Wednesday, March 4, 2009

விடுபட்டவை



வண்டு ஏற்படுத்திச் சென்ற துளைகளுக்குள் காற்று நுழைந்து மூங்கிலை இசைபாடச் செய்தபடி நகர்ந்த அக்கணத்தில் எனக்குத் தெரியவில்லை. உனது அண்ணாதான் நீ வீட்டிலிருப்பதாகவும், உன் கைபேசியைக் காரில் தவறி விட்டுப் போனதாகவும் வீட்டுக்குப் போன உடனே உன்னிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னார். அழைத்து அழைத்துச் சோர்ந்து போன எனது மனப்பாரங்களுடன் சேர்த்து, நீ தவறவிட்ட எனது அழைப்புக்களையும் நீ உன் கைபேசியில் கண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியும். நீ வேண்டுமென்றே அப்படிச் செய்பவனல்ல. என் மேல் உனக்குக் கோபமும் வெறுப்பும் மிகைத்திருக்கக் கூடும். இருப்பினும் எவ்வாறாயினும் நீ எனது அழைப்புக்களைத் துண்டிப்பவனல்ல. நீ நல்லவன். எனக்குத் தெரிந்த நல்லவர்களில், அன்பானவர்களில் நீ முதலாமவன். என் மதிப்புக்குரியவன். என்றைக்குமே என் விருப்புக்குரியவன்.

'அப்படியானால், அது உண்மையானால் ஏன் என்னை விட்டுப் போனாய்?' என்ற கேள்வி உனக்குள் எழக்கூடும். அன்றுனை அழ வைத்து, தேட வைத்து, வாட வைத்துக் கை விட்டுப் போன பின்னர் எதற்குனைத் திரும்ப அழைத்தேனென நீ எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். எனக்குள் சுட்ட சில யதார்த்தங்கள், நியாயங்கள், உனது குடும்பத்தைச் சூளைக்குள் எரியும் தணலாய்ப் பொசுங்க வைத்த எமது வாழ்வின் கொடிய கைகள் எனச் சில விடயங்கள் என்னை உன்னை விட்டும் ஒதுங்க வேண்டிச் செய்தன. உன்னிடம் சொல்லியிருக்கலாம்தான். வாழ்வின் இறுதி வரை என்ன கஷ்டமெனினும் கூட வருவேனெனச் சொல்லி அன்பைப் பொழிந்த உன்னைக் கஷ்டத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. அவ்வேளை நீயாவது, நீ மட்டுமாவது எங்கேனும் நன்றாக மகிழ்வோடு வாழ வேண்டுமென்றே உள்ளம் விரும்பியது. விரும்புகிறது.

இரு தினங்களுக்கு முன்னால் பணி புரிந்துவரும் நாட்டை விட்டு அம்மாவின் சுகவீனமுன்னை அவசரமாக வெளியேறச் செய்து, தாய்நாட்டை ஏகச் செய்தது. அம்மாவின் நலம் குறித்து உன் நண்பர்களிடம் விசாரித்ததில் சாதகமான எந்தப் பதிலும் கிட்டவில்லை. உனக்கே அழைப்பினை எடுத்தாலென்ன என்ற கேள்வி அப்பொழுதுதான் என்னுள் முளைத்திற்று. விட்டுப் போன என்னை, எனது குரலை எதிர்கொள்ளும் சங்கடத்தை உனக்கு எப்படித் தருவது என்ற தயக்கத்திலேயே பாதி நேரம் ஓடிற்று. உணவோ, உறக்கமோ எதிலும் நாட்டமற்ற மனம், எதைப்பற்றியும் எண்ணத்தூண்டாத வெறுமையை, பொறுமையை ஏற்றிருந்த மனம், உன்னிடம் பேசச் சொல்லி அடம்பிடித்தபடி அலைந்தது.

