Wednesday, December 16, 2009

நிழற்படங்கள்            நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.

            சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.

            அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. 'ஏதாவது சாப்பிடுறீங்களா?' எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.

            கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.

            இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.

            வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.

            நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

            நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.

            சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.

            அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.

            அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.

            இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

            பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.

            ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும்  சொல்லிக்கொண்டோம்.

            பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.

            நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன்.  ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?

            உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.

            இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.

            இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர்  தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். 'அவள் ரொம்பக் கஷ்டப்படுறா' எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி

# நவீன விருட்சம் காலாண்டு இதழ் - 84
# திண்ணை

37 comments:

கிருஷ்ண பிரபு said...

நண்பரே... எழுத்தாளர் அ. முத்து லிங்கம் உங்களை பற்றி ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டதாக எழுதியிருந்த பதிவை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அப்பொழுதே பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

சிறு கதையை படித்தேன். நன்றாக இருக்கிறது. முத்து லிங்கத்தின் கதை சொல்லும் சாயல் ஆங்காங்கு வருவது போல் தோன்றுகிறது. :-)

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

மஞ்சுபாஷிணி ஜெகந்நாதன் said...

மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ரிஷான்,
பல கண்கள் தங்கள் காதலைக் கனவாகவே சுமந்து வாழ்வது இயல்பாகச் சொல்லும் இந்த வரி அருமை.

//அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.//

வாழ்த்துக்கள் ரிஷான்.

முத்துக்குமார் said...

அற்புதமான எழுத்து - பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி நண்பரே.

தமிழன் வேணு said...

சரளமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களை அருகில் இருந்து பார்த்தது போல ஒரு பிரமை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

விஜி said...

ரிஷான்,
பெண்களின் மன ஓட்டத்தைக்கூட தத்ரூபமாக உணர்ந்து வடித்திருக்கின்றீர்களே,

வாசித்ததும் நிறைய யோசிக்க வைத்தது. அதனால் உடனடியாக என் பதிலை எழுத முடியவில்லை.

இணையத்தில் முகம்பார்க்காமல் தொடங்கும் பல பழக்கங்கள். இப்படிச்சிலவேளை காதல் என்ற சிக்கலில் மாட்டிவிட்டு 'காதலே இல்லை" என்று உறைக்க வைக்கும்....உறைய வைக்கும்.

நாளுக்கொரு வேடம் ஆளுக்கொரு வேடம் போடுபவர்கள் அதிகமாகித்தான் ் போனார்கள். ஆனாலும் சில நல்ல உள்ளங்கள்( இதில் நண்பர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் பெயர் வைக்கலையோ?:)) இருக்கின்றன.


நிழற்படமாகவே என் மனதில் தங்கிவிட்டது உங்கள் எழுத்துக்களின் தாக்கம்.

பூங்குழலி said...

//சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.//


//உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும்//

//அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது//

//அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்//

//பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
இது போன்ற பல அழகான சிந்தனைகள் கதை முழுவதும்//

தோடம்பழச் சுளைகளைத்
இது என்ன பழமோ?

கதையின் கருவில் ஒன்றும் அத்தனை புதுமையில்லை ...கொஞ்சம்
நீளத்தை குறைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் ரிஷான்

திவாகர் said...

நன்றாக உள்ளது.

கா.ரமேஷ் said...

அருமையான கதை தோழரே...

பகிர்தலுக்கு நன்றி...!

இப்னு ஹம்துன் said...

ஒரு சிறு நிகழ்வின் ஊடே மிகப்பல செய்திகளைச் சொல்கிறது இச்சிறுகதை.

அபாரமான எழுத்தாற்றல். தொடர்க நண்பா!

துளசி கோபால் said...

அருமை.

நல்ல நடையப்பா.... மிகவும் ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

இப்னு ஹம்துன் கூறியிருக்கிற படி அருமையாகப் பயணிக்கிறது கதை பல பெரிய விஷயங்களைக் கூடவே கோர்த்துக் கொண்டு. வாழ்த்துக்கள் ரிஷான்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன//

ஆனாலும் ஒங்க எழுத்துக்களை நீங்களே இப்படியெல்லாம் புகழ்ந்துக்க கூடாது ரிஷானு!

//தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். 'அவள் ரொம்பக் கஷ்டப்படுறா' எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன//

உம்ம்ம்ம்ம்
ரசித்து வாசித்தேன்! நிழலான நிழற்படங்கள் தாம்!

♥ தூயா ♥ Thooya ♥ said...

அருமை சகோதரா.

GOWRI said...

கதையின் முதல் பத்தியில் அறிமுகப் படுத்தப்படும் ஒரு கேள்வியின் கைகளைப் பிடித்துக் கொண்டு இத்தனை மனிதர்களை, சில உண்மைக் காதல்களைச் சந்திப்பது சுகமாக இருந்தது.... எழுத்து நடை அருமை, எப்பொழுதும்போல்... வாழ்த்துகள் ரிஷான்

Sakthy said...

ஒரு கேள்வியில் ...... பல மனிதர்களை கொண்டு வந்து விட்டீர்கள் ...ரிஷான்....
வாழ்த்துக்கள் தோழரே ....

கா.ரமேஷ் said...

அருமையான கதை தோழரே...

பகிர்தலுக்கு நன்றி...

ஜனகன் said...

ஹாய் ரிஷான் ஷெரீப்! அருமையான கதை. காதலைப்பற்றி,அது பிரியும்போது ஏற்படும் வலி பற்றி , காதல் உணர்வுகள் பற்றி...........எல்லாம் நன்றாக இருந்ததது.

த.ஜார்ஜ் said...

// சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை.//

இந்த வரிகள் அருமை!

அதுசரி. நீங்கள் ஏன் பிறருடைய படைப்புகளை கண்டு கொள்ள மாட்டேனென்கிறீர்கள்.

Unknown said...

அன்பின் நண்பர் கிருஷ்ண பிரபு,

//நண்பரே... எழுத்தாளர் அ. முத்து லிங்கம் உங்களை பற்றி ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டதாக எழுதியிருந்த பதிவை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அப்பொழுதே பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

சிறு கதையை படித்தேன். நன்றாக இருக்கிறது. முத்து லிங்கத்தின் கதை சொல்லும் சாயல் ஆங்காங்கு வருவது போல் தோன்றுகிறது. :-)

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//

உங்கள் கருத்து என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் மஞ்சுபாஷிணி,

//மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ரிஷான்,
பல கண்கள் தங்கள் காதலைக் கனவாகவே சுமந்து வாழ்வது இயல்பாகச் சொல்லும் இந்த வரி அருமை.

//அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.//

வாழ்த்துக்கள் ரிஷான். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !

Unknown said...

அன்பின் முத்துக்குமார்,

//அற்புதமான எழுத்து - பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி நண்பரே.//


நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் வேணு ஐயா,

//சரளமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களை அருகில் இருந்து பார்த்தது போல ஒரு பிரமை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். //


:)
நன்றி ஐயா !

Unknown said...

அன்பின் விஜி,

//ரிஷான்,
பெண்களின் மன ஓட்டத்தைக்கூட தத்ரூபமாக உணர்ந்து வடித்திருக்கின்றீர்களே,

வாசித்ததும் நிறைய யோசிக்க வைத்தது. அதனால் உடனடியாக என் பதிலை எழுத முடியவில்லை.

இணையத்தில் முகம்பார்க்காமல் தொடங்கும் பல பழக்கங்கள். இப்படிச்சிலவேளை காதல் என்ற சிக்கலில் மாட்டிவிட்டு 'காதலே இல்லை" என்று உறைக்க வைக்கும்....உறைய வைக்கும்.

நாளுக்கொரு வேடம் ஆளுக்கொரு வேடம் போடுபவர்கள் அதிகமாகித்தான் ் போனார்கள். ஆனாலும் சில நல்ல உள்ளங்கள்( இதில் நண்பர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் பெயர் வைக்கலையோ?:)) இருக்கின்றன.


நிழற்படமாகவே என் மனதில் தங்கிவிட்டது உங்கள் எழுத்துக்களின் தாக்கம்.//


:)
ஆமாம் தோழி. நல்ல உள்ளங்களுக்குப் பெயர் தேவையில்லை. அது ஒருவர் மட்டுமல்லாது பலராகவும் இருக்கக் கூடும் என்பதனால் பெயரிடவில்லை. கதையை வாசிப்பவர்கள், அவரவர்களுக்குத் தோன்றும் நல்ல உள்ளத்தை இட்டுப் பூர்த்தி செய்துகொள்ளலாம். :)

கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி தோழி :)

Unknown said...

அன்பின் பூங்குழலி,


//அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்

பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.இது போன்ற பல அழகான சிந்தனைகள் கதை முழுவதும்//


:)


//தோடம்பழச் சுளைகளைத்
இது என்ன பழமோ?//


ஆமாம் சகோதரி. Orange என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். :)


//கதையின் கருவில் ஒன்றும் அத்தனை புதுமையில்லை ...கொஞ்சம்
நீளத்தை குறைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் ரிஷான் //


சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல நினைத்தேன். :)
கருத்துக்கு நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் திவாகர்,

//நன்றாக உள்ளது......//


கருத்துக்கு நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் இப்னு ஹம்துன்,

//ஒரு சிறு நிகழ்வின் ஊடே மிகப்பல செய்திகளைச் சொல்கிறது இச்சிறுகதை.

அபாரமான எழுத்தாற்றல். தொடர்க நண்பா! //

இன்ஷா அல்லாஹ்..நிச்சயம் தொடர்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் துளசி டீச்சர்,

//அருமை.

நல்ல நடையப்பா.... மிகவும் ரசித்தேன்.//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் !

Unknown said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//இப்னு ஹம்துன் கூறியிருக்கிற படி அருமையாகப் பயணிக்கிறது கதை பல பெரிய விஷயங்களைக் கூடவே கோர்த்துக் கொண்டு. வாழ்த்துக்கள் ரிஷான்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் கே.ஆர்.எஸ்,

////வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன//

//ஆனாலும் ஒங்க எழுத்துக்களை நீங்களே இப்படியெல்லாம் புகழ்ந்துக்க கூடாது ரிஷானு! //

அடாடா..நான் என்னைச் சொல்லலைங்க..வம்புல மாட்டி விடப் பார்க்குறீங்களே

//தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். 'அவள் ரொம்பக் கஷ்டப்படுறா' எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன//

உம்ம்ம்ம்ம்
ரசித்து வாசித்தேன்! நிழலான நிழற்படங்கள் தாம்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் தூயா,

//அருமை சகோதரா..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் கௌரி,

//கதையின் முதல் பத்தியில் அறிமுகப் படுத்தப்படும் ஒரு கேள்வியின் கைகளைப் பிடித்துக் கொண்டு இத்தனை மனிதர்களை, சில உண்மைக் காதல்களைச் சந்திப்பது சுகமாக இருந்தது.... எழுத்து நடை அருமை, எப்பொழுதும்போல்... வாழ்த்துகள் ரிஷான்//

உங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் சக்தி,

//ஒரு கேள்வியில் ...... பல மனிதர்களை கொண்டு வந்து விட்டீர்கள் ...ரிஷான்....
வாழ்த்துக்கள் தோழரே ....//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

Unknown said...

அன்பின் கா.ரமேஷ்,

//அருமையான கதை தோழரே...

பகிர்தலுக்கு நன்றி... //

:)
கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

Unknown said...

அன்பின் ஜனகன்,

//ஹாய் ரிஷான் ஷெரீப்! அருமையான கதை. காதலைப்பற்றி,அது பிரியும்போது ஏற்படும் வலி பற்றி , காதல் உணர்வுகள் பற்றி...........எல்லாம் நன்றாக இருந்தது. //

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

Unknown said...

அன்பின் த.ஜார்ஜ்,

//
இந்த வரிகள் அருமை! //

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

சுகந்தப்ரீதன் said...

காட்சிகளை நிழற்படங்களில் பதிவு செய்வதுபோல் நம் மனதும் சில விசயங்களை நம் மனதில் நிரந்தரமாக பதிவு செய்து வைத்துவிடுகிறது..!!

உங்களின் நிழற்படங்கள் நினைவுகளை மீட்டு பார்க்கின்றன.. நல்லதொரு உணர்வு பகிர்தல்..!! பாராட்டுக்கள் நண்பரே..!!

Unknown said...

அன்பின் சுகந்தப்ரீதன்,

//காட்சிகளை நிழற்படங்களில் பதிவு செய்வதுபோல் நம் மனதும் சில விசயங்களை நம் மனதில் நிரந்தரமாக பதிவு செய்து வைத்துவிடுகிறது..!!

உங்களின் நிழற்படங்கள் நினைவுகளை மீட்டு பார்க்கின்றன.. நல்லதொரு உணர்வு பகிர்தல்..!! பாராட்டுக்கள் நண்பரே..!!//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !