Tuesday, February 2, 2010

பட்சி

# தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த இச் சிறுகதை "சிறந்த கதாசிரியர்" விருதையும் பெற்றுத் தந்தது.

பட்சி

' உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. எவ்ளோ உணர்வுபூர்வமா எழுதுற பாரு..அப்றம் அன்னிக்கு ஒரு பேட்டியில உன்னோட போட்டோ பார்த்தேன்..யப்பா..சான்ஸே இல்ல..அழகு, திறமை,  பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல...அதிலும் உன் கண்கள் இருக்கே..காந்தம்..அவ்ளோ அழகு.. பக்கத்துல இருந்து பார்த்துட்டே இருக்கணும்போல'

        அவள் ஒரு கவிதாயினி. அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள். அவள் அதை இயல்பாக வரும்  புன்னகையோடு மறுத்துவந்தாள். இணைய உரையாடல்களின் போதும், மின்னஞ்சல்களிலும், நேரடியாகவும், கடிதங்களிலும் பலர் இதனைச் சொல்லும்போதும், பாராட்டும்போதும் முறுவலித்தாள். தான் மனதில் தோன்றுவதை மட்டுமே கிறுக்கிச் செல்வதாக விடைபகர்ந்தாள். பதில்கள் கண்டும் கேட்டும் சிலர் இது குறித்து, அருமையாக எழுதிவருவதாக  வலியுறுத்திச் சொல்லும்போது ஏதும் சொல்லாமல் தொடர்ந்த புன்னகையோடு மௌனம் பேசினாள். அவளுக்குத் தெரியாமலேயே அவளது எழுத்துக்கள் ஒரு சிலந்தியைப் போல அவளைச் சூழவும் புகழை, ஒரு வலையாகப் பின்னியிருந்தன.

' நான் நேரடியாவே சொல்லிடுறேன்..உன்னய எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..இவ்ளோ நாளா நான் தேடிட்டிருந்த தேவதை கிடைச்சிட்டான்னு மனசு சொல்லுது.. என்னை உனக்குப் பிடிக்குமான்னு தெரியல..ஆனா ஒண்ணு தெரியும்..நீ எப்பவும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்குறவ இல்லன்னு தெரியும்.. நான் இதுவரை யாரையும் லவ் பண்ணதில்ல..ஆனா உன்னப் பார்த்ததும் விழுந்துட்டேன்..நீ என்ன சொல்ற?'

        உண்மையாகவே அவள் மனதில் தோன்றுவதை மட்டும்தான் எழுதிவந்தாள். நிறைய வாசிப்பாள். தனிமை, அது தரும் துயரங்கள் நிரம்பி வழிவதைப் போல உணர்கையில் அதனைப் பக்கங்களில் வழியவிட்டாள். அவளது எழுத்துக்கள் எப்பொழுதும் உணர்ச்சி மயமாகவும், அழுகை தரக் கூடியதாகவும், சிலவேளை தன்னைப் பொறுத்தி உணரக்கூடியதாக இருப்பதாகவும் வாசகர்கள், ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இணைய இதழ்களும் பிரபல பத்திரிகைகள் மற்றும் சிற்றிதழ்களும் அவளது படைப்புக்களைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் தரத்தில் அவளது எழுத்துக்கள் இருந்தன.

'ப்ளீஸ்..ஒரு பொண்ணுக்கிட்ட கெஞ்சுறது கஷ்டமாத்தான் இருக்கு.. நீ என்னை லவ் பண்ணக் கூட வேண்டாம்..ஆனா இப்படி பேசாம இருக்காதே. நீ இப்படி இருக்குறது எனக்கு இன்னும் ரொம்பக் கஷ்டமா இருக்கு..சாப்ட முடியல..தூங்க முடியல.. எதுவுமே பண்ணத் தோணல..வேலைக்குப் போகணுமேங்குறதுக்காக போய் வந்துட்டிருக்கேன்.. நான் உனக்கு அனுப்பணும்னு விரலக் கிழிச்சி ரத்தத்துல ஒரு கடிதம் கூட எழுதி வச்சிருக்கேன்..ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் பாரு..அதப் பார்த்தும் நீ மனசிறங்கலைன்னா, நான் என்னையே எரிச்சுப்பேன்..அப்றம் சந்தோஷமா இரு'

        அவளுக்கென்று யாருமற்று தனித்திருந்தாள். பெரும் மகிழ்வோடு இணைய நண்பர்களைக் குடும்பமெனக் கொண்டு எல்லோருடனும் வித்தியாசமெதுவுமின்றி அன்பானவளாகவே இருந்துவந்தாள். அவளுக்கென இணையமும் எழுத்தும் கூட இல்லையெனில், அவள் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். முதலில் தனிமை, ஏகாந்தம் குறித்துத் துயரமாக எழுதி வந்தவள் பின்னர் காதல் கவிதைகளும் எழுத ஆரம்பித்தாள். அவளது மின்னஞ்சலை நிறைத்த, அவள் நிராகரித்த காதல் விண்ணப்பங்களை அறிந்தவர்களெல்லாம் அவளை ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினர். யாரிடம் அவள் காதல் வயப்பட்டாள் எனக் கேட்டவர்களிடம் அவள் சொல்லவுமில்லை. யாருக்கும் தெரிந்திருக்கவுமில்லை. ஓட்டைகள் எதுவுமின்றி மூடிய ஒரு பெட்டிக்குள் அடைத்ததைப் போல, அவள் அந்த இரகசியத்தைக் காத்து வந்தாள். வெளியேற வழியற்ற இரகசியம் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தபடி உயிருடன் கிடந்தது.

'ம்ம்..ஊருல எனக்கொரு பொண்ணு பார்த்து வச்சிருக்காங்க..அண்ணாக்கிட்ட சொல்லிட்டேன்..அவன் புரிஞ்சுக்கிட்டான்...ஊருக்குப் போய் அம்மாப்பாக்கிட்டத்தான் சொல்லிப் பார்க்கணும்.. அவங்க எப்படியும் உன்னை மறுக்கமாட்டாங்க..பேரழகி நீ..மகாலட்சுமி ஒருத்தி வீட்டுக்கு வரும்போது வேணான்னு சொல்வாங்களா? எதுக்கு நீ யோசிக்கிற? ஹேய்..அழக்கூடாது..அவங்க உன்னை வேணான்னு சொன்னாங்கன்னாலும் நான் உன்னைக் கை விட்டுட மாட்டேன்..என்னை நம்பு ப்ளீஸ்..ஏன் எப்பப் பார்த்தாலும் எப்பவோ நடக்கப் போறதையெல்லாம் நெனச்சு நெனச்சு மனசப் போட்டுக் குழப்பிக்கிறே? இப்ப..இந்த நிமிஷம் சந்தோஷமாயிரு பெண்ணே..இங்க வா'

        அவளது காதல் குறித்தான மகிழ்வான எழுத்துக்கள் தொடர்ந்தன. பின்னர் ஓர் நாள் திடீரென்று அவை நின்றன. அவள் எழுதுவதை விட்டிருந்தாள். இணையம் வருவது குறித்தும் எழுத்துக்களைப் பக்கங்களில் மேயவிடுவது குறித்தும் பெரிதும் அஞ்சினாள். முன்னர் பார்த்துப் பரவசப்பட்ட புத்தகங்களைப் பார்க்கையில் கலவரப்பட்டாள். அவற்றினிடையில் எப்பொழுதோ கிறுக்கிவைத்த காதல் குறிப்புகள் கொண்ட கடதாசிகள் சிக்குகையில் தீயிலிட்டு எரித்தாள். சிலவேளை அழுதாள். பசித்திருந்தாள். அவள் வளர்த்துவந்த பூச்செடிகளைப் பராமரிக்காது வாடவிட்டாள். ஈற்றில் ஒழுங்குமுறைப்படி அழகாக எல்லாம் செய்பவள் ஏனோதானோவென இயங்கத் தொடங்கினாள். முன்னைய வாழ்க்கையிலிருந்து முழுவதுமாகத் தப்பித்து வாழ முயன்றாள்.

' நீ எழுதுறது எனக்குப் பிடிக்கல..இதையெல்லாம் நீ விட்டுறணும்..ஏன் எப்பப் பார்த்தாலும் உனக்கு மட்டும் இவ்ளோ மெயில் வருது நல்லா எழுதுறேன்னு பாராட்டி..? நானும்தான் எழுதுறேன்..ஒருத்தன் சீண்ட மாட்டேங்குறான்..பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல.. அப்றம் இந்த அழகு..எதுக்கு நீ மட்டும் இவ்ளோ அழகா..? சினிமால நடிக்கப் போறியா? பக்கத்துல நான் கறுப்பா, குண்டா நிக்கும்போது ஜோடிப் பொருத்தமே இல்லாத மாதிரி தோணுது'

        அவளது நண்பர்கள் அவளைத் தேடத் தொடங்கினர். அவளைக் குறித்த விசாரிப்புக்கள் அவளைத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லோரிடத்திலும் சுற்றிச் சுற்றி வந்தன. அவள் பிறரைச் சந்திக்கும் வாய்ப்புக்களைத் தரும் எல்லாத்திசைகளையும் அடைத்து தன்னை ஒளித்துக்கொண்டாள். வெளிச்சத்துக்கு வரப்பயந்தாள். அவளைச் சுற்றியிருந்த ஒளிவட்டம், அவளது எழுத்துக்கள் சென்ற வழியெங்கும் போய் அவளைத் தேடி அலைந்து கொண்டே இருந்தது.

' இங்க பாரு..ஊருக்குப் போறப்ப எதுக்கு அழறே? எதுவும் யோசிக்காத..நான் உனக்குத்தான்.. உனக்குத்தான்.. உனக்குத்தான்.. உனக்கு இல்லன்னா வேற யாருக்கும் இல்ல..ப்ச்..எனக்கே கூட இல்ல..என்னைய நம்பு.. எப்பவும் சந்தோஷமா இரு..வீட்டு வேலயெல்லாம் கத்துக்கோ..சரியா?..ஊருக்குப் போன உடனே ஃபோன் பண்றேன்.. '

        அவள் அழைக்கப்படும் குரலொன்றுக்காக மட்டும் நெடுநாட்கள் காத்திருந்தாள். முன்னர் அவள் எழுதிவந்த இதழ்கள், பத்திரிகைகள், இன்னும் சில புது இதழ்கள் எல்லாம் தங்கள் புதிய பக்கங்களை அழகுபடுத்தவென அவளது படைப்புக்களைத் தருமாறு மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டே இருந்தன. அவள் அவ்வேண்டுகோள்களை இறந்துபோய்ப் புழுத்த எலியை அப்புறப்படுத்துவது போன்ற அறுவெறுப்போடும் அலட்சியத்தோடும் குப்பைக்கூடைக்குள் கொட்டியபடி இருந்தாள். முடியாப்பட்சத்தில் மின்னஞ்சல் முகவரியை வேறு பெயரில் மாற்றிக்கொண்டாள். அதையுமொரு நெருங்கிய சினேகிதி மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து 'எப்படியிருக்கிறாய் ?' என வினவியபோது அதிர்ந்தாள்.

         அன்பான நண்பர்களை இழக்கவும் முடியாது. திரும்பவும் எழுத்துக்களின் கைப்பிடித்து நடக்கவும் முடியாது. தோழிக்கு நலமெனப் பொய்யாகப் பதிலனுப்பினாள். பின்னர் யாரும் அறியாமல் முற்றாக இருள் சூழ்ந்த வெளியொன்றில் தொலைந்துபோவதெப்படி எனச் சிந்திக்கத் தொடங்கினாள். பதில் தெரியாச் சிந்தனை அவளைச் சூழ இருந்த புகழெனும் மாயவலையில் சிக்கித் தொங்கியது. விடுவிக்கமுடியாமல் வருந்தினாள். நகரும் எல்லாப் பாதைகளும் யாராலோ கண்காணிக்கப்படுவதுபோலப் பயந்து அவள் தன் பாதங்களை ஒருவித யோசனையோடே எப்பொழுதும் எடுத்துவைத்தாள்.

