Sunday, February 15, 2009

ஒரு காதல் குறிப்பு

    பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட நீ, என்னுள்ளிருக்கும் நீ, உன்னை நினைக்க வைக்கிறாய்.

    பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன். தாயொருத்தி சிறுகுழந்தையை மிகுந்த அன்பைத் தாங்கித் தன் மார்போடு அணைத்தபடி வீதியினோரமாக நடந்து போகிறாள். ஒரு ஆண், தந்தையாக இருக்கக் கூடும், பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்க்கவைக்கும் பாசத்தை ஏந்தியபடி நடை பயிலக் கற்றுக் கொண்டிருக்குமொரு குழந்தைக்கு, நடக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சூரியனை இரவில் கொண்டு வரும் நகரத்தின் ஒளிவிளக்குகள், புதிதாகப் பிறந்த தன் குட்டியைக் கழுத்தில் கவ்வி வேற்றிடம் மாற்றுமொரு பூனை, இப்பொழுதுதான் மொட்டவிழ்த்து வாசனை அனுப்பும் இரவுராணிப் பூ, நிஷ்டை கலைந்த கலவரத்தில் எங்கோ கீச்சிடுமொரு ஒற்றைப் பட்சி... இன்னுமின்னும்... அனைத்தும் உன் நினைவுகளையே சுமந்துவருகின்றன.

    தொலைதூரத்திலிருந்து நீ காதல் சொல்லியனுப்பிய மின்செய்தி கையோடு உன் புகைப்படத்தை எடுத்துவந்தது. அதில் நீ எத்தனை அழகாக இருக்கிறாய் ? கறுப்பு மேலங்கியின் நுண்ணிய வேலைப்பாடுகள், கழுத்தோடு ஒட்டிய ஆரம், சிறு கருவிழிகள் பிரகாசிக்கச் சிந்தும் மென்புன்னகையில் தெரியும் அன்பு மனம் என அனைத்தும் சுமந்த நீ எத்தனை அழகாக இருக்கிறாய் ? உனக்குள் அருகிலிருந்து ஊடுருவும் சுவாசக் காற்றின் மேல் பொறாமை கொள்ளச் செய்கிறாய் நீ. எனது நாசி நுகரும் வாசனைகள் எல்லாம் கூட உன் நினைவுகளையே நுரையீரல்களில் நிரப்புகின்றன. என்ன ஒன்று...உள்ளே வரும் நீ வெளிச்சுவாசத்தில் சிக்கிவிடாமல் என்னுள்ளேயே தங்கிவிடுகிறாய்.

    இப்பொழுதெல்லாம் காலத்தின் கரங்களை மிகக் கொடியவையாக உணர்கிறேன். நேசத்தில் பிணைந்து ஒன்றியிருக்கும் நம்மிருவரையும் கடல் எல்லைகள் தாண்டிய பாலைநிலங்களுக்கு மத்தியில் காலம் அறைக்கு ஒன்றாகப் பிரித்துப் போட்டிருப்பதைப் பார். இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார். மிகக் கொடியவையான காலத்தின் கரங்கள் நம்மைச் சேர்த்து வைக்கும் நாளில்தான் அது தூய்மைப்படுமென எண்ணுகிறேன். நீ என்ன சொல்கிறாய் ?

    ஒரு குறுகிய சிறைக்குள் சிக்குண்டு கிடப்பதாகக் கனவுகள் பூக்கும் மனம் சொல்லியபடி இருக்கிறது. போதையின் உச்சியிலுள்ள ஒருவன் ஆகாயத்தில் மிதப்பதாகத் தானுணரும் போலி விம்பத்தைச் சுற்றம் எப்படிப் புரிந்துகொள்ள இயலாதோ அது போல அன்பில் இடறி விழுந்தவனின் பிதற்றல்களையும் அன்பைச் சுமந்து நிற்கும் உயிரொன்றுதானே புரிந்துகொள்ள முடியும் ? இப்பொழுதுன் நேசத்தைச் சுமந்து தவிக்கும் பொழுதுகளில்தான் உன்னை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது.

