Monday, June 15, 2009

இருப்புக்கு மீள்தல் - 06


         ஒரு குழந்தையைத் தூக்குவது போல அறுபது கிலோகிராம் எடையை வைத்தியர் தூக்கிக் கட்டிலில் படுக்கவைத்தார். 'முதல் முயற்சிதானே. போகப்போகச் சரியாகிவிடும்' எனப் புன்னகையோடு சொன்னார். எனது பதற்றம் நீங்கும்வரை அருகிலேயே இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். எனது பொழுதுபோக்குகள் பற்றி விசாரித்தறிந்தார். காலித் ஹுசைனியின் எழுத்துக்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவரது கதாபாத்திரங்களின் வைத்தியசாலை அனுபவங்களைப் பற்றிக் கதைத்தோம். மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் குறித்துச் சொன்னபடி அன்றைய இரவு உணவை அவரே ஊட்டிவிட்டார். மருந்துகளையும் அவரே தந்தார். கதைத்துக் கொண்டிருந்தபடியே தூங்கிப்போய்விட்டேன்.

        அடுத்தநாட்களிலும் நடைப்பயிற்சி தொடர்ந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவிட்டேன். சோர்வும் உடல் பலவீனமும் தொடர்ந்தும் இருந்ததுதான். எனினும் அறையை விட்டும் வெளியே வந்து சுற்றிவர இருந்த புல்வெளிகளிலும் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். நீண்ட நாட்களின் பின்னர் வெளிக்காற்று உடலில் பட மிகவும் இதமாக இருந்தது. அதிகநேரம் வெளியில், அந்த மருத்துவமனை வளாகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். புல்வெளியிலமர்ந்து ஏதேதோ சிந்தனையிலாழ்ந்திருந்ததைப் பார்த்த வைத்தியர் வெள்ளைக் காகிதங்களும், பேனையும் கொண்டு வந்து தந்து கவிதைகள் எழுதச் சொல்லிக் கட்டளையிட்டார்.

        இரண்டு வருடங்களாக கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறெதற்கும் பேனையைத் தொட்டவனில்லை. எல்லா எழுத்துக்களும் கணினி வழியேதான். அகில இலங்கை ரீதியில் அழகிய கையெழுத்துக்கெனப் பரிசு பெற்றிருந்த எனது கையெழுத்து எனக்கே சகிக்காமல் மற்றும் புரியாமல் கோணல் மாணலாக வந்தது. எதுவும் எழுதமுடியவில்லை. வெள்ளைத் தாள்கள் மையிட்டு நிரப்பப்படாமல் அப்படியே கிடந்தன.

        பார்க்க வந்த நண்பர்களோடு இயல்பாகக் கதைப்பது இப்பொழுது முடியுமாக இருந்தது. ஈரானியச் சகோதரியின் குழந்தைகளோடு விளையாடினேன். பழைய ஆரோக்கியத்துக்கு மீண்டு வந்துகொண்டிருந்தேன். இனி இயல்பாக இருக்கலாமென என் மேலே எனக்கு நம்பிக்கை வந்த பொழுதொன்றில் எனது அறைக்குப் போகவேண்டுமென வைத்தியரிடம் வேண்டுகோளை முன்வைத்தேன்.

        அவர் அதையும் ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். இன்னும் ஓர் நாள் தங்கிப் போகும்படி கேட்டுக் கொண்டார். முழு உடல் பரிசோதனை நிகழ்ந்தது. அன்றைய தினமும் நிறையக் கதைத்தோம். அவரது தேசக் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார். இனிமையான ராகத்தில் பாடியும் காட்டினார். மிகவும் ரசித்தேன். அவரது அனுபவத்திலேயே என்னைக் காப்பாற்றியதுதான் மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்ததெனச் சொன்னார். என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார். இரண்டாம் உயிர் பெற்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் வாழ்நாளிலேயே என்னை மறக்கமுடியாதெனவும்  சொன்னார். இறுதியாக 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

