் நாள் என்னை விமானநிலையத்திலிருந்து அழைத்து வந்தவனும் இதே பகதூர் தான். விமானநிலையத்திலிருந்து காரில் ஏறியதுமே தன்னைப் பற்றியோ , என்னைப் பற்றியோ எதுவும் கூறாமலும் கேட்காமலும் வாகனவிதிமுறைகளையும் , சீட் பெல்ட் அணியாவிடின் கட்டவேண்டிய அபராதத் தொகை பற்றியுமே சொல்லிக்கொண்டு வந்தான்.

இங்கு வாகனமோட்டும் போது சாரதி புகைபிடிப்பதுவும், கைத் தொலைபேசியைக் காதருகில் வைத்துப் பேசியபடி வாகனத்தைச் செலுத்துவதும், முன்னிருக்கைகளில் அமர்ந்திருக்கும் இருவரும் அல்லது ஒருவரேனும் சீட்பெல்ட் அணியாமலிருப்பதுவும் சட்டப்படி குற்றம். யாரேனும் இத்தப்பைச் செய்தபடி செல்வார்களாயின், அடுத்த சிக்னலில் பிடித்து விடுவார்கள். அப்படியும் தவற விட்டுவிட்டார்களானால் கேமராவில் பதியப் பட்டிருக்கும் வாகன இலக்கத்தை வைத்து ஓர் நாளுக்குள் பிடித்து விடுவார்கள். தண்டனை அபராதம்தான். தவறைப் பொறுத்து அபராதத் தொகை ஐந்நூறு ரியாலிலிருந்து அதன் மடங்குகளாக இருக்கும். ஐந்நூறு ரியாலென்பது எனது நாட்டுப் பணத்தில் பதினைந்தாயிரம் ரூபாயளவில் வரும்.

ஒருமுறை பக்கத்திலமர்ந்து பயணம் செய்த மேஸ்திரி சீட்பெல்ட் அணிந்துகொள்ள மறந்ததற்கு அபராதத் தொகை ஐந்நூறு ரியால் கட்ட நேர்ந்ததாகவும் முதலாளி அவனது சம்பளத்திலிருந்து அத்தொகையைப் பிடித்துக்கொண்டதாகவும் சொன்னான். அவனது ஆங்கில இலக்கணத்தில் பிழைகளிருப்பினும் , இன்னொருவருக்கு ஒரு விடயத்தை விளங்கப்படுத்தும் அளவிற்குப் புலமை இருந்தது.

முதலாளியின் பிள்ளைகளுக்குக் கூட ஆங்கிலத்தில் மிகச் சொற்பமான அறிவே இருந்தது. தனது பெயரைக்கூட ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதவராது. பிள்ளைகளை ஒருபுறம் வைத்துப் பார்த்தால் முதலாளிக்குக் கூட அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது . சொல்லவரும் விடயத்தை ஆங்கிலத்திலும் , அறபியிலும் கலந்து சொல்லமுயன்று தானும் குழம்பி , மற்றவரையும் குழப்பி விடுவார்.

ஒரு விடயத்தை விளங்கப்படுத்த முடியா எரிச்சலும் ,கோபமும் ஒருசேரக் கலந்து சாரதியான பகதூரிடமே திரும்பும். பலரும் பார்த்திருக்க அவன்மேல் எரிந்துவிழுந்து சத்தம் போடுவார். இத்தனைக்கும் பகதூர் அவரை விடவும் மூத்தவன்.

முதலாளி பரவாயில்லை. அவரது ஏழு பிள்ளைகளில் இருபது வயதைத் தாண்டிய முதல் மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் வரும்கோபத்திற்கெல்லாம் பகதூர்தான் பலிகடா ஆவான். முதலாளியின் எந்தப் பிள்ளைக்கும் ஒழுங்காகப் படிப்பு வரவில்லை. தந்தையின் பணத்தில் ஊதாரியாகத் திரிகிறார்கள். அவர்களுக்கெனத் தனி வாகனம்,கை நிறையப் பணம், இரவு முழுக்க ஊர்சுற்றல். கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்க தந்தையும் தயங்குவதில்லை.

இன்றும் முதலாளியும் , புதல்வர்களும் செய்யாத தப்புக்காக பகதூரை சத்தமிட்டுத் திட்டுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது. எதுவும் பேசாமல் மௌனமாய்த் தலைகுனிந்து நிற்கும் இவனைப் பார்த்து எனக்குக் கோபம் கூட வந்தது.
'இவனுக்கு ரோஷம் என்பதே இல்லையா? எதற்குத் தொடர்ந்து இவரிடமே வேலை செய்ய வேண்டும் ? கையில் மத்திய கிழக்கு நாடுகளனைத்திற்கும் செல்லுபடியாகும் வாகன அனுமதிப் பத்திரமிருக்கிறது. இக்கணமே இவ்வேலையை உதறித் தள்ளினாலும் உடனே வேறொரு நல்ல இடத்தில் வேலையைத் தேடிக்கொள்ள முடியுமே ! '

அடுத்த சிக்னலில் கார் நின்றபொழுது சிந்தித்ததை அவனிடமே கேட்டுவிட்டேன்.
"இப்போ நெனச்சாக்கூடப் போகலாம் போஸ். ஆனா இங்க இவர்கிட்ட பத்து வருஷத்துக்கும் மேலான அனுபவமிருக்கு. சம்பளமும் போதுமான அளவு. புதுசா ஒரு நாட்டுக்கோ , இடத்துக்கோ போனா அங்க நான் புதுசு. திரும்பவும் ஆரம்பச் சம்பளத்திலிருந்து ஆரம்பிக்கணும். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. செலவுக்கு மாசாமாசம் நானனுப்புற பணத்தை வச்சுத்தான் மூத்தவ டாக்டருக்குப் படிக்கிறா. மத்தவ கம்ப்யூட்டர் படிக்கிறா. பொண்ணு இன்னும் ஒரு வருஷத்துல டாக்டராகிடுவா. அதுக்குப் பிறகு நான் நாட்டுக்குப் போய்ட்டா திரும்ப வரமாட்டேன்.
என்னோட கவலையெல்லாம் முதலாளிய நெனச்சுத்தான். பிற்காலத்துல பிள்ளைகளால என்ன பாடு படப்போறாரோ ?"

சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர கார் எந்தத் தடங்களுமின்றி நேராகச் செல்ல ஆரம்பித்தது.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.