கடந்த காலங்களில் உன்னை விட்டுப் பிரிந்த நான், உனது விசாரிப்புக்களின் போது ஆனந்தமாகவும், எந்தக் கவலைகளுமற்றும் வாழ்வதாகக் காட்டிக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் போலி நடிப்புத்தானே என்னை வெறுக்கச் செய்து, உன்னிலிருந்து முழுவதுமாக என்னை அகற்றி உன்னை இன்று மகிழ்வானவனாக வாழச் செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது சலனமற்று ஓடும் உன் அழகிய வாழ்வில், எனது குரலெனும் கல்லெறிந்து அலைகளையெழுப்ப விருப்பமற்று, உனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவது குறித்து மனம் அல்லாடிக்கொண்டே இருந்தது.

இறுதியில் பெருந்தயக்கம் ஒதுக்கி உனக்குத் தொலைபேசினேன். காருக்குள் ஒளிந்திருந்த கைபேசி 'என்னைக் கொஞ்சம் மாற்றி..' ராகத்தை யாருமற்ற வெளியில் அதிர்வுகளைக் கிளப்பியபடி உன் பக்க அழைப்பின் குரலாக ஒலித்து ஒலித்து ஓய்ந்தது. பல மணித்தியால அழைப்பின் பிறகு, அண்ணன் கண்டெடுத்து, ஒரு தேவ கணத்தில் உனது குரல் எதிர்முனையில் தோன்றி என்னைச் சாந்தப்படுத்தியது.

முதலில் எனது குரல் உன்னில் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. என்னை நீ எதிர்பார்த்திருந்திருக்கவும் மாட்டாய். பெயரைச் சொன்ன பின்னால் உனது இதழ்கள் உதிர்த்த முதல் சொற்களில் கோபமும், வியப்பும் ஒரு சேர வழிந்ததை ஒரு கணம்தான் உணர்ந்தேன். பிறகு அம்மாவின் உடல்நலம் குறித்த ஆறுதலான வார்த்தைகளைத் தந்திட்டாய். உனது வேலைகள், கடமைகள் குறித்த விடயங்களைப் பகிர்ந்தாய். நல்லவேளை இறுதிவரை நீ என் நலம் விசாரிக்கவில்லை. வினவியிருந்தால் பல மாதங்களுக்குப் பிறகான நமது உரையாடலில், அந்தத் தொலைபேசி அழைப்பில் நலமெனச் சொல்லி என் குரல் ஒரு பொய்யை உரைத்திருக்கக் கூடும்.

அன்பானவனே, நானுன்னைப் பிரிந்த நாளின் காலைவேளை நினைவிருக்கிறதா உனக்கு ? நமக்குப் பிடித்த மழை, துளித்துளியாக முற்றவெளியெங்கும் இறங்கி தேகங்களைக் குளிரச் செய்திருந்தது. அந்தக் குளிர் உனக்குப் பிடித்தமானது. எவ்வளவு குளிரானாலும், அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளிப்பவன் நீ. இழுத்துப் போர்த்தி உறங்குமெனை உன் தலை சிலுப்பித் தெளிக்கும் நீர்ச் சொட்டுக்களாலேயே எழுப்புவாய். அன்றும் அப்படித்தான். எனினும் அன்றைக்கொரு மாற்றம். வார இறுதி விடுமுறைக்காக வந்திருந்த உனது நண்பர்களின் குழந்தைகள் நமது அறையில் பூக்களைப் போல உறங்கிக் கொண்டிருந்தனர். நாமிருவரும் ஓசையெழுப்பாத பூனைக் குட்டிகளாகி மேல் மாடியிலிருந்து கீழே வந்தோம்.

