Sunday, June 1, 2008

திண்ணை


மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா,கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன்.இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று.மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று.மழையின் எந்தப் பிரஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக,நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது.ஊருக்கே பழம் வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு,கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும்.அந்தக் குளிர்மை,மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும்.வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும்.அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை,கதையாகச் சொல்லியிருக்கிறார்.முன்னர் பாய் பின்னுவதற்கும்,அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும்,மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது.முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது.திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த,எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும்.நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும்,அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்து போகவேண்டும்.ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த,வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு.வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி.அழகழகான ரோஜாக்களும்,ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும்.தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும்,அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக்,பிஸ்கட்,இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன்.டீச்சருக்கு நேர்மாறு அவர்.டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை.எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும்.அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

"ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா?
மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?"
பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

"பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர."
மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.மழையும்,திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும்.அவரது பொக்கை வாய் வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும்,திணணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப் பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார்.பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக் கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது.புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள்.மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது.சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று,சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும்,என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம்.பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார்.மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர்.நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும்.மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

"மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல"
"அப்படியில்ல மாமி.சரியான வேலை.சனி,ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா,பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு".

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை.இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி,இறக்கி விட்டிருந்தார்.பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை.காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது.ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ?யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி,இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும்,சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார்.மடக்கக் கூடியதான சிறுகுடையும்,கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும்.காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான்.மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார்.ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார்.அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க,அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி,வாயெல்லாம் வெந்துவிட்டது.டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம்.நாங்களெல்லோரும் பதறிவிட்டோம்.அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் 'எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே' எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

"மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?"
"என்ன மகன்?"
"இல்ல ! டீச்சர்...?"
"ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது.எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது?அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே...?"
"இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே?சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு..."
"அப்டியில்ல மகன்.நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு,இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க.இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க.இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல.பென்ஷன் காசு வருது.புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது.பின்னக் காலத்துக்கு அது போதும்தானே "
மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது.டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது.மாமா,மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன்.திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார்.மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

36 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தமிழக-கேரள பாடரில் இருக்கும் ஓர் ஊருக்கு சென்று வந்த உணர்வு....மிக அருமையான வர்ணனை...கருத்தும் கூட. :)

Unknown said...

அன்பின் மதுரையம்பதி,

//தமிழக-கேரள பாடரில் இருக்கும் ஓர் ஊருக்கு சென்று வந்த உணர்வு....மிக அருமையான வர்ணனை...கருத்தும் கூட. :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

கவிநயா said...

//இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் //

//காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது//

கதையில் கவிதைகள்!

இதைப்போலத்தான் நிறைய பேர்களுடைய மணவாழ்க்கை இருக்கிறது ரிஷான் :( என்ன செய்வது? பெண்ணாய்ப் பிறந்து விட்டால் விடுதலைக்கான வழிகள் சுலபமாய்த் திறப்பதில்லை. நானும் 'விடுதலை' என்று ஒரு கதை எழுதினேன், கிட்டத்தட்ட இதே கருத்து.

மிக இயல்பான நடையில் அருமையாய் எழுதுகிறீர்கள்!

கவிநயா said...

email follow-up -க்காக மறுபடி...

Divya said...

அருமையான எழுத்து நடை:))

Divya said...

\\அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.\

இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட நீங்கள் ஆங்காங்கே குறிப்பிடுவது மிக மிக அழகு, பாராட்டுக்கள் ரிஷான்!

Anonymous said...

Rishan kavidhai pathiyum kadhai pathiyum sollave oru gyanam venum....enaku avlo illenaalum .. indha kadhai padichitu coment azhudhaama iruka mudiyala... so romba careful'a comment pannanum...
ovvaru incident'um rasichu rasichu romba observe panni ezhudhirkaaru...

appadiye mazhai peidha... oru man vaasanai varumla???.... adha unara mudinchudhu.....!!!
idha kuda enaku kavidhaya solla theriyala paarunga.... :(

but rasika mudiyudhu.... swarasyama irukku....


U R ALWAYS GREAT RISHI!!!!
KEEP IT UP!!!!

Unknown said...

இந்த முறை என்னை என் தரம் 5 க்கு அழைத்து சென்று
விட்டீர் ரிசான்......உங்களது வசனங்கள் எனக்கு நன்றாக
பிடித்திருக்கிறது

Unknown said...

அன்பின் கவிநயா,

//இதைப்போலத்தான் நிறைய பேர்களுடைய மணவாழ்க்கை இருக்கிறது ரிஷான் :( என்ன செய்வது? பெண்ணாய்ப் பிறந்து விட்டால் விடுதலைக்கான வழிகள் சுலபமாய்த் திறப்பதில்லை. நானும் 'விடுதலை' என்று ஒரு கதை எழுதினேன், கிட்டத்தட்ட இதே கருத்து. //

பெண் விடுதலையென்பது ஆதி காலம் தொட்டுத் தொடரும் துயர்.அவளது ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் கற்பிக்கும் கூட்டமுள்ளவரை விடுதலையென்பது அவளுக்கு எட்டாக்கனியாகி நிற்குமோ?

உங்கள் 'விடுதலை' கதையைப் பார்க்கும் ஆவல் மிகுகிறது.விரைவில் உங்கள் பதிவில் போட்டுவிடுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் திவ்யா,

//இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட நீங்கள் ஆங்காங்கே குறிப்பிடுவது மிக மிக அழகு, பாராட்டுக்கள் ரிஷான்!//

எல்லோரிடமும் இறந்த காலத்தின் சில கணப்பொழுதுகள் இன்னும் இருக்கும்.காலம் காலமாக நிழல் போலக் கூட வரும்.அது போன்ற சிறுசிறு நிகழ்வுகள் தான் இவை..அடிக்கடி என் எழுத்துக்களுடன் கூடி இடைக்கிடையே தலைகாட்டும் :)

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தோழி :)

கிரி said...

//இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.//

//மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று//

//மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது//

ரிஷான் கைய கொடுங்க கலக்குறீங்க போங்க. நான் எனக்கு பிடித்த வரிகளை போட்டு உங்களை பாராட்டலாம்னு பார்த்தேன், கடைசியில் அப்படி போட்டா மொத்த கதையுமுமே பின்னூட்டமாக போட வேண்டும் போல் உள்ளது அதனால் விட்டு விட்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Anonymous said...

யாழ் காள உறவுகளாம்!

விடோத்தி தனமாக ஏதோ இவர்கள்தான் உண்ண்மை தமிழர்கள் என்று சீன் காட்டுவதும்
மற்ற தமிழக தமிழர்களை இவர்கள் இணைய அனுமதி மறுப்பதும்..தொடர்கதை போல் உள்ளது.இவர்கள் வீரத்திற்கு பாரதியார்... மற்றும் பல தமிழக கவிஞர்களின் பாட்டு தேவை படுகிறது ஆனால் பெரியாரை ஏற்று கொள்ள முடியாதாம்..

இது மட்டுமல்ல இவர்கள் நடத்தும் தமிழ் தேசிய தொலைகாட்சியில் 150 வது நிலவரம் நிகழ்ச்சியில் தலைப்பு இதுகான் "இனத்துவ வாதத்தில் பிரிய போகும் உலகம்" அதில் இந்தியா விரைவில் சிதற போகிறது .. தமிழ் நாடு எங்களுக்கு தான் என்று ஒரு கிழவன் கொக்கரிக்கிறான்.

நாம் என்ன கிள்ளு கீரைகளா? போகிற போக்கில் ஈழத்தில் இருந்துதான் தமிழ்ர்கள் இந்தியாவிற்கு சென்றார்கள் என சொன்னால் வியப்பு ஒன்றும் இல்லை.இவர்கள் விடுதலை அடைய நாம் போராட வேண்டுமாம்.. ஆனால் தமிழ் நாட்டில் ஆயிரம் பிரச்சனை.. அட ஒரு தலைவரின் (MG.. யை) தவிர்த்து ஒரு இரங்கல் கூட்டம் இவர்கள் நடத்திய துண்டா? (ஈழத்திலும் சரி வெளி நாடுகளிலும் சரி)ஏதோ திருவள்ளுவர் இவர்கள் ஊரில் பிறந்தது மாதிரி இவர்கள் ஆட்டம் தாங்கமுடியால சாமி..

Unknown said...

வாங்க சத்யா.. :)

சிறுகதைப்பக்கத்துக்கு உங்கள் முதல் வருகையென நினைக்கின்றேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும் :)

//U R ALWAYS GREAT RISHI!!!!
KEEP IT UP!!!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி :)

Unknown said...

அன்பின் அஸ்பர்,

//இந்த முறை என்னை என் தரம் 5 க்கு அழைத்து சென்று
விட்டீர் ரிசான்......உங்களது வசனங்கள் எனக்கு நன்றாக
பிடித்திருக்கிறது //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

வாங்க கிரி :)

//ரிஷான் கைய கொடுங்க கலக்குறீங்க போங்க. நான் எனக்கு பிடித்த வரிகளை போட்டு உங்களை பாராட்டலாம்னு பார்த்தேன், கடைசியில் அப்படி போட்டா மொத்த கதையுமுமே பின்னூட்டமாக போட வேண்டும் போல் உள்ளது அதனால் விட்டு விட்டேன். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

கோகுலன் said...

நல்ல கதை ரிஷான்..

கதையின் போக்கு அருமை.. கொஞ்சமும் சலிப்புதட்டவே இல்லல..

கதையும் கவிதத்துவமாக இருக்கிறது சில இடங்களில்.. அங்கே வைரமுத்து கதைகளை ஞாபகப்படுத்துகிறது..

எல்லாவற்றிற்கும் மேலாக சொல்லவந்த கருத்து, மிக அழகு.

மழையின் வர்ணனையும் உவமையும் அழகு..

தொடர்ந்து கலக்கு நண்பனே!

Unknown said...

அன்பின் கோகுலன்,

//நல்ல கதை ரிஷான்..

கதையின் போக்கு அருமை.. கொஞ்சமும் சலிப்புதட்டவே இல்லல..

கதையும் கவிதத்துவமாக இருக்கிறது சில இடங்களில்.. அங்கே வைரமுத்து கதைகளை ஞாபகப்படுத்துகிறது..

எல்லாவற்றிற்கும் மேலாக சொல்லவந்த கருத்து, மிக அழகு.

மழையின் வர்ணனையும் உவமையும் அழகு..//

மழைத்துளிகளானது தன் ஈரலிப்புடன் மண் வாசனையையும்,அனைத்து மனங்களுக்கு ஒரு ரசனையையும் தன் கூடவே எடுத்து வருகின்றன.உங்கள் கருத்துக்கள் எனக்கது போல பெரும் மகிழ்வைத் தருகின்றன.

//தொடர்ந்து கலக்கு நண்பனே!//

நிச்சயமாக நண்பா,உன் ஆதரவோடு :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

குமரன் (Kumaran) said...

எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை ரிஷான். ஆங்காங்கே ஒரு நொடி நிறுத்தி அனுபவித்துவிட்டுத் தொடரும் படி அமைந்திருக்கிறது நீங்கள் கதை சொல்வது. அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி சொன்னது போல அழகு வரிகள்.ரசித்தேன்.

Unknown said...

அன்பின் குமரன்,

//எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை ரிஷான். ஆங்காங்கே ஒரு நொடி நிறுத்தி அனுபவித்துவிட்டுத் தொடரும் படி அமைந்திருக்கிறது நீங்கள் கதை சொல்வது. அருமை.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

வாங்க கயல்விழி முத்துலட்சுமி,

//கிரி சொன்னது போல அழகு வரிகள்.ரசித்தேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

மனது கனத்துவிட்டது ரிஷான்..

ஃபஹீமாஜஹான் said...

ரிஷான்
நன்றாக எழுதுகிறீர்கள்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Unknown said...

வாங்க தூயா :)

//மனது கனத்துவிட்டது ரிஷான்..//

கதையை எழுதும் போது மனதில் வராத பாரம் ஒரு அனானியின் பின்னூட்டத்தோடு வந்து சேர்ந்திருக்கிறது.நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

காலம் மாறும்.அவர்கள் கருத்துக்களும் மாறும்.அதனாலேயே அப்பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

வாங்க பஹீமாஜஹான் :)

//ரிஷான்
நன்றாக எழுதுகிறீர்கள்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//

மகிழ்வாக உணர்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Sakthy said...

அருமையான எழுத்து நடை
அந்த வீடும் , பெரியாச்சியும் கண்ணுக்குள் நிற்கிறனர்.

"மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது"

வரிகள் அழகு ரிஷான்.
எல்லாவற்றிற்கும் மேலாக சொல்லவந்த கருத்து, மிக அழகு.
வாழ்த்துக்கள் தோழரே..

ராமலக்ஷ்மி said...

//மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.//

டீச்சர் போன்ற பெண்களின் நிலைமைக்கு மட்டுமின்றி, பெரியாச்சி போன்ற பெண்களின் நிலைமைக்கும் திண்ணையை மெளன சாட்சியாக்கி கதையை அரூமையாய் முடித்திருக்கிறீர்கள் ரிஷான்.

புதுகை.அப்துல்லா said...

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

பிரியமான ரிஷான்,

என்னைப் பார்த்து பொறாமையாக உள்ளதாக கூறினீர்கள். உன்மையில் உங்களைப் பார்த்துதான் பொறாமையாக உள்ளது.

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

Unknown said...

அன்பின் சக்தி,

//வரிகள் அழகு ரிஷான்.
எல்லாவற்றிற்கும் மேலாக சொல்லவந்த கருத்து, மிக அழகு.
வாழ்த்துக்கள் தோழரே.. //

உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி :)

Unknown said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//டீச்சர் போன்ற பெண்களின் நிலைமைக்கு மட்டுமின்றி, பெரியாச்சி போன்ற பெண்களின் நிலைமைக்கும் திண்ணையை மெளன சாட்சியாக்கி கதையை அரூமையாய் முடித்திருக்கிறீர்கள் ரிஷான்.//

காலத்தின் ஓட்டத்தில் திண்ணைகள் அழிந்தாலும் டீச்சர் போன்ற பெண்களின் துயரங்கள் மட்டும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் அப்துல்லாஹ்,

//பிரியமான ரிஷான்,

என்னைப் பார்த்து பொறாமையாக உள்ளதாக கூறினீர்கள். உன்மையில் உங்களைப் பார்த்துதான் பொறாமையாக உள்ளது.

நல்ல பதிவு
வாழ்த்துக்கள் //

ஒரு கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர் நீங்கள்.
அந்த ரசனையும்,அழகும்,வெளிப்படையான பேச்சும் உங்கள் எழுத்துக்களில் மின்னுகிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

எனது திண்ணையை சற்றே எட்டிப் பாருங்கள் ரிஷான், நேரம் கிட்டும் போது..

http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

Unknown said...

அன்பின் ராமலக்ஷ்மி,

எட்டி மட்டும் பார்க்கவில்லை.முழுமையாக வாசித்து பின்னூட்டமும் இட்டுவந்தேன்.
மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு.

வருகைக்கும் இணைப்பைத் தந்தமைக்கும் நன்றி சகோதரி :)

ராமலக்ஷ்மி said...

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். முழுமையாக வாசிக்காமல் அத்தனை அருமையான பின்னூட்டம் இட முடியாதென்பதும் தெரியும். அதற்கு பதிலும் இட்டு விட்டேன். தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரிஷான்.

ஷைலஜா said...

ரிஷான்

முதல்தடவையாய் உங்களின் இந்த சிறுகதையை படிக்கிறேன்...முந்தையகதைகளைப் படிக்காமல்போய்விட்டோமே உடன்படிக்கவேண்டுமே என்ற எண்ணம் எழுகிறது.

///
இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்/////கதை நெடுக எதார்த்தவரிகள்...இது கதையா என்ன என்று பலசமயம் யோசிக்கவைக்கிறது. ஏனென்றால் கதைக்குள் நாமே
நுழைந்து விட்டதுபோல இருக்கிறது.. நிறைய எழுதுங்கள் ரிஷான்..நல்ல சிறுகதைகள் எழுதுபவர்கள்
குறைந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை பொய்ப்பித்துவிடுங்கள்.வாழ்த்துக்கள்!

Unknown said...

அன்பின் ஷைலஜா,

//கதை நெடுக எதார்த்தவரிகள்...இது கதையா என்ன என்று பலசமயம் யோசிக்கவைக்கிறது. ஏனென்றால் கதைக்குள் நாமே
நுழைந்து விட்டதுபோல இருக்கிறது.. நிறைய எழுதுங்கள் ரிஷான்..நல்ல சிறுகதைகள் எழுதுபவர்கள்
குறைந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை பொய்ப்பித்துவிடுங்கள்.வாழ்த்துக்கள்! //

உங்கள் முதல்வருகை நல்வரவாக அமையட்டும். :)

உங்கள் ஊக்குவிக்கும் கருத்துக்கள் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)