    இப்போதைய காலங்களில் வாழ்விற்குத் தேவையானதாக உன்னிடம் மிதந்திருக்கும் வசதிகளின் எதிர்ப்புறத்தில் நான் நிற்கிறேன். நீ கைதுடைத்துப் போடும் அல்லது உன் மாளிகைத் தூசகற்றப் பயன்படும் பணக்கற்றைகளின் பிரகாசத்தில் ஒரு நாள் இவ் ஏழையின் நிகழ்காலம் மறக்கடிக்கப்படலாம். என் நினைவுகளை வலிந்து அகற்றியும் வழித்து அகற்றியும் உனக்குச் சமமான இன்னொரு ஜீவனை உன் நெஞ்சினில், வாழ்வினில் நிரப்பக் கூடும். அன்று உன்னில் அன்பைத் தொடர்ந்தும் சிந்தியபடி இத் தனித்த ஜீவன் வெயிலுருக்கும் தார் வீதிகளில், பனி தூவும் அடர்வனங்களில், மழைச் சேற்றில், புராதன மண்டபங்களிலெனப் பைத்தியமாய் அலையக் கூடும். அன்றியும் இறந்திருக்கவும் கூடும்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை


நன்றி - விகடன்

35 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காதலர் தினத்துக்கு அடுத்த நாளே இப்படி ஒரு காதல் குறிப்பா?
ஓ...விகடனில் தோன்றி, இங்கு உதித்ததோ?....

//கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல//

பதிவில் இது போன்ற ஈரலிப்புகள் ரொம்ப பிடிச்சிருக்கு!
வாழ்த்துக்கள் ரிஷான்!

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப சோகமாயிருக்கேப்பா!

Anonymous said...

காதல் சொட்ட, சொட்ட ‘தபூ சங்கர்' எழுதும் காதற் குறிப்புக்களின் இரசிகன் நான்...
இங்கேயும் யூத் புல் விகடனிலும், இன்று இன்னோர் தபூவைப் பார்த்தேன்...
நம் நண்பர் றிஷான் ஷெரிப்பாக....!!

என்னே ஒரு சிறிய வித்தியாசம், தபூவின் வரிகள் சுபமென சுகமாய் முடியும்,
ஆனால் றிஷானின் வரிகள் சுமையாய் அழுத்துகிறது....

நல்ல அன்பு என்றுமே தோற்றிடாது றிஷான், வாழ்த்துக்கள் உங்கள் காதலுக்கும் இந்தக் குறிப்புக்கும்...

பத்மா said...

காற்றோடு மிதக்கும் பாட்டலையில் காதலியின் உருவம் காணும் காதல் மனது தோற்குமோ?தோற்றால் காதலுக்கு கண் மட்டுமில்லை இதயமும் இல்லாமல் போகும் .சுவரில் உள்ள சுண்ணாம்பு தடத்தில் கூட காதலியின் கண் தேடும் உள்ளங்கள் உள்ள வரை காதலுக்கு அழிவே இல்லை .நல்ல பதிப்பு வாழ்த்துக்கள் ரிஷான்

Anonymous said...

அருமையான ஆக்கம்.
என்னை உள்வாங்கிக் கொண்ட வரிகள் இவை.

"உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? "

"போதையின் உச்சியிலுள்ள ஒருவன் ஆகாயத்தில் மிதப்பதாகத் தானுணரும் போலி விம்பத்தைச் சுற்றம் எப்படிப் புரிந்துகொள்ள இயலாதோ அது போல அன்பில் இடறி விழுந்தவனின் பிதற்றல்களையும் அன்பைச் சுமந்து நிற்கும் உயிரொன்றுதானே புரிந்துகொள்ள முடியும் ? "

அழகான உவமை

"இப்பொழுதெல்லாம் காலத்தின் கரங்களை மிகக் கொடியவையாக உணர்கிறேன். நேசத்தில் பிணைந்து ஒன்றியிருக்கும் நம்மிருவரையும் கடல் எல்லைகள் தாண்டிய பாலைநிலங்களுக்கு மத்தியில் காலம் அறைக்கு ஒன்றாகப் பிரித்துப் போட்டிருப்பதைப் பார். "

பாராட்டுக்கள் ரிஷான்.உயிரோட்டமும் உருக்கமும் நிரம்பிய ஆக்கம்.

என்றும் அன்புடன்
சபூர் ஆதம்
அக்கரைப்பற்று

Anonymous said...

ரொம்ப ரசித்துப் படித்தேன் றிஷான்.....
இறுதியில் உள்ள சோகம்...வலியைத் தந்த போதும்....அது யதார்த்தம். நல்ல வர்ணனை என்று சொல்வதை விட.... இயல்பாக எழுதியுள்ளீர்கள் என்றே சொல்ல பொருந்தும்... வாழ்த்துக்கள் சோதரனே.

Anonymous said...

நல்ல வரிகளை வலிகளுடன் படிக்கையில்... நெஞ்சில்.. பாரம் கூடிவிட்டது.. ரிஷான்

ராமலக்ஷ்மி said...

விகடனில் வடித்த குறிப்பு. முதலில் அதற்கு என் வாழ்த்துக்கள்.

வரிகளுக்கிடையேதான் எத்தனை வலிகள்.

//இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார்.//

நான் ரசித்த வரி.

Anonymous said...

கோடுகள், நெளிவுகள், சுழிவுகள் என எம்மை உருக்கலைத்து உருக்கொடுத்து வாழ்க்கைக் குறிப்புகளாக உலகின் சில குறிகளாக எம்மை ஆக்கிவிட்டு மூலை முடுக்கெங்கும் வியாபித்திருக்கிறது காதல். தலை குனிந்து, நெஞ்சு நிமிர்த்தி, கண்ணீர் மை சிந்தி என எப்படியெல்லாம் தன் வித்துவம் காட்டி கட்டிப் போடுகிறது.

காசுக் கட"தாசி"களுக்கு என்றும் மவுசு குறைவதில்லை. வக்கிரம் நிறைந்தவர்களை விக்ரம் ஆக்கும் அத்தா(ட்)சிகள் காசுக்கடதாசிகள். காதலின் உக்கிரம் அந்தக் கடதாசிகளின் முன்னால் அடங்கிப் போய்விடுமா என்பது எனக்கு எப்போதும் உள்ள சந்தேகம். வாழுதல் என்ற அதிகாரத்தை காசுக்கடதாசிகள் வளைத்துப் போடுவதால் நாணயங்கள் பெறுமதி அற்றுப் போய்விடுகின்றனவோ என்ற எண்ணம் என் சந்தேகத்தைப் பூசி மெழுகி அழகாக்கிவிடும். காதலை காதலால் மட்டுமே வெல்ல முடியும் என்ற இன்னொரு எண்ணம் என்னை மீண்டும் தாக்கும். மெழுகல் மெழுகாய் உருகி ஓடும்.

அந்தரத்தில் கட்டிய ஆடாத ஊஞ்சலான பால்கனியில் நின்றாலும், பருவக் காற்றுகள் மேனி தடவிச் சென்றாலும், கூதலில் உடல் அடிக்கடி சிலிர்த்தாலும் காசை மோகித்து காதல் தவம் கலைந்தவர்களுக்கு பால் கனிச் சுவையை எவையும் தருமோ என்று அவ்வப்போது எண்ணத் தோன்றும். வெள்ளி இழை ஊடோடாத செல்லாக்கசுகளோ அவர்களென தாழ்வு உசும்பும்.