அன்று நாங்கள் மட்டும்தான் தாமதித்து எழுந்திருந்திருக்கிறோம். உனது நண்பர்கள், விருந்தினர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கூடத்தில் கலகலத்தபடி பேசிக் கொண்டிருந்தது பெரும் மகிழ்வினைத் தந்தது. ஏலக்காய் மணக்கும் உனது தேனீரின் சுவையை அறிந்த அவர்களில் சிலர் அக்குளிர் வேளையில் சுடச் சுடத் தேனீர் உன்னைக் கேட்டதற்கிணங்கி நீ சமையலறைக்குப் போக வேண்டியதாயிற்று. அவர்களின் மகிழ்வை, வாழ்வினை ஆனந்தமாகக் களிக்கும் விதத்தினை அவர்களது பேச்சில், சிரிப்பில் அன்று நான் அருகிலிருந்து கண்டேன். நீ அவர்களில் ஒருவன். அவர்களது வயதினை ஒத்தவன். நீயும் அப்படியே ஆனந்தமாக வாழவேண்டியவன். நானுன்னை அவர்களை விட்டும் தனியாகப் பிரித்துவிட்டேனோ என்ற எண்ணம் என்னில் கிளர்ந்து இதயம் முழுதும் பரவியது. ஒரு குற்ற உணர்வை என்னில் விதைத்தது.

என்னால் உனக்கு விரும்பியபடி பயணங்களில்லை. பணி புரியும் இடத்திலும் என்னைப் பற்றியே சிந்தனை. உனது எழுத்துக்களில், நேசத்தில், எல்லாவற்றிலுமே நான். நான். நான் மட்டுமே தான். திருமணம் கூடத் தேவையின்றி வாழ்நாள் முழுதும் என்னுடனேயே இருக்க வேண்டுமென்ற சிந்தனை கூட உன்னில் ஒளிந்திருந்தது. வீட்டிற்கு இளையவன் நீ. சகல வசதிகளும் வாய்ந்த செல்லப்பிள்ளை நீ. உன் சந்ததியைக் காண பெருவிருப்போடு இருக்கும் உனது முழுக் குடும்பத்தையும் எனக்காகப் பகைத்துக் கொள்பவனாக உன்னைக் காண எனக்குச் சக்தி இருக்கவில்லை. அன்றுதான் நீயறியாது நான் வெளியேறினேன்.

நீ எனக்காக அன்பினால் பார்த்துப் பார்த்துச் செய்த, நமது பிரியத்திற்குரிய அழகிய பெருவீட்டின் வாயிலைக் கடந்தேன். . கொட்டும் மழையில் என் கண்ணீரைத் தனியாகக் கண்டறிந்துகொள்ள யாருமிருக்கவில்லை. என் விழிகளிலிருந்து வழிந்த அனல், வெளியே படிந்திருந்த குளிரினை உருக்கியகற்றி எனக்கு வழி சமைத்துக் கொடுத்தது. உன் அன்பினை மட்டுமே வழித்துணையாய்க் கொண்டு என் எதிர்காலப் பாதையறியாப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

எல்லோரும் போய்விட்ட பின்பு அல்லது வீட்டில் உனது பணிகள் ஓய்ந்த பின்பு நீ என்னைத் தேடியிருப்பாய். எனது சுவாசம் நிறைத்த உனது அறையினில், வெளித் திண்ணை ஊஞ்சலில், மொட்டை மாடியில், நீச்சல் குளத்தில் ஏன் மழை பெய்திட்ட போதும் பன்னீர்ப் பூக்களைச் சிதறவிடும் அந்த அழகிய மரத்தைச் சுற்றியும் கூடத் தேடியிருப்பாய். நான் உன்னிடத்தில் என்னை விட்டு வெளியேறியிருந்தேன் என்பதை உணர முடியாமல் தவித்தபடி இருந்திருப்பாய். ஒரு காகிதத்தில் சிறுகுறிப்பையேனும் கிறுக்கி வைக்காமல், எனது எல்லைகளைக் கூட நீ எட்டாவண்ணம் நான் தொலைந்துபோனேன் அன்று. என்னைக் குறித்தான வெறுப்பு உன் மனதில் முளைக்கும்வரை அழுதபடி இருந்திருப்பாய்.

அழகனே, நீ எந்தக் குறைகளுமற்றவன். உன் இளவயதிற்கேற்ற நல்வாழ்க்கை, இல்வாழ்க்கை வாழவேண்டியவன். விபத்தொன்றில் சிக்கி, அநாதையாகத் தனித்துக் கிடந்தவனை உன் வீட்டுக்கு அழைத்து வந்து அன்பூட்டிக் குணப்படுத்தி, அரவணைத்துப் பார்த்துக் கொண்டதே போதும். இப்படிப்பட்ட ஊனமுற்றவனை நண்பனாகக் கொண்டு, இறுதி வரை எனக்காகவே அத்தனை தியாகங்களையும் செய்தபடி, என்னுடனேயே வாழ உனக்கென்ன விதி நண்பா ? என் போன்றோருக்கென பல விடுதிகள் உள்ளன. என் துயரங்கள் என்னுடனே மடியட்டும். உனது மகிழ்வான வாழ்வுக்கான அழகிய பிரார்த்தனைகளையும், முழு மனதுடனான என் தூய அன்பையும் உனக்கென மட்டுமே நான் என்றும் பேணிக் காப்பேன். அது போலவே என் வாழ்நாள் முழுவதற்குமாக நான் உன்னில் கண்ட அன்பு ஒன்றே என்னை எஞ்சிய நாட்களை மகிழ்வோடு வாழவைக்கும். நம்பு. இனி வாழ்வில் என்றும் நல்லதே நடக்கும். உனக்கும். எனக்கும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

நன்றி - விகடன்

19 comments:

ராமலக்ஷ்மி said...

விட்டு விலகிச் செல்பவள் என்றைக்கும் வெறுத்தோ ஒதுக்கியோ மட்டும் செல்பவளாக இருப்பதில்லை. இப்படியும் இருக்கிறார்கள். விரும்பியவன் நலம் கருதி நிம்மதி கருதி நல்லது கருதி தூய அன்பின் பிரதிபலிப்பாய்...அற்புதமான பாத்திரப் படைப்பு. அருமையான கதை. அழகுத் தமிழில் அந்த அன்பு பிரவாகமெடுக்கிறது கதை நெடுக. வாழ்த்துக்கள் ரிஷான்.

Kavinaya said...

ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழிகிறது ஒவ்வொரு சொல்லிலும். உண்மை அன்பெனில் இதுதான். ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்துகளைப் படிக்கையில் எழும் வியப்பு இப்போதும். எப்படிப்பா இப்படியெல்லாம்!! அருமை.

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//விட்டு விலகிச் செல்பவள் என்றைக்கும் வெறுத்தோ ஒதுக்கியோ மட்டும் செல்பவளாக இருப்பதில்லை. இப்படியும் இருக்கிறார்கள். விரும்பியவன் நலம் கருதி நிம்மதி கருதி நல்லது கருதி தூய அன்பின் பிரதிபலிப்பாய்...அற்புதமான பாத்திரப் படைப்பு. அருமையான கதை. அழகுத் தமிழில் அந்த அன்பு பிரவாகமெடுக்கிறது கதை நெடுக. வாழ்த்துக்கள் ரிஷான்.//

ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே ? :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழிகிறது ஒவ்வொரு சொல்லிலும். உண்மை அன்பெனில் இதுதான். ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்துகளைப் படிக்கையில் எழும் வியப்பு இப்போதும். எப்படிப்பா இப்படியெல்லாம்!! அருமை.//

நீங்கள் வியக்கும்படி பெரிதாக ஒன்றுமில்லை சகோதரி. வாழ்வில் பார்த்துக் கேட்டு அனுபவித்தவற்றை எழுத முயற்சித்திருக்கிறேன்..அவ்வளவே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Gowripriya said...

அருமை ரிஷான்...உங்களின் எழுதுக்கள் விட்டுச் செல்லும் அழுத்தமான மௌனம் இந்தப் படைப்பிலும் இருக்கிறது... எனக்கு மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்துகள்

M.Rishan Shareef said...

