Monday, November 2, 2009

முற்றுப்புள்ளி


(01)

            நளீம் நானாவுக்கும், நுஸ்ரத் ராத்தாவுக்குமான காதல், கல்யாணத்தில் முடியாமல் போனது ஒரு பலாப்பழத்தால் எனச் சொன்னால் ஆச்சரியமாகத்தானிருக்கும். நிஜமாகவே ஒரு பலாப்பழமும் நானும் சிஹானும்தான் காரணமாக ஆகிவிட்டோம்.

            அப்பொழுது எனக்கும், சிஹானுக்கும் எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். நளீம் நானாவுக்கு இருபது வயதிருந்திருக்கலாம். படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். கிராமத்து பிரதான வீதியோரமாகவே எனது வீடு. சிஹானின் வீடும், நளீம் நானாவின் காணியும் எனது வீட்டுக்குப் பின்னாலுள்ள பெரும் மேட்டுக்கு மேலிருந்தது. எனது வீட்டுக்குப் பின்னாலிருந்த சிஹானின் வீட்டு வாயிலிலிருந்து மொத்தக் கிராமத்தையும் முழுவதுமாகப் பார்த்துவிடலாம்.

            நளீம் நானாவின் காணிக்குப் போக, நுஸ்ரத் ராத்தாவின் வீட்டின் இடதுபுற மதிலோடு ஒட்டி மூன்றடிப் பாதை உண்டு. கருங்கற்களைப் படிகளாய்ப் பதித்த பாதை. அந்தளவுக்கு உயரமான மேட்டுநிலம் அது. மழை நாட்களில் சேற்றோடு பெருகிவரும் வெள்ளம் அப்பாதையை நிரப்பும். அத்தோடு நளீம் நானாவின் காணியிலிருந்து நீரோடு உருண்டுவரும் சிறு, சிறு கருங்கற்கள் அக் காணிக்கு நேர் கீழ் வீடான நுஸ்ரத் ராத்தாவின் வீட்டுக் கூரையில் விழுந்து ஓட்டையாக்குவதால் நுஸ்ரத் ராத்தாவின் குடும்பத்துக்கும், நளீம் நானாவின் குடும்பத்துக்கும் முற்காலத்திலிருந்து ஆகாது.

            நளீம் நானாவின் வீடு எமது வீடுகளுக்குச் சற்றுத் தொலைவில், தள்ளி இருந்தது. ஆனாலும் அவர் எப்படியும் கிழமைக்கு மூன்று தரமாவது தனது காணியைச் சுற்றிப்பார்க்க வந்துவிடுவார். அவரது மேட்டுக்காணியிலிருந்துதான் நாங்கள் பட்டம் விடுவது, குருவி அடிப்பது, ஓணான் பிடிப்பது போன்ற சாகசங்களைச் செய்துவந்தோம். எதுவுமே சொல்ல மாட்டார். பண்டைய கால ராஜாக்களைப் போலத் தன் தோட்டத்துக் காணியின் பெரும் பாறையொன்றில் வீற்றிருந்து கீழே தெரியும் நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலையே ஏறிட்டுப் பார்த்தபடியிருப்பார் அவர். மணிச் சத்தத்தோடு வரும் நளீம் நானாவின் சைக்கிள் எனது வீட்டின் மதிலருகே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதறிந்த நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலும் திறக்கும். காதல் புன்னகைகளும் சைகை பாஷைகளும் இருவருக்குமாக மாறி மாறிக் காற்றில் பறக்கும். ஏதுமறியாத நாம் அக் காற்றைக் குறுக்கறுத்துப் பட்டம் விட்டபடி அலைந்துகொண்டிருப்போம்.

            அம் மேட்டுக் காணியிலிருந்த பெரிய, உயரமான விருட்சங்களில் அடிக்கடி எங்கள் பட்டங்கள் சிக்கிக் கொள்ளும். கெஞ்சிக் கூத்தாடி, நளீம் நானாவை ஏறி எடுத்துத் தரச் சொல்வோம். அவரும் ஒரு போர் வீரரின் லாவண்யத்தோடு நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலை மாறிமாறிப் பார்த்துவிட்டு ஏறத்தயாராகுவார். அவரது நோக்கம் அறிந்த நுஸ்ரத் ராத்தாவின் கையசைவுகள் மரத்தில் ஏற வேண்டாமெனச் சொல்லும். ஆனாலும் செயல் வீரர் கருமமே கண்ணாக மரத்தில் ஏறி, பட்டத்தை எடுத்துத் தந்துவிட்டு ஒரு பெருமிதத்தோடு அறை ஜன்னலை நோக்குவார். நுஸ்ரத் ராத்தா கண்களில் வியப்பைப் பரிசளிப்பார். அதற்காகவே பட்டங்கள் அடிக்கடி சிக்கவேண்டும் போலிருக்கும்.

            காணியில் காய்த்திருக்கும் கொய்யாப்பழங்கள், வெரலிக்காய்கள் போன்ற சிறு சிறு பழங்களைக் காதல் பரிசாகத் தரும் நளீம் நானாவுக்கு உதவியாக, நுஸ்ரத் ராத்தாவிடம் யாருமறியாமல் அவற்றைக் கொண்டு போய்க்கொடுப்பது எமது அவ்வப்போதைய வேலையாக இருந்து வந்தது. எமக்கும் அவ்வப்போது பழங்கள் கிடைப்பதாலும், நளீம் நானாவின் உதவிகள் கிடைப்பதாலும் யாரிடமும் சொல்லாமல் இவ்விடயத்தை ஒரு ரகசியம் போலக் காத்துவந்தோம்.

(02)

            நுஸ்ரத் ராத்தா வீட்டுத் தலைவாசலுக்கு முன்னாலிருந்த பகுதியிலிருந்து வீதியோடு ஒட்டிய வீட்டு வெளி மதில் வரையில் திராட்சைக் கொடிப்பந்தல் போட்டு, காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும். வீதி வரையில் நீண்ட பந்தலில், மதிலைத் தாண்டி தெருவைப் பார்த்தவாறு காய்த்திருக்கும் திராட்சைக் குலைகளை யாரும் பறித்துவிடாமலும், கண்வைத்து விடாமலுமிருக்க பொலிதீன் பைகளால் அவற்றை மறைத்துக் கட்டியிருந்தார் நுஸ்ரத் ராத்தாவின் வாப்பா.

            அவர் அப்படி மறைத்துக் கட்டவேண்டிய தேவையேயில்லை. ஊராரை அழைத்து அவர் அக் குலைகளை இலவசமாகப் பறித்துப் போகும்படி ஆணையிட்டால் கூட யாரும் பறித்துச் செல்ல மாட்டார்கள். குருவிகள் கூட ஒரு தடவை அப் பழங்களைக் கொத்திப் பார்த்தால் ஊரை விட்டே பறந்தோடிப் போகும்.  அவ்வளவு புளிப்புச் சுவை கொண்டவை அப் பழங்கள். பழப்பரிமாற்றங்கள் நடக்கும் நாளில் நளீம் நானாவுக்கு திராட்சைக்குலையொன்றினைப் பறித்துக் கொள்ளும்படி சொல்லுமாறு எங்களிடம் சொல்லிவிடுவார் நுஸ்ரத் ராத்தா.

            மதிய நேரத்துக்குப் பின்னர் எங்கள் தெருவில் சனமிருக்காது. நுஸ்ரத் ராத்தா வீட்டிலும் மதிய உணவு உண்ட மயக்கத்தில் நுஸ்ரத் ராத்தாவைத் தவிர மற்ற எல்லோரும் உறங்கிக்கொண்டிருப்பர். எம்மிடம் சொல்லிவிடுவது போதாதென்று சைகையிலும் சொல்லும் நுஸ்ரத் ராத்தாவின் கட்டளையை சிரமேற்கொண்டு மதிய உணவுக்கு தனது வீட்டுக்குப் போய் வருகையில், தெருவில் யாருமற்ற வேளையில், நுஸ்ரத் ராத்தாவின் வீட்டைத் தாண்டி  வரும் கணத்தில் ஒரு திராட்சைக் குலையை சைக்கிளில் இருந்து எழும்பிப் பறித்துக் கொண்டு அவரது பாறைச் சிம்மாசனத்துக்கு எடுத்து வருவார் நளீம் நானா.

            நளீம் நானா கொடுத்தனுப்பிய கொய்யாப்பழத்தினை அவர் பார்க்க, அறை ஜன்னலருகிலிருந்து புன்னகையுடன் சுவைப்பார் நுஸ்ரத் ராத்தா. இங்கு புளித் திராட்சைகளைக் கடிக்கும் நளீம் நானாவின் முகத்தில் நவரசங்களும் மிளிரும். புன்னகை, அஷ்டகோணலாகி உடல் சிலிர்க்கும். இருந்தும், தலைவியின் அன்புக் கட்டளையென்பதால் கருமமே கண்ணாக முழுக் குலையையும் உள்ளே தள்ளுவார் அவர். இப்படியாக அவர்களது காதல் நாளொரு பழமும் பொழுதொரு புளிப்புமாக வளர்ந்தது.

            ஒரு நாள் மதியத்திற்குப் பிற்பாடு, நானும் சிஹானும் கவட்டுவில்லில் கல் வைத்துக் குருவியடித்துக் கொண்டிருந்தோம். மாமரத்தில் அழகிய பூமைனாவொன்று பார்வைக்கு வசமாகச் சிக்கியது. சிஹான் குறிபார்த்து அடித்ததில் மைனாவின் சிறகொன்றில் கல் பட்டு, கருங்கற் படியருகில் வீழ்ந்தது. நாம் இருவரும் ஓடிப் போய்ப் பிடிக்க முன்பு பெருஞ்சிரமத்தோடு எழும்பிப் பறந்த மைனா திரும்பவும் கருங்கற் படியோடு ஒட்டியிருந்த நுஸ்ரத் ராத்தா வீட்டு மதிலைத் தாண்டிப் போய் அவர்கள் வீட்டு முன்னாலிருந்த திராட்சைக் கொடிக்குள் வீழ்ந்து சிக்குண்டது.

            மைனாவை எடுக்கவேண்டும். எல்லோரும் மதிய உணவு மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பர். எனினும் இருவருக்குமே நுஸ்ரத் ராத்தா வீட்டுக்குப் போய் மைனாவை எடுத்துவரப் பயம். நுஸ்ரத் ராத்தாவுடைய உம்மாவின் குரலும், அவரது சண்டையிடும் வழக்கமும் ஊரறியப் பிரசித்தம். என்ன செய்வதென அறியாமல் வழமை போலவே நளீம் நானாவிடம் அடைக்கலம் புகுந்தோம்.

            தான் மருமகனாகப் போகும் வீட்டுக்கு முதன்முதலாகத் திருடனைப் போலப் போவதை அவர் விரும்பியிருக்க மாட்டாரெனினும் எங்களது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அவர் மைனாவை எடுத்துத்தர இசைந்தார். கருங்கற் படியிலிருந்து எம்பி ஏறி, மதில் மேல் நின்றார். பின்னர் மதிலிலேயே தொடர்ச்சியாக நடந்துபோய் திராட்சைப் பந்தலுக்குள்ளிருந்த மைனாவை கண்களால் தேடினார். கண்டுகொண்ட பின்னர், பந்தலுக்குள் இறங்குவதற்காக, பந்தலுக்காகப் போட்டிருந்த பாக்குமர உருளையில் காலைவைத்தார். 'டமார்' எனச் சப்தமெழுப்பியபடி பந்தலையும் உடைத்துக் கொண்டு பந்தலுக்குள் எசகுபிசகாக விழுந்தார்.