அந்த எண்ணவோட்டங்கள் இந்த நேரத்திலும். அழகு அதிகமானாலும் கனதி இருக்கத்தான் செய்யும்.
எழுத்துச் சுரங்களில் கட்டுப் பிசகாத தாள லயத்தில் ஆத்மராகம் இசைத்தமைக்கு நெஞ்சாரத்தழுவுகிறேன் தோழா.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் கேயாரெஸ்,

//காதலர் தினத்துக்கு அடுத்த நாளே இப்படி ஒரு காதல் குறிப்பா?
ஓ...விகடனில் தோன்றி, இங்கு உதித்ததோ?....

ஆமாம்.
நீங்களும் இப்பதிவுக்கு முதல் ஆளாய் வந்திருக்கிறீர்கள்..மிகவும் மகிழ்கிறேன். :)

//கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல//

பதிவில் இது போன்ற ஈரலிப்புகள் ரொம்ப பிடிச்சிருக்கு!
வாழ்த்துக்கள் ரிஷான்! //

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சந்திரமௌலி,

நீண்ட நாட்களின் பின்னர் எனது பதிவுகளில் உங்களைக் காண்கிறேன். அடிக்கடி வாருங்கள் :)

//ரொம்ப சோகமாயிருக்கேப்பா!//

சில யதார்த்தங்கள் சோகமான முடிவுகளைத்தானே கொண்டிருக்கின்றன :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஓவியன்,
//காதல் சொட்ட, சொட்ட ‘தபூ சங்கர்' எழுதும் காதற் குறிப்புக்களின் இரசிகன் நான்...
இங்கேயும் யூத் புல் விகடனிலும், இன்று இன்னோர் தபூவைப் பார்த்தேன்...
நம் நண்பர் றிஷான் ஷெரிப்பாக....!!//

//என்னே ஒரு சிறிய வித்தியாசம், தபூவின் வரிகள் சுபமென சுகமாய் முடியும்,
ஆனால் றிஷானின் வரிகள் சுமையாய் அழுத்துகிறது....//

நேற்றிலிருந்து இளமை விகடனில் 'உனக்கென மட்டும்' என்ற தலைப்பில் கவிதைத் தொடரொன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அவற்றில் சுபம் மட்டுமே நண்பரே

//நல்ல அன்பு என்றுமே தோற்றிடாது றிஷான், வாழ்த்துக்கள் உங்கள் காதலுக்கும் இந்தக் குறிப்புக்கும்...//

நிச்சயமாக.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே

M.Rishan Shareef said...

அன்பின் பத்மா அம்மா,

//காற்றோடு மிதக்கும் பாட்டலையில் காதலியின் உருவம் காணும் காதல் மனது தோற்குமோ?தோற்றால் காதலுக்கு கண் மட்டுமில்லை இதயமும் இல்லாமல் போகும் .சுவரில் உள்ள சுண்ணாம்பு தடத்தில் கூட காதலியின் கண் தேடும் உள்ளங்கள் உள்ள வரை காதலுக்கு அழிவே இல்லை .நல்ல பதிப்பு வாழ்த்துக்கள் ரிஷான் //

நீண்ட நாட்களின் பின்னர் எனது பதிவுகளில் உங்களைக் காண்பதில் மிகவும் மகிழ்கிறேன். காதலைப் பற்றி அழகாகக் கருத்தினில் சொல்லியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா :)

M.Rishan Shareef said...

அன்பின் சபூர் ஆதம்,
நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன்..நலமா?
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :))

M.Rishan Shareef said...

அன்பின் ஆயிஷா,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :))

M.Rishan Shareef said...

அன்பின் இளங்கோ,

//நல்ல வரிகளை வலிகளுடன் படிக்கையில்... நெஞ்சில்.. பாரம் கூடிவிட்டது.. ரிஷான் //

:))

கருத்துக்கு நன்றி நண்பரே :))

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//விகடனில் வடித்த குறிப்பு. முதலில் அதற்கு என் வாழ்த்துக்கள்.

வரிகளுக்கிடையேதான் எத்தனை வலிகள்.

//இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார்.//

நான் ரசித்த வரி. //

:)
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கின்றது. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அமரன்,

//கோடுகள், நெளிவுகள், சுழிவுகள் என எம்மை உருக்கலைத்து உருக்கொடுத்து வாழ்க்கைக் குறிப்புகளாக உலகின் சில குறிகளாக எம்மை ஆக்கிவிட்டு மூலை முடுக்கெங்கும் வியாபித்திருக்கிறது காதல். தலை குனிந்து, நெஞ்சு நிமிர்த்தி, கண்ணீர் மை சிந்தி என எப்படியெல்லாம் தன் வித்துவம் காட்டி கட்டிப் போடுகிறது. //

நிதர்சனமான வரிகள்.

//காசுக் கட"தாசி"களுக்கு என்றும் மவுசு குறைவதில்லை. வக்கிரம் நிறைந்தவர்களை விக்ரம் ஆக்கும் அத்தா(ட்)சிகள் காசுக்கடதாசிகள். காதலின் உக்கிரம் அந்தக் கடதாசிகளின் முன்னால் அடங்கிப் போய்விடுமா என்பது எனக்கு எப்போதும் உள்ள சந்தேகம். வாழுதல் என்ற அதிகாரத்தை காசுக்கடதாசிகள் வளைத்துப் போடுவதால் நாணயங்கள் பெறுமதி அற்றுப் போய்விடுகின்றனவோ என்ற எண்ணம் என் சந்தேகத்தைப் பூசி மெழுகி அழகாக்கிவிடும். காதலை காதலால் மட்டுமே வெல்ல முடியும் என்ற இன்னொரு எண்ணம் என்னை மீண்டும் தாக்கும். மெழுகல் மெழுகாய் உருகி ஓடும். //

உங்கள் எண்ண ஓட்டம் சரிதான். பணத்தாள்களின் முன்னால் சில சமயம் அன்பும் காதலும் பரிவும் நேசமும் பொய்யாகி விடுகிறது.

//அந்தரத்தில் கட்டிய ஆடாத ஊஞ்சலான பால்கனியில் நின்றாலும், பருவக் காற்றுகள் மேனி தடவிச் சென்றாலும், கூதலில் உடல் அடிக்கடி சிலிர்த்தாலும் காசை மோகித்து காதல் தவம் கலைந்தவர்களுக்கு பால் கனிச் சுவையை எவையும் தருமோ என்று அவ்வப்போது எண்ணத் தோன்றும். வெள்ளி இழை ஊடோடாத செல்லாக்கசுகளோ அவர்களென தாழ்வு உசும்பும். //

அந்தரத்தில் கட்டிய ஆடாத ஊஞ்சலான பால்கனி - அழகான உவமை. மிகவும் ரசித்தேன் நண்பரே... :)

//அந்த எண்ணவோட்டங்கள் இந்த நேரத்திலும். அழகு அதிகமானாலும் கனதி இருக்கத்தான் செய்யும்.
எழுத்துச் சுரங்களில் கட்டுப் பிசகாத தாள லயத்தில் ஆத்மராகம் இசைத்தமைக்கு நெஞ்சாரத்தழுவுகிறேன் தோழா. //

உங்கள் நீண்ட, அருமையான, அழகிய கருத்து என்னை மிகவும் வியப்படையச் செய்கிறது. உங்கள் கருத்தினை மிகவும் ரசித்தேன்.

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

//நேற்றிலிருந்து இளமை விகடனில் 'உனக்கென மட்டும்' என்ற தலைப்பில் கவிதைத் தொடரொன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அவற்றில் சுபம் மட்டுமே நண்பரே//

படிப்படியான உங்கள் விரிவான வளர்ச்சி மனமகிழ்வைத் தருகிறது.. வாழ்த்துக்கள் ரிஷான்.

உங்கள் வரிகள் தந்த நெகிழ்வு வாசித்து முடிந்து நீண்ட நேரமாகியும் நெஞ்சை அழுத்துகிறது..அருமை..

//கறுப்பு மேலங்கியின் நுண்ணிய வேலைப்பாடுகள், கழுத்தோடு ஒட்டிய ஆரம், சிறு கருவிழிகள் பிரகாசிக்கச் சிந்தும் மென்புன்னகையில் தெரியும் அன்பு மனம் என அனைத்தும் சுமந்த நீ எத்தனை அழகாக இருக்கிறாய் ?//

அழகான,அளவு மீறாத வர்ணனை

Anonymous said...

காதலை அழமாய் சுவாசித்து அழகாக தொகுத்துள்ளீர்கள், அருமை.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

மிக அழகாக வார்த்தைகளை கோர்த்திருக்கிறீர்கள் நண்பரே... அருமையாக உள்ளது...

Anonymous said...

//இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார். மிகக் கொடியவையான காலத்தின் கரங்கள் நம்மைச் சேர்த்து வைக்கும் நாளில்தான் அது தூய்மைப்படுமென எண்ணுகிறேன். நீ என்ன சொல்கிறாய் ?//

அருமையாக எழுகிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் லோஷன்,

//படிப்படியான உங்கள் விரிவான வளர்ச்சி மனமகிழ்வைத் தருகிறது.. வாழ்த்துக்கள் ரிஷான்.

உங்கள் வரிகள் தந்த நெகிழ்வு வாசித்து முடிந்து நீண்ட நேரமாகியும் நெஞ்சை அழுத்துகிறது..அருமை..//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சமுத்திரசெல்வம்,


அழகான பெயர் உங்களுக்கு..!

//காதலை அழமாய் சுவாசித்து அழகாக தொகுத்துள்ளீர்கள், அருமை.. வாழ்த்துக்கள்...//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சசிதரன்,
//மிக அழகாக வார்த்தைகளை கோர்த்திருக்கிறீர்கள் நண்பரே... அருமையாக உள்ளது..//
அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே

M.Rishan Shareef said...

அன்பின் பூர்ணிமா,
//அருமையாக எழுகிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..//
நிச்சயமாக தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி சகோதரி !

Sakthy said...

"விகடனில் ரிஷான்" ... சந்தோசமாக உள்ளது ரிஷான், வாழ்த்துக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள் ...
அழகான வார்த்தை பிரயோகங்கள்,வலிகளைக் கூட ரசிக்க முடிவது உங்கள் வரிகளில் தான். வாசித்து முடிந்ததும்,மனதை அழுத்தி செல்கிறது முடிவு..

Kavinaya said...

//பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன்.//

ரொம்ப அழகு இந்த வரி!

//அன்பில் இடறி விழுந்தவனின் பிதற்றல்களையும் அன்பைச் சுமந்து நிற்கும் உயிரொன்றுதானே புரிந்துகொள்ள முடியும் ? //

சரிதான்.

மென்மேலும் வளர்ந்து புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷு!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//"விகடனில் ரிஷான்" ... சந்தோசமாக உள்ளது ரிஷான், வாழ்த்துக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள் ...
அழகான வார்த்தை பிரயோகங்கள்,வலிகளைக் கூட ரசிக்க முடிவது உங்கள் வரிகளில் தான். வாசித்து முடிந்ததும்,மனதை அழுத்தி செல்கிறது முடிவு..//

உங்கள் கருத்தில் மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுகிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//மென்மேலும் வளர்ந்து புகழ் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷு!//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் ரிஷான்..

பிரிவின் வலி வெளிப்படும் விதம் மனதில் தைக்கிறது..

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,

//வாழ்த்துகள் ரிஷான்..

பிரிவின் வலி வெளிப்படும் விதம் மனதில் தைக்கிறது..//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Divya said...

Excellent Rishan!

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

//Excellent Rishan!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)