அன்பின் கௌரி,

உங்கள் முதல்வருகை என்னை மகிழ்விக்கிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//அருமை ரிஷான்...உங்களின் எழுதுக்கள் விட்டுச் செல்லும் அழுத்தமான மௌனம் இந்தப் படைப்பிலும் இருக்கிறது... எனக்கு மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்துகள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

இளசு said...

மழைக்குளிரை அகற்றிய விழி அனல்..

அசத்திய வரி..

முதிர்பெண்ணா என்ற நினைப்பை இறுதியில் முறித்து
ஊனமுற்ற முதியவருக்கான அன்பு..
அதனால் நடைமுறை வாழ்வில் தடங்கல்..
அதை நீக்க அம்முதியவரே நீங்கல்... என

மனிதநேயம் ஓங்கிச் சொல்லும் க(வி)தை!

விகடனில் வெளிவந்தமைக்கும் சேர்த்து சிறப்புப் பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இளசு,
//மழைக்குளிரை அகற்றிய விழி அனல்..

அசத்திய வரி..

முதிர்பெண்ணா என்ற நினைப்பை இறுதியில் முறித்து
ஊனமுற்ற முதியவருக்கான அன்பு..
அதனால் நடைமுறை வாழ்வில் தடங்கல்..
அதை நீக்க அம்முதியவரே நீங்கல்... என

மனிதநேயம் ஓங்கிச் சொல்லும் க(வி)தை!

விகடனில் வெளிவந்தமைக்கும் சேர்த்து சிறப்புப் பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே!//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

தமிழ்நதி said...

ரிஷான், இதைக் கதையென்றா சொல்கிறீர்கள்? இதை வாசித்தால் கதை போல எனக்குத் தோன்றவில்லை. உண்மை எழுத்துக்கு உயிர்கொடுக்கும். அந்த உண்மையை நான் இதில் கண்டேன். வாழ்த்துக்கள். பிறழ்வென்றோ பிழையென்றோ உலகில் எதுவும் இல்லை... எல்லாம் கட்டமைக்கப்படுகின்றவைதான். மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் ரிஷான்.

ஆதவா said...

ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப்பட்டு மிக நெருக்கிக் கட்டியதைப் போல இருக்கிறது. க(வி)தை. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நல்ல இலக்கியம் படித்ததைப் போன்ற உணர்வு. கொஞ்சம் மீறாமல். சொற்களில் அடர்த்தி அதிகம். கொஞ்சம் கவனம் பிசகிப் படித்தாலும் கைவிட்டகலும்படியான சொற்றொடர்கள்.!!! தொடக்கக் கவிதை மட்டும் உங்களது தரத்தில் அமைந்திருக்கவில்லை!

சில நேரங்களில் நாமாகவே விலகியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இங்கேயும் அப்படியொரு நிர்பந்தத்திற்கு உணர்வுகள் போராடுகின்றன. தள்ளியே இருத்தல் என்பது சிலருக்குக் கைகூடாதது. (என்னிடம் சொன்னீர்களென்றால் மகிழ்ச்சியோடு எதையும் ஏற்றுக் கொள்ளுவேன் ) ஆனாலும் தன்னையே தாழ்த்திக் கொள்ளுதல் போல, அப்படியெண்ண வேண்டுமா?

தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான்!!! சிறப்பான ஒரு இலக்கியக் க(வி)தை இது

Unknown said...

//ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே // உண்மை ரிஷு. மிகவும் ரசித்தேன்.