            சப்தம் கேட்டெழுந்த நுஸ்ரத் ராத்தாவின் உம்மா 'கள்ளன், கள்ளன்' என ஓலமிடத் தொடங்கினார். நல்லவேளையாக அவர் ஓடி வந்து முன் வாசல் கதவைத் திறக்க முடியாதபடிக்கு வாசலைப் பந்தல் அடைத்துக் கொண்டிருந்தது. நளீம் நானா விழுந்த வேகத்தில் எழுந்து மதிலைத் தாண்டிக் குதித்து தப்பித்து ஓடிவிட்டிருந்தார். இராமனின் பாதணியை பரதன் காத்துநின்றது போல, திருடனைக் கண்டுபிடிக்கவென நளீம் நானா விட்டுச் சென்றிருந்த ஒற்றைச் செருப்பினை நுஸ்ரத் ராத்தாவின் வாப்பா நெடுநாள் காத்துவந்தார். அவர் பரம்பரை, பரம்பரையாக வளர்த்துவந்த கொடி, எவனோ ஒரு போக்கிரியால் உடைந்து போனதென வீதியில் வருவோர், போவோரிடமெல்லாம் கூட சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். நமது பூமைனாவுக்கு என்னவாயிற்று எனத்தான் இன்று வரைக்கும் தெரியவில்லை.

            அன்று தப்பித்துப் போன நளீம் நானா ஒரு கிழமைக்கு தோட்டத்துப்பக்கம் வரவேயில்லை. நுஸ்ரத் ராத்தா எங்களை அழைத்து, நளீம் நானாவைப் பற்றி ஆதூரமாகவும் , கவலையோடும் விசாரித்தார். அன்று விழுந்த வேகத்தில் நளீம் நானாவுக்கு இடுப்பு சுளுக்கிக் கொண்ட விடயத்தை நாம்தான் அவரிடம் கூறினோம். ஏறத்தாழ பத்து நாட்களின் பின்னர் காணிக்கு வந்த நளீம் நானாவின் கால்களில் புதுச் செருப்புக்கள் மின்னின.

(03)

            நுஸ்ரத் ராத்தாவின் உம்மா நாட்டுக் கோழிகள் வளர்த்து வந்தார். காலையில் திறந்துவிடும் கோழிகள் அனேகமாக நளீம் நானா வீட்டுக் காணியில்தான் மேய்ந்தபடி இருக்கும். ஒரு முறை ஒரு கோழியைக் கீரிப்பிள்ளை அடித்து இழுத்துக் கொண்டுபோகையில் நாங்கள் கண்டு கீரியை அடித்துவிரட்டிக் கோழியைக் காப்பாற்றிவிட்டோம். அரை உயிரோடு இரத்தம் வழிய நிலத்தில் கிடந்து துடித்தது அது. கோழியைக் கொண்டுபோய் நுஸ்ரத் ராத்தா வீட்டில் கொடுத்துவரும்படி எமக்குக் கட்டளையிட்டார் நளீம் நானா. இரத்தம் வழியத் துடிதுடிக்கும் அதனைச் சுமக்க எம்மாலாகாது எனக் கூற மிகுந்த தயக்கத்தோடு தனது தோட்டத்திலிருந்து நுஸ்ரத் ராத்தாவின் வீட்டின் கொல்லைப்பக்கமாக நளீம் நானா கோழியை எடுத்துவந்தார்.

            புது ஆடையோடு தலை வாசல் வழியே பன்னீர் தெளிக்க உள் நுழைவதாகக் கனவு கண்டுகொண்டிருந்த மருமகன், அவ்வீட்டுக்கு கொல்லைப்புறமாக கைகளில் இரத்தம் வழியச் செல்லவேண்டி வருமென நினைத்துக் கூட பார்த்திருந்திருக்க மாட்டார். நானும், சிஹானும் சமையலறைக்குள்ளிருந்த நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடம் போய் விடயத்தைக் கூறினோம். பெரும் பதற்றத்துடன் , கீரியைச் சபித்துச் சப்தமெழுப்பியபடி வெளியே வந்தார் அவர். நளீம் நானாவின் கையிலிருந்த கோழியின் தலையை ஒரு குழந்தையைத் தடவுவது போல தடவிக் கொடுத்தார். பின்னர் வீட்டில் ஆண்கள் யாருமில்லையெனச் சொல்லி நளீம் நானாவையே கோழியை அறுத்துத் துப்புரவாக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். நுஸ்ரத் ராத்தாவும் சமையலறை ஜன்னலிலிருந்து நளீம் நானாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். வருங்கால மாமியாரின் பணிவான கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்வீரர் அக்கோழியை அறுத்துத் துப்புரவாக்கிக் கொடுத்தார்.

            அன்றிலிருந்துதான் நளீம் நானாவை நேருக்கு நேராகக் காணும் பொழுதுகளில் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவும் வாப்பாவும் அவருடன் புன்னகைக்கத் தொடங்கினர். சலாம் சொல்லிக் கொண்டனர். தோட்டத்துப் பப்பாளிப் பழங்கள் எங்களால் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடமே நேரடியாகக் கொடுக்கப்பட்டன. நளீம் நானாவும், நுஸ்ரத் ராத்தாவும் தங்கள் காதல் தடைகளின்றி நிறைவேறுமென்ற மகிழ்வோடு கனவுகள் கண்டு, காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர் அந்த சங்கடமான நாள் வரும் வரையில்.

            நளீம் நானா தோட்டத்தில் அகன்ற, பெரிய பலாமரமொன்று இருந்தது. பென்னம்பெரிய காய்கள் காய்த்துத் தொங்கும். நல்ல சுவையான சுளைகளைக் கொண்ட பலாப்பழங்கள் ஊர் முழுதும் வாசனை பரப்பக் கூடியன. அம்மரத்திலும் அப்படியாக ஒரு பழம் கனிந்தது. வாசம் வீசும் அப் பழத்தைக் கண்ட நுஸ்ரத் ராத்தா, அதைத் தங்கள் வீட்டுக்குத் தரமுடியுமா எனக் கேட்டு நளீம் நானாவிடம் எங்களைத் தூது அனுப்பினார். தோட்டத்துப் பழங்களையெல்லாம் தானாகக் கொடுத்தனுப்புபவர், நுஸ்ரத் ராத்தாவே கேட்ட பின்பு கொடுக்காமல் இருப்பாரா ? அவரே மரத்தில் ஏறி அப்பழத்தினைப் பறித்துக் கயிறு கட்டி இறக்குவதை ராத்தா ஜன்னலினூடாகப் பதற்றத்துடன் பார்த்திருந்தார்.

            பழத்தினைப் பறித்தாயிற்று. அவராகக் கொடுப்பது போல் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடம் பழத்தினைக் கொண்டுபோய்க் கொடுக்கும் பொறுப்பு என்னிடமும், சிஹானிடமும் ஒப்படைக்கப்பட்டது. பேய்க்கனத்துடனான பெரிய உருண்டையான பழம். பலாப்பிசின் வழிய வழிய இருவரும் பழத்தைத் தூக்கி அதன் இரு பக்கமாகப் பிடித்தபடி மிகச் சிரமத்துடன் அவ்வீட்டிற்கு நேர் மேலே உயர்ந்த மேட்டிலிருந்த மரத்தடியிலிருந்து மெல்லக் கீழே இறங்கத் தொடங்கினோம். சிஹான் அப்போதுதான் சாரம் அணியப் பழகியிருந்தான். தன் சாரம் நழுவுவதாகவும் கட்டிக் கொள்ளவேண்டுமெனவும் சொன்னவனுக்காக ஒரு கணம் பலாப்பழத்தை நிலத்தில் வைத்தோம். யாரும் எதிர்பாராதவிதமாகப் பள்ளத்தில் உருண்டு ஓடத் தொடங்கியது அது.

            பின்னாலே ஓடியும் பிடிக்கமுடியாமல் போன பழம் நுஸ்ரத் ராத்தா வீட்டுச் சமையலறைக் கூரையை, அகன்ற கிணறொன்றின் வாயைப் போல ஓட்டையாக்கி, உள்ளே குதித்து , சமையலிலிருந்த அவரது உம்மாவை அலறி, ஓலமிட வைத்தபின் தான் சிதறிக் கசிந்து ஓய்ந்தது. திடுக்கிடலோடும் பதற்றத்தோடும் வெளியே ஓடிவந்த அவர் பலாமரத்தைப் பார்த்தபடி, நளீம் நானாவையும், அவரது முன்னாள், வருங்காலப் பரம்பரையையும் சப்தமாக சபிக்கத் தொடங்கினார். நாங்கள் மூவரும் எப்பொழுதோ அவ்விடத்தைவிட்டும் ஓடி விட்டிருந்தோம். நளீம் நானாவை அதற்குப் பிறகு அக் காணியில் காணக் கிடைக்கவில்லை. நாங்கள் போனால் காலை முறித்துப் போடுவதாக எங்கள் வீடுகளில் எச்சரிக்கப்பட்டோம். பப்பாளியும், கொய்யாவும், வெரலிக்காய்களும் வீணாகப் பழுத்து உதிர்ந்தன. திராட்சைக் கொடி திரும்பத் துளிர்க்கத் தொடங்கிய நாளொன்றில், பழங்களாலும் பார்வைகளாலும் வளர்ந்துவந்த காதல் இப்படியாக ஒரு பலாப்பழத்தினாலும் எங்களாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி

# சொல்வனம் இதழ் - 11, 30.10.2009

சொற்குறிப்புகள்
* வாப்பா - தந்தை
* உம்மா - தாய்
* நானா - அண்ணன்
* ராத்தா - அக்கா

10 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ரிஷான் ;)

\\நானா - அண்ணன்
* ராத்தா - அக்கா\\

இப்பதான் தெரிஞ்சது !!

சாந்தி said...

//பழங்களாலும் பார்வைகளாலும் வளர்ந்துவந்த காதல் இப்படியாக ஒரு பலாப்பழத்தினாலும் எங்களாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.//


அடப்பாவமே.!!!!


நல்லா ருசியா சென்றது கதை ரிஷான்.. வேடிக்கையாகவும்..

விஜி said...

அட்டகாசமாக எழுதுகின்றீர்கள் ரிஷான். ஒவ்வொரு பழங்களின் அழகையும் கண்ணாரக்கண்டு ரசித்து ருசித்த திருப்தி..

நாளொரு பழமும் பொழுதொரு புளிப்பும்" என்ற வெகு பொருத்தமான சொல்லாடல்கள் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருந்தீர்கள்.

உங்கள் கவிதையின் வாசகி ஆகிவிட்டேன் நான்.

யதார்த்தமான எழுத்"தோட்டம்":)))

பரமேஸ்வரி said...

சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது. இந்த பலாப் ப்ழக் கதையை
என் வாழ் நாளில் மறக்க முடியும் எனத் தோன்றவில்லை எனக்கு

M.Rishan Shareef said...

அன்பின் கோபிநாத்,

நீண்ட நாட்களின் பிறகு...நலமா?

//நல்லாயிருக்கு ரிஷான் ;)

\\நானா - அண்ணன்
* ராத்தா - அக்கா\\

இப்பதான் தெரிஞ்சது !!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,

//பழங்களாலும் பார்வைகளாலும் வளர்ந்துவந்த காதல் இப்படியாக ஒரு பலாப்பழத்தினாலும் எங்களாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


அடப்பாவமே.!!!!


நல்லா ருசியா சென்றது கதை ரிஷான்.. வேடிக்கையாகவும்..//


நன்றி அக்கா.
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியது :))

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//முற்றுப்புள்ளி

அட்டகாசமாக எழுதுகின்றீர்கள் ரிஷான். ஒவ்வொரு பழங்களின் அழகையும் கண்ணாரக்கண்டு ரசித்து ருசித்த திருப்தி..

நாளொரு பழமும் பொழுதொரு புளிப்பும்" என்ற வெகு பொருத்தமான சொல்லாடல்கள் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருந்தீர்கள்.

உங்கள் கவிதையின் வாசகி ஆகிவிட்டேன் நான்.

யதார்த்தமான எழுத்"தோட்டம்":)))//


:))
நன்றி அன்புத் தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் பரமேஸ்வரி,

//சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது. இந்த பலாப் ப்ழக் கதையை
என் வாழ் நாளில் மறக்க முடியும் எனத் தோன்றவில்லை எனக்கு//

:))

நன்றி சகோதரி !

பூங்குழலி said...

கொஞ்சம் இழையோடும் நகைச்சுவையோடு நல்லா இருக்கு ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//கொஞ்சம் இழையோடும் நகைச்சுவையோடு நல்லா இருக்கு ரிஷான்//

கருத்துக்கு நன்றி சகோதரி !