Wednesday, June 10, 2009

இருப்புக்கு மீள்தல் - 05


இப்பொழுது புதிதாகக் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்துவிட்டிருந்தது. பேசாமல் இறந்துபோயிருக்கலாமோ என எண்ணும்படியான வலி உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. வாயைத் திறக்கவோ, பேசவோ, மெலிதாகப் புன்னகைக்கவோ கூட முடியாதபடி தசைகள் எல்லாம் இறுகிப் போய் வலித்தன. இருந்தும் பேச முயற்சித்தேன். எதுவுமே ஒத்துழைக்கவில்லை. பேச்சு வராமலே போய்விடுமோ எனவும் அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். பார்க்க வந்தவர்கள் எல்லாம் விழிகள் கசியப் பார்த்து மௌனமாக நகர்ந்தனர். வைத்தியர் அடிக்கடி வந்துபார்த்து அன்பாக ஏதேனும் கதைத்துக் கொண்டிருந்தார். இருபத்துநான்கு மணித்தியாலங்களும் அந்த வைத்தியரும், இரண்டு தாதிகளும் என்னை அவர்களது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருந்தனர். ஈரானியச் சகோதரி என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஏதேனும் திரவ உணவுப்பொருட்கள் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தார். எதையும் பருகமுடியவில்லை.

கண்களை மூடினால் இமைகளுக்குள் எரிந்தன. தூங்கவும் முடியவில்லை. இருந்தும் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் அகன்ற பின்னர் தூங்கமுயற்சித்தேன். ஏதேதோ யோசனைகள் தோன்றித் தோன்றி மறைய தலைக்குள் ஏதோ பெரும்பாரமாய் அழுத்தியது. எப்பொழுது தூங்கிப்போனேனென நினைவிலில்லை எனினும் தூங்கி எழும்போது காய்ச்சல் விட்டிருந்தது. அதற்குப் பதிலாக இடக் கையும், இடக் காலும் செயலிழந்து போயிருந்தது. ஒரு பாதி பொம்மையை என்னுடலின் இடப்புறத்தில் கிடத்திப் பொருத்தியது போல அப்பாகங்கள் அசையாமலும், அசைக்கமுடியாமலும் கிடந்தன. வைத்தியர் வந்துபார்த்து பதறிப்போனார். முதுகுப்புறத்தில் ஊசி ஏற்றினார். வாந்தியாகப் போனாலும் பரவாயில்லையென உப்புக் கலந்த பானம் ஏதோ பருக வைத்தார். பருகிச் சிறிது நேரத்திலேயே நான் திரும்பவும் தூங்கிப் போய்விட்டேன்.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனென நினைவிலில்லை. யாரோ மிருதுவாக கைகளையும் புருவங்களையும் நீவி விட விழித்துக் கொண்டேன். புதிதாக இரு வைத்தியர்கள் அருகிலிருந்தார்கள். என்னைப் பற்றிய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நான் விழித்ததும் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். அவர்களது செவிகளை எனது வாயருகே வைத்து பேசச் சொல்லிக் கேட்டார்கள். எனது கைகளைத் தம் கரங்களுக்குள் பொத்தி விரல் நகங்களை ஆராய்ந்தார்கள். எனது இமைகளை விரித்து ஒளி செலுத்தி உற்றுப் பார்த்தார்கள். சோதனைக் கூடப் பிராணியொன்றைப் போல வேதனையோடு எல்லாவற்றுக்கும் இசைந்துகொடுத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ புது மருந்துகளுக்குப் பரிந்துரைத்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.

எனக்கான பிரார்த்தனைகள் நண்பர்களிடத்தில் தொடர்வதாக சகோதரி தொலைபேசியில் சொன்னார். தொடர்ந்த சிகிச்சையின் இரத்தப்பரிசோதனைகளில் குருதியில் கலந்திருந்த நச்சின் அளவு குறைந்துவருவதாக அறிக்கைகள் நற்செய்தி சொல்லிற்று. மரணத்திலிருந்து மீண்ட உடல் மருந்துகளையும், வைத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. காரணம் சகோதரியினதும் எல்லோரினதும் அன்பான பிரார்த்தனைகளன்றி வேறு என்ன?

அடுத்த சிலநாட்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நல்லபடியான மாற்றம். உடல் புண்கள் ஆறத் தொடங்கியிருந்தன. உடலியக்கம் சீராகி, இறுக்கிப் பிடித்த தசை வலியும் உடல்வலியும் இனிப் போதுமெனச் சிறிது சிறிதாக விட்டு விலக ஆரம்பித்திருந்தன. வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன். வைத்தியரின் நகைச்சுவைகளுக்குப் பழையபடி சிரிக்கமுடிந்தது. ஈரானியச் சகோதரி தினந்தோறும் உணவுப் பதார்த்தங்கள் செய்து கணவர் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். கஞ்சி, பழச்சாறு போன்ற திரவப்பதார்த்தங்களை தாதிகள் ஊட்டிவிட்டார்கள். உடலில் இணைக்கப்பட்டிருந்த மருந்துக் குழாய்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முழுதாக அகற்றப்பட்டன. அந்த அறைக்குள்ளேயே எழுந்து மெதுவாக வைத்தியரின் துணையோடு நடமாடத் தொடங்கினேன். எவ்வளவு நாளைக்கு அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதென, தனித்து எழுந்து நடக்கமுயற்சித்த நாளில் கால்கள் துவள பளிங்குத் தரையில் வெட்டப்பட்ட மரம்போல வீழ்ந்தேன்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்

Post a Comment