Monday, March 12, 2012

நீ, நான், நேசம்

(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)
_________________________________________________________________

நிவேதாவிற்கு,

எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது.

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் பிரிந்தோம். இப்பொழுது நீ எங்கே, எப்படியிருக்கிறாயெனத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே என் மனதின் மையப்புள்ளியில் சிம்மாசனமிட்டு உட்காந்தவாறு என்னை ஆண்டுகொண்டே இருக்கிறாய் இன்னும்.

உனது இரட்டைச் சடையில் கோர்க்கப்பட்ட மல்லிகைப் பூச்சரங்கள் இன்றும் என் மூளையின் வாசனை அடுக்குகளில் இடறுகின்றன. எனக்குத் தெரிந்த காலம்தொட்டு எப்பொழுதும் பூக்களை விரும்புபவளாகவே நீயிருந்து வந்திருக்கிறாய். எங்கே போனாலும் கை நிறையப் பூக்களை அள்ளிவரும் பழக்கம் உனக்கிருந்தது. பூக்கள், அதன் வாசனை உலகில் நீயொரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தாய். முடிந்தவரை பறந்து பறந்து விதவிதமான பூக்களைத் தேடியபடியிருந்தாய். மல்லிப்பூ, பிச்சிப் பூ, ரோசாப்பூ, சாமந்தி, செம்பருத்தி எனத் தொடர்ந்த உன் தேடுதலில் காட்டுப் பூக்களும் பேய்ப்பூக்களும் கூட விட்டு வைக்கப்படவில்லை.

அந்தப் பூக்களெல்லாம் உன்னைப் போலவே இன்றெங்கே போயின? நாம் பிரிந்த காலந்தொட்டு தேடிக்கொண்டேயிருக்கிறேன் பூக்களையும் பூக்களுடனிருந்த உன்னையும். என்னை நினைவிருக்கிறதா உனக்கு ? நாம் பிரிந்த அன்று கறுப்புவெள்ளைச் சட்டமிட்ட மேற்சட்டையும் மை நீலத்தில் காற்சட்டையும் அணிந்திருந்தேன். கவலை படர்ந்த முகங்களுக்கு மத்தியில் அன்றெனக்கு அழத்தெரியவில்லை. ஆனால் நீயழுதாய்.

நீதிமன்ற வளாகத்தில் அன்று பூக்கள் சொறியும் பெருவிருட்சங்கள் இருந்தன. நிலம் முழுதும் அழகிய மஞ்சள் நிறப்பூக்கள் சிதறிக் கிடந்தன. நீ அவற்றில் கவனம் அழித்து, அம்மாவின் கையுதறி என்னருகில்தான் ஓடிவந்தாய். அம்மா உன் மேல் திடுக்கிட்ட பார்வையை ஓடவிட்டிருந்ததை நீ உன் முதுகில் உணர்ந்திருக்கமாட்டாய்.

ஓடிவந்த நீ, அனைவரும் பார்த்திருக்க என்னை இறுக அணைத்துக் கன்னத்திலும் நெற்றியிலும் மாறி மாறி அழுத்தமாக முத்தமிட்டாய். ஒரு பெண் ஒரு ஆணை அழுகையோடு கட்டிக்கொண்டு முத்தமிட்டதானது பார்த்தவர்களுக்கு விசித்திரமானதாக இருந்திருக்க வேண்டும். அந்த முத்தங்கள்தான் உன் அன்பைச் சொல்லிச் சென்ற இறுதி முத்தங்கள். அந்தத் தாய்மையும் ஈரமும் இன்னும் உலரவில்லை என்னில்.

'போயிட்டு வர்ரேன்டா செல்லமே ' எனச் சொல்லிப்போன உனது இறுதி வார்த்தைகள் காற்றில் கரைந்த பின்னரும் எந்த விபரீதமும் எனக்கு உரைக்கவில்லை. நீ மாலையிலேயே திரும்பி என்னிடம் வந்துவிடுவாய் என நினைத்துக் காத்துக் கொண்டிருந்தேன். நேரங்கள் கடந்தன. நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. வருடங்கள் கடந்தன. நீ மட்டும் வரவேயில்லை.

அன்றுதான் நானுன்னைக் கடைசியாகப் பார்த்த நாள். ஒரு புகைப்படமேனும் பகிர்ந்து கொள்ளாமல் பிரிந்துபோன நாள். அன்று நீ சூடியிருந்த மல்லிகைப் பூக்கள் ஒவ்வொன்றாக வாடியுதிர்ந்ததைப் போல நானுமுன் ஞாபகங்களிலிருந்து உதிர்ந்து போயிருப்பேனா இத்தனை வருடங்களில் ?

என்ன விசித்திரமானது இந்த வாழ்க்கை ? உன் விரல்கள் தொட்டு விளையாடியிருக்கிறேன். நீ ஊட்டி, உண்டிருக்கிறேன். அழகாக எண்ணெய் வைத்துத் தலைசீவி விட்டிருக்கிறாய். தினம் தினம் குளிக்கவைத்துப் புதிது புதிதாக ஆடை அணிவித்துக் கன்னத்திலும் , நெற்றியிலும் முத்தமிடுவாய். உன்னிடத்தில் எப்பொழுதும் சந்தனப்பவுடரின் வாசனை வீசிக்கொண்டேயிருக்கும். நீ முத்தமிட்ட பின்னர் என்னிடத்திலும்.

அந்தப் பரிவும் நேசமும் எங்கே போயிற்று ? நான் தொட்டு விளையாடிய உன் விரல்களின் நகங்கள் வளர்ந்து வளர்ந்து நீ அவற்றை வெட்டிவிடுவதைப் போல எல்லாமே வெட்டிவிடப்பட்டனவா? நீ வைத்த எண்ணெய் காய்ந்து என்னால் கழுவிவிடப்பட்டதைப் போலக் கழுவிவிடப்பட்டனவா? முத்தத்தின் எச்சில், சந்தனப்பவுடரின் வாசனையோடு உலர்ந்துவிட்டதைப் போல உலர்ந்துவிட்டனவா?

நிலவற்ற நாட்களில் மொட்டைமாடியில் படுத்து நட்சத்திரங்களை எண்ணினோம். நட்சத்திரங்களை எண்ணி எண்ணிச் சோரும்  தருணம் எனது கைகளை உன் கைகளுக்குள் அடக்கி நீ ஏதாவது கதை சொல்ல ஆரம்பிப்பாய். பெரும்பாலும் உன் கதைகளில் தேவதைகள் வருவர். அந்தத் தேவதைகளுக்குச் சிறகுகள் இருந்தனவா என்பது பற்றி நீ சொன்னதாக நினைவில்லை. இருந்திருக்க வேண்டாம். இருந்தால் உன்னைப்போல எங்கோ தொலைதூரங்களுக்குப் பறந்து மறைந்திருப்பர்.

உன் கதைகளில் அந்த தேவதைகள் அன்பைச் சுமந்தவண்ணம் அலைந்து கொண்டே இருப்பர். பரிவு, உதவி தேவைப்படுபவர் தலை தடவி அன்பை இறக்கிவைத்துப் பூச்சொறிவர். தேவைப்பட்டவர்கள் துயரமெல்லாம் தேவதை கை பட்டு மாயமாகிப் போன கதையைச் சொல்லி, முடிவில் 'அன்பினால் ஆகாதது எதுவுமில்லை' என்பாய். உன்மேலான அன்பு இன்றும் என்னில் அப்படியே இருக்கிறது. அது உன்னிடத்தில் என்னைச் சேர்த்துவிடுமா என்ன ?

அன்றைய தினத்தில் இக்காலத் திரைப்படக்காட்சிகளில் வருவதைப் போல நீயும் நானும் மட்டும் இயங்கி மற்றவர்கள் காலத்தோடு உறைந்து போகும் சாத்தியங்கள் இருந்திருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? நானும் நீயும் எமது நேசத்தை மறுத்த பெற்றோரை விட்டும் எங்காவது தப்பிச் சென்றிருக்கலாம்.

ஒரு பெருமழை பெய்து வெள்ளநீர் கொண்டு அழித்துவிட்டதைப் போலிருக்கிறது நம்மிருவரதும் இறந்தகாலங்கள். அதில் நாம் எல்லைகளேதுமற்று சுற்றித்திரிந்தோம். சிறுபிள்ளைகளின் மண் சோறும், பொம்மை விளையாட்டும் பாதியில்  பறித்தெடுக்கப்பட்டது போலக் கழிவிரக்கத்தோடும் சுயபச்சாதாபத்தோடும் இன்றந்த நாட்களை நினைவுகூறுகிறேன்.

நாம் பிரிந்தபோது நான் நின்றிருந்த வயதினை ஒத்தவர்களை நீ காணும் பொழுதுகளிலாவது எனது நினைவுகள் உன்னில் எழுகிறதா? அன்பே உருவானவளே, எனக்கு வருகிறது. பாவாடை தாவணி, மல்லிகைப்பூச் சூடிய பெண்களெல்லோரும் உன் நினைவுகளைக் காவிவருகின்றனர்.

இப்பொழுதெல்லாம் உன்னை நினைத்து நினைத்தே நினைவுகள் சோர்ந்துவிட்டன. எனது குடும்பம் தவிர்த்து எழுத்துக்கள் என்னைத் தாங்கி நிற்கின்றன. நீ இக்கணத்தில் எத்தேசத்தில் இருக்கிறாயோ? திருமணம் முடித்திருப்பாய். உனக்கன்பான கணவன் வாய்த்திருக்கப் பிரார்த்திக்கிறேன். உன் குழந்தைக்கு என் பெயர் வைத்திருக்கிறாயா நான் வைத்திருப்பதைப் போல ? எனக்கும் சுகிர்தாவுக்கும் பிறந்த குழந்தைக்கு உன் பெயரையே வைத்திருக்கிறேன். அவளுக்கும் அழகிய விழிகள் உன்னைப் போலவே. இப்பொழுதுதான் பேச ஆரம்பித்திருக்கிறாள். உன் பெயரையே முதலில் சொல்லப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.நீ சொல்லிச் சென்ற சாத்தான்களேதுமற்ற தேவதைக் கதைகளையெல்லாம் ஒவ்வொரு இரவிலும் என் மார்பில் படுக்கவைத்து குட்டிநிவேதாவிற்கும் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்.

சுகிர்தாவின் மனதிற்குள் எனது இறந்தகாலம் குறித்தும், குழந்தைக்கு வற்புறுத்தி வைக்கப்பட்ட உனது பெயர் குறித்தும் பல கேள்விகள் முடிச்சிட்டுக் கொண்டுள்ளன. எனது வாழும் காலத்திற்குள் இது சம்பந்தமான எந்த முடிச்சுக்களையும் நான் அவிழ்ப்பதாக இல்லை. நீ, நான், நேசம் எல்லாம் என்னுடனே அழிந்து போகட்டும் எந்தத் தேடல்களுமற்று, எந்தத் தடயங்களுமற்று.

உனக்கு சுகிர்தாவை அறிமுகப்படுத்த வேண்டும். மிகவும் நல்லவள். கணவனுக்குப் பணி செய்து கிடப்பதே தன் பிறவிக்கடன் என்பதனைப் போல நடந்துகொள்கிறாள். எந்த ஆண்மகனும் தனது துணைவியைப் பற்றி எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் அன்போடு கொண்டவளாக இருக்கிறாள். உனக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கும். திருமணம் முடித்த இந்த ஐந்து வருட காலங்களிலும் எந்த விஷயத்திலும் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை . கோபத்தில் அப்பா அடிப்பதையும், உதடு கிழிந்து இரத்தம் வழிய அம்மா உணவு பரிமாறுவதையும் பற்றி அவளிடம் சொன்னால் ஆச்சரியப்பட்டுப் புருவம் உயர்த்துபவளாக இருப்பாள். எனவேதான் நான் எதுவும் சொல்லவில்லை.குட்டி நிவேதா அதிர்ஷ்டக்காரி.பெற்றோரின் சண்டையைப் பார்த்து வளராதவளாக இருக்கிறாள். இதுவரைக்கும்  உன்னைப்பற்றியும் சுகிர்தாவிடம் சொல்லவில்லை. சொல்லத் தோன்றவுமில்லை நிவேதா.

உன்னைப்பிரிந்த அன்றைய பொழுதிலிருந்து என் வாழ்வில் நேர்ந்த அத்தனையையும் உன்னிடம் சொல்லிவிட வேண்டும் போலத்தான் இருக்கிறது. ஆனால் உன்னைத் தவிர்த்து மற்ற எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களிலிருந்து கசிந்து வெளியேறி உலர்ந்துவிட்டன. அன்று நாம் ஒன்றாய்ச் சுவாசித்த காற்றைப்போல கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன. அன்றியும் உன்னுடன் இருந்த காலங்கள் தவிர்த்து இதுவரையில் எனது வாழ்நாட்கள் எந்த விஷேசங்களுமற்றதாகவே விடிகின்றன.

அதே முரட்டு அப்பா. அன்பான அம்மாவை அதிகாரத்துடன் அடக்கியாண்டு உடல், உளம் வருத்திய அதே அப்பாவின் பிடியில் உன்னைப்பிரிந்த அன்றிலிருந்து வெளிநாட்டில் வளர்ந்தேன். எனது சுவாசங்களைக் கூட அதிகாரமிக்க கரங்கள் பொத்திக் கொடுக்க வேண்டியிருந்ததென்றால் பார்த்துக் கொள். என்னால் நேர்ந்த சிறு சிறு தவறுகளுக்குக் கூட வலி மிகுந்த தண்டனைகள் வழங்கப்படுமிடத்து இரவுகளில் உன்னை நினைத்து அழுவேன். முன்பு நான் வருந்தும்போது அரவணைத்துக் கொண்ட தோள்களோடு அக்கண்ணீர் மிகுந்த இரவுகளில் நீ வருவாய். பின்னர் மேற்படிப்புக்கென விடுதியில் தங்கிப்படிக்க வேண்டியதானது எனது விதியில் எழுதப்பட்டிருந்த அதிர்ஷ்டத்தினாலென எண்ணுகிறேன்.

விடுதி நாட்களில் கூட உன் நினைவுகளே கிளர்ந்தெழும். ஆனால் என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நம் விடயம் பகிர்ந்ததில்லை. உயர்கல்வி முடித்து நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் அப்பா மாரடைப்பில் இறந்து போனார். இது உனக்குத் தெரியுமா நிவேதா ?

அதன்பின்னர்தான் யாருமற்று நின்ற நான் அலுவலக நண்பரின் தங்கை சுகிர்தாவைத் திருமணம் செய்துகொண்டேன். நீ எனக்குக் காட்டிய அன்பையெல்லாம் சேர்த்து மொத்தமாக அவளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறேன். அவளும்தான். இதோ, இதனை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் எனக்கு எந்தவித இடையூறுகளுமின்றி நிச்சலனமான ஒரு புன்னகையோடு தேனீர்க் கோப்பையை என் முன்னால் வைத்துச் செல்கிறாள். ஆவியை வெளியேற்றியபடி கோப்பையின் விளிம்புகளில் அவள் அன்போடு உறைய ஆரம்பிக்கிறது தேனீர்.

அம்மா எப்படியிருக்கிறாள் நிவேதா ? அன்றைய காலத்தில் காதலித்து, தாய்வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து , பின்னாட்களில் அப்பாவின் நடவடிக்கைகளால் காதலையும் திருமணத்தையும் வெறுத்து நம்மையும் பிரித்த அம்மா எப்படியிருக்கிறாள் நிவேதா ? என்னைப் பிரிந்ததன் பின்னரான உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? நீங்கள் நலமாக இருக்கவேண்டுமென தினந்தோறும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

விவாகரத்தானவர்களின் வலிகள் எல்லோராலும் உணரப்படுவதில்லை. உணர்ந்து கொள்ளவும் முடியாது. அவர்கள் புன்னகையை ஏதோ ஒர் அணிகலன் போலக் கட்டாயத்தின் பேரில் அணிந்துகொண்டு வலம்வர வேண்டி விதிக்கப்பட்டிருக்கிறது. துணையைப் பிரிந்த பின்னர் அனேக ஆண்கள் மதுவை நாடுகின்றனர். பெண்கள் நள்ளிரவுகளில் தனிமையில் தலையணையோடு விசித்து விசித்தழுவதில் விருப்புக் கொள்கின்றனர்.

மதுபோதை ஒரு மாயக் கோலைப் போலக் கவலைகளை மறக்கச் செய்கிறது. அம் மாயக்கோலைத் தடவி விடும் போதெல்லாம் அதில் சிதறும் நட்சத்திரங்களைப் போலக் கவலைகளும் சிதறுவதாக எண்ணிக் கொள்கின்றனர். இன்னல்கள் தாங்கிச் சோர்வுறும் வேளைகளில் கண்ணீர் ஒரு வடிகால். இதயத்தின் துயர்களையெல்லாம் கழுவியெடுத்து விழி ஓட்டைவழியாக வெளிக்கொணர்ந்து சிந்துகின்றதாகக் கொள்ளலாம்.

அப்பாவும் முன்னதை விடவும் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். குடித்துக் குடித்து தொப்பையும் கண் ரப்பையும் மேலும் பருக்க முடியாப்பொழுதொன்றில் தான் மாரடைப்பில் இறந்திருக்கிறார். அம்மா இன்னும் அழுகிறாளா நிவேதா ? நம் அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்று நான் அப்பாவிடமும் நீ அம்மாவிடமும் அடைக்கலம் புகுந்து நாம் நிரந்தரமாகப் பிரிந்த நாளில் உனக்குப் பதினாலும் எனக்கு ஒன்பது வயதுகளுமிருக்குமா நிவேதா ?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் மாத இதழ், ஜனவரி - 2012
# வீரகேசரி வார வெளியீடு, 26.02.2012
# காற்றுவெளி இதழ், மார்ச் - 2012
# உயிர்மை
# திண்ணை

7 comments:

Dr.G.Johnson said...

NEE, NAAN, NESAM is a fantastic short story written in the form of a letter by M.RISHAAN SHERIFF from SRI LANKA ( ILLANKAI ). From the outset we are made to think that the letter was written to a lover who was separated. That he has not revealed anything to his wife SUGIRTHA also adds weight to the mystery. And finally what an ending! She happens to be his own sister! They were separated by their divorced parents! A heart rendering beautiful letter! Congratulations!

அம்பலத்தார் said...

வணக்கம் ரிஷான் ஷெரீப் நல்லதொரு கதையை தந்ததற்கு முதலில் நன்றிகள். ஒருசில நிமிடங்கள் மனதை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அலையவிடாது கட்டிப்போட்டுவிட்டது உங்கள் எழுத்து. உணர்வுபூர்வமான எழுத்துநடை. முடிவை ஓரளவிற்கு முன்னமே ஊகிக்கக்கூடியதாக இருந்தாலும் கதையை ஆரம்பம்முதல் இறுதிவரை சுவாரசியாமும் விறுவிறுப்பும் குறையாமல் நகர்த்திச் சென்றிருப்பது பாராட்டிற்குரியது. மீண்டும் அன்பான வாழ்த்துக்கள் இதுபோன்ற சிறந்த படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

KRS Kannabiran RaviShankar said...

hi rishan
mikavum virumbi layithu padichen....
i knew there is going to be a twist....and u gave that twist at the end.....

liked these lines very much
* எப்பொழுதும் சந்தனப்பவுடரின் வாசனை வீசிக்கொண்டேயிருக்கும். நீ முத்தமிட்ட பின்னர் என்னிடத்திலும்.
* நிலவற்ற நாட்களில் மொட்டைமாடியில் படுத்து நட்சத்திரங்களை எண்ணினோம். நட்சத்திரங்களை எண்ணி எண்ணிச் சோரும் தருணம் எனது கைகளை உன் கைகளுக்குள் அடக்கி நீ ஏதாவது கதை சொல்ல ஆரம்பிப்பாய்
* முடிவில் ‘அன்பினால் ஆகாதது எதுவுமில்லை’ என்பாய். உன்மேலான அன்பு இன்றும் என்னில் அப்படியே இருக்கிறது. அது உன்னிடத்தில் என்னைச் சேர்த்துவிடுமா என்ன ?

the only thing i have seen in most of your works - no conversation; only oneside talkings - why? and there is always "ஏக்கம்" - why?
எதுவாயினும், "நீ நான் நேசம்"...தனியொரு வாசம்!

இப்னு ஹம்துன் said...

நல்ல கதையாடல் உத்தி ரிஷான் ஜி.

வாழ்த்துகள் நண்பா

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7942.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க...

தொடர்ந்து எழுதவும்... நன்றி…

Shaila said...

//துணையைப் பிரிந்த பின்னர் அனேக ஆண்கள் மதுவை நாடுகின்றனர். பெண்கள் நள்ளிரவுகளில் தனிமையில் தலையணையோடு விசித்து விசித்தழுவதில் விருப்புக் கொள்கின்றனர்.//