        எங்கெங்கோ பிறந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் சந்தித்துக்கொண்டோம். அந்த வைத்தியர் பாலஸ்தீனியர். அமெரிக்காவில் வைத்தியம் கற்றவர். அவரது மனைவி பாகிஸ்தானியர். அத் தாதிகள் பிலிப்பைனையும், லெபனானையும் சேர்ந்தவர்கள். எனக்குச் சேவை செய்தவர் சூடான் தேசத்தவர். இன்னும் இலங்கை நண்பர்கள், ஒன்றாக வேலைசெய்யும் ஈரான், லெபனான்,பாகிஸ்தான், கொரியா, இந்தியா மற்றும் நேபாள தேசத்தவர்கள். இணையம் தந்த அன்பு நண்பர்கள் உலகின் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். எல்லோரினதும் அன்பான, உருக்கமான பிரார்த்தனைகள்தான் என்னை எனக்கே மீட்டுத்தந்திருக்கின்றன. நான் இவர்களுக்காக, இந்தக் கணம்வரை என்ன செய்திருக்கிறேன் ?

        வைத்தியர் என்னைப் போக அனுமதித்த நாளில் நண்பர்கள் அனேகர் வந்திருந்தனர். அறை நண்பர்களையும், அலுவலக நண்பர்களையும் அழைத்து எனது மருந்து, உணவு முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் இரு கிழமைகள் முழுதாக அறையினில் ஓய்வெடுத்துப் பின் இயலுமெனில் மட்டும் வேலைக்குப் போகும்படி அன்புக் கட்டளையிட்டார். புன்னகையோடு தலையசைத்து வைத்தேன். மிகுந்த நன்றிகளை வார்த்தைகளில் பரிமாறி தாதிகளிடமும், பணியாளரிடமும் விடைபெற்றேன்.

        அன்று பூத்த புதுரோஜாக்களால் செய்த பூங்கொத்தினை வைத்தியர் எனக்குப் பரிசளித்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. நெற்றியில் முத்தமிட்டுப் பத்திரமாகப் போய்வரும்படி அனுப்பிவைத்தார். தொடர்ந்தும் வேளாவேளைக்குத் தொலைபேசியில் அழைத்து நலம்விசாரித்துக் கொண்டும் மருந்துகளை நினைவூட்டிக்கொண்டுமிருக்கிறார். இந்த வெள்ளிக்கிழமை அவரைப் போய்ப் பார்க்கவேண்டும். என் வாழ்நாள் சகல ஆரோக்கியத்துடனும் நீடிக்கவென எனக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் அனைவரையும் ஓர் நாள் நேரில் சந்திக்கவேண்டும்.

அந்த இனிய நாளுக்காகக் காத்திருக்கிறேன் !

(நிறைவு)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

15 comments:

ஜோசப் பால்ராஜ் said...

வைத்தியரின் அன்பும், பரிவும் நெகிழ வைக்கிறது. இப்படி உடல்நிலை கெட்டுப்போக என்ன மூலக்காரணம்?

இனி உடல்நிலையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ரிஷான்.

அந்த வைத்தியருக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லுங்கள்.

ஃபஹீமாஜஹான் said...

இறைவனுக்கு நன்றி
-------------------

ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது நீண்ட கோடை

நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை


ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளை
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டு
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர்பெற்று நிமிர்கின்றன

தலை மீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடி வருகிறது
சூரியோதயம்


நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம்பாடி"*****************************
இறைவனே உனக்கு நன்றி.
******************************

ஆருயிரே வருக

மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்

பாச மலர் / Paasa Malar said...

முகம் தெரியாத அந்த மருத்துவரும் பிற தாதிகளும் ...எங்களுக்கே மறக்க முடியாதவர்கள் என்று தோன்றுகிறது...

மீண்டும் வாழ்த்துகள் ரிஷான்...

பூங்குழலி said...

உங்கள் மருத்துவ குழுவினரின் பாசம் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருக்கிறது ரிஷான் .உங்கள் மருத்துவமனை வாசத்தில் முழுமையும் உங்களை சுற்றியிருந்தவர்களின் பாசத்தையும் பரிவையும் பிராத்தனைகளையும் சுவாசித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள்


என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார்

நாங்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ரிஷான், உங்களை மீட்டு தந்ததற்கு .இறைவன் உங்களை தொடர்ந்து உங்களை பாதுகாக்கட்டும்

ஆர்.வேணுகோபாலன் said...

ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்து, வலித்த கணங்கள் ஒவ்வொன்றையும் வார்த்தைக்குள்ளே சுருக்கி எழுதி எங்கள் நெஞ்சை உலுக்கி விட்டீர்கள் ரிஷான்! நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ்ந்து, இனி வரும் காலங்களில் தன் இன்பயமான தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விழைகிறேன்.

தமிழன் வேணு

கோபிநாத் said...

அந்த மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..;)

Sakthy said...

வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் ..
உங்கள் பேனா பிரசவிக்கும் கவிக்காய் நாம் காத்திருக்கையில், விட்டு விடுவோமா உங்களை ? முகந் தெரியா அந்த உறவுகளுக்கு நன்றிகள் !
take care of urself dear friend..

M.Rishan Shareef said...

அன்பின் ஜோசப் பால்ராஜ்,

//வைத்தியரின் அன்பும், பரிவும் நெகிழ வைக்கிறது. இப்படி உடல்நிலை கெட்டுப்போக என்ன மூலக்காரணம்?

இனி உடல்நிலையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் ரிஷான்.

அந்த வைத்தியருக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லுங்கள்.//

நிச்சயமாக நண்பரே !
நன்றிகளோடு, உங்கள் அனைவரினதும் பரிவான பிரார்த்தனை பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//இறைவனுக்கு நன்றி
-------------------

ஒரு துர்க்காலத்தைப்
பரப்பி வைத்துப்
புழுங்கித் தவித்தது நீண்ட கோடை

நஞ்சுண்ட நாட்களைச்
சுமந்தவாறு
அரபிக் கடல் மீது
ஓயாமல் தத்தளித்தது
ஒரு பேரலை


ஆருயிர்கள்
துடிதுடித்த பொழுதுகளை
புரட்டிப் புரட்டிப் படித்து விட்டு
தூர எறிந்து போயிற்று
விதியின் கொடும் கை


இன்று...
வீழ்ந்து கிடந்த திசைகள்
புத்துயிர்பெற்று நிமிர்கின்றன

தலை மீது சுமந்தலைந்த
பாறாங்கல்லொன்றை
இறக்கி வைத்துவிட்டு
விலைமதிப்பற்ற திரவியமொன்றை
ஆரமெனச் சூடி வருகிறது
சூரியோதயம்


நொந்து போன சிறகுகளை
மெல்ல மெல்ல அசைத்தவாறு
உந்திப் பறந்திடும்
உற்சாக வேளைக்காகக்
காத்துக் கிடக்கிறது
எங்கள் அன்பு "வானம்பாடி"*****************************
இறைவனே உனக்கு நன்றி.
******************************

ஆருயிரே வருக

மேதைகளும் மாபெரிய வீரர்களும்
மீண்டு வராமற்போன
மருத்துவமனைக் கட்டிலொன்றிலிருந்து
அதே தீர்க்கமான முடிவொன்றிலிருந்து
எழுந்து வந்துள்ளாய்


திருநாமங்களையெலாம்
உச்சாடனம் செய்து
எல்லாம் வல்லவனிடம்
உனை மீட்டுத் தரவேண்டி
ஏந்தித் தவித்த கரங்களை
அழுத்திக் கொண்டிருந்தது
அன்பின் கொடும் சுமை


உயிரோடு போராடிக் கொண்டிருந்த
இன்னுயிரைத்
தூர தேசத்தில் விட்டு விட்டு
ஊர்ந்தூர்ந்து வந்ததந்தக்
கொடிய காலம்


இருக்கும் இடத்தை
நொந்து போன எண்ணங்களால்
நிரப்பி விட்டுத்
துயரேறிய பொழுதுகளை
இழுத்தவாறு நொண்டி நகர்ந்தன
இரு பாதங்கள்


