Tuesday, August 3, 2010

சேகுவேராவின் சேற்று தேவதை

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)



        யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

        அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.

        வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.

        அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.

        எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.

        இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள்  இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.  தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்  தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

        கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன.  தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.

        யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.

        பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.

        இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.

        இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.

        இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.

        அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.

        அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.

        அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.

        பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.

        இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com


நன்றி
# உதயன் பத்திரிகை - கனடா
# தமிழ் முரசு - அவுஸ்திரேலியா
# காற்றுவெளி
# நவீன விருட்சம்
# பெண்ணியம்
# உயிர்மை
# தமிழ் எழுத்தாளர்கள்