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

//ரிஷான், இதைக் கதையென்றா சொல்கிறீர்கள்? இதை வாசித்தால் கதை போல எனக்குத் தோன்றவில்லை. உண்மை எழுத்துக்கு உயிர்கொடுக்கும். அந்த உண்மையை நான் இதில் கண்டேன். வாழ்த்துக்கள். பிறழ்வென்றோ பிழையென்றோ உலகில் எதுவும் இல்லை... எல்லாம் கட்டமைக்கப்படுகின்றவைதான். மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் ரிஷான்.//

இது கதையல்ல, நிஜம்தான். வாசிக்கச் சுவாரஸ்யமாக இருக்கட்டுமே எனச் சில வர்ணனைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப்பட்டு மிக நெருக்கிக் கட்டியதைப் போல இருக்கிறது. க(வி)தை. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நல்ல இலக்கியம் படித்ததைப் போன்ற உணர்வு. கொஞ்சம் மீறாமல். சொற்களில் அடர்த்தி அதிகம். கொஞ்சம் கவனம் பிசகிப் படித்தாலும் கைவிட்டகலும்படியான சொற்றொடர்கள்.!!! //
நன்றி நண்பா !

//தொடக்கக் கவிதை மட்டும் உங்களது தரத்தில் அமைந்திருக்கவில்லை!//

ஆமாம்..அதனை நானும் உணர்கிறேன். தொகுப்பாக்கப்படும் பொழுது நீக்கிவிடலாமென இருக்கிறேன்.

//சில நேரங்களில் நாமாகவே விலகியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இங்கேயும் அப்படியொரு நிர்பந்தத்திற்கு உணர்வுகள் போராடுகின்றன. தள்ளியே இருத்தல் என்பது சிலருக்குக் கைகூடாதது. (என்னிடம் சொன்னீர்களென்றால் மகிழ்ச்சியோடு எதையும் ஏற்றுக் கொள்ளுவேன் ) ஆனாலும் தன்னையே தாழ்த்திக் கொள்ளுதல் போல, அப்படியெண்ண வேண்டுமா? //

தாழ்த்திக்கொள்தல் அல்ல நண்பா..
தனக்குத் துயர்தானெனினும் தான் நேசிக்கும் உயிரின் மகிழ்வை நாடி விட்டுக் கொடுத்தல்

//தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான்!!! சிறப்பான ஒரு இலக்கியக் க(வி)தை இது//

நன்றி நண்பா !
நிச்சயம் தொடர்கிறேன் !!

M.Rishan Shareef said...

அன்பின் உமாஷக்தி,

////ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே // உண்மை ரிஷு. மிகவும் ரசித்தேன்.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

ஷைலஜா said...

ரிஷு!

அமைதியான நேரத்தில் மென்மையான புல்லாங்குழல் கீதத்தின் நடுவில் சட்டென வரும் ஒரு வினாடி மௌனம், அந்த கீதத்தின் உயிர்மூச்சாய் நம்மனதையும் வருடும் அப்படி ஒரு சுகானுபவம் இந்தக்கதையைப்படிக்கிறபோது கிடைக்கிறது, ஒருவேளை இது அன்பைப்பற்றியதால் அருவியாய் மனசையும் நனைக்கிறதோ என்னவோ?
இளம்வயதில் உங்க எழுத்தின் சாதனை பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது
வாழ்க வளர்க!

நிலாரசிகன் said...

புரிந்தது ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் நிலாரசிகன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

thirumaalan said...

தோழர் ரிஷான் அவர்களுக்கு

தரமான கதையை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள், நல்ல நடை, நீர் ஓடையின் கரையில் உக்காந்து கொண்டு வேடிக்கை பார்த்த பரவசம்,நல்ல இலக்கியத்தை படித்த மகிழ்ச்சி,கூடவே எதோமனசுக்கு ஒரு இதமான
வருடலாய் உங்கள் அழகிய சிறுகதை

M.Rishan Shareef said...

அன்பின் திருமாலன்,

//தோழர் ரிஷான் அவர்களுக்கு

தரமான கதையை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள், நல்ல நடை, நீர் ஓடையின் கரையில் உக்காந்து கொண்டு வேடிக்கை பார்த்த பரவசம்,நல்ல இலக்கியத்தை படித்த மகிழ்ச்சி,கூடவே எதோமனசுக்கு ஒரு இதமான
வருடலாய் உங்கள் அழகிய சிறுகதை//

உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !