பழைய சோற்றினை அம்மா அவனுக்குப் போட்டுக் கொண்டிருந்தபோது குசினியில் உட்கார்ந்திருந்த மாமா இப்படிச் சொன்னார். அம்மா ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. சோற்றினைப் போட்டுவிட்டு, மாமாவின் பக்கம் திரும்பாமல் அப்படியே மூலையில் போய் ஒரு பலகைக் குத்தியில் அமர்ந்துகொண்டாள். சேலை முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். அவளுக்குக் கோபமா, ஆற்றாமையா, அழுகையா என்று தெரியவில்லை. எதுவோ ஒன்று.
அவனைப் பற்றிச் சொல்கிறார். அவனை நிந்திக்கிறார். அவனைக் கேவலமாகக் கதைக்கிறார். அவனுக்குக் கோபம் வர வேண்டாமோ? திரைப்படங்களில் வருவதுபோல சோற்றுத் தட்டை அப்படியே தூக்கி நிலத்திலடித்து, கோபத்தோடு அவரது பெண்ணைத் திருமணம் முடித்துக் காட்டுவதாகச் சவால் விட்டு, வீட்டை விட்டு வெளியே போகவேண்டாமோ? ஆனால் அப்படி எதுவும் செய்யத் தோன்றாமல், அவர்கள் முன்னாலேயே சோற்றினை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். காரணம் இருபத்தைந்து வயதாகியும் அவனுக்கு வேலையில்லை. வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் கோபமாவது, ரோஷமாவது, கிடைக்கிற சோற்றினைக் கொட்டிக் கொண்டு, கிடைக்கிற மூலையில் கட்டையைக் கிடத்துவியா என்றது மனது.
அம்மாவைச் சொல்லவேண்டும். அவள்தான் இந்தக் கதையை இப்பொழுது ஆரம்பித்தாள். மாமாவுக்கு நல்ல வசதி. மூன்று வீடு தள்ளி அவரது வீடு. இது அவரது தாய்வீடு. தினமும் அடிக்கடி வந்துபோவார். அவனும், அம்மாவும் மட்டும் புழங்கும் இந்த வீட்டின் மூன்று அறைகளிலொன்றை இன்னும் அவர்தான் பாவிக்கிறார். அந்தக் காலம் தொட்டு அவரது புத்தகங்களெல்லாம் அதில்தான் நிறைந்திருக்கும். அரச கூட்டுறவு நிலையத்தில் வேலை. சனி, ஞாயிறு அவரது அறைக்குள் போய் மூடிக் கொண்டால், பல மணித்தியாலங்கள் வெளியே வரமாட்டார். வாசிப்பில் மூழ்கிப் போய்விடுவார். புலி வாயில் கட்டப்படப்போகும் அவரது மகள், தனது அம்மா சாப்பிடக் கூப்பிட்டாளெனத் தேடி வருவாள். மூன்று வீடுகள் தாண்டி வந்ததில் அந்தப் பருத்த பெண், முதலில் வாசலில் நின்று பெரிதாக மூச்சு வாங்குவாள். அவளது பெரிய நாசி விடைத்து விடைத்து அடங்கும். அவனை விடவும் நான்கு வருடங்கள் இளையவள், குள்ளமாகவும் கறுப்பாகவும் இருப்பாள். அவனுக்கு மட்டும் வேலையென்ற ஒன்று கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் எதற்கு இவளைக் கட்டப் போகிறான்.
அம்மாவுக்கும் இவளை மருமகளாக்கிப் பார்க்கும் ஆசை இருந்திருக்காது. இன்னும் வேலை கிடைக்கவில்லையா என்ற மாமாவின் கேள்விக்கு, சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் வேலை கிடைக்குமென்று ஜோஸியக்காரன் சொன்னதை அப்படியே சொல்லி வைத்தாள். வேலையற்றவனுக்கு எவன் பெண் கொடுப்பானென்ற கேள்வியோடு ஆரம்பித்த மாமாவின் கோபம், புலிக் கடைவாய்ப்பல் வரை பேச்சைத் தொடரவைத்தது. வேலைகள் கிடைத்தனதான். எல்லாமே சின்னச் சின்ன வேலைகள். சாப்பாட்டுக் கடைகளில் கணக்கெழுதுவதும், புடைவைக் கடைகளில் துணி மடிப்பதுவும், வீடு வீடாகச் சாமான்கள் எடுத்துப் போய் விற்பதுவும் அவனால் முடியவில்லை. தான் உயர்தரம் வரை படித்திருக்கிறேனென்ற கர்வம் சிறிது எட்டிப்பார்க்கும். ஆனால் இக்காலத்தில் இந்த வேலைகளுக்கு உயர்தரத்தை விடவும் அதிக தகுதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மாமாவின் சிபாரிசில் அவனுக்குக் கிடைத்த வேலைகளில் ஒழுங்காக நிலைபெறத் தெரியவில்லை என்ற கோபம் அவன் மேல் மாமாவுக்கு உள்ளூர உண்டு.
மாமா எழுந்து தன்னுடைய அறைக்குப் போனார். அம்மாவிடம் இன்னுமொரு சின்ன வெங்காயம் கேட்டு வாங்கிக் கொண்டான். அம்மா வெங்காயத்தைத் தட்டில் வைத்துவிட்டு வாஞ்சையோடு தலை தடவி விட்டுப் போனாள். காக்கைக்கும் தன் குஞ்சு... அப்பா இருந்தவரைக்கும் கூட இப்படித்தான். ஒரே பிள்ளையென்ற மொத்தமான அன்பையும் அவன் மேல் திணிப்பார். மகனை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல தொழில் கிடைத்து, அந்தப் பழைய வீட்டை உடைத்துக் கட்டிப் பெரிதாக்கி, மகனோடு சேர்ந்து கடைசி வரை வாழும் எண்ணம் அவருக்கிருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். அந்த ஆசையெல்லாம் அவர் மூழ்கிச் செத்த தாமரைக் குளத்தோடு மூழ்கிப் போயிற்று. தண்ணீரில் ஊறிப் பருத்த உடலைத்தான் வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். வீடு முழுதும் ஊர் சனக் கூட்டம். ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அம்மா ஒப்பாரி வைத்து அழுதாள். அவனுக்கு அழுகை வரவில்லை. அழடா அழடா என்று சாவுக்கு வந்திருந்தவர்கள் தோளில் தட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லாச் சடங்குகளும் முடிந்து, சில நாட்களில் அப்பா பணம் வாங்கியிருந்தாரெனச் சொல்லிக் கொண்டு வெளியூர்களிலிருந்து ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் நகைகளெல்லாம் விற்கப்பட்டன. மாமாவே வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். கடன்களைச் சமாளித்தாயிற்று. அப்பாவின் பென்ஷன் பணத்தோடு மாதாமாதம் உணவுக்குக் கஷ்டமின்றி எப்படியோ காலம் கழியத் தொடங்கியது. எப்போதாவது ஏதாவது விஷேசங்களுக்குப் போகும்போது மட்டும் அம்மா, அத்தையிடம் போய் கழுத்துச் சங்கிலி, தோடு போன்றவற்றை இரவலாக வாங்கி அணிந்து போவாள். விஷேச வீடுகளின் மகிழ்ச்சியையும் மீறி, சொந்த நகைகளையே இரவலாகக் கேட்டு வாங்கி அணிய நேர்ந்த அவலம் தந்த துயரம் அவள் முகத்தில் இழையோடும்.
இப்பொழுது அதுவல்ல பிரச்சினை. முக்கிய பிரச்சினை வேலை. அடுத்த பிரச்சினை கல்யாணம். இரண்டுக்கும் ஜோஸியக்காரன் ஒரு முடிச்சிட்டுவிட்டான். இனி தனித்து வெட்டியாக இருந்தது போதும். சோடி சேர்த்துக்கொண்டு வெட்டியாக இரு என்று சொல்லிவிட்டான். அம்மாவுக்கு அது வேத வாக்கியம். 'அந்த குண்டச்சி இல்லையென்றால் என்ன? அவளுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நான் பார்க்கிறேண்டா உனக்கு ஒரு அழகான ராசகுமாரியை' என்றாள் அம்மா ரகசியமாக. அவன் மௌனமாக இருந்தான். அவனது மௌனத்தை, வருத்தமாக எடுத்துக்கொண்டாளோ என்னமோ...' நீ கவலப்படாதே ராசா..அவளொண்ணும் அடக்கமானவள் இல்லை..ராங்கிக்காரி..பேய்க்குப் பேன் பார்ப்பவள்..நான் உனக்கு சொக்கத்தங்கம் போல ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டிவைக்கிறேன் ' என்றாள் மீண்டும். அம்மாவின் பேச்சில் எப்பொழுதுமே ராசாக்களும், ராசகுமாரிகளும், பேய்களும் வருவார்கள். சிறு வயதில் அவனுக்குச் சொன்ன கதைகளிலும்தான். சின்ன வயதிலெல்லாம் முன்னிரவுகளில் அப்பா வரும் வரையில், வாசல் திண்ணையில் அம்மா கால்நீட்டி அமர்ந்திருக்க, அவன் அம்மா மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கதை கேட்டுக்கொண்டிருப்பான். அந்தக் கதைகளில் இப்படித்தான். ஒரு ராசகுமாரன் காட்டுக்குப் போனானாம்..அங்கொரு ராசகுமாரி சிலையாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தானாம்..என்று கதைகள் தொடரும். இவன் பாதியில் தூங்கிவிடுவான். மறுநாள் வேறொரு கதை. முந்தைய நாள் கதையை எதிலிருந்து கேட்க மறந்தோமென அவனுக்கு நினைவிருக்காது.
அவனுக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகமறதி வந்துவிடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படித்தான். யாரோ ஒரு மந்திரி, நகர சபைக் கட்டிடத்துக்கு வந்திருப்பதாகவும், அவரைப் போய் இந்த நேரத்துக்கு சந்திக்கும்படியும் மாமா கூறியிருந்ததை மறந்துவிட்டான். அன்று இரவு மாமா வீட்டுக்கு வந்து சத்தம் போட்டார். இவன் ' போயிருந்தேனே !' என்றான். 'பொய் சொல்ல வேற ஆரம்பிச்சிட்டியா? நான் முழு நாளும் அங்கதான இருந்தேன்' என்று இன்னும் உறுமத் தொடங்கினார். அவனுக்குப் பொய் சொல்லிப் பழக்கமில்லை. இப்படித்தான் எப்பொழுதாவது ஒன்றிரண்டு சொல்லி மாட்டிக் கொள்வான். இப்படி பொய் சொல்லத் தெரியாததால்தான் வீட்டுக்கு வீடு பொருட்கள் விற்கப் போய் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அப்பா இருந்தவரைக்கும் இப்படியில்லை. அப்பாவுக்கும் பொய் சொல்லத் தெரியாது. அவர் மாமாவைப் போல இப்படி உறுமுபவரல்ல. மிக அமைதியானவர். எப்பொழுதாவது அரிதாக வீட்டிலிருப்பார். அப்பொழுதெல்லாம் அவனோடு விளையாடுவதில்தான் அப்பாவின் பொழுது கழியும். அம்மாவும் சிரித்தபடியே விளையாட்டில் சேர்ந்துகொள்வாள். அம்மாவின் அந்தச் சிரிப்பெல்லாம் அப்பாவின் இறப்போடு போயிற்று.
அப்பா செத்ததும் அப்பாவின் சைக்கிளை அவன் எடுத்துக் கொண்டான். அந்தச் சைக்கிளுக்கு ஆயுள் அதிகம். பல வருடங்களாக அப்பாவுக்காக உழைத்தது. இப்பொழுது மகனுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில்தான் அவன் வேலை தேடிப் போவான். வெயிலில் அலைவான். முன்பு அவனது சிறுவயதில் அப்பா அவனை சைக்கிளின் முன் கம்பியில் அமர்த்தி, ஊர் சுற்றிக் காட்டியதெல்லாம் அவனுக்கு நினைவிருக்கிறது. அவனது ஊருக்கு ரயில் வரவில்லை. எப்பொழுதோ தான் ரயிலில் பயணித்த கதையொன்றை அம்மா சொல்ல, அவன் அதைப் பிடித்துக் கொண்டான். ரயில் பற்றி அப்பாவிடம் தோண்டித்துருவிக் கேட்கத் தொடங்கினான். இவனுக்குச் சொல்லி மாளாது என்று, அப்பா அவனை சைக்கிள் முன் கம்பியில் தலையணை வைத்து, உட்காரவைத்து எத்தனையோ கிலோமீற்றர்கள் மிதித்துக் கூட்டிப் போய் ஏதோ ஒரு ஊரில் ஒரு முறை ரயில் காட்டினார். நீளமான ரயில். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடமும், ஆச்சியிடமும் கதை கதையாக ரயில் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆச்சிக்கும் அவன் மேல் அன்பு அதிகம். ஆச்சி என்றால் அம்மாவின் அம்மா. தலைமுடியெல்லாம் நரைத்துப் போய் பஞ்சுப் பொதியை தலையில் ஒட்ட வைத்ததுபோல் வெள்ளை வெள்ளையாக இருக்கும். ஆச்சிக்கு அவனைப் போலவே நல்ல சிவப்பு நிறம். நன்றாக வயதாகிப் போனபிறகு தலை தன்னிச்சையாக இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே இருக்கும். எப்பொழுதாவது அம்மா அவனை அடிக்கத் துரத்தினால் அவன் ஓடி வந்து ஆச்சியின் கழுத்தினைக் கட்டிக் கொள்வான். அம்மா கடிந்துகொண்டு விலகிப் போவாள். இத்தனைக்கும் ஆச்சிக்குக் கண் பார்வை குறைவு. அந்த வீட்டில் முதல் சாவாக ஆச்சியைத்தான் அவன் பார்த்தான். அப்பாவின் இறப்பிற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஆச்சி தவறிப்போனாள். நித்திரைப் பாயிலேயே செத்துப் போயிருந்தாள். அவனுக்கு அப்போது ஏழு வயது. என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடியும், அப்பாவின் பின்னால் ஓடியபடியும் இருந்தான். அந்த ஓட்டம் இன்று வரை ஓயவில்லை. ஊரில் ஒரு வார்த்தை சொல்வார்கள். நாய்க்கு உண்டான வேலையும் இல்லை, ஓடாத நேரமும் இல்லையென்று. அதுபோலத்தான் அவன் ஓட்டமும்.
எங்காவது வேலையொன்று கிடைக்காதா என்றுதான் அவனும் ஓடிக் கொண்டிருந்தான். கூடப் படித்தவர்கள், அப்பாவுக்குத் தெரிந்தவர்களெனப் பலரைத் தேடிப் போய் சலிக்காது வேலை தேடிக் கொண்டிருந்தான். அவனுடன் கூடப் படித்தவனொருவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் பற்றி ஒரு நாள் அவன் கேள்விப்பட்டான்.பொது வாசிகசாலையிலிருந்து அந்த நண்பன் எடுத்துவந்த ஒரு பழைய புத்தகமொன்றுக்குள் ஒரு பழங்கால வெளிநாட்டுக் காசுத்தாளொன்று இருந்ததாம். அதனை எடுத்துக் கொண்டுபோய் யாருக்கோ விற்றதில் கட்டுக் கட்டாகக் காசு கிடைத்ததாம். உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால், அதைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து அவனுக்கு அது பற்றியே நினைவெல்லாம் ஓடியது. வீட்டுக்கு வந்து மாமாவின் அறைக்குள் நுழைந்து பழைய புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டித் தேடத் தொடங்கினான். ஒரு பருமனான புத்தகமொன்றுக்குள்ளிருந்து மாமாவினதும் ஒரு பெண்ணினதும் கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்று கீழே விழுந்தது. அந்தப் பெண், அவனது அத்தையல்ல. தலையை வகிடெடுத்து, இரு புறமும் வழிக்கச் சீவி, பூ வைத்து, பொட்டு வைத்து, மாமாவின் அருகிலிருந்து அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். மாமா அந்தப் பெண்ணின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு சிரித்தபடி இளமையாகவும் அழகாகவும் இருந்தார். ஏதோ ஒரு ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து அதே புத்தகத்துக்குள் சில காதல் கடிதங்களும், ஒரு கல்யாணப் பத்திரிகையும் செருகப்பட்டிருந்ததைக் கண்டு எடுத்துப் பார்த்தான். பிறகு அவற்றை மீண்டும் புத்தகத்துக்குள் வைத்து, அப் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தான். அவனுக்கு மாமாவை நினைக்க பாவமாக இருந்தது. அன்றிலிருந்து மாமா திட்டும்போதெல்லாம் ஏனோ அவனுக்குக் கோபம் வருவதில்லை.
வெளியே மழை தூறத் தொடங்கி விட்டிருந்தது. திண்ணையில் அமர்ந்துகொண்டு மழை பார்க்கத் தொடங்கினான். பனித்தூவல் போன்ற மழை. கொஞ்சம் கொஞ்சமாக நிலம் ஈரலித்து, மண் வாசம் கிளப்பத்தொடங்கியது. அம்மாவும் உள்ளிருந்து வந்து, வாசல் தூணில் சாய்ந்துகொண்டு மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல 'மழையில் நனையாதே' எனச் சொல்லி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிக்கச் செய்திருக்க வேண்டும்.
அம்மா திடீரென்று 'மாஸ்டரைப் போய்ப் பார்த்தியா?' என்றாள். அவர், அப்பாவின் நண்பர். நகரத்தில் நல்ல நிலையிலிருக்கிறார். போய்ப் பார்த்து விசாரித்தால் அவனுக்கு வேலை ஏதும் கிடைக்காதா என்ற ஏக்கம் அவளுக்கு. அவன் 'பார்த்தேன்' என்றான். பிறகு கொஞ்ச நேரம் அப்படியே மழை பார்த்தான். அம்மா உள்ளே போகத் திரும்பிய கணத்தில், அவர் வேலை செய்யும் துறைமுகத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதாக அவர் சொன்னதைச் சொன்னான். அம்மா உள்ளூர மகிழ்ந்தாள். புன்னகைத்தாள். திண்ணையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்துகொண்டாள். அவர் அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவதற்கு ஒரு தொகைப் பணம் கேட்டதையும் அவன் அம்மாவிடம் சொன்னான். அம்மா யோசனையுடன் மழையைப் பார்த்துக் கொண்டே 'தம்பியிடம்தான் கேட்டுப் பார்க்கணும்' என்றாள். பிறகு அவனைத் திரும்பிப் பார்த்து 'அவனிடம் இருக்கும். தருவானோ தெரியாது. மகளுக்குச் சேர்த்து வருகிறான். அவளுக்கு இந்த வருஷத்துக்குள் ஒரு கல்யாணம், காட்சியை நடத்திப் பார்க்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தான்' என்றாள். அவனுக்குள் ஏதோ ஒரு ஆசுவாசம், ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி உள்ளுக்குள் பரவத் தொடங்கியது. வெளியே மழை வலுக்கத்தொடங்கி விட்டிருந்தது.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# சொல்வனம் இதழ் (04-09-2009)
# தடாகம்
# திண்ணை
Artist - Roshan Dela Bandara
2 comments:
அருமையான கதை மிகவும் ரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
http://semmalai.blogspot.com
அன்பின் செம்மலை ஆகாஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
Post a Comment