        தோழியின் மூலமோ, எப்படியோ அவளது மின்னஞ்சலை அறிந்துகொண்ட ஒரு சிற்றிதழ், அவளது கவிதைபாடல் குறித்தான ஒரு நேர்காணலை அவளிடமிருந்து பெறவிரும்பி மடலிட்டுக் கேட்டது. அச் சிற்றிதழ்தான் அவளை உலகுக்கு முதன்முதல் வெளிக்காட்டியது. அவளுக்கென்று வாசகர்களை உருவாக்கியது. அவளது எழுத்துக்களின் மீதான முதல் வெளிச்சத்தை அவ்விதழே எட்டுத் திக்கிலும் ஒளிரச் செய்தது. இவ் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அவள் தவித்தாள். பின்னர் வேறு வழியற்று ஓர்நாள் ஏற்றுக்கொண்டாள்.

        தனக்கான கேள்விகளை விடுவிப்பவர் குரல்வளையிலிருந்து தனக்குத் தெரிந்தவைகள், இக்கட்டில் மாட்டிடாதவைகள், நல்லவைகள், சுயமும், இருப்பும், எழுத்தும், காதலும், ஆழ்மௌனமும் குறித்த சந்தேகங்களைக் கொண்டிராதவைகள் மட்டுமே வெளியே வரவேண்டுமென அவள் மனதுக்குள் பிரார்த்தித்தபடி இருந்தாள். அவளுக்குத் தெரியும். ஒரு கலைஞரிடம் மேற்கூறியவை தொடர்பான கேள்விகள் தவிர்த்து வேறெதுவும் வந்து கைகுலுக்காதென அவளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் பிரார்த்தித்துக் கொண்டாள்.

        பல கேள்விகள் அவளைச் சூழ்ந்தன. புகழ் வலையின் துளைக்கொன்றாக வந்து அவளைச் சேர்ந்தன. அவள் பயம் உதறி, உறுதியைப் போர்த்திக்கொண்டாள். வராத புன்னகையை இழுத்தெடுத்து இதழ்களில் சூடிக்கொண்டாள். ஒரு கவிஞருக்குரிய மென்மனதையும், அப்பொழுது தனக்கிருந்த படபடப்பையும் காட்டிக்கொள்ளாவண்ணம் அவள் தனது மொழியினை உதிர்க்கத் தொடங்கினாள். எல்லாக் கேள்விகளுக்கும் உண்மையைப் பதிலாகச் சொன்னாள். அவளது காதல் குறித்த கேள்வியின் போது மட்டும் பதிலெதுவும் சொல்லாமல் கேள்வியை அந்தரத்தில் நழுவவிட்டு அடுத்த கேள்வியின் முனையைப் பற்றிக்கொண்டாள்.

        அவளே எதிர்பாராத வண்ணம் இறுதிக்கேள்வி இலகுவாக இருந்தது. அவளுக்குப் பிடித்த பறவை என்னவென்றும் ஏனதனைப் பிடித்திருக்கிறதென்றும் அக் கேள்வி அவளை வந்து சேர்ந்தது. அவள் சிறிதும் யோசிக்கவில்லை. முன்னைய கேள்விகளுக்குப் பதிலளிக்க, யோசிக்க எடுத்துக்கொண்ட நேரத்தைக் கூட அவள் இதற்காக எடுத்துக்கொள்ளவில்லை. அக் கேள்வி அவளது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்து கொண்டதைப் போல, அவள் ஒரு கணம் தன் கைகளைப் பார்த்துக் கொண்டாள். விழிகளில் துளிர்த்த நீரினை எச்சிலோடு விழுங்கிக் கொண்டாள். உதடுகளை நாவால் ஈரலிக்கச் செய்து பின்னர் ஒரு புன்னகையோடும் உறுதியான, நேர்பார்வையோடும் பதிலளித்தாள்.

        '' எனக்கு லவ்பேர்ட்ஸ் பிடிக்கும். அவை எப்பொழுதும் காதல் செய்துகொண்டே சோடியாக வாழும் காதல் பறவைகள். எவ்வளவு மூப்பெய்தினாலும் ஒன்றையொன்று பிரியாது, ஒருபோதும் நம்பிக்கைத் துரோகம் செய்யாது, உண்மையாகக் காதலித்துக் கொண்டே இருக்கும். தமக்கிடையே புதிதாக ஒருவர் நுழைந்தாலும் துரத்தியடிக்கும். காதலுக்கெனச் சண்டையிடும். இறுதிவரை போராடும். காதலுக்காகவே இறந்தும் விடும். முக்கியமாக ஆண் பறவை மட்டும் அவ்வளவு நாளும் கூடி வாழ்ந்த துணையை விட்டுவிட்டு ஊருக்குப் போய் அம்மா,அப்பா சொன்னார்களென அன்பான காதலியைக் கைவிட்டு வேறொரு இணையைத் தேடிக்கொண்டு முன்னைய காதலிக்கு 'என்னை மறந்துவிடு' என மெயிலனுப்பாது. "

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# விகடன்
# தமிழ்மன்றம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# ஓவியர் ஸ்யாம்

24 comments:

ஸ்டாலின் பெலிக்ஸ் said...

வாழ்த்துக்கள் ரிஷான்

சாந்தி said...

//சான்ஸே இல்ல..அழகு, திறமை, பணிவு, அடக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணா உருவானதுபோல..//

இது தான் பெண், அல்லது இப்படித்தான் பெண் இருக்கணும்னு ஏன் நினைக்கிறார்கள்?..

:)

// ..பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல.. அப்றம் இந்த அழகு..எதுக்கு நீ மட்டும் இவ்ளோ அழகா..? சினிமால நடிக்கப் போறியா? பக்கத்துல நான் கறுப்பா, குண்டா நிக்கும்போது ஜோடிப் பொருத்தமே இல்லாத மாதிரி தோணுது'//


:))))
அருமை நிதர்சனம்..

// அன்பான நண்பர்களை இழக்கவும் முடியாது. திரும்பவும் எழுத்துக்களின் கைப்பிடித்து நடக்கவும் முடியாது.//


இது தான் புரியவில்லை.. ஏன் முடிவதில்லை நிஜ வாழ்வில்?.

// முக்கியமாக ஆண் பறவை மட்டும் அவ்வளவு நாளும் கூடி வாழ்ந்த துணையை விட்டுவிட்டு ஊருக்குப் போய் அம்மா,அப்பா சொன்னார்களென அன்பான காதலியைக் கைவிட்டு வேறொரு இணையைத் தேடிக்கொண்டு முன்னைய காதலிக்கு 'என்னை மறந்துவிடு' என மெயிலனுப்பாது. "//


:)) இருபாலருமே..

அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள் ரிஷான்.

வலசு - வேலணை said...

நன்றாயிருக்கிறது.
பாராட்டுக்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

கதை அசத்தல் நண்பா...

வாழ்த்துகள்...

ஸ்ரீ சரவணகுமார் said...

// பக்கத்துல நான் கறுப்பா, குண்டா நிக்கும்போது ஜோடிப் பொருத்தமே இல்லாத மாதிரி தோணுது'//

இந்த சமயத்தில் அவனுடைய தாழ்வு மனப்பான்மையை போக்க கவிதாயினி முயன்றிருக்க வேண்டும்

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை ரிஷான். இன்றுதான் விகடனில் வாசித்தேன். வாழ்த்துக்கள்!

மன்னார் அமுதன் said...

வாசித்தேன். அருமையாக முடிவைச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

முத்துசாமி பழனியப்பன் said...

congrats

முனாஸ் முஹம்மத் said...

வாழ்த்துக்கள்!!!

Hema Sen said...

really nice rishan.......i want to wish u in tamil......but i dont know how to type in tamil here.......migavum mahilchi........oru nalla nanbanil kathai kandadhil......adhil viruthu petrathilum....

Anu Radha said...

i loved the story, yesterday got the cahce to read it. It was very nicely presented.

vaazthukkal Rishaan

மே. இசக்கிமுத்து said...

கதை அருமை!! வாழ்த்துகள்!!

என்னவன் விஜய் said...

ஆழமான கரு. அழகான வரிகள்.

பாராட்டுக்கள். உண்மையிலே நீங்கள் சிறந்த கதாசிரியர்தான்.

ஜனகன் said...

அருமையான கதை. நல்ல கதையோட்டம்.
சிந்திக்க வைக்கும் கருத்தை உட்கொண்டு உரைத்த கதைக்கு பாராட்டுக்கள்.மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Aren said...

கதையைப் புரிந்துகொள்ள கொஞ்ச கஷ்டமாக இருக்கிறது. உங்கள் தமிழின் ஆழம் காரணமாகவும் இருக்கலாம். நான் வெறுமனே நுனிப்புல் மேய்பவன், அதனோலேயும் இருக்கலாம்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

க.ராஜம்ரஞ்சனி said...

பட்சியும் கனகாம்பரமும்

திண்ணையில் சகோதரர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘பட்சி’ கதையைப் படித்தேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=11002065&format=html). காதல் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திப் பெண்ணின் மனதைக் கீறி அதன் இரணத்தை நம்மை அறிய வைக்கும் உணர்வாய் கதைப்பின்னல் அமைந்திருந்தது. எளிய கருவைக் கொண்டிருந்தாலும் இக்கதையின் கதாபாத்திரங்களே என்னை வெகுவாக ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. கதை படித்த பின்னர் நீடித்த சிந்தனையே முடிவுதான் இது.

‘நீ எழுதுறது எனக்குப் பிடிக்கல..இதையெல்லாம் நீ விட்டுறணும்..ஏன் எப்பப் பார்த்தாலும் உனக்கு மட்டும் இவ்ளோ மெயில் வருது நல்லா எழுதுறேன்னு பாராட்டி..? நானும்தான் எழுதுறேன்..ஒருத்தன் சீண்ட மாட்டேங்குறான்..பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல.. '

இக்கதை வரிகள் ஆழமானவை. எழுத்தை மதிப்பவன் இவ்வாறான வார்த்தைகளை எளிதில் வீச மாட்டான். பெண்ணின் படைப்பாக்கத்தில் நம்பிக்கையற்றவனின் எழுத்தை எவ்வாறு மதிப்பிடுவது போன்ற சந்தேகங்களைக் கிளறிவிட்டன இவ்வரிகள்.

காதல் செய்யும் முயற்சியின்போது அவளின் எழுத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும் அவளது அழகையும் பிரமித்தவன், திருமணத்திற்கு முன்பே அதற்கு முரணாகின்றான். மனித இயல்பு வாழ்க்கையில் இவ்விஷயங்கள் சாதாரணங்களாகி போனாலும் எழுத்துத்துறை சார்ந்தவர்களிடையிலும் இவை சாதாரணங்களாகி போகும் தருணங்களைத் தொடக்கத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் ஆழ்ந்து நோக்குகையில் மனித இனத்தின் இயல்புகள் துறை சார்ந்து மாறுவதில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.