செல்லப் பறவையே
இறுதியில் நீ வந்தாய்
உதிரமெங்கும் கலந்தோடிய நஞ்சிலிருந்து
உன் ஜீவனை மீட்டெடுத்து வந்தாய்


உறங்க மறந்த இரவின் மீது
ஆனந்தக் கண்ணீரைக்
கசிய விட்டவாறு
வாழ்விலிருந்து நழுவிப் போனதொரு
பெரும் வலி

என்ன வார்த்தையால் உனை வரவேற்பது
எந்தக் கரம் கொண்டு உனை அரவணைப்பது
எனத் தெரியாத கடலொன்றுக்கப்பாலிருந்து
கையசைக்கிறாய்


ஆருயிரே வருக
பாக்கியம் புரிந்தவர் நாம்
உனை மீளவும் பெற்றிருக்கிறோம்//

இந்தக் கவிதைகளை எழுதிய கரங்கள் இன்று வாடிப் போயுள்ளதைக் கேள்வியுற்றேன். மிகைக்கும் கவலையைப் போக்க ஏதேதோ செய்தபடியும், இடையறாமல் பிரார்த்திக் கொண்டுமிருக்கிறேன்.

விரைவாக வாருங்கள் சகோதரி !
காத்திருக்கிறேன் !!

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,

//முகம் தெரியாத அந்த மருத்துவரும் பிற தாதிகளும் ...எங்களுக்கே மறக்க முடியாதவர்கள் என்று தோன்றுகிறது...

மீண்டும் வாழ்த்துகள் ரிஷான்...//

பொதுச் சேவை செய்யவரும் அவ்வளவு அன்பானவர்களைப் பார்ப்பதுவும் இதுவே முதல்முறை. ஆச்சரியப்படுத்திவிட்டார்கள். :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உங்கள் மருத்துவ குழுவினரின் பாசம் நெஞ்சை நெகிழ்விப்பதாக இருக்கிறது ரிஷான் .உங்கள் மருத்துவமனை வாசத்தில் முழுமையும் உங்களை சுற்றியிருந்தவர்களின் பாசத்தையும் பரிவையும் பிராத்தனைகளையும் சுவாசித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள் //

ஆமாம் சகோதரி. சிறிதளவேனும் கவலை தோன்றாவண்ணமும், வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்காவண்ணமும் பார்த்துக் கொள்கிறார்கள்.


//என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார்

நாங்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ரிஷான், உங்களை மீட்டு தந்ததற்கு .இறைவன் உங்களை தொடர்ந்து உங்களை பாதுகாக்கட்டும்//

உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும் சகோதரி உங்களுக்கும் எனக்கும் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு ஐயா,

//ஒரு துன்பகரமான அனுபவத்திலிருந்து மீண்டு வந்து, வலித்த கணங்கள் ஒவ்வொன்றையும் வார்த்தைக்குள்ளே சுருக்கி எழுதி எங்கள் நெஞ்சை உலுக்கி விட்டீர்கள் ரிஷான்! நூறாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ்ந்து, இனி வரும் காலங்களில் தன் இன்பயமான தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விழைகிறேன்.//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும் நண்பரே. இனி எழுத்துக்களிலும் வாழ்விலும் இனிமை கோர்த்து வரட்டும் உங்களதும் எனதும் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கோபிநாத்,

//அந்த மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..;)//

உங்கள் தொடர்வருகை மகிழ்ச்சி தருகிறது. :)

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//வாருங்கள் ரிஷான் நலமுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் ..
உங்கள் பேனா பிரசவிக்கும் கவிக்காய் நாம் காத்திருக்கையில், விட்டு விடுவோமா உங்களை ? முகந் தெரியா அந்த உறவுகளுக்கு நன்றிகள் !
take care of urself dear friend..//

நிச்சயமாக அன்புத் தோழி :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !

ராமலக்ஷ்மி said...

இன்று உங்கள் மருத்துவரை சென்று சந்தித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவருக்கும் அவர் குழுவுக்கும் நன்றிகள்!

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் ரிஷான்! வாழ்த்துக்கள்!