Monday, September 15, 2008

பயணம்

அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால இலட்சியம் நிறைவேறிய நாள். விரல்கள் அனிச்சையாக நெற்றியைத் தடவிக் கொண்டன. காலையில் வேலைக்கு வரும் அவசரத்தில் வீட்டுக் கதவில் இடித்துக் கொண்டிருந்தான். அது இலேசாகப் புடைத்திருந்தது. அம்மா சகுனம் சரியில்லையோ என வருத்தப்பட்டுத் தன் புடவையின் நுனியை ஒரு பந்து போலாக்கி அதனை வாயில் பொத்திக் காற்றூதிச் சூடாக்கி உடனே அவன் நெற்றிக்கு ஒத்தடமிட்டாள். இருந்தும் அந்தப் புடைப்பு இன்னும் முற்றாக நீங்கவில்லை.

அவனுக்கு அந்த ஆசிரியர் வேலை மிகவும் பிடித்திருந்தது. காலையில் அதிபர், காலைக்கூட்டத்தில் அவனை சக ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் வரவழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். மெலிந்த, உயர்ந்த, சிவந்த தோற்றம் அவனுடையது. குரல் மட்டும் கம்பீரமாக இருந்தது. இந்த வேலைக்காகத்தான் அவன் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தான். அவனை விடவும் சிரமப்பட்டவள் அவனது விதவைத் தாய். வறுமைக்குள் உழலும் குடும்பம் அவனுடையது. அரச உதவிப்பணம் தவறாமல் கிடைத்ததால் அவனால் தொடர்ந்து படிக்க முடிந்தது. இனி தாயை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தாமல் அவளை ஒரு மஹாராணி போல மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டுமென எண்ணிக் கொண்டான்.

பஸ்ஸினுள் சனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியே இருந்தது. பஸ்ஸின் படிக்கட்டில் நின்றபடி நடத்துனர் ஒவ்வொரு ஊர் பெயராகக் கூவியபடி சனங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.வெள்ளைச் சீருடையில் பாடசாலை மாணவ,மாணவிகள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டனர். பஸ்ஸினுள் இருக்கைகள் எல்லாம் நிறைந்து அவர்கள் நின்றுகொண்டனர். அவர்களுடன் தான் மனிஷாவும் இருந்தாள். மனிஷாவை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்திருந்தார்கள். ஆறு வயது நடந்துகொண்டிருந்தது.அழகிய சிவப்பு நிறம். கருமையான முடி.சிறகுகள் முளைக்காத சின்ன தேவதை போல இருந்தாள். தனியாக பஸ்ஸில் போய் வரத் தெரியாது. அதுவும் பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் போகக் கிட்டத்தட்ட இருபது கிலோமீற்றர்கள் பிரயாணம் செய்ய வேண்டும். ஊர் விகாரை தாண்டியதும் இறங்கிக் கொள்ளவேண்டும். இது எதுவும் அவளுக்குத் தெரியாது.பாடசாலைக்கு வரும்போது அதே பாடசாலையில் மேல்வகுப்பில் படிக்கும் சபீதா அக்கா கூடவே வருவாள். போகும் போது அக்காவின் வகுப்புக்கள் முடியும்வரை காத்திருந்து அவளுடனேயே வீடுதிரும்புவது இவளின் வழமையாக இருந்தது.

மனிஷாவுக்கும் இன்று இடம் கிடைக்கவில்லை. அக்கா பஸ் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அவளும் அருகிலேயே நின்றுகொண்டாள். ஓரளவு சனம் நெருக்கியடித்தது. அவ்வளவு நெருக்கத்திலும் மனிஷா தன் மழலை கலந்த குரலில் வகுப்பில் நடந்தவற்றை அக்காவிடம் ஒப்பிப்பதை நிறுத்தவில்லை. அவளது வகுப்பில் படிக்கும் சஞ்சீவ் தனது பென்சிலைப் பறித்ததை ஏதோ ஒரு பெரிய குற்றத்தைப் பற்றி பொலிஸாரிடம் முறையிடுவதைப் போன்று சொல்லிக் கொண்டிருந்தாள். சூழ இருந்த ஒன்றிரண்டு சனம் அந்தப் பேச்சினைக் கேட்டு ரசித்துப் புன்னகைத்தது. அக்காவுக்கு அது சங்கடமாகப் போயிற்று. எல்லாவற்றையும் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாமெனத் தங்கையிடம் அன்பாகவும் மெதுவாகவும் சொன்னாள்.

அவ்வளவு கூட்டத்துக்குள்ளும் கிறிஸ்தோபர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை சபீதா உணர்ந்தே இருந்தாள். இலேசாகத் திரும்பிப் பார்த்தபொழுது அவன் சட்டென்று தலைகுனிந்து கொண்டான். அவன் தலை உயர்த்தி இவளைப் பார்க்க நோக்கும் கணம் இவள் இலேசாகப் புன்னகைத்தாள். கிறிஸ்தோபரும் அதே பாடசாலைதான். வேறு பிரிவில் படிக்கிறான். பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும், பாடசாலைக்குள் முகம் பார்க்க நேரிடும் போதும் இப்படித்தான் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்.

பஸ்ஸினை இன்னும் எடுத்தபாடில்லை. நடத்துனர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். அது நீண்ட, பெரிய அரசுக்குச் சொந்தமான பஸ்.அந்த ஊருக்குப் போகும் இந்த பஸ்ஸைத் தவற விட்டால் அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகும். அதுவரைக்கும் காக்கப் பொறுமையற்ற மக்களும், அவசரத்திலிருந்த மக்களும் கூட்டத்துக்கு மத்தியிலும் ஏறிக் கொண்டார்கள். சனம் நெருக்கத் துவங்க மனிஷா சிணுங்கத் தொடங்கினாள். அவள் பிடித்திருந்த கைப்பிடிக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி மனிஷாவை அழைத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

விஜயட்சுமியின் மனது இன்று மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை கோயில்கள் ? எத்தனை வேண்டுதல்கள் ? எத்தனை நேர்ச்சைகள் ? எல்லாமே பலித்துவிட்டன. இரவுகளில் தலையணை நனைய அழுத காலங்களுக்கு இனி விடுதலை. மாமியாரின் ஏச்சுக்களும் ஊர்ப்பெண்கள் சிலரின் தகாத வார்த்தைகளும் இனி அவளை நோக்கி ஏவப்படாது. திருமணமாகி எட்டு வருடங்கள். இதுவரையில் குழந்தையில்லை. அனைவரினதும் வாய்களுக்கு அவலாகிப் போயிருந்தாள். இனி அவர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கலாம். வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்ளலாம். தாயாகப் போகிறாள்.அவளுக்கென்றொரு அந்தஸ்து வந்துவிட்டது. ஒரு பெரும் நிம்மதி வந்து மனதில் அப்பிக் கொண்டது.

அருகிலிருந்த கணவனின் தோள்களில் ஆறுதலாகத் தலைசாய்த்துக் கொண்டாள். அவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.மருத்துவமனையில் அவளது சிறுநீரைப் பரிசோதித்து கர்ப்பிணி என உறுதிப்படுத்தியிருந்தார்கள். அவளுக்குச் சீக்கிரமாக வீடுதிரும்பி மாமியாரிடம் தான் மலடியில்லை எனச் சொல்லவேண்டும் போல இருந்தது. இதோ அடுத்தவருடம் அவளது கைகளில் ஒரு சிறுகுழந்தை துயிலும். அதற்கடுத்த வருடம் , முன்னிருக்கையில் தாயின் கைகளிலிருந்து மனிஷாவை நோக்கிக் கை நீட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை போலச் சிரிக்கும். இன்னும் ஏழு வருடங்களில் தன் மடியிலமர்ந்திருக்கும் மனிஷாவைப் போலத் தன் குழந்தையும் பள்ளிக்கூடம் போகும்.

முன் இருக்கையிலிருந்த தன் அம்மாவின் கைகளிலிருந்து கொண்டு அக்குழந்தை மனிஷாவைப் பார்த்துச் சிரித்தது. ஒரு வயதிருக்கும். ஐம்பது காசு அளவில் பெருத்த பொட்டொன்று அதன் நெற்றியில் இடப்பட்டிருந்தது திருஷ்டிக்காக இருக்கவேண்டும். மனிஷாவும் அக்குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். அதுவரையில் வாய்க்குள் போட்டுச் சப்பிக்கொண்டிருந்த கையினை எடுத்து அவளை நோக்கி நீட்டியது. அவளும் அதன் எச்சில் பட்ட விரல்களைப் பிடித்துக்கொண்டாள். அது கைகளை விடுத்து கறுப்பு ரிப்பன் கட்டிய அவள் தலைமயிரைப் பிடித்திழுத்தது.

கூட்டத்துக்குள் காவியுடையணிந்த பௌத்தபிக்கு ஒருவர் ஏறிக் கொண்டார். கைகளில் கறுப்புக் குடை. அப்துல்லாஹ் உடனே எழுந்து அவருக்கு இருக்கையை அளித்துக் கூட்டத்துக்குள் நின்றுகொண்டான். அவர் ஒரு மெல்லிய புன்னகையைத் தன் முகத்தில் படரவிட்டு அவ்விருக்கையில் உட்காந்து கொண்டார். அவனது கையிலிருந்த புத்தகங்களை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

காலையில் தன் பாடசாலைக்கு புதிதாக வந்த ஆசிரியர் தன்னருகில் நிற்பதைக் கவனித்த கிறிஸ்தோபர் அப்துல்லாஹ்வுக்கு நின்றுகொள்ளச் சௌகரியமாக இடம் கொடுத்தான். அப்துல்லாஹ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். பஸ் இப்பொழுது மெதுவாக நகர ஆரம்பித்தது. சபீதாவைப் பல தலைகள் மறைத்துக் கொண்டதில் கிறிஸ்தோபர் பெரிதும் எரிச்சலுற்றான். சக வகுப்பில் படிக்கும் அவள் மேல் புரியாத ஓர் ஈர்ப்பு வந்திருந்தது. அவளது அடக்கமான அமைதி அவள்பக்கம் அவனை ஈர்த்திருக்க வேண்டும்.

நடத்துனர் இப்பொழுது பஸ்ஸின் உள்ளே வந்து முன்னிருக்கையிலிருந்து சில்லறைகளை வசூலிக்க ஆரம்பித்திருந்தார். சாரதி தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டே பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தார். பஸ் அதன் வழமையான பாதையின் இரண்டாவது சந்தியைத் தாண்டிய கணத்தில்தான் பஸ்ஸிற்குள் அதி சக்திவாய்ந்த அந்தக் குண்டு வெடித்து அனைவரும் பலியானதாக மாலைச் செய்தியறிக்கையில் சொன்னார்கள்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

22 comments:

Kavinaya said...

அருமை ரிஷான். உங்களுக்கே உரிய இயல்பான நடையில் பயண நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் குண்டு வைத்து விட்டீர்கள் :( பல சமயங்களில் இயற்கையோ செயற்கையோ இப்படி சதி செய்கையில் கனவுகளும் நினைவுகளும் உயிரோடு சிதறிப் போவதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

அவரவர் வாழ்க்கையின் பயணம் எப்போது முடியும் என்பதை எவரும் அறிந்திலர்தான். ஆனால் இக்கதையில் காட்டியிருக்கும் பயணத்தின் முடிவு உலுக்கி விட்டது ரிஷான், இன்றைய நிதர்சனம் இதுதான் என்றாலும் கூட.

இறக்குவானை நிர்ஷன் said...

எதிர்பார்ப்புகள்,எல்லாம் ஒரு நொடிக் குண்டுவெடிப்பில் சிதைந்து காணாமல்போனதை அருமையாக சொல்லியிக்கிறீர்கள் ரிஷான். மும்மதத்தையும் சுட்டிக்காட்டி தொகுத்து ரசனையுடன் எழுதிய விதம் நன்றாயிருக்கிறது.

Sakthy said...

போரினால் பாதிக்க படுவது அனைவரும் தான் என்பதை அழகாக சொல்லி இருக்கிறிர்கள் .. விரும்பியோ விரும்பாமலோ போர் எம் மண்ணையும் ,மக்களையும் எந்தளவுக்கு அழித்துக் கொண்டிருகிறது என்பதற்கு உங்கள் கதையும் ஒரு சாட்சி ..
வாழ்த்துக்கள் தோழரே

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களது மற்ற கதைகள் மாதிரி ஸ்டிராங்காக வரவில்லை இக்கதை.

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அருமை ரிஷான். உங்களுக்கே உரிய இயல்பான நடையில் பயண நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் குண்டு வைத்து விட்டீர்கள் :( பல சமயங்களில் இயற்கையோ செயற்கையோ இப்படி சதி செய்கையில் கனவுகளும் நினைவுகளும் உயிரோடு சிதறிப் போவதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

இது தற்போதைய இலங்கையின் அன்றாட நிகழ்வு போலாகிவிட்டது.
பஸ் சிதறும்போது உண்மையில் சிதறுவது பஸ் மாத்திரமல்லவே? தம் வாழ்நாள் முழுவதுக்குமான கனவுகளைச் சுமந்தபடி உள்ளே பயணிக்கும் எல்லா உயிர்களும் கூடத்தானே? :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//அவரவர் வாழ்க்கையின் பயணம் எப்போது முடியும் என்பதை எவரும் அறிந்திலர்தான். //

சரியாகச் சொன்னீர்கள். அதை அறிந்தால் தொடரும் பயணமும் இனிமையாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

//மும்மதத்தையும் சுட்டிக்காட்டி தொகுத்து ரசனையுடன் எழுதிய விதம் நன்றாயிருக்கிறது.//

ஒருவரின் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது எல்லா இனங்களும்தான் எனக் காட்டமுயற்சித்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//விரும்பியோ விரும்பாமலோ போர் எம் மண்ணையும் ,மக்களையும் எந்தளவுக்கு அழித்துக் கொண்டிருகிறது என்பதற்கு உங்கள் கதையும் ஒரு சாட்சி//

ஆமாம் சக்தி..விரும்பாமலேயே தான் இவை நடைபெறுகின்றன. யுத்தத்தையும் ஒரு அழகிய சூழலின் அழிவையும் எவர்தான் விரும்புவர்?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மதுரையம்பதி (மௌலி),

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Vishnu... said...

முதல் முதலாக உங்கள் கதை படிக்கிறேன் ..நல்ல நடை ...

நிகழ்வுகளும் ...
ஒவ்வொருவரின் மனநிலை ..
எதிர்பார்ப்புகள் என
அழகாக சொல்லி வந்து
கடைசியில்
எதிர்பாராத முடிவோடு ..


கதை நன்றாக இருக்கிறது ...

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு

ஃபஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்

உங்களுக்கே இயல்பான நடையில் கதையை நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.

வாழ்க்கை இப்படித்தான் திடீர் திருப்பங்களில் அனைத்தையும் கவிழ்த்துவிட்டுப் போய்விடுகிறது.

யுத்தம் அனைத்தையும் அகாலத்தில் சிதைப்பதிலேயே தனது வெற்றியைப் பதித்துக் கொணடிருக்கிறது

ஷைலஜா said...

ரிஷான்
கதையின் நடை வழக்கம்போல இயல்பாய் இருக்கிறது. ஒரு பஸ் பயணத்தின் கூர்மைய்பார்வை கதைஓட்டத்தில் தெரிகிறது...அந்த குண்டுவெடிப்பில் உடைந்துபோனது வாசிப்பவர்களின் மனங்களும்தான் ... மேலும் திறமையாக இதைப்போல் நிறைய எழுதவேண்டும் என் செல்லத்தம்பியும் இணையத்தின் இளையதளபதியுமான ரிஷான்!

குமரன் (Kumaran) said...

பாதி கதை படிக்கும் போதே 'அடடா. இந்தப் பேருந்தை விபத்துக்குள்ளாக்கப் போகிறார் போலிருக்கிறதே' என்று தோன்றத் தொடங்கிவிட்டது. அந்தச் சிறுமி குழந்தையின் கைவிரல்களைப் பிடித்த கணத்தில் என்று நினைக்கிறேன். :-(

புதுகை.அப்துல்லா said...

யுத்தமற்ற உலகம் அமைய இறைவனை வேண்டுவோம்!

அப்துல்லாஹ் என எதேட்சையாக வைத்தீர்களா இல்லை நண்பன் பெயரை வைப்போம் என்று வைத்தீர்களா? :))

Saminathan said...

உண்மைக் கதையும் கூட...

நல்ல நடை.

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வருகை நல்வரவாகட்டும்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//வாழ்க்கை இப்படித்தான் திடீர் திருப்பங்களில் அனைத்தையும் கவிழ்த்துவிட்டுப் போய்விடுகிறது.

யுத்தம் அனைத்தையும் அகாலத்தில் சிதைப்பதிலேயே தனது வெற்றியைப் பதித்துக் கொணடிருக்கிறது//

மிகச் சரியாகச் சொல்கிறீர்கள். திருப்பங்களில் பல வாழ்க்கையைப் பலதிசைகளிலும் அலைக்கழிக்கச் செய்துவிடுகிறது. திசையறியாப் பயணங்களில் வாழ்க்கை சிதைவுற்று, சேதாரமாகி... :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா,

//ரிஷான்
கதையின் நடை வழக்கம்போல இயல்பாய் இருக்கிறது. ஒரு பஸ் பயணத்தின் கூர்மைய்பார்வை கதைஓட்டத்தில் தெரிகிறது...அந்த குண்டுவெடிப்பில் உடைந்துபோனது வாசிப்பவர்களின் மனங்களும்தான் ... மேலும் திறமையாக இதைப்போல் நிறைய எழுதவேண்டும் என் செல்லத்தம்பியும் இணையத்தின் இளையதளபதியுமான ரிஷான்!//

எனது ஒவ்வொரு சிறுகதையின் போதும் உங்களது ஊக்கமளிக்கும் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகிறது சகோதரி.

ஆனால் அதற்காக 'இணையத்தின் இளையதளபதி' பட்டமெல்லாமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

M.Rishan Shareef said...

அன்பின் குமரன்,

//பாதி கதை படிக்கும் போதே 'அடடா. இந்தப் பேருந்தை விபத்துக்குள்ளாக்கப் போகிறார் போலிருக்கிறதே' என்று தோன்றத் தொடங்கிவிட்டது. அந்தச் சிறுமி குழந்தையின் கைவிரல்களைப் பிடித்த கணத்தில் என்று நினைக்கிறேன். :-( //

ஏதோ ஓர் ஆபத்தை எதிர்நோக்கப் போகிறது என சரியாகத்தான் ஊகித்திருக்கிறீர்கள் நண்பரே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல்லாஹ்,

//யுத்தமற்ற உலகம் அமைய இறைவனை வேண்டுவோம்!//

நிச்சயமாக நண்பரே :)

//அப்துல்லாஹ் என எதேட்சையாக வைத்தீர்களா இல்லை நண்பன் பெயரை வைப்போம் என்று வைத்தீர்களா? :))//

இஸ்லாமியக் கதாபாத்திரத்துக்கு அனைவரும் அறிந்த பெயராக இருக்கவேண்டும் என யோசித்தபொழுது உங்கள் பெயர்தான் மனதில் வந்தது. அழகான, அனைவரும் அறிந்த பெயர் என்னுடைய நண்பருடையது. அதனால்தான் பயன்படுத்திக் கொண்டேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

// ஈர வெங்காயம் said...

உண்மைக் கதையும் கூட...

நல்ல நடை. //

அன்பின் நண்பருக்கு,

இந் நிகழ்வுகள் இலங்கையின் அன்றாட நிகழ்வுகள் போலாகிவிட்டது. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)