முதலில் அவன் காதலை ஏற்க மறுப்பவள் பின் ஏற்கிறாள். அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கை அவனது எழுத்தினால்தான் உருவானது என்பது என் கருத்து. அவன் மீதான நம்பிக்கை உடைபடும் கணம் அவன் எழுத்தின் மீதான மதிப்பும் சேர்ந்தே அழியுறுகின்றது. கதையின் முடிவு காதலில் ஏற்படும் நம்பிக்கை துரோகத்தின் எதிர்க்குரலாய் வெளிப்பட்டாலும் என்னைப் பொறுத்தவரை அவனுக்கு அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கும் உணர்வுக்கும் காதல் என வகைப்படுத்த இயலவில்லை. காரணம் காதல் என்பது அன்பை மட்டும் கொண்டு மனதில் உருவாகி உயிரில் கலக்கும் ஓர் அற்புத உணர்வு. காதலியின் நியாயமான விருப்பத்தைத் தடை செய்யும் எண்ணம் உண்மைக்காதலில் கண்டிப்பாக உருவாகாது. சிறப்பான கதை.

க.ராஜம்ரஞ்சனி
மலேசியா

rajamranjini@gmail.com

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள்

# ஸ்டாலின் பெலிக்ஸ்
# சாந்தி அக்கா
# வலசு - வேலணை,
# விக்னேஷ்வரன்
# ஸ்ரீ சரவணக்குமார்
# ராமலக்ஷ்மி
# மன்னார் அமுதன்
# முத்துசாமி பழனியப்பன்
# முனாஸ் முஹம்மத்
# ஹேமா சென்
# அனுராதா
# இசக்கி முத்து
# என்னவன் விஜய்
# ஜனகன்
# அரென்

உங்கள் கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே !

M.Rishan Shareef said...

அன்பின் ராஜம் ரஞ்சனி,

உங்களது விளக்கமான விமர்சனத்தில் மகிழ்கிறேன்..நன்றி சகோதரி !

ஓவியா said...

என்ன நிதர்சனம் உங்கள் கதை. பாராட்டுக்கள் ரிஷன் செரிஃப்.

முதல் பரிசுக்கு தகுதியான கதை.


நெடு நாட்களுக்குப்பின் இந்த கதையை வாசிக்கவே உள்ளே வந்தேன்.

இனி கொஞ்ச நாள் உங்களோடுதான் மக்காஸ்...

Hega said...

-எனக்கு லவ்பேர்ட்ஸ் பிடிக்கும். அவை எப்பொழுதும் காதல் செய்துகொண்டே சோடியாக வாழும் காதல் பறவைகள். எவ்வளவு மூப்பெய்தினாலும் ஒன்றையொன்று பிரியாது, முக்கியமாக ஆண் பறவை மட்டும் அவ்வளவு நாளும் கூடி வாழ்ந்த துணையை விட்டுவிட்டு ஊருக்குப் போய் அம்மா,அப்பா சொன்னார்களென அன்பான காதலியைக் கைவிட்டு வேறொரு இணையைத் தேடிக்கொண்டு முன்னைய காதலிக்கு 'என்னை மறந்துவிடு' என மெயிலனுப்பாது.-

கதையின் கரு மிக ஆழமானது .. ஒரு பெண் தன் கற்பனையெனும் சிறகை தன் அறிவினால் பறக்கவிட துடிக்கும் போது அவளை தேற்றி ஏற்றுவோரே அவள் புகழ் பெறும் போது இகழவதும் சஞ்சலம் கொடுப்பதும் ஏன் என்பது புரியாத புதிரே.

காதலால் தான் தான் என்றில்லை தனனை நிருபிக்க பெண் என்பவள் தாண்ட வேண்டிய தடைக்கற்கள் எத்தனையெத்தனையோ ..ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் ஒரு பெண் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பது அரிதே...

இக்கதையை எழுதியவர் ஆணா பெண்ணா என தெரியவில்லை. ஆனால் உணர்ந்து எழுதி இருக்கிறார்.அவருக்கு எனது பாராட்டுக்கள்.

எம். ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஓவியா,
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி.

எம். ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஹேகா,

நிதர்சனமான கருத்து.
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே